E   |   සි   |  

அரசாங்கச் சட்டமூலங்களைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்:-

  1. சாதாரண சட்டமூலங்கள்
  2. அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலங்கள் - (அரசியலமைப்பின் 82, 83 மற்றும் 84 ஆம் உறுப்புரைகளின் பிரகாரம் அரசியலமைப்பைத் திருத்துவதற்கான, நீக்குவதற்கான மற்றும் மாற்றீடு செய்வதற்கான சட்டமூலங்கள்)
  3. ஒதுக்கீட்டுச் சட்டமூலம்

பாராளுமன்ற நடைமுறை

அரசியலமைப்பின் 78ஆம் உறுப்புரையின் பிரகாரம், சட்டமூலமானது வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டதிலிருந்து 07 நாட்களிற்கு பின்னர் 50(1) ஆம் நிலையியற் கட்டளையின் ஏற்பாடுகளிற்கமைய எவரேனும் அமைச்சரின் வேண்டுகோளின் பேரில் முதலாம் மதிப்பீட்டிற்காக ஒழுங்குப் பத்திரத்தில் இடப்படும்.

ஆயினும், மாகாண சபை நிரலிலுள்ள விடயத்துடன் தொடர்புபட்ட சட்டமூலமானால், அச்சட்டமூலம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டதன் பின்னரும், பாராளுமன்றத்தில் முதலாம் மதிப்பீட்டிற்கு முன்னரும் சனாதிபதியால் மாகாண சபைகளிற்கு ஆற்றுப்படுத்தப்பட வேண்டும்.

முதலாம் மதிப்பீட்டின் பின்னர், சட்டமூலம் அச்சிடப்படுவதற்கு கட்டளையிடப்படுவதுடன் அச்சட்டமூலம் பிரேரணை ஏதுமின்றி உரிய துறைசார் மேற்பார்வைக் குழுவிற்கு பரிசீலனைக்காக ஆற்றுப்படுத்தப்படும்.

50(1) மற்றும் 55(1) ஆம் இலக்க நிலையியற் கட்டளைகளின் ஏற்பாடுகளிற்கமைய முதலாம் மதிப்பீட்டிலிருந்து பதின்நான்கு நாட்களிற்கு பின்னர் சட்டமூலம் இரண்டாம் மதிப்பீட்டிற்காக ஒழுங்குப் பத்திரத்தில் இடப்படுதல் வேண்டும். இரண்டாம் மதிப்பீட்டுத் திகதி பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவினால் தீர்மானிக்கப்படுகின்றது.

துறைசார் மேற்பார்வைக் குழுவானது சட்டமூலம் தொடர்பிலான தனது அறிக்கையை இரண்டாம் மதிப்பீட்டுக்கு முன்னர் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும்.

எவ்வாறாயினும் பின்வரும் சந்தர்ப்பங்களில் இரண்டாம் மதிப்பீட்டானது முதலாம் மதிப்பீட்டு திகதியிலிருந்து ஏழு நாட்களின் பின்னர் இடம்பெறமாட்டாது:-

  1. அரசியலமைப்பின் 121 ஆம் உறுப்புரையின் கீழ் உயர்நீதிமன்றத்தில் சட்டமூலத்திற்கெதிராக மனுதாக்கல் செய்யப்படும் சந்தர்ப்பத்தில், 55(2) ஆம் நிலையியற் கட்டளையின் ஏற்பாடுகளிற்கமைய நீதிமன்றத் தீர்ப்பு பாராளுமன்றத்திற்கு அறிவிக்கப்பட்ட பின்னரே அவ்வாறான சட்டமூலமானது இரண்டாம் மதிப்பீட்டிற்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
  2. அரசியலமைப்பின் உறுப்புரை 154 எ (5) அ இன் கீழ் அரசியலமைபிற்க்கான (ஒருங்கியை நிரல்) ஒன்பதாம் அட்டவணையின் III ஆம் நிரலில் உள்ள விடயங்களுடன் சம்பந்தப்பட்ட சட்டமூலங்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்போது அத்தகைய சட்டமூலங்கள் நிலையியற் கட்டளை இல. 51 (2) (அ) வின் பிரகாரம் சகல மாகாண சபைகளினதும் கருத்துக்களைப் பெற்றுக்கொள்வதற்காக அவற்றிற்க்கு ஆற்றுப்படுத்தப்படவேண்டும். மாகாண சபைகளின் கருத்துக்கள் பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்ட பின்னரே 51(2)(ஆ) நிலையியற் கட்டளையின் பிரகாரம் சட்டமூலம் இரண்டாம் மதிப்பீட்டிற்காக ஒழுங்குப் பத்திரத்தில் குறித்தொதுக்கப்படும்.

