E   |   සි   |  

2022-06-21

செய்தி வகைகள் : செய்திகள் 

பாராளுமன்றம் இன்றும் (21) நாளையும் (22) மாத்திரமே கூடும்

  • எதிர்க்கட்சியினால் நாளை கொண்டுவரப்படவிருக்கும் சபை ஒத்திவைப்புப் பிரேரணை சுயாதீன பாராளுமன்றக் குழுவுக்கு


பாராளுமன்றத்தை இவ்வாரத்தில் இன்றும் (21) நாளையும் மாத்திரம் கூட்டுவதற்கு சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (21) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

பாராளுமன்றத்தை ஜூன்21ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை கூட்டுவதற்கு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய கூட்டத்தில் முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தபோதும், தற்போதைய நிலைமைகளைக் கவனத்தில் கொண்டு இவ்வாறான தீர்மானம் எடுக்கப்பட்டது.

அத்துடன், எதிர்க்கட்சியினர் இவ்வார பாராளுமன்ற அமர்வுகளைப் புறக்கணிப்பதாக அறிவித்தமையால் நாளை (22) எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட்டு விவாதிக்கப்படவிருந்த நாட்டின் தற்போதைய சுகாதாரத் துறையின் பிரச்சினைகள் குறித்த சபை ஒத்திவைப்புப் பிரேரணை, பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தரப்பில் அமர்ந்துள்ள சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர்களின் குழுவினால் கொண்டுவரப்படுவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.

நாளையதினம் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்ட பின்னர் எதிர்வரும் ஜூலை 04ஆம் திகதி பாராளுமன்றம் கூடவுள்ளது. பல்வேறு காரணங்களால் பாராளுமன்றத்தில் கேட்கப்பட முடியாது போன 50 வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக அன்றையதினம் 10.00 மணி முதல் பி.ப 3.30 மணிவரையான முழு நேரமும் ஒதுக்கப்படவுள்ளது.

 

1

3

4

5

 



தொடர்புடைய செய்திகள்

2025-03-25

இலங்கை – சீன பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவர் பதவிக்கு அமைச்சர் பிமல் ரத்னாயக்க தெரிவு

பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை – சீன நட்புறுவு சங்கத்தின் தலைவர் பதவிக்கு சபை முதல்வரும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானசேவைகள் கௌரவ அமைச்சருமான பிமல் ரத்னாயக்க தெரிவுசெய்யப்பட்டார். இலங்கை – சீன பாராளுமன்ற நட்புறவு சங்கத்தை மீள ஸ்தாபிப்பதற்கான கூட்டம் கடந்த மார்ச் 21ஆம் திகதி கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே இத்தெரிவு இடம்பெற்றது. இலங்கைக்கான சீனத் தூதுவர் கௌரவ கீ சென்ஹொங் (Qi Zhenhong)  அவர்களும் இதில் கௌரவ விருந்தினராகக் கலந்துகொண்டார். அத்துடன், இலங்கை-சீன பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் செயலாளராக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர தெரிவுசெய்யப்பட்டார். இங்கு உரையாற்றிய கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன,  இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் நீண்டகாலமாகக் காணப்படும் இரு தரப்பு கலாசார மற்றும் அரசியல் உறவுகளை நினைவுகூர்ந்தார். இந்த உறவுகளை மேம்படுத்துவதற்குப் பாராளுமன்ற நட்புறவு சங்கம் முக்கியமான தளமாக அமையும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இரு தரப்பினருக்கும் அதிகபட்ச நன்மைகளைப் பெறுவதற்காக பொருளாதாரம், வர்த்தகம், கல்வி மற்றும் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த நெருக்கமாக பணியாற்றுவதன்  முக்கியத்தை வலியுறுத்திய சபாநாயகர், நட்புறவு சங்கத்தில் புதிய பொறுப்புக்களைப் பெற்றுக்கொண்டவர்கள் இதற்காகப் பணியாற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார். இங்கு கருத்துத் தெரிவித்த இலங்கைக்கான சீனத் தூதுவர் கௌரவ கீ சென்ஹொங் (Qi Zhenhong), நட்புறவு சங்கத்தின் ஊடாக இரண்டு நாடுகளும் பரஸ்பரம் அக்கறை செலுத்தும் துறைகளை வலுப்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தினார். மேலும், இலங்கையும் சீனாவும் தங்கள் கடினமான காலங்களில் மிகவும் நட்புடன் இணைந்து பணியாற்றியுள்ளன என்பதை நினைவு கூர்ந்த அவர், சீன-இலங்கை நட்புறவு சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இலங்கை – சீன நட்புறவு சங்கத்தின் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்ட சபை முதல்வரும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானசேவைகள் கௌரவ அமைச்சருமான பிமல் ரத்னாயக்க கருத்துத் தெரிவிக்கையில், நீண்ட காலமாக இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் நட்புறவைப் பாராட்டினார். குறிப்பாக கல்வி மற்றும் வணிகக் கைத்தொழில் போன்ற துறைகளில் சீனாவிடம் காணப்படும் திறன் மற்றும் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவை பலப்படுத்துவதற்கு ஒன்றிணைந்து செயற்படுமாறு சகல உறுப்பினர்களிடமும் கோரிக்கை விடுத்தார். கடந்த இலங்கை-சீன பாராளுமன்ற நட்புறவு சங்கத்தினால் இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட செயலமர்வுகள் மற்றும் திட்டங்களை இளம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தொடர்ந்தும் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் முன்வைத்தார். இரு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் நீண்டகால உறவை மேலும் பலப்படுத்தும் வகையில் இந்தப் பாராளுமன்ற நட்புறவு சங்கம் செயற்படும் என அதன் செயலாளராகத் தெரிவுசெய்யப்பட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர தெரிவித்தார். இந்த நிகழ்வில் கௌரவ எதிர்க்கட்சித் தலைவர், கௌரவ அமைச்சர்கள், கௌரவ பிரதியமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


2025-03-24

பாராளுமன்ற உறுப்பினர்களின் வருடாந்த உள்ளக விளையாட்டுப் போட்டிக்கான கேடயங்கள் மற்றும் சான்றிதழ்கள் கையளிக்கும் நிகழ்வு பிரதமர் மற்றும் சபாநாயகர் தலைமையில் நடைபெற்றது

ஐந்தாவது வருடமாக ஏற்பாடு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வருடாந்த உள்ளக விளையாட்டுப் போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கான கேடயங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் வைபவம் கௌரவ பிரதமர் (கலாநிதி) ஹரினி அமரசூரிய மற்றும் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன ஆகியோரின் தலைமையில் பாராளுமன்ற பிலியட் மண்டபத்தில் கடந்த மார்ச் 21ஆம் திகதி நடைபெற்றது. கௌரவ விளையாட்டுத் துறைப் பிரதியமைச்சர் சுகத் திலகரத்ன மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஆகியோரின் தலைமையின் கீழ் பாராளுமன்ற படைக்கல சேவிதர் திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் இந்தப் போட்டிங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. ஏழு உள்ளக விளையாட்டுப் பிரிவுகளின் கீழ் இடம்பெற்ற போட்டிகளில் ஸ்நூகர் இறுதிப் போட்டி பிரதமர் மற்றும் சபாநாயகர் முன்னிலையில் இடம்பெற்றது. கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான டி.வி.சானக்க மற்றும் ரோஹன பண்டார பங்குபற்றிய இப்போட்டியில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக்க வெற்றிபெற்றார். இங்கு நடைபெற்ற கலப்பு இரட்டையர் மேசைப்பந்துப் போட்டியில் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க மற்றும் (சட்டத்தரணி) நிலந்தி கொட்டஹச்சி ஆகியோர் வெற்றி பெற்றனர். இதில் எதிர்த்திசையில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான வருண லியனகே மற்றும் (சட்டத்தரணி) சமிந்திரானி கிரிஎல்லே ஆகியோர் போட்டியிட்டனர். தாம் போட்டியில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் டபிள்யூ.எச்.எம்.தர்மசேன அவர்கள்  வெற்றிபெற்றார். இரண்டாவது இடத்தை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆரியவன்ச அவர்கள் பெற்றுக்கொண்டார். மேசைப்பந்து (ஆண்கள்) போட்டியில் கௌரவ பராளுமன்ற உறுப்பினர் வருண லியனகே அவர்கள் வெற்றிபெற்றதுடன், இரண்டாவது இடத்தை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ருவன்திலக ஜயக்கொடி பெற்றுக்கொண்டார். உள்ளக விளையாட்டுப் போட்டியின் தனிநபர்களுக்கான மேசைப்பந்து (பெண்கள்) போட்டியில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (சட்டத்தரணி) நிலந்தி கொட்டஹச்சி அவர்கள் வெற்றிபெற்றதுடன், இரண்டாவது இடத்தை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (சட்டத்தரணி) சமிந்திரானி கிரிஎல்லே பெற்றுக்கொண்டார்.சதுரங்கப் போட்டியில் (செஸ்) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) அர்ச்சுனா இராமநாதன் பெற்றிபெற்றதுடன், இரண்டாவது இடத்தை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார வெற்றிகொண்டார். அத்துடன், கரம் விளையாட்டில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் லெப்டினன் கமாண்டர் (ஓய்வுபெற்ற) பிரகீத் மதுரங்க வெற்றிபெற்றதுடன், இப்போட்டியில் இரண்டாவது இடத்தை கௌரவ விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே பெற்றுக்கொண்டார். பூல் (pool) விளையாட்டில் கௌரவ பாராளுமன்ற ரோஹன பண்டார வெற்றிகொண்டதுடன், இரண்டாவது இடத்தை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக்க பெற்றுக்கொண்டார். இதில் வெற்றிபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களை வாழ்த்தி உரைநிகழ்த்திய கௌரவ பிரதமர் (கலாநிதி) ஹரினி அமரசூரிய, மிகவும் வேலைப்பழு மிக்க காலத்தில் மனதை இலகுவாக வைத்திருக்கவும்,  உறுப்பினர்களிடையே நட்புறவை மேம்படுத்துவதற்கு விளையாட்டுக்கள் உறுதுணையாக இருப்பதாகக் கூறினார். அத்துடன், இந்தப் போட்டியை ஏற்பாடு செய்தமைக்காக கௌரவ விளையாட்டுப் பிரதியமைச்சர் சுகத் திலகரத்ன மற்றும் கௌரவ பாராளுமன்ற நளின் பண்டார ஆகியோருக்கும் பிரதமர் நன்றியைத் தெரிவித்தார். இந்த விளையாட்டுப் போட்டிகளின் நடுவர்களாகப் பாராளுமன்ற பணியாளர்களான தரங்க அபேசிங்கே மற்றும் சமீர சஞ்சீவ ஆகியோர் பங்களித்தனர். கேடயங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கும் நிகழ்வில் பாராளுமன்ற குழுக்களின் கௌரவ பிரதித் தலைவர் ஹேமாலி வீரசேகர, கௌரவ சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்னாயக்க, கௌரவ விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். அத்துடன், பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, பாராளுமன்ற பணியாட் தொகுதியின் பிரதானியும் பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன, படைக்கல சேவிதர் குஷான் ஜயரத்ன உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


2025-03-21

2025 ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை சான்றுரைப் படுத்தினார் சபாநாயகர்   2025ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவுசெலவுத்திட்டம்) இன்று (மார்ச் 21) மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பான வாக்கெடுப்பு இன்று பி.ப 7.40 க்கு ஆரம்பமானதுடன், இதற்கு ஆதரவாக 159 வாக்குகளும், எதிராக 45 வாக்குகளும்  அளிக்கப்பட்டன. இதற்கமைய 2025ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் 114 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. 2025 ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு அல்லது 'வரவுசெலவுத்திட்ட உரை' நிதி அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களினால் கடந்த 17ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பெப்ரவரி 18ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை 07 நாட்கள் ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் இடம்பெற்றது. இரண்டாவது மதிப்பீடு 109 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இதன் பின்னர் பெப்ரவரி 27ஆம் திகதி முதல் இன்று மார்ச் 21ஆம் திகதி வரை ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான குழு நிலை விவாதம் இடம்பெற்றது. மேலும், பாராளுமன்றத்தில் இன்று (21) நிறைவேற்றப்பட்ட 2025 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் அரசியலமைப்பின் 79 வது உறுப்புரைக்கு அமைய கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார். இதற்கமைய, ஒதுக்கீட்டுச் சட்டமூலம் 2025ஆம் ஆண்டின் 03ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டமாக அமுலுக்கு வருகின்றது.


2025-03-21

தகவலுக்கான உரிமை ஆணைக்குழுவிற்கான உறுப்பினர் ஒருவரை நியமிப்பதற்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது

2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, தகவலுக்கான உரிமைச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் தகவலுக்கான உரிமை ஆணைக்குழுவில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு உறுப்பினர் ஒருவரின் நியமனத்திற்கான விதப்புரையை மேற்கொள்வதற்கு பொருத்தமான நபர்களிடமிருந்து அரசியலமைப்புப் பேரவை விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. விண்ணப்பங்கள் பாராளுமன்ற இணையத்தளத்தில் ‘தகவலுக்கான உரிமை ஆணைக்குழுவிற்கான உறுப்பினர் ஒருவரின் நியமனம்’ என்ற துரித இணைப்பில் வழங்கப்பட்டுள்ள தகவல்களுக்கு அமைவாகத் தயாரிக்கப்படல் வேண்டும். உரிய முறையில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 2025 ஏப்ரில் 01 ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்னர் பதிவுத் தபாலில் பின்வரும் முகவரிக்கு அல்லது constitutionalcouncil@parliament.lk எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும். கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் அல்லது மின்னஞ்சலின் விடயமாக ‘தகவலுக்கான உரிமை ஆணைக்குழுவிற்கான உறுப்பினர் ஒருவரின் நியமனம்’ எனக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks