07

E   |   සි   |  

2009-09-25

பாராளுமன்றத்தில் கலைமகள் விழா

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றத்தில் நவராத்திரியை முன்னிட்டு ஆண்டுதோறும் நடாத்தப்பட்டுவரும் கலைமகள் விழா, இவ்வாண்டும் ஆறாவது தடவையாக மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. துர்க்கை, லக்ஷ்மி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியரை முறையே வீரம், செல்வம், கல்வி என்பன வேண்டி வழிபடும் இவ்விழாவை, முழு நாட்டு மக்களும் பயன்பெறவேண்டி, சட்டமியற்றும் உயர்பீடமான பாராளுமன்றத்திலும் கொண்டாடவேண்டுமென்பது மாண்புமிகு சபாநாயகர் டபிள்யு.ஜே.எம். லொக்குபண்டார அவர்களின் விருப்பமாகும். அவர்தம் விருப்புக்கமைய மத அலுவல்கள் அமைச்சு மற்றும் இந்து சமய அலுவல்கள், கலாசார அலுவல்கள் திணைக்களம் என்பவற்றின் அனுசரணையுடன் இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இவ்விழாவினையொட்டி, செப்ரெம்பர் மாதம் 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை முதல் பாராளுமன்ற முற்புற வளாகம் நந்திக்கொடிகள், குருத்தோலைத் தோரணங்கள் மற்றும் வாழை மரங்கள்கொண்டு அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டிருந்தது. மிகச் சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட அழகிய பீடத்தில் மலைமகள், அலைமகள், கலைமகள் எனும் முப்பெருந்தேவியரின் திருவுருவப்படங்கள் மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தன. விழாவையொட்டிய கலை நிகழ்ச்சிகளுக்கெனப் பிரத்தியேகமாகப் பெரிய அளவிலான மேடையொன்றும் அமைக்கப்பட்டிருந்தது.

பி.ப.1.00 மணிக்கு திருவாளர்கள் பஞ்சாபி நாகேந்திரன் மற்றும் சுப்புசாமி பாலமுருகன் குழுவினரின் மங்கள வாத்திய இசை ஆரம்பமானது. ஏற்கெனவே திட்டமிட்டபடி மு.ப. 1.30 மணிக்கு சபாநாயகர் மாண்புமிகு டபிள்யு.ஜே.எம். லொக்குபண்டார, குழுக்களின் பிரதித் தவிசாளர் மாண்புமிகு இரா. சந்திரசேகர் மற்றும் மாண்புமிகு அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் வருகையுடன் விசேட பூசை வழிபாடு ஆரம்பமானது.

கொழும்பு, கப்பித்தாவத்தை ஸ்ரீ பால செல்வ விநாயகர் ஆலயத்தின் பிரதம குருக்களான எஸ். இராதாகிருஷ்ணக் குருக்கள் தலைமையிலான குருக்கள்மார் பூசையைச் சிறப்புடன் நடாத்தினர். இந்நிகழ்வில் பாராளுமன்ற ஊழியர்களும் மத அலுவல்கள் அமைச்சு மற்றும் இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்கள ஊழியர்களும் மற்றும் அழைக்கப்பட்ட பிரமுகர்களும் பெருமளவில் கலந்துகொண்டிருந்தனர்.

பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் ஆரம்பமாயின. முதல் நிகழ்வாக செல்வி திவ்யா சிவநேசன் குழுவினரின் நடன நிகழ்வு இடம்பெற்றது. அதைத் தொடர்ந்து செல்வி எம். சஜித்தா செளத்ரி வழங்கிய நடன நிகழ்வு இடம்பெற்றது. மூன்றாவது நிகழ்ச்சியாக பிரபல நடன ஆசிரியை திருமதி றிஷாந்தினி சஞ்ஜீவன் அவர்களது மாணவியரின் குழு நடனம் இடம்பெற்றது. இவை யாவும் சபையோரின் பலத்த கரகோஷசத்தைப் பெற்றன.

அடுத்த நிகழ்வாக அமைந்த, நடன ஆசிரியை திருமதி கீதாஞ்சலி துரைராஜாவின் மாணவிகளின் நடனம் பார்ப்போரைப் பரவசத்தில் ஆழ்த்தும்வகையில் அமைந்திருந்தது. அதைத் தொடர்ந்து இடம்பெற்ற செல்வி தினிதி தொரணகொட அவர்கள் வழங்கிய ஒரு புதிய வடிவத்தில் அமைந்த கதக் நடனம் பலரதும் பாராட்டைப் பெற்றது.

இறுதி நிகழ்வாக அமைந்த, பிரபல நடன ஆசிரியை செல்வி திவ்யா சிவநேசன் குழுவினரின் நடன நிகழ்ச்சி அன்றைய நிகழ்வுகளுக்கு ஒரு முத்தாய்ப்பாய் அமைந்து கண்களுக்கு விருந்தளித்தது.

விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் குளிர்பானம் வழங்குவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன், அனைவருக்கும் இந்துசமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு, தெஹிவளை நெடுமால் ஆலய நிர்வாகத்தினரால் தயாரிக்கப்பட்ட சுவைமிகு பிரசாதமும் வழங்கப்பட்டது.

எமது கலாசார விழுமியங்களின் அடையாளங்களைப் பேணிப் பாதுகாக்கும்வகையிலும், எமது நாட்டுக்கு இன்றைய அவசியத் தேவையான சாந்தியும் சமாதானமும் வேண்டியும் இடம்பெற்ற ஓர் ஆன்மீகப் பெருவிழாவாக இக்கலைமகள் விழா இனிதே இடம்பெற்றது.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது TekGeeks