பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2019-10-23
செய்தி வகைகள் : குழு செய்திகள்
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 2018ஆம் ஆண்டு 10,502 கோடி ரூபா நஷ்டம் அடைந்திருப்பதாக அரச பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) பாராளுமன்றத்தில் இன்று (23) சமர்ப்பித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த வருடம் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை 50 கோடி ரூபா நஷ்டம் அடைந்திருப்பதுடன், வரையறுக்கப்பட்ட எல்கடுவ கம்பனி 3 கோடி ரூபா நஷ்டம் அடைந்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக 2018ஆம் ஆண்டு பாலி மற்றும் பௌத்த பல்கலைக்கழகம் 2,187,367 ரூபாவும், மரபுரிமைகள் தொடர்பான மேற்படிப்புக்கான நிறுவனம் 3,567,328 ரூபாவும் நஷ்டம் அடைந்துள்ளன.
அரச பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள இலங்கை மகாவலி அதிகாரசபை மற்றும் மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை ஆகியன தமது வருடாந்த அறிக்கைகளை குழுவுக்கு சமர்ப்பித்திருக்கவில்லை.
லங்கா ஹொஸ்பிட்டல் கோப்ரேஷன் பி.எல்.சி, இலங்கை அரசாங்க மருந்தாக்கல் கூட்டுத்தாபனம், தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, வீதி அபிவிருத்தி அதிகாரசபை, அரசாங்க பொறியியலாளர் கூட்டுத்தாபனம், காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு, இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி சபை, இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனம், வரையறுக்கப்பட்ட இலங்கை மின்சார (தனியார்) நிறுவனம் உள்ளிட்ட 23 நிறுவனங்கள் தொடர்பில் கணக்காய்வாளர் நாயகம் சமர்ப்பித்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு கோப் குழு நடத்திய விசாரணைகளின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு ஓகஸ்ட் 09ஆம் திகதி முதல் அரச பொறுப்பு முயற்சிகள் குழுவின் விசாரணைகள் ஊடகங்களுக்கு அறிக்கையிட அனுமதிக்கப்பட்டதுடன், இலங்கையின் பொருளாதார, அரசியல் மற்றும் கலாசார துறைகளில் இடம்பெறுகின்ற நிகழ்வுகள் மற்றும் காணப்படுகின்ற சவால்களில் மக்கள் தலையிடுவதற்கான வாய்ப்புக்கள் விஸ்தரிக்கப்பட்டுள்ளன.
அரச பொறுப்பு முயற்சிகள் குழுவின் அறிக்கையை சபையில் சமர்ப்பித்த பின்னர் கருத்துத் தெரிவித்த அக்குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி, கோப் குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் மதிப்பு ஏற்பட்டிருப்பதுடன், குழுவுக்குக் காணப்படும் அதிகாரங்கள் குறித்து மக்கள் அறிந்துகொள்ள முடிகிறது. இதனால் கோப் குழு முன்வைக்கும் ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகள் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா என்பது தொடர்பில் அவர்களே தீர்மானிக்க முடியும் என்றார்.
விசேடமாக 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சமர்ப்பிக்கப்பட்ட கோப் குழுவின் முதலாவது அறிக்கையில் முன்மொழியப்பட்ட பரிந்துரைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் கண்காணிப்புக்கள் எட்டு வாரங்களுக்குள் பாராளுமன்றத்துக்கு அறிவிக்கப்பட வேண்டும். இருந்தபோதும் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்ட எட்டு நிறுவனங்களில் ஐந்து நிறுவனங்கள் தொடர்பிலேயே அமைச்சுக்களின் கண்காணிப்புக்கள் கிடைத்துள்ளன என்றும் கூறினார்.
கோப் குழுவினால் முன்வைக்கப்படும் பரிந்துரைகளை விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டியவர்களை சட்டத்தின் முன் கொண்டுவருவதற்கு அரச பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் விசாரணைகளை கண்காணிக்க நீதிமன்ற அதிகாரம் கொண்ட குழுவினர் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தைச் சேர்ந்தவர்களை அழைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம் அரச பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு விசாரிக்கும் நிறுவனங்களில் இடம்பெறுகின்ற முறைகேடுகளுக்கான சாட்சியங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் சுனில் ஹந்துன்நெத்தி மேலும் தெரிவித்தார்.
இது தொடர்பில் சபாநாயகரின் கவனத்துக்குக் கொண்டு செல்வதாக சபைக்குத் தலைமைதாங்கிய பிரதி சபாநாயகர் குறிப்பிட்டார்
2025-11-18
அஸ்வெசும நலன்புரி சலுகைத் திட்டம், அதன் நடைமுறைகள் மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்துவதில் காணப்படும் சிக்கல்கள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் விஜேசிறி பஸ்நாயக்க அவர்களின் தலைமையில் அண்மையில் (நவ. 12) பாராளுமன்றத்தில் கூடிய வழிவகைகள் பற்றிய குழுவில் கவனம் செலுத்தப்பட்டது. இங்கு அஸ்வெசும நலன்புரி சலுகைத் திட்டத்தின் தற்போதைய நிலைமைகள் மற்றும் நடைமுறைப்படுத்தப்படும் முறை தொடர்பில் நலன்புரி நன்மைகள் சபையின் அதிகாரிகள் குழுவுக்கு விளக்கமளித்தனர். அஸ்வெசும திட்டத்திற்குப் பயனாளிகளைத் தேர்ந்தெடுப்பதற்குப் பயன்படுத்தப்படும் அளவுகோல்கள் குறித்து குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. அந்த அளவுகோல்களின் அடிப்படையில் பொருத்தமான சலுகைகளை வழங்குவதற்குத் தகுதியான பயனாளிகளைத் தேர்ந்தெடுப்பதில் காணப்படும் சிக்கல்கள் குறித்து குழுவின் உறுப்பினர்கள் அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர். இத்திட்டத்தில், 22 அளவுகோல்களின் கீழ் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்படுவதால், அந்த அளவுகோல்களை செயல்படுத்தும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றும் குழு சுட்டிக்காட்டியது. அஸ்வெசும நன்மைகளைப் பெறுவதற்காக மாத்திரம் பயனாளிகளைப் பதிவுசெய்வதற்குத் தற்பொழுது அனுமதிக்கப்பட்டாலும், நாடு முழுவதிலுமுள்ள மக்கள் தமது தகவல்களைக் கட்டமைப்பொன்றில் (Social Registry) பதிவுசெய்வதே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என குழு சுட்டிக்காட்டியது. அத்துடன், பதிவுசெய்த பின்னர் தங்களுக்கு என்ன தேவை என்பதைத் துல்லியமாகக் கண்டறிந்து, அதன் மூலம், தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்று குழு சுட்டிக்காட்டியது. முதியோர் மற்றும் இயலாமையுடைய நபர்களுக்கு அஸ்வெசும திட்டத்தை அவர்களின் வீடுகளுக்கே சென்று பெற்றுக்கொடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் குழு விரிவாகக் கலந்துரையாடியது. தேசிய அடையாள அட்டை இல்லாததால் நலன்புரித் திட்டத்தின் உதவிகளைப் பெற முடியாத தகுதியுள்ள நபர்கள் தற்போது இருந்தாலும், தேசிய அடையாள அட்டை இல்லாததால் அந்தச் சலுகைகளைப் பெற முடியாத சில குழுக்கள் உள்ளன என்றும் அதிகாரிகள் குழுவிடம் தெரிவித்தனர். அதன்படி, முடிந்தவரை அவர்களின் அடையாளங்களை உறுதி செய்வதன் மூலம் நலன்புரித்திட்ட உதவிகளை வழங்குவதன் நோக்கத்தை அடைவதன் முக்கியத்துவத்தையும் குழு வலியுறுத்தியது. இக்கூட்டத்தில் கௌரவ அமைச்சர் (கலாநிதி) அனில் ஜயந்த, கௌரவ பிரதியமைச்சர்களான சதுரங்க அபேசிங்ஹ, (பேராசிரியர்) ருவன் ரணசிங்க, நிஷாந்த ஜயவீர, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) சுஜீவ சேனசிங்க, கே.சுஜித் சஞ்சய பெரேரா, ரோஹன பண்டார, சத்துர கலபதி, திலின சமரகோன் மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
2025-11-17
தேசிய உயர்கல்வி கொள்கைக்கான வரைபு தயாரிப்பின் முன்னேற்றம் தொடர்பில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவினால் நியமிக்கப்பட்ட உயர்கல்விப் பிரிவு தொடர்பான உபகுழுவில் கலந்துரையாடப்பட்டது. குறித்த உபகுழு அதன் தலைவர் கௌரவ பிரதியமைச்சர் (வைத்தியர்) மதுர செனவிரத்ன அவர்களின் தலைமையில் அண்மையில் (நவ. 11) பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது. தயாரிக்கப்பட்டுவரும் உயர்கல்விக் கொள்கை வரைபு மற்றும் அதற்கான நடவடிக்கைகளின் முன்னேற்றம் தொடர்பில் களனி பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் நிலந்தி.த சில்வா அவர்கள் குழு முன்னிலையில் கருத்துத் தெரிவித்தார். நவம்பர் மாத இறுதிக்குள் இந்த வரைபைத் தயாரிக்க முடியும் என அவர் குறிப்பிட்டார். மேலும், பல்கலைக்கழகங்களில் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்களை மதிப்பாய்வு செய்தல், இயலாமையுடைய மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்தல் மற்றும் வெளிப்புற பட்டப்படிப்பு திட்டங்களின் தரத்தை மேம்படுத்துதல் தொடர்பாக முந்தைய குழு கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட பிரச்சினைகள் குறித்தும் இங்கு ஆராயப்பட்டது. இந்தக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சின் செயலாளர் நாளக கலுவெவ உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
2025-11-15
அரச சேவைக்காக முறையான சம்பளக் கட்டமைப்பைத் தயாரிப்பதற்கும், தொழில்சார் தரத்தை மேம்படுத்துவதற்கும் தேவையான திட்டம் மற்றும் முறையான நிறுவனத்தை ஸ்தாபிப்பதற்கான ஆலோசனைகள் மற்றும் கருத்துக்கள் அடங்கிய உப குழுவின் இடைக்கால அறிக்கை உப குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியாரச்சி அவர்களினால் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவிடம் கையளிக்கப்பட்டது. பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு கௌரவ அமைச்சர் (பேராசிரியர்) ஏ.எச்.எம்.எச். அபயரத்ன அவர்களின் தலைமையில் அண்மையில் (நவ. 13) பாராளுமன்றத்தில் கூடியபோதே இடைக்கால அறிக்கை கையளிக்கப்பட்டது. பிரதேச செயலக அலுவலகங்கள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டன. அதற்கமைய, இந்த விடயம் தொடர்பில் தேவையான நடவடிக்கை எடுக்குமாறு குழுவின் தலைவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அத்துடன், அரச சேவையில் பத்து ஆண்டுகளுக்கும் அதிகமான சேவைக் காலத்தைப் பூர்த்தி செய்த பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்களாக மாறியவர்களுக்கு, அந்த உறுப்பினர் பதவிக்கு வருவதற்கு முன்னர் அவர்கள் சேவையாற்றிய பதவிக்குரிய ஓய்வூதியத்தைப் பெற்றுக்கொடுப்பது குறித்தும் இங்கு முன்மொழியப்பட்டது. அரசாங்க வேலையை விட்டு பாராளுமன்ற உறுப்பினராக வரும் ஒருவருக்கு, உறுப்பினர் ஓய்வூதியமும் கிடைக்காததால், இந்த விடயம் தொடர்பில் கவனத்தில் கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது. இந்த விடயம் தொடர்பில் எதிர்காலத்தில் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், அதன்படி தனது கவனத்தைச் செலுத்த எதிர்பார்ப்பதாகவும் குழுவின் தலைவர் இங்கு தெரிவித்தார். சேவைப் பிரமாணக் குறிப்புக்கள், ஆட்சேர்ப்பு நடைமுறைகள், பதவி உயர்வு நடைமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள வினைத்திறன்காண் தடைதாண்டல் (efficiency bar) மதிப்பெண் வரம்புகளை பொதுச் சேவை ஆணைக்குழு மாற்றியமைத்ததன் காரணமாக அரச சேவைக்குள் குழப்பமான நிலை ஏற்பட்டுள்ளதாக இங்கு கலந்துரையாடப்பட்டது. இந்தச் சிக்கல் குறித்து மீண்டும் பரிசீலனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தக் குழு கூட்டத்தில் கௌரவ மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் பி. ருவன் செனரத், குழுவின் கௌரவ உறுப்பினர்கள் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
2025-11-15
முழுத் திட்டமும் 548 நாட்கள் தாமதமானதால் ஒப்பந்தக்காரர் ரூ.4227 மில்லியன் இழப்பீடு கோரியுள்ளமை தெரியவந்தது துறைமுக அதிகாரசபைக்குச் சொந்தமான அனைத்துக் காணிகளையும் ஏற்றுக்கொள்வது மற்றும் அகற்றுவது தொடர்பில் குழு கவனம் செலுத்தியது கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தின் கட்டுமானப் பணிகளில் ஏற்பட்ட தாமதம் மற்றும் அதனால் ஒட்டுமொத்த திட்டத்திலும் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப்) விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இலங்கை துறைமுக அதிகாரசபை தொடர்பான 2022, 2023ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் அதன் தற்போதைய செயலாற்றுகை குறித்து ஆராய்வதற்காக, அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஷாந்த சமரவீர அவர்களின் தலைமையில் கடந்த நவ. 13ஆம் திகதி கூடியபோதே மேற்கண்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. இலங்கை துறைமுக அதிகாரசபை கடந்த செப்டெம்பர் மாதம் 10ஆம் திகதி அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) முன்னிலையில் அழைக்கப்பட்டு 2022, 2023ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் அதன் செயலாற்றுகை குறித்து ஆராயப்பட்டிருந்தது. அன்றையதினம் கலந்துரையாட முடியாத விடயங்கள் குறித்து மீண்டும் கோப் குழுவில் கலந்துரையாடப்பட்டது. கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கு 2021 நவம்பர் மாதம் நிறுவனமொன்றுக்கு ரூ.40,273 மில்லியன் பெறுமதியான ஒப்பந்தத்தைப் பெற்றுக்கொடுக்க ஆமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. 2021 டிசம்பர் மாதம் இது தொடர்பில் ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டிருப்பதுடன், 2025 ஜனவரி 03ஆம் திகதி இத்திட்டம் பூர்த்திசெய்யப்படவேண்டியிருந்தது. எனினும், சில காரணங்களுக்காக கட்டுமானப் பணிகள் தாமதமடைந்தமையால் காலம் நீடிக்கப்பட்டு 2026ஆம் ஆண்டு ஜூலை மாதம் இதனைப் பூர்த்திசெய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளது என்பதும் இங்கு தெரியவந்தது. இதனால் குறித்த அபிவிருத்தித் திட்டம் 548 நாட்கள் காலதாமதம் அடைந்திருப்பதால் ஒப்பந்தக்காரர் ரூ.4227 மில்லியன் இழப்பீடு கோரியதாகவும், இது தொடர்பான அனைத்து விடயங்களையும் உள்ளடக்கிய அறிக்கையொன்றை கோப் குழுவில் சமர்ப்பிக்குமாறும் அதன் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த அபிவிருத்தி நடவடிக்கைகள் மிக விரைவாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவை நிறைவடையும் என்றும் குழுவில் ஆஜராகியிருந்த அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். அதிகாரசபை ஊழியர்களின் உணவுச் செலவுகள் குறித்தும் குழு கவனம் செலுத்தியதுடன், 2023 ஆம் ஆண்டு கோப் குழுவால் இது தொடர்பாக வழங்கப்பட்ட பரிந்துரைகள் செயல்படுத்தப்படவில்லை என்பதையும் குழு சுட்டிக்காட்டியது. அதன்படி, செலவுகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், விலைகளைக் குறைக்க போட்டிமுறையிலான கேள்விப்பத்திரங்கள் கோரும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். துறைமுக அதிகாரசபைக்குச் சொந்தமான அனைத்துக் காணிகளையும் கையகப்படுத்தி அப்புறப்படுத்துவது குறித்து கவனம் செலுத்திய குழுவின் தலைவர், நீதிமன்றத்தால் அப்புறப்படுத்துவதற்கும் கையகப்படுத்துவதற்கும் பரிந்துரைக்கப்பட்ட காணிகள் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டினார். அதன்படி, இது தொடர்பாக தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன், சீதுவை ரந்தொலுவ விளையாட்டுக் கழகத்தின் பெயர் இலங்கை துறைமுக அதிகாரசபை விளையாட்டுக் கழகம் எனப் பெயர்மாற்றம் செய்வது, குறித்த கழகத்தில் இணைந்த வீர வீராங்கனைகளை இலங்கை துறைமுக அதிகாரசபையின் ஊழியர்களாக ஆட்சேர்ப்பு செய்வது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) தயாசிறி ஜயசேகர, எஸ்.எம்.மரிக்கார், (சட்டத்தரணி) சுஜீவ சேனசிங்க, எம்.கே.எம்.அஸ்லம், (வைத்தியர்) பத்மநாதன் சத்தியலிங்கம், (வைத்தியர்) எஸ். ஸ்ரீ பவானந்தராஜா, லெப்டினன்ட் கொமாண்டர் (ஓய்வு) பிரகீத் மதுரங்க, திலின சமரகோன், சமன்மலி குணசிங்க, சுனில் ராஜபக்ஷ, சந்திம ஹெட்டியாராச்சி, தினேஷ் ஹேமந்த ஆகியோர் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks