பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2021-11-17
செய்தி வகைகள் : குழு செய்திகள்
யொவுன்புர வேலைத்திட்டத்துக்கு அனுமதிக்கப்பட்ட மதிப்பீடான 350 மில்லியன் ரூபாவையும் விஞ்சி 80,560,914 ரூபா ஒதுக்கப்பட்டமை தொடர்பில் கோப் குழுவில் தெரியவந்தது.
நிறுவனங்களுக்கிடையிலான ஒத்துழைப்புநாட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்கு முக்கிய காரணியாக அமைந்துள்ளது என அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (கோப் குழு) தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்தார்.
இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர், தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் இலங்கை இளைஞர் சேவைகள் தனியார் நிறுவனத்தின் தலைவர் ஆகியோர் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் அது அரசாங்கத்தின் பயணத்துக்குத் தடையாக அமையும் என நேற்று (16) நடைபெற்ற கோப் குழுக் கூட்டத்தில் அவர் தெரிவித்தார். உள்ளக முரண்பாடுகளைக் கைவிட்டு அரசாங்கத்தின் நோக்கத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். கவனக் குறைவாக மற்றும் பொறுப்புடன் நடந்துகொள்ளாத அதிகாரிகள் தொடர்பில் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்குமாறும் கோப் குழுவின் தலைவர், இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் அநுராத விஜேக்கோனுக்குப் பணிப்புரை விடுத்தார்.
இலங்கை இளைஞர் சேவைகள் தனியார் நிறுவனம் 2017ஆம் ஆண்டு முதல் ஒருங்கிணைந்த திட்டத்தைத் தயாரிக்காமை குறித்து இக்குழுவில் விசேட கவனம் செலுத்தப்பட்டது. இந்நிறுவனத்தின் செயற்திறன் திட்டம் தயாரிக்கப்படாமை குறித்தும் வினவப்பட்டது.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வருடாந்த அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதில் காலதாமதம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத், 2015ஆம் ஆண்டு முதல் இலங்கை தேசிய இளைஞர் சேவை தனியார் நிறுவனம் வருடாந்த அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்காமை குறித்து கேள்வியெழுப்பினார். இந்த அறிக்கைகள் யாவற்றையும் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளருக்குக் கோப் குழு பணிப்புரை விடுத்தது.
அமைச்சரவைத் தீர்மானத்துக்கு அமைய மாத்தறை நில்வளா இளைஞர் பூங்காவை அமைப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டபோதும், இது தொடர்பில் சாத்தியக் கூற்று ஆய்வு மேற்கொள்ளப்படாமை குறித்தும் குழுவின் விசேட கவனம் செலுத்தப்பட்டது. திறன் அபிவிருத்தி மற்றும் தொழில்சார் பயிற்சி அமைச்சின் ஊடாக காணி உரிமையாளர்களுக்கு நஷ்டஈடு மற்றும் வட்டியாக 2014 டிசம்பர் 31ஆம் திகதி 142,810,543 ரூபா வழங்கப்பட்டுள்ளமை மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்திற்கு ஆலோசனைக்கான கட்டணமாக 7,657,349 ரூபா செலுத்தப்பட்டமை இங்கு கலந்துரையாடப்பட்டது.
2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட யொவுன்புர வேலைத்திட்டத்துக்காக அனுமதிக்கப்பட்ட மதிப்பீட்டுத் தொகை 350 மில்லியன் ரூபாவாகக் காணப்பட்டபோதும், இதனைஞம் விஞ்சும் வகையில் 80,560,914 ரூபா செலவுசெய்யப்பட்டமை இங்கு புலப்பட்டது. அத்துடன், 2019ஆம் ஆண்டின் வேலைத்திட்டத்துக்கான களஞ்சியங்கள் இரண்டு வாடகைக்குப் பெற்றுக்கொண்டதுடன், குறிப்பிட்ட காலப்பகுதியையும் மீறிப் பயன்படுத்தியதாகக் கூறி இதற்காக 2,227,400 ரூபா மேதிகமாக அறவிடப்பட்டுள்ளது. அத்துடன் 2016ஆம் ஆண்டு நடத்தப்பட்ட யொவுன்புர தேசிய வேலைத்திட்டத்தில் பங்குபற்றிய இளைஞர் யுவதிகளுக்கு விநியோகிப்பதற்காக தொழில்நுட்பக் குழுவின் பணிப்புரை இன்றி, வேலைத்திட்டம் முடிவடைந்த பின்னர் 1773 டீஷேர்ட்களை வழங்குவதற்காக 1,932,500 ரூபா செலவுசெய்யப்பட்டிருப்பது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
மதிப்பாய்வு சபையின் அறிக்கைக்கு அமைய 2017ஆம் ஆண்டு 1,822,400 ரூபா செலவில் அச்சிடப்பட்ட 268,000 துண்டுப்பிரசுரங்களை நீக்குமாறு பரிந்துரைக்கப்பட்டமையும் இக்குழுவில் தெரியவந்தது.