சட்டமூலமொன்றின் இரண்டாம் மதிப்பீட்டின்போது 56 ஆம் நிலையியற் கட்டளையின் பிரகாரம், சட்டமூலம் தொடர்பாக விவாதமொன்று இடம்பெறும். இரண்டாம் மதிப்பீட்டின் இறுதியில் சட்டமூலம் வாக்கெடுப்புபொன்றின் மூலம் நிறைவேற்றப்படும். வாக்கெடுப்பானது 47 ஆம் நிலையியற் கட்டளைக்கு இணங்க குரல் மூலமாகவோ, வரிசை வரிசையாகவோ, இலத்திரனியல் வாக்குப் பதிகருவியை பயன்படுத்தி பெயர்களை அழைப்பதன் மூலமாகவோ இடம்பெறலாம்.

சட்டமூலமொன்று சபையில் இரண்டாவது முறையாக மதிப்பிடப்பட்ட பின்னர் (ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தவிர்ந்த ஏனையவை) 57 ஆம் நிலையியற் கட்டளையின் பிரகாரம் குறிப்பிட்ட அமைச்சரவையின் அமைச்சர் அல்லது அமைச்சரவையின் அமைச்சர் அல்லாத அமைச்சர் அல்லது பிரதி அமைச்சர் ஒருவரால் பிரேரிக்கப்படும் பிரேரணையின் மேல் முழுப் பாராளுமன்றக் குழுவிற்கு அல்லது விசேட குழுவொன்றிற்க்கு அல்லது சட்டவாக்க நிலையியற் குழுவிற்கு அல்லது பொருத்தமான துறைசார் மேற்பார்வைக் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்படும்.

57ஆம் நிலையியற் கட்டளையின் பிரகாரம் முழுப் பாராளுமன்ற குழுவுக்கு சட்டமூலமொன்று ஆற்றுப்படுத்தப்பட்டிருக்கின்ற சந்தர்ப்பத்தில் 93 தொடக்கம் 99 வரையான நிலையியற் கட்டளைகளின் பிரகாரம் குழுவின் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். குழுநிலையில் சட்டமூலத்தின் அனைத்து வாசகங்களும் பரிசீலிக்கப்படுவதோடு, 60 தொடக்கம் 65வரையான நிலையியற் கட்டளைகளின் பிரகாரம் புதிய திருத்தங்கள் சட்டமூலத்தின் வாசகங்களிற்கு பிரேரிக்கப்படலாம். சட்டமூலத்திற்கு புதிய வாசகங்களும் புதிய அட்டவணைகளும் பிரேரிக்கப்படும் பட்சத்தில் 66(1),மற்றும் 66(2) ஆம் நிலையியற் கட்டளைகளின் பிரகாரம் அவை முதல் மதிப்பீடு பெற்றவையாக கருதப்பட்டு அதன் பின்னர் அத்தகைய வாசகங்களும் அட்டவணைகளும் “இரண்டாம் மதிப்பீடு பெறுமாக” மற்றும் சட்டமூலத்துடன் சேர்க்கப்படுவதாக எனும் பிரேரணைகள் பிரேரிக்கப்படும்.(66(1), 66(2) நிலையியற் கட்டளைகள்) அதன் பின்னர் சட்டமூலத்தின் முன்னுரையும், சட்டப்பெயரும் முறையே 66(3), 66(4) நிலையியற் கட்டளை இன் பிரகாரம் பிரிசீலிக்கப்படும்.

திருத்தங்களிற்கான விதிகள் 43 முதல் 46 வரையான நிலையியற் கட்டளைகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. அனைத்து திருத்தங்களும் எழுத்து மூலமாக அமைந்திருக்க வேண்டுமென்பதோடு, 43(2) ஆம் நிலையியற் கட்டளையின் பிரகாரம் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு கையளிக்கப்படுதல் வேண்டும்.

சட்டமூலம் விசேட குழுவொன்றிற்க்கு அல்லது நிலையியற் குழுவிற்க்கு அல்லது துறைசார் மேற்பார்வை குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டிருக்கின்றபோது 58 ஆம் நிலையியற் கட்டளையின் பிரகாரம் பாராளுமன்றத்திற்கு, குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் வரை மேலதிக நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படமாட்டாது.

குழுவின் அறிக்கை 68, 69 மற்றும் 70 நிலையியற் கட்டளையின் பிரகாரம் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படும்.

நிலையியற் குழுவின் நடவடிக்கைகள் 113 ஆம் நிலையியற் கட்டளையின் பிரகாரம் மேற்கொள்ளப்படும்.

விசேட குழுவின் நடவடிக்கைகள் 100 முதல் 110 வரையான நிலையியற் கட்டளைகளின் பிரகாரம் மேற்கொள்ளப்படும்.

துறைசார் மேற்பார்வை குழுவின் நடவடிக்கைகள் 111 ஆம் நிலையியற் கட்டளையின் பிரகாரம் மேற்கொள்ளப்படும்.

சட்டமூலம் பிரேரணை ஒன்றின் மேல் மூன்றாவது முறையாக மதிப்பீடு செய்யப்பட்டு 71 மற்றும் 72 நிலையியற் கட்டளைகளின் பிரகாரம் நிறைவேற்றப்படும். மூன்றாம் மதிப்பீட்டிலும் வாக்கெடுப்புபொன்று இடமபெறும். வாக்கெடுப்பானது 47 ஆம் நிலையியற் கட்டளைக்கு இணங்க குரல் மூலமாகவோ, வரிசை வரிசையாகவோ, இலத்திரனியல் வாக்கு பதிகருவியை பயன்படுத்தி பெயர்களை அழைப்பதன் மூலமாகவோ இடம்பெறலாம்.

மூன்றாம் மதிப்பீட்டில் சட்டமூலத்திற்கு பிரேரிக்கப்பட்ட திருத்தங்களுட்பட முழுச் சட்டமூலத்திற்கும் சபையின் அனுமதி கோரப்படும்.

74 ஆம் நிலையியற் கட்டளையின் பிரகாரம் அரசியலமைப்பின் உறுப்புரைகள் 79 மற்றும் 80 இன் கீழ் சட்டமூலமானது (மூலப்பிரதி) சாபாநாயகரினால் புறக்குறிப்பீடு செய்யப்படுவதன் பேரில் சட்டமூலமொன்று சட்டமாக மாறும்.

அரசியலமைப்புத் திருத்தத்திற்கான சட்டமூலமொன்றாயின் அச்சட்டமூலத்தின் விரிவுப் பெயரில் அரசியலமைப்பு திருத்தத்திற்கான சட்டமூலம் என தெளிவாக குறிப்பிடப்பட்டிருத்தல் வேண்டும். அரசியலமைப்புச் சட்டமூலமானது மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அல்லது மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடனும் சர்வஜன வாக்கெடுப்பின் அங்கீகாரத்துடனும் நிறைவேற்றப்பட வேண்டுமென்பதைத் தவிர்ந்த ஏனைய நடைமுறைகள் சாதாரண சட்டமூலங்களின் நடைமுறைகளை ஒத்தவையாகும்.

ஒதுக்கீட்டுச் சட்டமூலங்கள்

ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் நடைமுறைகளும் சாதாரண சட்டமூலங்களை ஒத்தவையே. எனினும், 75 நிலையியற் கட்டளையின் பிரகாரம் ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் பரிசீலனைக்காக இருபத்தாறு நாட்கள் ஒதுக்கப்படும். ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடானது வரவு செலவுத் திட்ட உரையுடன் ஆரம்பிப்பதோடு, அதைத்தொடர்ந்து ஆகக் கூடுதலாக ஏழு நாட்கள் விவாதம் இடம்பெறும்.

இரண்டாம் மதிப்பீட்டு விவாதத்திற்கு ஒதுக்கப்பட்ட ஏழு நாட்களின் இறுதியில் ஒதுக்கீட்டு சட்டமூலமானது வாக்களிப்பிற்கு எடுத்துக்கொள்ளப்படும். வாக்கெடுப்பானது 47 ஆம் நிலையியற் கட்டளைக்கு இணங்க குரல் மூலமாகவோ, வரிசை வரிசையாகவோ, இலத்திரனியல் வாக்கு பதிகருவியை பயன்படுத்தி பெயர்களை அழைப்பதன் மூலமாகவோ இடம்பெறலாம். பாராளுமன்றம் சட்டமூலத்திற்கு சார்பாக வாக்களித்தவுடன் சட்டமூலமானது முழுப் பாராளுமன்ற குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்படும்.

ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலை

குழுநிலைக்கு ஆகக் கூடுதலாக இருபத்திரண்டு நாட்கள் ஒதுக்கப்படுவதோடு ஒதுக்கீட்டுச் சட்டமூலமானது முழுப் பாராளுமன்றக் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்படும்போது அனைத்து வாசகங்கள், தலைப்புகள் மற்றும் அட்டவணைகள் என்பன அதற்காக பிரேரிக்கப்பட்ட திருத்தங்களுடன் பரிசீலிக்கப்பட்டு 130 ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் பிரகாரம் பாராளுமன்றத்திற்கு அறிவிக்கப்படுகின்றது. 28 ஆம் இலக்க நிலையியற் கட்டளையில் குறிப்பிடப்பட்டுள்ளவை எவ்வாறிருப்பினும் எந்தவொரு நிகழ்ச்சித்திட்டம், கருத்திட்டம் அல்லது செலவு விடயத்தின் தொகைக் குறைப்பிற்கான பிரேரணைக்கும் 130(9) ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் பிரகாரம் முன்னறிவித்தல் தேவைப்படும்.

முழுப் பாராளுமன்றக் குழுவில் ஒவ்வொரு அமைச்சுகளுக்குமான வாக்குகள் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் தவிசாளர் குறித்த வாக்குகள் பரிசீலிக்கப்பட்டு திருத்தங்களுடன் அல்லது திருத்தங்களின்றி நிறைவேற்றப்பட்டதென பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவார். சகல வாக்குகளும் பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டவுடன் சட்டமூலம் மூன்றாம் முறையாக மதிப்பீடு செய்யப்பட்டு வாக்கெடுப்பு ஒன்றின் மூலம் நிறைவேற்றப்படும். இச்சந்தர்ப்பத்தில் சபாநாயகர் குறிப்பிட்ட ஆண்டிற்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் திருத்தங்களுடன் அல்லது திருத்தங்களின்றி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதாக அறிவிப்பார்.

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் பாராளுமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டால் அரசியலமைப்பின் உறுப்புரை 48(2) இன் பிரகாரம் அமைச்சரவை கலைக்கப்பட்டதாகக் கருதப்படும்.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks