E   |   සි   |  

2022-11-25

செய்தி வகைகள் : செய்திகள் 

சேர்பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலம் மற்றும் உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீட்டை டிசம்பர் 09ஆம் திகதி நடத்துவதற்கு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானம்

சேர்பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலம் மற்றும் உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டமூலம் ஆகியவற்றின் மீதான இரண்டாவது மதிப்பீட்டை எதிர்வரும் டிசம்பர் 09ஆம் திகதி நடத்துவதற்கு சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைலமையில் இன்று (நவ. 25) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இதற்கமைய அன்றையதினம் மு.ப 9.30 மணி முதல் 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதுடன், மு.ப 10.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை இந்தச் சட்டமூலங்கள் குறித்த விவாதம் நடத்தப்படவுள்ளது. அத்துடன், பி.ப 5.00 மணி முதல் 5.30 மணி வரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை மீதான விவாதத்தம் நடத்தப்படவுள்ளது.

இதற்கு முன்னர் வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக டிசம்பர் 09ஆம் திகதி முழுநாளும் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், அன்றையதினம் எடுக்கப்படவிருந்த வாய்மூல விடைக்கான கேள்விகளை டிசம்பர் 10ஆம் திகதி எடுத்துக் கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன், எதிர்வரும் 30ஆம் திகதி 2023ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழு நிலை விவாதத்தின் பின்னர் 2022 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டு (திருத்தச்) சட்டமூல இரண்டாம் மதிப்பீடு,உள்நாட்டு திறைசேரி உண்டியல் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானம் என்பன பாராளுமன்றத்தின் அனுமதிக்காக முன்வைக்கப்படவுள்ளது.

 

1 2

 



தொடர்புடைய செய்திகள்

2025-02-17

உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலத்தை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்


2025-02-17

நிதி அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள் 2025ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்

2025 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டத்தின் இரண்டாவது மதிப்பீடு (வரவுசெலவுத்திட்ட உரை) நிதி அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களினால் இன்று (பெப். 17) பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. இன்று மு.ப 10.30 மணிக்கு வரவுசெலவுத்திட்டத்துடன் கௌரவ ஜனாதிபதி அவர்கள் பாராளுமன்றத்தில் உள்ள ஜனாதிபதியின் அலுவலகத்திலிருந்து பாரம்பரியத்திற்கு அமைய படைக்கல சேவிதர் அழைத்துவர சபா மண்டபத்திற்குள் வருகைதந்தார். இதனைத் தொடர்ந்து பி.ப 1.15 மணிவரை ஜனாதிபதி வரவுசெலவுத்திட்ட உரையை நிகழ்த்தினார். இதற்கு அமைய 2025ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பான இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் பெப்ரவரி நாளை 18ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை 22ஆம் திகதி சனிக்கிழமை உள்ளடங்கலாக ஏழு நாட்கள் இடம்பெறவுள்ளது. அத்துடன் பெப்ரவரி 25ஆம் திகதி பி.ப 6.00 மணிக்கு நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் குறித்த குழுநிலை விவாதம் பெப்ரவரி 27ஆம் திகதி முதல் மார்ச் 21ஆம் திகதி வரை 4 சனிக்கிழமை நாட்கள் உள்ளடங்கலாக 19 நாட்கள் இடம்பெறவுள்ளன. இதற்கான வாக்கெடுப்பு மார்ச் 21ஆம் திகதி பி.ப 6.00 மணிக்கு நடத்தப்படவுள்ளது. இதற்கமைய நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பான விவாதம் பெப்ரவரி 18ஆம் திகதி முதல் மார்ச் 21ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.


2025-02-17

உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் விசேட பெரும்பான்மையுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது

உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் விசேட பெரும்பான்மையுடன் திருத்தங்கள் இன்றி பாராளுமன்றத்தில் இன்று (பெப். 17) நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டமூலம் தொடர்பான இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் இன்று பி.ப 2.00 மணி முதல் பி.ப 7.00 மணிவரை இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது மதிப்பீட்டுக்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் சட்டமூலத்திற்கு ஆதரவாக 187 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன் எதிராக எந்த வாக்குகளும் அளிக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து குழுநிலையில் சட்டமூலம் கருத்திற்கொள்ளப்பட்டதுடன், அதன் பின்னர் சட்டமூலத்திற்கான மூன்றாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன்போது சட்டமூலத்திற்கு ஆதரவாக 158 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன் எதிராக எந்த வாக்குகளும் அளிக்கப்படவில்லை. அதற்கமைய, உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு மற்றும் மூன்றாம் மதிப்பீடு விசேட பெரும்பான்மையுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.


2025-02-16

2025 வரவுசெலவுத்திட்டம் பெப்ரவரி 17ஆம் திகதி திங்கட்கிழமை மு.ப 10.30 மணிக்கு சமர்ப்பிக்கப்படும்

•    வரவுசெலவுத்திட்ட விவாதம் பெப்ரவரி 18ஆம் திகதி முதல் மார்ச் 21ஆம் திகதி வரை 26 நாட்கள் •    இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் 18ஆம் திகதி முதல் பெப்ரவரி  25ஆம் திகதி வரை •    குழுநிலை விவாதம் பெப்ரவரி 27ஆம் திகதி முதல் மார்ச் 21ஆம் திகதி வரை – மூன்றாவது மதிப்பீட்டு வாக்கெடுப்பு மார்ச் 21ஆம் திகதி பி.ப 6.00 மணிக்கு   2025ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு (வரவுசெலவுத்திட்ட உரை) எதிர்வரும் 17ஆம் திகதி மு.ப 10.30 மணிக்கு நிதி அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. இதனைத் தொடர்ந்து ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பான விவாதம் (வரவுசெலவுத்திட்ட விவாதம்) 2025 பெப்ரவரி 18ஆம் திகதி முதல் மார்ச் 21ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. 2025 ஜனவரி 09ஆம் திகதி முதலாவது மதிப்பீட்டுக்காகப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2025ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பான இரண்டாவது மதிப்பீடு பெப்ரவரி 18ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை ஏழு நாட்கள் இடம்பெறவுள்ளது. அத்துடன் பெப்ரவரி 25ஆம் திகதி பி.ப 6.00 மணிக்கு நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து 2025ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் குறித்த குழுநிலை விவாதம் பெப்ரவரி 27ஆம் திகதி முதல் மார்ச் 21ஆம் திகதி வரை 4 சனிக்கிழமை நாட்கள் உள்ளடங்கலாக 19 நாட்கள் இடம்பெறவுள்ளன. இதற்கான வாக்கெடுப்பை மார்ச் 21ஆம் திகதி பி.ப 6.00 மணிக்கு நடத்தப்படவுள்ளது. வரவுசெலவுத்திட்ட காலப்பகுதியில் மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணி வரையான நேரம் 5 வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக ஒதுக்கப்பட்டிருப்பதுடன், மு.ப 10.00 மணி முதல் பி.ப 6.00 மணி வரையான காலப் பகுதியில் வரவுசெலவுத்திட்ட விவாதம் இடம்பெறும். வாக்கெடுப்பு நடத்தப்படும் தினங்களான பெப்ரவரி 25 மற்றும் மார்ச் 21ஆம் திகதிகள் தவிர ஏனைய அனைத்து நாட்களிலும் பி.ப 6.00 மணி முதல் பி.ப 6.30 மணிவரையான காலப்பகுதி சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணைக்காக ஒதுக்கப்பட்டிருக்கும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks