2021-02-10
செய்தி வகைகள் : குழு செய்திகள்
இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் மூலம் கொவிட்-19 சமூகத்துக்குள் கொண்டுவரப்படுவதையும், சமூகத்தின் மத்தியில் உள்ள வைரஸ் சுற்றுலாப் பயணிகளுக்குத் தொற்றுவதைத் தடுப்பதற்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
இதற்கமைய எப்பொழுதும் சுகாதார விதிமுறைப்படி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், நாட்டு மக்களுக்கு கொவிட் தடுப்பூசியை விரைவில் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பது நடைமுறைச் சாத்தியமான செயற்பாடு என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
வெளிநாட்டவர்கள் நாட்டுக்கு வரும்போது அவர்கள் பீ.சி.ஆர் பரிசோதனைக்கு முகங்கொடுப்பது மற்றும் தனிமைப்படுத்தல் போன்றவற்றுக்கு அதிக காலத்தை செலவுசெய்வது தொடர்பில் தனது கருத்தைத் தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைக் கூறினார்.
இதற்கமைய மார்ச் மாதமாகும்போது நாட்டின் சனத்தொகையில் 57 வீதமானவர்களுக்கு தடுப்பூசி ஏற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்றத்தில் நேற்று (09) நடைபெற்ற சுற்றுலாத்துறை அமைச்சு தொடர்பான ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் அமைச்சர் தெரிவித்தார்.
உடவளவை தேசிய சரணாலயம் மற்றும் போகஹாபிட்டிய உத்தேச அபயபூமிக்கு இடையில் அமைந்துள்ள தஹய்யகல யானைகள் சரணாலயம் யானைகளுக்கான வழிப்பதாதையாக இருப்பதால் முக்கியத்தும் வாய்ந்ததாக அமைந்துள்ளது. அந்தப் பகுதி சட்டவிரோதமாக அகற்றப்படுவதால் இங்குள்ள யானைகளுக்கு அச்சுறுத்தலுக்கு உள்ளாவதாக பாராளுமன்ற உறுப்பினர் வருன லியனகே சுட்டிக்காட்டினார்.
யானைகள் இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு சிறந்த வளமாகும் என்றும், சுற்றுலாத்துறையை வெற்றிகொள்வதற்கு வனவிலங்குகள் மற்றும் வனப்பகுதி பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம் என்றும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வலியுறுத்தினார்.
இங்கு கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் உதயன கிரிந்திகொட, இலங்கை தொடர்பான தகவல்களை சுற்றுலாப் பயணிகள் இணையத்தளங்களின் ஊடாகவே அதிகமாகப் பெற்றுக் கொள்கின்றனர். எனினும் சுற்றுலா ஹோட்டல்கள் மற்றும் தங்குமிடங்கள் குறித்து இணையத்தளங்களில் காணப்படும் தகவல்கள் தொடர்பில் திருப்தியடைய முடியாதுள்ளது. கவர்ச்சியரமான புகைப்படங்கள் மற்றும் விபரங்கள் இணையத்தளங்களில் காணப்பட்டாலும் அவற்றின் நம்பகத்தன்மை குறித்த பிரச்சினை இருப்பதால் நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுகிறது. இவற்றை உறுதிப்படுத்துவதற்கான வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் ஆலோசனை முன்வைத்தார்.
இந்த ஆலோசனைக்கு பாராளுமன்ற உறுப்பினர்களான டயானா கமகே மற்றும் கீதா குமாரசிங்க ஆகியோர் தமது இணக்கத்தைத் தெரிவித்திருந்ததுடன், ஹோட்டல்கள் மற்றும் தங்குமிடங்கள் தொடர்பில் வெளியிடப்படும் தகவல்களை விசாரித்த பின்னர் இது தொடர்பில் நம்பகத்தன்மை அல்லது உறுதிப்படுத்தலை வழங்குவதன் ஊடாக சுற்றுலாத்துறையை பலப்படுத்த முடியும் எனவும் குறிப்பிட்டனர்.
காலி மாவட்டத்தின் சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான சந்திம வீரக்கொடி, கீதா குமாரசிங்க, மனுஷ நாணயக்கார ஆகியோர் தமது கருத்துக்களை முன்வைத்திருந்தனர். காலி மாவட்டம் உள்ளிட்ட தென்மாகாணத்தில் உள்ள சுற்றுலாத்தளங்களை அபிவிருத்தி செய்வது தொடர்பில் கலந்துரையாடுவதற்கான கூட்டமொன்றை ஏற்பாடு செய்யுமாறு அமைச்சர், சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாத் துறையின் வளர்ச்சி தொடர்பான தற்போதைய நிலைமை குறித்து சுற்றுலா அமைச்சர் வினவியிருந்ததுடன், சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் கலந்துரையாடல்களை நடத்தி அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக இதற்குப் பதிலளித்த இராஜாங்க அமைச்சின் செயலாளர் மாதவ தேவசுரேந்திர சுட்டிக்காட்டினார்.
சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் 2018ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை, சுற்றுலா அபிவிருத்தி நிதியத்தின் 2018ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கை, இலங்கை மாநாட்டுப் பணியகத்தின் 2018ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை இங்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன், இவற்றை அனுமதிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் கௌரவ டி.வி.சானக்க, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான கீதா குமாரசிங்க, மனுஷ நாணயகார, உதயன கிரிந்திகொட, ஜயந்த கெடகொட, டொக்டர் உபுல் கலப்பதி, எம்.உதயகுமார, டயானா கமகே, குணதிலக ராஜபக்ஷ, வீரசுமன வீரசிங்க, சம்பத் அதுகோரல, சிவஞானம் சிறிதரன் மற்றும் அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
2025-04-23
இயலாமையுடைய நபர்களின் தேவைகள் குறித்து போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் போக்குவரத்துத் துறை மற்றும் அதனுடன் தொடர்புடைய சட்ட ஏற்பாடுகளைப் பலப்படுத்துவதன் ஊடாக சாதகமான திசையை நோக்கி போக்குவரத்துத் துறையை வழிநடத்துவது தொடர்பான இரண்டாவது உபகுழுவில் கலந்துரையாடப்பட்டது. இந்த உபகுழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர அவர்களின் தலைமையில் அண்மையில் (ஏப். 10) கூடியபோதே இவ்விடயம் பற்றிக் கவனம் செலுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுதத் வசந்த த. சில்வா, பல்வேறு இயலாமையுடைய நபர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புக்களின் பிரதிநிதிகள், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர். இயலாமையுடைய நபர்களின் போக்குவரத்துத் தேவைகளை நிறைவேற்றுவதில் காணப்படும் பிரச்சினைகள் மற்றும் அவ்வாறான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முன்மொழிவுகள் குறித்து இதில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இயலாமையுடைய சமூகத்தினருக்கு முறையான போக்குவரத்து வசதிகள் இல்லாமை அவர்கள் எதிர்கொள்ளும் ஒரு பாரியதொரு பிரச்சினையாக இருப்பது இங்கு அடையளம் காணப்பட்டது. பேருந்துகள் மற்றும் புகையிரதங்களில் முறையான அணுகல் வசதிகள் இல்லாமை காரணமாக இயலாமை உடைய நபர்கள் வாடகைக்கு அமர்த்தப்பட்ட வாகனங்களில் பயணிக்கும் நிலை காணப்படுவதாகவும், இதற்காகப் பெருந்தொகைப் பணத்தைச் செலவிட வேண்டியிருப்பதாகவும் குழுவில் ஆஜராகியிருந்த பிரதிநிதிகள் குறிப்பிட்டனர். 2006ஆம் ஆண்டு 01ஆம் இலக்க மாற்றுத்திறனாளிகளுக்கான அணுகல் குறித்த ஒழுங்குவிதி பற்றிய வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக இயலாமையுடைய சமூகத்தினருக்கு உரிய வசதிகள் வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டாலும், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அல்லது தனிநபர்கள் இந்த உத்தரவுகளைப் பின்பற்றுவதில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர். அதன்படி, அந்தச் சட்டங்கள் நடைமுறையில் செயல்படுத்தப்படும்போது இயலாமையுடைய சமூகம் பெறும் நிவாரணம் குறித்தும் அவர்கள் குழுவின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர். சில பேருந்து நடத்துனர்களின் செயல்களால் இயலாமையுடைய நபர்கள் மிகுந்த சிரமத்தை அனுபவிப்பதாக அமைப்புகளின் பிரதிநிதிகள் குழுவிடம் சுட்டிக்காட்டினர். இதுபோன்ற பிரச்சினைகளைத் தீர்க்கவும், இயலாமையுடைய நபர்கள் தொடர்பான அணுகுமுறைகளை மேம்படுத்தவும் சட்டம் இயற்ற வேண்டியதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது. பேருந்துகள் மற்றும் புகையிரதங்களில் ஆசனங்கள், சட்டரீதியாக இயலாமையுடைய நபர்களுக்கான ஆசனங்களை ஒதுக்க வேண்டியதன் அவசியம், பேருந்துகளில் நிபந்தனையின்றி இயலாமையுடைய நபர்களுக்கு இடமளிக்க வேண்டியதன் அவசியம், புகையிரத நிலையங்களில் இயலாமையுடைய நபர்களுக்கான தகவல் தொடர்பு வசதியை எளிதாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் அவர்களைப் பாதிக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. செவிப்புலன் அற்ற சமூகத்தினருக்கு சாரதி அனுமதிப் பத்திரம் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து வினவப்பட்டதுடன், அவர்களுக்கு அவற்றை மீண்டும் வழங்குவதை உறுதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் குழுவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி, இயலாமையுடைய நபர்களின் பிரச்சினைகள் மற்றும் பரிந்துரைகளை இரண்டு வாரங்களுக்குள் எழுத்துமூலமாக இந்தக் குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், பெறப்பட்ட பிரச்சினைகள் மற்றும் பரிந்துரைகளைப் பரிசீலித்த பின்னர், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் எனவும் உபகுழுவின் தலைவர் தெரிவித்தார்.
2025-04-23
இரண்டு மாதங்களுக்குள் போக்குவரத்து அமைச்சின் முன்மொழிவுகளை வழங்குமாறும் அறிவிப்பு பொதுப் போக்குவரத்து சாதனங்களின் பொருத்தப்பாட்டை ஆராய்வதற்கு சரியான பொறிமுறையொன்றை உருவாக்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது பொதுப் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள சாரதிகளின் தொழில்முறைத் திறனை அதிகரிக்க ஒரு மாதத்திற்குள் முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு அறிவுறுத்தல் பஸ் பயணிகளின் பாதுகாப்பு உள்ளிட்ட பொதுப் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குத் தற்பொழுது காணப்படும் சட்டக்கட்டமைப்பை மேலும் பலப்படுத்துவது குறித்து போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவினால் அமைக்கப்பட்ட “போக்குவரத்துத் துறை தொடர்பான சட்டக் கட்டமைப்பை வலுப்படுத்துதல் மற்றும் போக்குவரத்துத் துறையை நேர்மறையான திசையில் வழிநடத்துதல்" என்ற உபகுழுவில் ஆராயப்பட்டது. இந்த உபகுழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர அவர்களின் தலைமையில் 2025.04.09 அன்று கூடியபோதே இவ்விடயம் பற்றிக் கவனம் செலுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அலுவல்கள் அமைச்சு மற்றும் அதன் கீழ் உள்ள நிறுவனங்கள் சிலவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் கலந்துகொண்டதுடன், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான சட்டக் கட்டமைப்பை வலுப்படுத்துவது தொடர்பான கருத்துக்களையும் அவர்கள் குழுவிடம் முன்வைத்தனர். பொதுப் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள பஸ்களுக்குத் தகுதிச் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளும் நடைமுறையை ஒழுங்குமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தைக் குழு வலியுறுத்தியது. மோட்டார் வாகனச் சட்டத்தின் 29வது பிரிவின் படி பஸ்கள், லொறிகள் மற்றும் அம்பியூலன்ஸ் வண்டிகளுக்கு இந்தத் தகுதிச் சான்றிதழ் வழங்கப்படுவதாகவும், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் அனுமதி இன்றி மாகாண சபைகளில் பதிவுசெய்யப்பட்ட கராஜ்களினால் இந்தத் தகுதிச் சான்றிதழ்கள் வழங்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். தகுதிச் சான்றிதழ்களை வழங்கும் கராஜ்களின் தரம் மற்றும் நம்பகத்தன்மையில் சிக்கல்கள் இருப்பதால், இவற்றை ஒழுங்குமுறைப் படுத்தவேண்டியதன் அவசியத்தை உபகுழுவின் தலைவர் வலியுறுத்தினார். மோட்டார் போக்குவரத்துச் சட்டத்தின் 19வது பிரிவின் கீழான நிர்மாணக் கட்டளைகளை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. அதன்படி, புதிய பஸ்களை இறக்குமதி செய்வதிலும், ஏற்கனவே உள்ள பஸ்களில் பயணிகளின் பாதுகாப்பிற்காக இருக்கைகளுக்கு இடையில் பொருத்தமான இடைவெளி, தேவையற்ற உபரணங்களை அகற்றுதல் மற்றும் ஆசனப் பட்டிகளை அணிவது போன்ற விடயங்கள் குறித்தும் நீண்டநேரம் கலந்துரையாடப்பட்டது. அதன்படி, தொடர்புடைய தரவுகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில், பொதுப் போக்குவரத்தில் பயணிகளின் பாதுகாப்பு தொடர்பாக செயல்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் குறித்த முன்மொழிவுகளுடன் கூடிய அறிக்கையைத் தயாரித்து, இரண்டு மாதங்களுக்குள் போக்குவரத்து அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் சமர்ப்பிக்குமாறும் உபகுழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார். பொதுப் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள சாரதிகளின் தொழில்முறைத் திறனை அதிகரிக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. சாரதிகளின் தொழிலை தரப்படுத்துவதற்கான முன்மொழிவுகளை ஒரு மாதத்திற்குள் குழுவிடம் சமர்ப்பிக்குமாறு உபகுழுவின் தலைவர் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கு அறிவித்தார். அத்துடன், கடந்த மூன்று மாதங்களில் இடம்பெற்ற வீதி விபத்துக்கள் குறித்த தரவுகளை உடனடியாக குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் குழு கேட்டுக் கொண்டது. தரவுகளின் அடிப்படையில் எதிர்கால பரிந்துரைகளை வகுப்பதன் முக்கியத்துவத்தை உப குழுவின் தலைவர் வலியுறுத்தினார். பஸ் சாரதிகள் போதைப்பொருள் பயன்படுத்துவதற்கு எதிரான சட்டத்தை அமுல்படுத்துவதற்குத் தேவையான சட்ட விதிகளை வலுப்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் இது தொடர்பான விதிமுறைகள் தயாரிக்கப்பட்டு, தற்போது இறுதி கட்டத்தில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விதிமுறைகள் உடனடியாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்றும், சாரதிகளின் உடலில் போதைப்பொருள் இருப்பதைக் கண்டறிதல் உள்ளிட்ட தொழில்நுட்ப வழிமுறைகள் முறையாக உருவாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இந்த உபகுழு, போக்குவரத்துத் துறையுடன் தொடர்புடைய குறுகிய மற்றும் நீண்ட கால அடிப்படையில் செயல்படுத்தக்கூடிய சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளில் ஏற்படும் மாற்றங்களை முதன்மையாக ஆராய்ந்து, பின்னர் தேவையான பரிந்துரைகளைக் கொண்ட அறிக்கையைத் தயாரிக்கும். இக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த த. சில்வாவும் பங்கேற்றார்.
2025-04-10
ஆட்டிசம் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு - இலங்கையில் 9,000ற்கும் அதிகமான சிறுவர்கள் இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் – அதிகாரிகள் குழுவில் தெரிவிப்பு முன்பிள்ளைப் பருவத்திலேயே ஆட்டிசம் உள்ள சிறுவர்களை அடையாளம் காணும் பொறிமுறையை செயற்படுத்துங்கள் – மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் இயலாமையுடைய சிறுவர்களைக் கையாழ்வது தொடர்பில் கல்வியியல் கல்லூரியில் கற்றுவரும் ஆசிரியர்களுக்கு ஆறு மாத பயிற்சியை வழங்குவதற்கு முன்மொழியப்பட்டிருப்பதாக மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கல்வி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் மூலம் இயலாமை உடைய சிறுவர்களை சாதாரண சிறுவர்களுக்கு சமமாக நடத்துவதற்கு தேவையான அறிவு மற்றும் மனப்பான்மைகளை ஆசிரியர்களுக்கு வழங்க முடியும் என நம்புவதாகவும் அதிகாரிகள் கருத்து தெரிவித்தனர். மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு கடந்த ஏப்ரல் 08ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த விடயங்கள் பற்றிக் கலந்துரையாடப்பட்டது. இக்கூட்டத்தில் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் கௌரவ பிரதியமைச்சர் நாமல் சுதர்ஷனவும் கலந்துகொண்டார். இங்கு கருத்துத் தெரிவித்த அதிகாரிகள், இலங்கையில் ஆட்டிசத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகக் குறிப்பிட்டனர். இது தொடர்பான கணக்கெடுப்பிற்கு அமைய 9,000ற்கும் அதிகமானவர்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டிருப்பது அடையாளம் காணப்பட்டிருப்பதாக அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர். எனவே, சரியான அடையாளம் காணப்படல்கள் இல்லாமையாலேயே சிறுவர்கள் இயலாமையுடைய நபர்களாக மாறவேண்டியிருப்பதாக குழுவின் தலைவர் வலியுறுத்தினார். முன்பிள்ளைப் பருவத்தில் ஆட்டிசம் உடைய சிறுவர்களை அடையாளம் காண வேண்டும் என்றும், அவ்வாறு அடையாளம் கண்டுகொண்டல் மாத்திரமே அவர்களை ஆரோக்கியம் மிக்க சிறுவர்களாக வளர்த்தெடுக்க முடியும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். அதாவது குழந்தை பிறந்தது முதல் முன்பிள்ளைப் பருவம் வரையான குடும்ப சுகாதார அதிகாரியின் மேற்பார்வைக் காலத்தில் குழந்தைகள் மீது கவனம் செலுத்துவதற்கான பொறிமுறை உரிய மட்டத்தில் செயற்படுத்தப்பட வேண்டும் என்றும் குழுவின் தலைவர் வலியுறுத்தினார். ஆட்டிசம் உள்ள குழந்தைகளுக்காக அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் மூன்று மாதிரி பகல்நேர பராமரிப்பு மையங்களை நிறுவவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தலைவர் கூறினார். இதற்காகத் தேவையான ஏற்பாடுகளைச் செய்வதற்கு ஒரு குழுவை நியமிக்கவும் முன்மொழியப்பட்டது. இதன் மூலம், அந்தக் குழந்தைகள் பொருத்தமான வளர்ச்சி நிலைகளுக்கு வழிநடத்தப்படுவார்கள் என்றும் நம்பப்படுகிறது. மேலும், ஆபத்து மற்றும் பொருளாதாரப் பாதிப்புக்கள் நிறைந்த நிலையில் காணப்படும் சிறுவர் இல்லங்கள் மற்றும் சிறுவர் நிலையங்களில் உள்ள சிறுவர்களை உயிரியல் ரீதியான குடும்பங்களிலிருந்து பிரிப்பதற்குப் பதிலாக, குடும்பத்திற்குள் பராமரிப்பை வழங்குவதன் அவசியத்தையும் குழு விரிவாகக் கலந்துரையாடியது. நீதிமன்ற செயற்பாடுகளுக்குப் பின்னர் சிறுவர் நன்னடத்தை நிலையங்களுக்கு சிறுவர்கள் அனுப்பப்படுவதாக நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர். இவ்வாறு சிறுவர்கள் நிறுவனமயமாக்கப்படுவதை விட குடும்பத்திற்குள் பராமரிக்கப்படுவதன் முக்கியத்துவம் குறித்து நீதிபதிகளைத் தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். பெருந்தோட்டத் துறையில் உள்ள சிறுவர்கள் சட்டவிரோத மது மற்றும் போதைப்பொருள் பாவனையில் ஈடுபடும் போக்குக் குறித்தும் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. சிறுவர்கள், குழந்தைகள் பாபுல் மற்றும் பான் பராக் போன்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை நாடுவது குறித்தும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. பாவனையாளர் அதிகாரசபையின் தடைசெய்யப்பட்ட இறக்குமதி பொருட்களின் பட்டியலில் பாபுல் மற்றும் பான் பராக் போன்ற உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பொருட்கள் உள்ளடக்கப்படவில்லையென்பதும் இங்கு தெரியவந்தது. இதற்கு அமைய இந்தப் பொருட்களை தடைசெய்யப்பட்ட இறக்குமதிப் பொருட்களின் பட்டியலில் சேர்க்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை பாவனையாளர் அதிகார சபைக்கு அனுப்பவும் குழு தீர்மானித்தது. மகப்பேற்றுக்கு விடுமுறைகள் வழங்கப்படும்போது மூன்றாவது குழந்தையைப் பிரசவிப்பதற்காக விடுமுறை வழங்கப்படாத சம்பவங்கள் குறித்த முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார். மகப்பேற்றுக்கு விடுமுறை வழங்கும்போது முதல் மற்றும் இரண்டாவது பிரசவங்களுக்கு வழங்கப்படுவதைப் போலவே மூன்றாவது மற்றும் நான்காவது பிரசவங்களுக்கும் அதே சலுகைகளை வழங்க சட்டம் திருத்தப்பட்டுள்ளதாகவும், இது முறையாக சமூகமயமாக்கப்படவில்லை என்றும் அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர். யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களில் தமிழில் பணிபுரியக்கூடிய பெண் அதிகாரிகளை நியமிப்பது குறித்தும் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது. இங்கு கருத்துத் தெரிவித்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரேணுகா ஜயசுந்தர, யாழ்ப்பாணத்தில் தற்போது 56 பெண் அதிகாரிகள் பணியாற்றுவதாகக் கூறினார். அந்தப் பெண் அதிகாரிகளில் 21 பேர் மகளிர் மற்றும் சிறுவர் பிரிவுகளில் பணிபுரிவதாகவும், அவர்களில் 8 பேர் மட்டுமே தமிழில் பணிபுரிய முடியும் என்றும் அவர் தெரிவித்தார். இங்கு, சிறுவர் மற்றும் மகளிர் அலுவல்கள் தொடர்பான விடயம் பிரதேச மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களின் நிகழ்ச்சிநிரல்களில் உள்ளடக்கப்படாமை தொடர்பில் மாவட்ட செயலாளர்களுக்குத் தெரியப்படுத்தி, குறித்த குழுக் கூட்டங்களில் இவ்விடயத்தை உள்ளடக்குவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் குழு கேட்டறிந்தது. தற்போது அந்தக் குழுக்களின் நிகழ்ச்சி நிரலில் சிறுவர் மற்றும் மகளிர் விவகாரம் தொடர்பான விடயஙங்கள் கலந்துரையாடப்படுவதாக அதிகாரிகள் குழுவிற்குப் பதிலளித்தனர். பிரதேச செயலக மட்டத்தில் நடைபெற்ற சிறுவர் உரிமைகள் மேம்பாட்டுக் குழுவில் பிராந்திய ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர், மகளிர் மற்றும் சிறுவர் விவகாரங்கள் தொடர்பான அனைத்து அதிகாரிகளின் பங்கேற்க வேண்டியதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது. இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ அமைச்சர்கள், கௌரவ பிரதியமைச்சர்கள், குழுவின் உறுப்பினர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
2025-04-10
பொது மனுக்கள் பற்றிய குழுவினால் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடரில் வழங்கப்பட்ட 80க்கும் அதிகமான விதப்புரைகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை பாராளுமன்றக் குழுக்களினால் வழங்கப்பட்டு இது வரை நடைமுறைப்படுத்தப்படாத விதப்புரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு ஒரு மாதகால அவகாசம் வழங்குவதற்கு, பாராளுமன்றக் குழுக்களின் விதப்புரைகள், சம்பந்தப்பட்ட பொறுப்பு வாய்ந்த நிறுவனங்களினால் அவை நடைமுறைப்படுத்தாமை தொடர்பில் மதிப்பாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு தீர்மானித்துள்ளது. இந்தக் குழு அதன் தலைவர் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு கௌரவ அமைச்சர் (சட்டத்தரணி) ஹர்ஷன நாயணக்கார தலைமையில் நேற்று (ஏப். 09) பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது. அதற்கமைய, குழுவினால் முன்னுரிமை வழங்கப்பட்டு மதிப்பாய்வு செய்யப்படவேண்டிய, நடைமுறைப்படுத்தப்படாத விதப்புரைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், இதன்போது பொது மனுக்கள் பற்றிய குழுவினால் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடரில் வழங்கப்பட்ட 80க்கும் அதிகமான விதப்புரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டவில்லை என்பது புலப்பட்டது. அத்துடன், அரசாங்கப் பொறுப்புமுயற்சிகள் பற்றிய குழு (COPE), அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (COPA), அரசாங்க நிதி பற்றிய குழு (COPF) ஆகிய குழுக்களினால் வழங்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்படாத விதப்புரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு ஒரு மாத கால அவகாசம் வழங்குவதற்கு குழுவினால் தீர்மானிக்கப்பட்டது. அதற்கமைய, இவ்வாறு நடைமுறைப்படுத்தப்படாத விதப்புரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு கடிதங்களை அனுப்புவதற்கும், ஒரு மாத காலத்துக்குள் நடைமுறைப்படுத்த முடியாது எனின் அதற்கான காரணங்களைக் குழுவுக்கு எழுத்துமூலமாகப் பெற்றுக்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க மற்றும் ஒஷானி உமங்கா ஆகியோரும் பாராளுமன்ற அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.