E   |   සි   |  

2009-09-09

இப்தார் வைபவம் – 2009

ரமழான் மாத நோன்பை நாளாந்தம் துறப்பதற்கான மாலை உணவை அருந்தும் வருடாந்த இப்தார் வைபவம் 2009 செப்டெம்பர் 09 ஆம் திகதியன்று சபாநாயகரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

மாலையில் ஆரம்பமான இந்த நிகழ்வில் சிறப்பிக்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரபு நாடுகளின் தூதுவர்கள், முஸ்லிம் சமயத் தலைவர்கள், மற்றும் பல்வேறு ராஜதந்திரிகள் உள்ளிட்ட விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

இம்முறை ‘கஸீதா’ , மற்றும் ‘பயான்’ போன்ற சமய நிகழ்ச்சிகளுடன் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது. அதனை அடுத்து தனியார் பிராத்தனையில் (‘துஆ’) அனைவரும் ஈடுபட்டனர். இப்தாருக்கு சற்று முன்னுள்ள வேளையில் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் நேரடியாக பாவ மன்னிப்புக் கோருவதையும், தாம் விரும்பிய பிரார்த்தனைகளை வேண்டுவதையும் அவன் ஏற்றுக் கொள்கிறான். சூரிய அஸ்தமனத்துடன் நோன்பை துறந்ததும் ‘மஃரிப்’ தொழுகை பின்தொடரப்பட்டது. அதனைத் தொடர்ந்து இராப்போசணம் வருகை தந்திருந்தோரிடையே பரிமாறப்பட்டது. வழக்கம் போன்று, மீண்டுமொரு முறை அரேபியன் றோயல் குறூப் ஒப் கம்பனீஸ் நிறுவனத்தின் தலைவர் அல்-ஹாஜ் எம்.பீ.எம்.ஹம்சா ஜே.பி. அவர்களின் அனுசரணையுடன் இவ்வைபவம் ஒழுங்குசெய்யப்பட்டது.

இஸ்லாமிய கலண்டரில் ஒன்பதாம் மாதமான ரமழான், உலகெங்குமுள்ள முஸ்லிம் பக்தர்களால் ஒரு புனித மாதமாக மதிக்கப்படுகிறது. இந்த ரமழான் மாதத்தில் இவர்கள் தொடர்ச்சியாக நோன்பிருப்பர். அதிகாலை முதல் மாலை இப்தார் வரை நோன்பிருக்கும் இவர்கள் அதிகாலை ‘ஸஹர்’ உணவை ‘சுபஹ்’ வேளைக்கு முன் முடித்துக் கொண்டு அன்றைய நோன்பிருப்பை ஆரம்பிப்பர். இந்தப் புனித மாதத்தில் ஒவ்வொரு முஸ்லிமும் ‘ஸக்காத்’ – தர்மம், மற்றும் ‘ஸதக்கா’, ‘ஸகாதுல் பித்ரா’ - தானம் போன்ற உதவிகளை சமூகத்திலுள்ள வறிய மக்களுக்காக நல்குதல் முதலிய நற் கருமங்களில் ஈடுபடுவார். நோன்பை நோற்று பூரணத்துவம் செய்த பின் உலக முஸ்லிம்கள் ‘ஈதுல் பித்ர்’ எனும் ரமழான் பண்டிகையைக் கொண்டாடுவர்.

இனங்களுக்கிடையே ஒற்றுமையையும், ஐக்கியத்தையும் ஏற்படுத்தும் முகமாக கெளரவ சபாநாயகர் அவர்களினால் இந்த இப்தார் நிகழ்வு ஏற்பாடு செய்யப்படுகிறது.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks