07

E   |   සි   |  

2009-12-23

தியவன்னா நத்தார் இன்னிசை – 2009

"தியவன்னா நத்தார் இன்னிசை" எனும் வருடாந்த கிறிஸ்மஸ் நிகழ்ச்சி 2009 டிசம்பர் 23ஆம் திகதி வழக்கமான வழிபாடுகளுடன் கெளரவ சபாநாயகரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் எளிய முறையில் கொண்டாடப்பட்டது.

பிரதம அதிதியான கொழும்பு பேராயர் அதி வணக்கத்துக்குரிய கலாநிதி மல்கொம் ரஞ்ஜித் ஆண்டகை கெளரவ சபாநாயகரின் வாசஸ்தலத்தில் ஆசி நீரைத் தெளித்து ஆசீர்வதித்ததைத் தொடர்ந்து ஆராதனைகள் ஆரம்பமாயின. அடுத்து ஆரம்ப பவனி இடம்பெற்றது. பீட பரிசாரகர்கள், அருட்தந்தையர்கள், கெளரவ சபாநாயகர் மற்றும் பேராயர் ஆகியோர் பவனிவந்தனர். அதிவணக்கத்துக்குரிய அருட்தந்தை பெனடிக்ற் ஜோசப் அவர்களின் நேர்முக வர்ணனையுடன் வழிபாடுகள் ஆரம்பிக்கப்பட்டன. அருட்தந்தை ஜகோமே கொன்சல்வஸ் எழுதிய 'ஆரம்பயென் பெர' என்னும் அருமையான பாடலை திரு. லோரன்ஸ் மாட்டின், திரு. சுனில் சாந்த வர்ணகுலசூரிய மற்றும் குழுவினர் இசைக்க சம்பந்தப்பட்ட பைபிள் வாசகங்கள் வாசிக்கப்பட்டன.

ஏசு பாலகரின் பிறப்பு பற்றிய நற்செய்தி வாசகத்தை வணக்கத்துக்குரிய அருட்தந்தை சமன் மக்ஸிமஸ் பக்தியுடன் பாடினார். அதன் பின்னர்தான் 'மங்கல நாதம்' முழங்க 'சாமரங்கள்' அசைந்தாட உயிர்க்குடில் மேடையை நோக்கி வலம் வந்தது. இது இந்த மத வழிபாட்டின் மனங்கவர் நிகழ்வாகும். உயிர்க்குடில் மேடையை நெருங்கியதும், பிரதம அதிதி அதி வணக்கத்துக்குரிய கலாநிதி மல்கொம் ரஞ்ஜித் ஆண்டகை தனது கிறிஸ்மஸ் செய்தியையும் கிறிஸ்மஸ் ஆசீர்வாதத்தையும் வழங்கினார். வழக்கம் போன்று, இவ்வருடமும் அதிவணக்கத்துக்குரிய பேராயர் கலாநிதி ஒஸ்வல்ட் கோமிஸ் எழுதிய 'ஸ்ரீ லங்காவே கிதுனு தாயகத்வய' என்னும் தலைப்பிலான விசேட கிறிஸ்மஸ் பிரசுரம் ஒன்றும் வெளியிடப்பட்டது.

தமது தாபனங்ளைப் பிரதிநிதித்துவம் செய்யும் அசோசியேட்டட் நியூஸ்பேப்பர்ஸ் லிமிட்டட் மற்றும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் போன்ற பல குழுக்களால் கரோல் கீதங்கள் இசைக்கப்பட்டதோடு, அது போதாதென்றாற்போல தெஹிவளை புனித மரியாள் ஆலயம், குருபாவில திசாவ இளைஞர் கழகம் மற்றும் போளவத்தை ஆகியவற்றின் பாடகர் குழுக்களினாலும் கரோல் பாடல்கள் பாடப்பட்டன. தொடர்ந்து இரண்டாவது வருடமாகவும் பாராளுமன்றப் பணியாளர்களின் பிள்ளைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட பாடகர் குழு தனது பாடலை அரங்கேற்றியது. கொழும்பு ஜோ நெத் ஒலிப்பதிவுகூடத்தின் பணிப்பாளர் அருட்தந்தை சிறியானந்த பர்னாந்து அவர்களால் இவர்கள் பயிற்றுவிக்கப் பட்டனர். இதற்கு மேலதிகமாக இம் மாலை வேளையானது திருமதி ரஜினி செல்வநாயகம் அவர்களின் "சாமர கலாயத்தன" நடனக் குழு மாணவ மாணவியரால் அரங்கேற்றப்பட்ட ஒரு நடன நிகழ்வு மூலம் மேலும் அழகு செய்யப்பட்டது.

கெளரவ சபாநாயகர், முதற் பெண்மணி திருமதி ஷிராந்தி ராஜபக்ச, அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், பாப்பரசரின் இலங்கைக்கான தற்போதைய பிரதி நிதியான மேதகு மொன்சிஞ்ஞோர் ஜோசப் ஸ்பிற்றேரி மற்றும் சமயப் பெரியோர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்த இம் மாலை நிகழ்விற்குப் பாராளுமன்றச் செயலகத்தின் பணியாள் தொகுதியினரும் சமுகமளித்திருந்தனர். இந் நிகழ்ச்சியானது மத அலுவல்கள் அமைச்சு, மற்றும் மக்கள் தொடர்பாடல், தகவல் அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து பாராளுமன்றப் பணியாள் தொகுதி யினரால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது TekGeeks