2022-12-14
செய்தி வகைகள் : குழு செய்திகள்
இலங்கையின் தேசிய மலர் அல்லி மலரா? அல்லது நீலோற்பலமா? (நில் மானல்) என்பது தொடர்பில் சுற்றாடல் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் கலந்துரையாடப்பட்டது. அமைச்சர் கௌரவ நசீர் அஹமட் தலைமையில் அண்மையில் நடைபெற்ற சுற்றாடல் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தாவரவியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் தீப்தி யகந்தாவல மற்றும் வயம்ப பல்கலைக்கழத்தின் விவசாய மற்றும் பெருந்தோட்டமுகாமைத்துவ பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர் கபில யகந்தாவல ஆகியோர் பல ஆண்டுகளாக தீர்மானம் எடுக்கப்படாது சர்ச்சையில் காணப்படும் இலங்கையின் தேசிய மலர் குறித்த விடயம் தொடர்பில் நீண்ட விளக்கமளித்தனர்.
பேராசிரியர் யகந்தாவல முன்வைத்த கருத்துக்களின் படி 1986ஆம் ஆண்டு பெப்ரவரி 26ஆம் திகதி இலங்கையின் தேசிய மலர் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய தேசிய மலர் நீலோற்பலம் (நில் மானல்) என்பது உத்தியோகபூர்வமாக அமைச்சரவைப் பத்திரம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும் நீலோற்பலத்தை சித்தரிக்கும் விதத்தில் ஊதா நிறம் சார்ந்த அல்லி மலரின் புகைப்படமே பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும், இது உண்மையான நீலோற்பலம் இல்லையென்றும் அவர் தெரிவித்தார்.
1986ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்தத் தவறு பேராசிரியர் உள்ளிட்ட குழுவினரால் 2010ஆம் ஆண்டு அப்போதிருந்த ஜனாதிபதி, சுற்றாடல் அமைச்சர், சுற்றாடல் அமைச்சின் செயலாளர் மற்றும் உயிர்பல்வகைமை செயலகம் ஆகியவற்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 2015ஆம் ஆண்டு தேசிய மலர் குறித்த சரியான படம் உள்ளடக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும் 2015ஆம் ஆண்டு சுற்றாடல் அமைச்சினால் சரியான மலரின் புகைப்படம் வெளியிடப்பட்டிருந்தபோதும், இலங்கையின் தேசிய மலரின் சிங்களப் பெயர் மானல் மலர் (அல்லி மலர்) என்றும், ஆங்கில மொழியில் புளூ வோட்டர் லில்லி என்றும் தமிழில் நிலோற்பலம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கள மொழியில் புலமை பெற்ற பேராசிரியர் விமல் ஜீ. பலகல்ல அவர்களின் நிலைப்பாட்டுக்கு அமையவே நீலோற்பலம் (நில் மானல்) என்ற பெயருக்குப் பதிலாக தேசிய மலராக மானல் (அல்லி) எனப் பெயரிடப்பட்டுள்ளது என சுற்றாடல் அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர். அவரது கருத்துப்படி, அல்லி என்பது உன்னதமான நீல மலர் என்பதால் தேசிய மலரின் சிங்களப் பெயரை மானெல் (அல்லி) எனப் பயன்படுத்த வேண்டும் எனக் கூறியதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
தாவர வகைப்பாட்டின் உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தரநிலைகளின்படி, அறிவியல் பெயர் மாற்றத்திற்கு உட்பட்டிருக்கலாம், ஆனால் மிக நீண்ட வரலாற்றைக் கொண்ட சாதாரண மக்களில் பயன்படுத்தப்படும் பொதுவான பெயர்களை மாற்றக்கூடாது என்று வலியுறுத்தினார்.
அல்லி என்பது ஒரு பொதுவான பெயர் எனவும், இலங்கையில் ஊதா நிற அல்லிகள், வெள்ளை அல்லிகள், நீல அல்லிகள் என பல வகையான அல்லிகள் இருப்பதால், இலங்கையின் தேசிய மலராக நிலோற்பல மலரை தெரிவு செய்ய வேண்டும் எனவும் இரு பேராசிரியர்களும் தெரிவித்தனர்.
1986 இல் தேசிய மலரைத் தேர்வுசெய்த குழுவினால் பரிலீலிக்கப்பட்ட அளவுகோல்களான, பூர்வீகம் மற்றும் தனித்தன்மை, பயன்பாடு, வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவம், தோற்றம் மற்றும் விரிவாக்கம் என்பவற்றுடன், மேலதிக அளவுகோல்களான நிறம் மற்றும் வடிவம், இனப்பெருக்கம் மற்றும் வேறொரு நாட்டின் தேசிய மலராக இல்லாமை போன்ற சகல அடிப்படைகளையும் பூர்த்தி செய்யும் மலராக நீலோற்பலம் காணப்படுவதாக பேராசிரியர் குறிப்பிட்டார்.
முத்திரைப் பணியகம் நீலோற்பலம் மலருக்குப் பதிலாக தவறான அல்லி மலரின் படத்தையே வெளியிட்டிருப்பதாகப் பேராசிரியர் தீப்தி யகந்தாவல குறிப்பிட்டார். பாடப் புத்தகங்களில் தவறான மலரின் படம் இருப்பதாகவும், பாடசாலைகளில் மாத்திரமன்றி சில உயர்கல்வி நிறுவனங்களிலும் தவறான மலரின் படத்தைக் காட்டி பாடம் நடத்தப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், புத்தகங்களில் மட்டுமின்றி வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் நீலோற்பலம் (நில் மானல்) என விற்கப்படுபவை கூட உண்மையான நீலோற்பல மலர்கள் அல்ல என்பதும் இந்த இரு ஆய்வாளர்களின் கருத்தாக இருந்தது.
இதனைப் பரிசீலித்து பரிந்துரைகளை வழங்குவதற்காகப் கௌரவ பிரதமரினால் நிபுணர்கள் குழுவொன்று நியமிக்கப்பட்டிருப்பதாக குழுவின் தலைவர் அமைச்சர் குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயம் என்பதால் விரைவில் உறுதியான தீர்மானத்தை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.
இது தவிர, சுற்றுச்சூழல் அமைச்சகத்துடன் இணைந்த நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்தும் ஆலோசனைக் குழுவில் விரிவாக ஆராயப்பட்டது. பல்வேறு திட்டங்களுக்கு சுற்றாடல் அமைச்சிடமிருந்து உரிமைம் பெறுவது, அமைச்சுடன் இணைந்த நிறுவனங்களால் நடமாடும் சேவைகளை முன்னெடுப்பது தொடர்பிலும் ஆராயப்பட்டது.
இந்த சந்திப்பில் பல பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டதுடன், சுற்றாடல் அமைச்சின் செயலாளர் வைத்தியகலாதிதி அனில் ஜாசிங்க உட்பட சம்பந்தப்பட்ட நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
2015 இல் அமைச்சரவைப் பத்திரத்தில் உள்வாங்கப்பட்ட நீலோற்பல மலரின் புகைப்படம் என பேராசிரியர் யகந்தாவலவினால் அனுப்பப்பட்ட படம் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது.
2024-09-20
குவைத் இராச்சியத்திற்கான இலங்கைத் தூதுவரின் நியமனத்துக்கு அண்மையில் (செப். 18) பாராளுமன்றத்தில் கூடிய உயர் பதவிகள் பற்றிய குழுவின் பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, குவைத் இராச்சியத்திற்கான இலங்கை தூதுவராக திரு.எல்.பி.ரத்னாயக்க அவர்களின் பெயரை உயர் பதவிகள் பற்றிய குழு பரிந்துரைத்துள்ளது. சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய உயர் பதவிகள் பற்றிய குழுக் கூட்டத்தில், குழுவின் உறுப்பினர்களான கௌரவ விதுர விக்ரமநாயக்க, கௌரவ (வைத்தியகலாநிதி) சுதர்ஷினி பெர்னாந்துபுள்ளே, கௌரவ உதய கம்மன்பில ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
2024-09-09
இலங்கையில் சிறுவர்களின் போசாக்கின்மை அதிகரித்து வருகின்றதா என்பது தொடர்பில் ஆராய்வதற்கும், அவ்வாறாயின் அது சம்பந்தமாக மேற்கொள்ள வேண்டிய குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்கும், அடையாளங் காணப்பட்ட நடவடிக்கைகளை துரிதமாக செயற்படுத்துவது தொடர்பில் மேற்பார்வை செய்வதற்குமான பாராளுமன்ற விசேட குழுவின் அறிக்கை செப்டெம்பர் 04ஆம் திகதி அக்குழுவின் தலைவர் இராஜாங்க அமைச்சர் கௌரவ வடிவேல் சுரேஷ் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ரோஹினி குமாரி விஜயரத்ன அவர்களினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. உயரம் குறைதல், பலவீனமாதல், நிறை குறைவாக இருத்தல், நுண் போசனைக் குறைபாடுகள் – விற்றமின்கள் கனியுப்புக்கள் போதியளவு இல்லாமை போன்ற நான்கு விடயங்களின் ஊடாக சிறுவர் போசாக்குக் குறைபாட்டு நிலைமைகள் ஏற்படுவதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2500 கிராம் அல்லது அதற்குக் குறைவான பிறப்பு நிறையுடன் பிறக்கும் பிள்ளைகள் குறைந்த பிறப்பு நிறையைக் கொண்டிருப்பவர்களாகக் கருதப்படுவதுடன், 2022ல் நடத்தப்பட்ட தேசிய போசாக்கு மற்றும் நுண்போசணை கருத்தாய்வின் பிரகாரம் குறைந்த பிறப்பு நிறை 15.9% ஆகக் காணப்படுவதாக இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதுடன், 2023 ஜூன் போசாக்கு மதிப்பீட்டின் பிரகாரம் 2022ஆம் ஆண்டு தரவுகளோடு ஒப்பிடுகையில் கைக்குழந்தைகள் மற்றும் இரண்டு வயதுக்குக் குறைவான பிள்ளைகள் மத்தியில் நிறைக்குறைவு அதிகம் காணப்படுவுதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உயர்ந்தளவான நிறை குறைவானது நுவரெலியாவில் 24.6% ஆக அறிக்கையிடப்பட்டிருப்பதுடன், இதற்கமைய ஒவ்வொரு நான்காவது பிள்ளையும் ஒரளவு அல்லது கடுமையான நிறை குறைவுடன் இருப்பது கண்டறியப்பட்டிருப்பதாகவும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஜூன் மாதத்தில் இலங்கையில் தேய்வடைந்த குழந்தைகளின் விகிதாசாரம் 10% ஆக இருந்ததாக இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதுடன், ஐந்து வயதிற்குக் குறைவான குழந்தைகளில் ஏறத்தாழ 16,000 குழந்தைகள் அல்லது 1.2% கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஊட்டச்சத்து மாத அறிக்கைக்கு அமைய முந்தைய ஆண்டைவிட ஐந்து வயதுக்குக் குறைந்த குழந்தைகள் மத்தியில் குள்ளமாதல் 10.3% ஆகக் குறிப்பிடுவதுடன், இது 9.2% அதிகரிப்பாகும். நாள்பட்ட ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாக அதே வயதுடைய குழந்தைகளுடன் ஒப்பிடும்போது குள்ளமாதல் அல்லது உயரம் குறைதல் நீண்டகாலமாக ஏற்படுகின்றது என்றும் இந்த அறிக்கை கண்டறிந்துள்ளது. வீடுகளில் உணவுப் பாதுகாப்பு உரிய முறையில் பேணப்படாமை இதற்குப் பிரதான காரணம் என்றும் சுட்டிக்காட்டப்படுகின்றது. 2022ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக ஒட்டுமொத்த சனத்தொகையில் 98% மக்கள் உணவு விலை உயர்வால் பாதிக்கப்பட்டதுடன், ஆண்டின் கடைசி ஆறு மாதங்களில் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட 74% குடும்பங்களால் உணவு அல்லது அன்றாட அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்ய முடியாதிருந்தது. குடியிருப்புகள் உணவுப் பாதுகாப்பற்ற நிலை 2023 மாரச் மாதத்தில் இருந்த 17% உடன் ஒப்பிடும்போது மூன்றாவது காலாண்டில் 24% ஆக அதிகரித்துள்ளது. குடியிருப்புக்கள் வெளியே உணவுற்கொள்வதைக் குறைக்கும் அதேவேளை சமைக்கும் வீதத்தையும் குறைத்துக் கொண்டுள்ளனர். நான்கின் ஒரு பகுதியினர் உணவை அவர்களின் அயலர்வளிடமிருந்து இரவலுக்குப் பெற்றுக் கொள்வதாகவும் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குழந்தைகளின் ஊட்டச்சத்தை மேம்படுத்துவதற்கான முடிவுகள் மற்றும் பரிந்துரைகளையும் இந்த அறிக்கை உள்ளடக்கியுள்ளது. சிறுவர்கள் நாள்பட்ட போசாக்குக் குறைபாடுடையவர்களாக ஆவதற்கு முன்னர் அவர்களுக்கான உடனடிக் கவனம் தேவைப்படுகின்றது. மேலும், மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலம், (MCH), தரமான தாய் மற்றும் சேய் ஊட்டச்சத்து (MCN) சேவைகளை வழங்குவதற்குப் போதியளவு செயற்திறன் கொண்ட அதிக வெளிக்கள சுகாதாரப் பணியாட்தொகுதியினரின் தேவையையும் இந்த அறிக்கை வலியுறுத்தியுள்ளது. பாடசாலை சிறுவர்களுக்கா விட்டமின் ஏ இன் மேலதிக போசாக்கு முடிவடைந்திருப்பதன் காரணமாக இது நிறுத்தப்பட்டிருப்பதாகவும், இதனை மீண்டும் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் இதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களின் உணவுப் பாதுகாப்பு நிலையை மேம்படுத்துவதற்கான அவசர நடவடிக்கையின் தேவையும் வலியுறுத்தப்பட்டுள்ளது. குழந்தைகளில் ஊட்டச்சத்து குறைபாட்டின் மையப் பகுதிகளை அடையாளம் காணவும், மிகவும் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்கள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டை நிவர்த்தி செய்ய காரணமான காரணிகளை நிவர்த்தி செய்வதற்கான அபாயத்தை வரைபடமாக்குவதற்கும் தற்போதுள்ள சுகாதார முகாமைத்துவத் தகவல் அமைப்புகளைப் பயன்படுத்தவும் அறிக்கை பரிந்துரைக்கிறது. கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு தடையின்றி ஊட்டச்சத்து வழங்குதல், ஆரோக்கியமான மற்றும் குறைந்த விலை உணவுக்கான பொருட்கள் மலிவு விலையில் கிடைப்பதை உறுதி செய்வதற்கான பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்துதல், முன்பள்ளி உணவு மற்றும் பாடசாலை உணவு நிகழ்ச்சித்திட்டம் மற்றும் தரமான உணவு வழிங்கலிற்கான பாடசாலைச் சிற்றுண்டிச்சாலை வழிகாட்டல்கள் ஆகியவற்றின் அமுல்படுத்தலைக் கண்காணித்தல் உள்ளிட்ட குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால பரிந்துரைகள் இந்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளன.
2024-09-06
சுற்றுச்சூழலுக்கு நட்பான உரப் பாவனை மூலம் பெற்றுக்கொண்ட நெல் விளைச்சல் கணக்கெடுப்பு வேலைத்திட்டத்தை பார்வையிடுவதற்கு கடந்த ஆகஸ்ட் 28 ஆம் திகதி உணவுப் பாதுகாப்பு மற்றும் கமத்தொழில் பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழு கம்பஹா (மினுவாங்கொட) பகுதியில் கண்காணிப்பு சுற்றுப்பயணமொன்றை மேற்கொண்டது. சுற்றுச்சூழலுக்கு நட்பான உரங்களை இந்நாட்டின் விவசாயத்தில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவது குழுவின் நோக்கமாக இருந்ததுடன், அந்த உரங்களை பிரதான நெல் உற்பத்தி செய்யும் பகுதிகளில் பரிசோதிக்க வேண்டும் என குழுவில் தீர்மானிக்கப்பட்டது. 2023/2024 பெரும்போகத்தில் சுற்றுச்சூழலுக்கு நட்பான உரம் பயன்படுத்தி வெலிகந்த மற்றும் தெஹியத்தகண்டிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட முன்மாதிரி பயிர்ச்செய்கையின் வெற்றிகரமான விளைச்சலை கண்காணித்ததன் பின்னர் குழுவின் தலைவர் கௌரவ டீ. வீரசிங்கவின் வழிகாட்டலின் கீழ் 2024 சிறு போகத்தில் ஏழு மாகாணங்கள் மற்றும் பி. சி. மற்றும் எச் ஆகிய மகாவலி வலயங்களில் சுற்றுச்சூழலுக்கு நட்பான உரம் பயன்படுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அதற்கமைய இந்த கண்காணிப்பு சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட்டது. இலங்கை பாராளுமன்றத்தின் துறைசார் மேற்பார்வைக் குழு அலுவலக அதிகாரிகள் மற்றும் கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு, கமத்தொழில் திணைக்களம், கமநல அபிவிருத்தித் திணைக்களம், ஹெக்டர் கொப்பேகடுவ கமநல ஆராய்ச்சி பயிற்சி நிறுவகம், விவசாய ஆராய்ச்சிக் கொள்கைக்கான சபை, தேசிய உர செலயகம், தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் மற்றும் மேல்மாகாண கமத்தொழில் திணைக்களம் என்பவற்றின் அதிகாரிகள் இந்தக் கண்காணிப்பு சுற்றுப்பயணத்தில் கலந்துகொண்டனர். இந்த வேலைத்திட்டத்தின் கீழ் மேல்மாகாண சபையின் வேலைத்திட்டம் மேல்மாகாண கமத்தொழில் திணைக்களத்தின் கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்டதுடன், தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் விளைச்சல் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. வேலைத்திட்டத்தின் முழுமையான ஒருங்கிணைப்பை அடிப்படைக் கற்கைகளுக்கான தேசிய நிறுவகம் மேற்கொண்டிருந்தது.
2024-08-22
பாலின அடிப்படையிலான சம்பள வேறுபாடு குறித்த ஆய்வு அறிக்கை பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே அவர்களால் அண்மையில் (ஆக. 08) சபாநாயர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் எதிர்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச ஆகியோருக்கு வழங்கிவைக்கப்பட்டது. பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் முன்முயற்சியில் பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பு (Women and Media Collective) உள்ளிட்ட ஆய்வாளர்களினால் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கலாநிதி ஹர்ஷ டி சில்வா, பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் இணை உதவித் தலைவர் கௌரவ ரோஹிணி குமாரி விஜேரத்ன, பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ இரான் விக்கிரமரத்ன ஆகியோர் இதன்போது கலந்துகொண்டிருந்தனர். இங்கு கருத்துத் தெரிவித்த சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன குறிப்பிடுகையில், இந்த சம்பள வேறுபாட்டை மாற்றுவதற்கு சட்டம் இயற்றுதல் மற்றும் புதிய கொள்கைகள் உருவாக்கப்படுவது முக்கியமாகும் எனத் தெரிவித்தார். அத்துடன், இந்த உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையில் அரசியலமைப்பில் ஏற்பாடுகள் உள்வாங்கப்படவேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச தெரிவித்தார். பாலின அடிப்படையிலான சம்பள வேறுபாட்டை களைவதற்கு சமூகத்தில் உள்ள மக்களிடையே மனப்பாங்கு ரீதியான மாற்றம் ஏற்பட வேண்டும் என ஒன்றியத்தின் தலைவர் சுட்டிக்காட்டினார். அத்துடன், இந்தப் பணி வெற்றியடைய பங்களித்த அனைவருக்கும் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் செயலாளருமான குஷானி ரோஹணதீர நன்றி தெரிவித்தார். பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி சேபாலிக்கா கோட்டேகொட தலைமையிலான ஆய்வாளர்கள் குழு, இந்த ஆய்வறிக்கை தொடர்பில் குறிப்பிடுகையில், இலங்கையில் தொழிலாளர் சந்தையில் பாலின அடிப்படையிலான சம்பள வேறுபாடு, முதன்மையாக சம்பளம் பெறாத பராமரிப்பு சேவையுடன் நெருங்கிய தொடர்புடையது என குறிப்பிட்டனர். உயர்ந்த சம்பளம் பெரும் தொழில்களில் பெண்கள் பிரதிநிதித்துவம் குறைவாக உள்ளதுடன், குறைந்த சம்பளம் பெரும் சேவை சார்ந்த தொழில்களில் பெண்கள் செறிந்து காணப்படுவதாகவும், பெண்களில் குறிப்பிடத்தக்க அளவு விகிதாசாரம் பகுதி நேர வேலை மற்றும் சம்பளம் இல்லாத பராமரிப்பு சேவைகளில் ஈடுபடுவதாகவும் அந்த ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டினர். இந்த நிகழ்வில் மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சு, பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பு (Women and Media Collective), சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் நிறுவனம் (USAID), தேசிய ஜனநாயக நிறுவனம் (NDI) உள்ளிட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.