இளைஞர் சேவை தனியார் நிறுவனம் 1981ஆம் ஆண்டு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் 98% பங்கின் கீழ் உருவாக்கப்பட்டபோதும் இணைந்த நிதிக் கூற்று தயாரிக்கப்படவில்லையென்பதும் கோப் குழுக் கூட்டத்தில் புலப்பட்டது.
2018, 2019 மற்றும் 2020ஆம் ஆண்டில் இளைஞர் சேவைகள் தனியார் நிறுவனத்தின் ஊடாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் 417 மில்லியன் ரூபா பெறுமதியான வேலைகளைச் செய்துள்ளது.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் இலங்கை இளைஞர் தனியார் நிறுவனம் ஆகியவற்றின் தலைவர்கள் ஊடாக பிரிவுகளின் தலைவர்களுக்குக் 2021ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 08ஆம் திகதி வெளியிட்ட உள்ளகச் சுற்றுநிருபத்தில் றுவனம் தொடர்பில் வெளிநபர்களுக்கு எவரும் தகவல்களை வழங்கக் கூடாது என்ற விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறித்தும் இங்கு தெரியவந்தது. இது கணக்காய்வு நடவடிக்கைகள் மற்றும் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயற்பாடுகளுக்குப் பாதிப்பாக அமைந்தது என அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் ஆரம்பிக்கப்படவுள்ள சிஸ்கோ கணினி வலையமைப்புப் பாடநெறிக்கான ஆரம்பகட்ட வசதிகளை ஏற்படுத்துவதற்கு முன்னர் 2021ஆம் ஆண்டு ஜூலை 29 ஆம் திகதி 15,708,178 ரூபா செலவிட்டு உபகரணங்கள் கொள்வனவு செய்யப்பட்டமை குறித்தும் கோப் குழு, அதிகாரிகளிடம் கேள்வியெழுப்பியது.
இக்கூட்டத்தில் அமைச்சர் மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, பாராளுமன்ற உறுப்பினர்களான மதுர விதானகே, பிரேம்நாத்.சி தொலவத்த மற்றும் அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
2025-09-15
மாகம்புற துறைமுக முகாமைத்துவ நிறுவனத்தினால் தனியார் வங்கியிலிருந்து பெறப்பட்ட கடனை மீள் செலுத்தாதது தொடர்பில் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய (கோப்) குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், அது தொடர்பான பரிந்துரைகள் வழங்கப்பட்டன. இலங்கை துறைமுக அதிகாரசபையின் 2022, 2023 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் தற்போதைய செயல்திறனை ஆராய்வதற்காக, பாராளுமன்றத்தின் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஷாந்த சமரவீர தலைமையில் கடந்த செப். 10 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்தப் பரிந்துரைகள் வழங்கப்பட்டன. மாகம்புற துறைமுக முகாமைத்துவ நிறுவனம் 2013 ஜூலை 05 ஆம் திகதி நிறுவப்பட்டது என்றும், அந்த நிறுவனம் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் இருந்து பெற்ற அனுமதிப்பத்திரம் மூலம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் எரிபொருள் விநியோகஸ்தராக செயற்பாடுகளை ஆரம்பித்து 2014 ஆம் ஆண்டில் தனியார் வங்கியொன்றிலிருந்து துறைமுக அதிகாரசபையின் நிறுவன உத்தரவாதத்தின் (Corporate Guarantee) மூலம் 24 மில்லியன் டொலர் கடன் பெற்றிருந்தமை இங்கு தெரியவந்தது. எனினும், இந்தத் தொகையில் 18.82 மில்லியன் டொலர்கள் (6836 மில்லியன் ரூபாய்) 2023 டிசம்பர் வரை செலுத்தப்படாமல் இருந்ததாகவும், இந்தக் கடன் தொகையை மீளப் பெறுவதற்காக சம்பந்தப்பட்ட வங்கி 2019 ஆம் ஆண்டில் முகாமைத்துவ நிறுவனம் மற்றும் அதிகாரசபைக்கு எதிராக இரண்டு வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளதாகவும் இங்கு தெரியவந்தது. குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட அதிகாரிகள் கருத்து தெரிவிக்கையில், இது தொடர்பாக இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை செய்யும் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர். அத்துடன், 2022 ஜூன் மாதம் முதல் கலைப்பாளர் ஒருவர் நியமிக்கப்பட்டு மாகம்புற துறைமுக முகாமைத்துவ நிறுவனத்தை மூடும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். அதற்கமைய, இது தொடர்பாக குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், இவ்விடயத்தில் இலங்கை துறைமுக அதிகாரசபை தனது பொறுப்பை நிறைவேற்றுவதில் திருப்தியடைய முடியாது என குழு இதன்போது சுட்டிக்காட்டியது. அத்துடன், நிறுவனத்தை மூடுவதன் மூலம் மாத்திரம் திருப்தியடைய முடியாது என சுட்டிக்காட்டிய குழு, கடன் செலுத்தும் செயன்முறையை துரிதப்படுத்துமாறு பரிந்துரைத்தது. அத்துடன், இது தொடர்பாக ஒரு உள்ளக விசாரணை நடத்தி அதற்குரிய ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்குமாறும், உள்ளகக் கணக்காய்வுப் பிரிவை சரியாக மேற்பார்வையிடுவதற்கான ஒரு பொறிமுறையை தயாரிக்குமாறும் குழு பரிந்துரைத்தது. அதற்கமைய, இந்த அனைத்து விடயங்கள் தொடர்பாகவும் குழுவிற்கு ஒரு அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் பரிந்துரைக்கப்பட்டது. அதற்கு மேலதிகமாக, அதிகாரசபையின் கூட்டுத் திட்டம் தொடர்பிலும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) தயாசிறி ஜயசேகர, டி.வி. சானக்க, எம்.கே.எம். அஸ்லம், (சட்டத்தரணி) நிலந்தி கொட்டஹச்சி, திலித் ஜயவீர, லெப்டினன்ட் கமாண்டர் (ஓய்வுபெற்ற) பிரகீத் மதுரங்க, திலின சமரக்கோன், சமன்மலி குணசிங்க, சுனில் ராஜபக்ஷ, சந்திம ஹெட்டியாராச்சி, தினேஷ் ஹேமந்த ஆகியோர் கலந்துகொண்டனர்.
2025-09-12
பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் (கோபா) புதிய தலைவராக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவுசெய்யப்பட்டார். அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் தலைவராகப் பணியாற்றிய கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் அவர்கள் 2025.08.06ஆம் திகதி அப்பதவியை இராஜினாமாச் செய்ததையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் நோக்கில் இன்றையதினம் (செப். 12) கூடிய அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இந்தத் தெரிவு இடம்பெற்றது. தலைவர் பதவிக்கு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் அவர்களின் பெயரை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல அவர்கள் முன்மொழிந்ததுடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன அவர்கள் வழிமொழிந்தார். இதனைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த புதிய தலைவர், அரசியல் கருத்துவேறுபாடுகள் இன்றி நடுநிலையாகச் செற்பட்ட, சகல உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் தனது பதவியை முன்னெடுத்துச் செல்ல எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டார். அத்துடன், முன்னாள் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் அவர்களின் பணிகளைப் பாராட்டியதுடன், அவர் மேற்கொண்ட பணியை தொடர்ச்சியாக எதிர்காலத்தில் இன்னும் சிறப்பாகச் செய்வதற்கு எதிர்பார்ப்பதாகப் புதிய தலைவர் குறிப்பிட்டார். புதிய திட்டங்களை வகுப்பதன் மூலம் கோபா குழுவின் பங்கை மேலும் நெறிப்படுத்தவும் பராமரிக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக இருப்பதாக புதிய தலைவர் மேலும் தெரிவித்தார். இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர் சுதத் திலகரத்ன, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, ஜே.சி.அலவத்துவல, ரோஹித்த அபேகுணவர்தன, ஹெக்டர் அப்புஹாமி, சாமர சம்பத் தசநாயக்க, (வைத்தியர்) காவிந்த ஹேஷான் ஜயவர்தன, ஒஷானி உமங்கா, ருவன்திலக ஜயகொடி, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்ஹ, எம். ஏ. எம். தாஹிர், லால் பிரேமநாத், சானக மாதுகொட ஆகியோரும், பாராளுமன்ற சட்டவாக்க சேவைகள் பணிப்பாளரும், தொடர்பாடல் பதில் பணிப்பாளருமான எம். ஜயலத் பெரேரா ஆகியோரும் கலந்துகொண்டனர்.
2025-09-12
இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட மதிப்பீட்டிற்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது. கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ டி சில்வா அவர்களின் தலைமையில் நேற்று (செப். 11) பாராளுமன்றத்தில் கூடிய அரசாங்க நிதி பற்றிய குழுக் கூட்டத்திலேயே இந்த அனுமதி வழங்கப்பட்டது. இலங்கை மத்திய வங்கிக்கு நிதிச் சுதந்திரம் இருப்பதாகவும், அந்த நிறுவனங்களைப் போலவே இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கும், கணக்காய்வாளர் நாயகத் திணைக்களத்திற்கும் மிகவும் சுயாதீனமாகச் செயற்படுவதற்கான நிதிச் சுதந்திரம் வழங்குவது முக்கியம் என்று இங்கு குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். இதன் மூலம் தற்போதுள்ள அரசியல் அதிகாரத்துக்கு அப்பாற்பட்டு எந்தவொரு அரசாங்கத்தின் கீழும் அந்த நிறுவனங்களால் மிகவும் சுயாதீனமாகச் செயற்பட முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். இதனால், நிதி அமைச்சரான கௌரவ ஜனாதிபதிக்கும் இது தொடர்பாகத் தெரியப்படுத்துவதற்கு குழு இதன்போது தீர்மானித்தது. அத்துடன், ஆணைக்குழுவின் தலைவர், பணிப்பாளர் நாயகம் மற்றும் குழு உறுப்பினர்களின் சம்பளம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவரின் சம்பளத்திற்கு சமமாக அமைக்கப்பட வேண்டும் என்று இந்தக் குழு சுட்டிக்காட்டுவதாக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். அதற்கமைய, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவரின் சம்பளம் திருத்தப்படும் விதத்தில் இந்த அதிகாரிகளின் சம்பளமும் திருத்தப்பட வேண்டும் என்று குழுவின் தலைவர் சுட்டிக்காட்டியதுடன், அதற்குத் தேவையான தலையீடுகளை மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார். இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, ஹர்ஷண ராஜகருணா, (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்ன, விஜேசிறி பஸ்நாயக்க, சுனில் ராஜபக்ஷ, நிமல் பலிஹேன, திலின சமரகோன் மற்றும் நிஷாந்த ஜயவீர ஆகியோர் கலந்துகொண்டனர்.
2025-09-11
2025 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் நாட்டின் வருமானம், செலவு மற்றும் கடன் நிலவரம் குறித்து அரசாங்க நிதி பற்றிய குழுவில் ஆராயப்பட்டது. கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ டி சில்வா தலைமையில் அரசாங்க நிதி பற்றிய குழு அண்மையில் (செப். 09) பாராளுமன்றத்தில் கூடியபோது இந்த விடயம் ஆராயப்பட்டது. அதற்கமைய, 2024 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களின் மொத்த வருமானத்துடன் ஒப்பிடுகையில், 2025 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் இலங்கை அரசாங்கம் வலுவான நிதி செயற்திறனைப் பதிவு செய்து, அரையாண்டு இலக்கைத் தாண்டியுள்ளதாக நிதி அமைச்சின் அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர். 2025 ஜனவரி முதல் ஜூன் வரையிலான அரை ஆண்டுக்கான மதிப்பிடப்பட்ட வருமானம் 2,241 பில்லியன் ரூபாவாக இருந்த நிலையில், மொத்தமாக சேகரிக்கப்பட்ட வருமானம் 2,318 பில்லியன் ரூபாய் எனவும், இது அரை ஆண்டு மதிப்பீட்டை விட 3% அதிகமாகும் என தரவுகளை முன்வைத்து நிதி அமைச்சின் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இதேவேளை, 2025 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் அரசாங்கத்தின் மொத்த செலவு 3,467 பில்லியன் ரூபாய் என்பதுடன், இது 2024 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களின் மொத்த செலவுடன் ஒப்பிடுகையில் 367 பில்லியன் ரூபா அதிகமாகும். இந்த அதிகரிப்பிற்கான முக்கிய காரணியாக கடன் சேவைகள் அமைந்துள்ளதுடன், 2025 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் இது 1,984 பில்லியன் ரூபாவாகும். அரசாங்க ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியங்கள், அஸ்வெசும மற்றும் சமுர்த்தி போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் உட்பட அத்தியாவசிய அரச சேவைகளுக்கான மீண்டெழும் செலவுகளும் அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இலங்கை சுங்கத் திணைக்களம் 2024 ஆம் ஆண்டுடன் (ஜனவரி - ஜூன்) ஒப்பிடுகையில் 47% வளர்ச்சியைப் பதிவு செய்து, 2025 ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலத்தில் 996 பில்லியன் ரூபாய் வருமானத்தைப் பதிவு செய்துள்ளது. மோட்டார் வாகன இறக்குமதியிலிருந்து கிடைத்த வருமானம் இந்த வளர்ச்சிக்குக் கணிசமாகப் பங்களித்துள்ளதுடன், இதன் மூலம் 429 பில்லியன் ரூபாய் பெறப்பட்டுள்ளது. வாகன இறக்குமதி அனுமதிக்கப்பட்டதிலிருந்து இதுவரை 220,026 வாகனங்கள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதுடன், அவற்றில் 154,537 வாகனங்களுக்கான சுங்க விடுவிப்பு நடவடிக்கைகளை இலங்கை சுங்கம் நிறைவுசெய்துள்ளதாகவும் நிதி அமைச்சின் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். அத்துடன், கொள்கலன்கள் விடுவிப்பு நடவடிக்கைகளுக்காக சுங்கத்தில் 9 - 10 நாட்கள் செல்வதால் இறக்குமதியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் குழு உறுப்பினர்கள் இலங்கை சுங்கத் திணைக்களத்திடம் வினவினர். அதன்படி, இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், 2 - 3 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட பொருட்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஒரு பொறிமுறையை உருவாக்கி வருவதாகத் திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர். உள்நாட்டு இறைவரித் திணைக்களமும் (IRD) வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதுடன், 2025 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் மதிப்பிடப்பட்ட வருமானம் 1,022,691 மில்லியன் ரூபாவாக இருந்த நிலையில், 1,040,388 மில்லியன் ரூபாய் வருமானத்தைப் பதிவு செய்துள்ளது. அத்துடன், 18 வயதிற்கு மேற்பட்ட சுமார் 1.3 மில்லியன் இலங்கையர்களுக்கு TIN (Tax Identification Number) இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்தத் திணைக்கள அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இந்தத் தரவுகளின் அடிப்படையில் இந்த ஆண்டு எதிர்பார்க்கப்படும் பொருளாதார வளர்ச்சி இலக்கை அடைய முடியுமா என்று குழுவின் தலைவர் கேள்வி எழுப்பினார். எனினும், இந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி சுமார் 3.1% ஆக இருக்கும் என்று அனுமானிக்க முடியும் என நிதி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன், சிகரெட்டுகளுக்குப் பயன்படுத்தப்படும் வரிக் கொள்கை தொடர்பான நிதி அமைச்சின் கொள்கை என்ன என்பது குறித்து குழுவுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்குமாறு குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆண்டின் இறுதியில் நாட்டின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு குறித்து இலங்கை மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சு என்பவற்றின் முன்னறிவிப்புகளுக்கு இடையிலான முரண்பாடு குறித்தும் குழுவில் கலந்துரையாடப்பட்டது. இந்தக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, ஹர்ஷண ராஜகருணா, அஜித் அகலகட, எம்.கே.எம். அஸ்லம், (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்ன, நிமல் பலிஹேன, (சட்டத்தரணி) சித்திரால் பெர்னாண்டோ, விஜேசிறி பஸ்நாயக்க, சுனில் ராஜபக்ஷ, சம்பிக்க ஹெட்டியாராச்சி, (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர, நிஷாந்த ஜயவீர ஆகியோர் கலந்து கொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks