2024-01-18
செய்தி வகைகள் : குழு செய்திகள்
கணக்காய்வாளர் நாயகத்தின் தடயவியல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதற்கமைய, சீனி மோசடியில் தொடர்புடைய பிரதான நிறுவனங்களிடமிருந்து வரிகளை அறவிடுவதில் நிதி அமைச்சு மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் இயலாமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ டி சில்வா தலைமையில் கூடிய அரசாங்க நிதி பற்றிய குழு கடுமையான அதிருப்தியை வெளியிட்டது.
அக்டோபர் 13, 2020 திகதிய வர்த்தமானி 2197/12 இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, சீனி இறக்குமதிக்கான விசேட வியாபாரப் பண்ட வரியில் 99.5% குறைக்கப்பட்ட போதிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது குறித்து இதன்போது குழு தனது அதிருப்தியை சுட்டிக்காட்டியது. நுகர்வோரின் செலவிலிருந்து குறைக்கப்பட்ட வரி விகிதத்தை நியாயமற்ற வகையில் ஒரு சில பாரிய நிறுவனங்களுக்கு அனுகூலம் பெறுவதற்கு இடமளித்து இந்தவொரு பொறுப்புக்கூறும் முறையொன்றை செயற்படுத்தியில்லை என குழு சுட்டிக்காட்டியது.
குறிப்பாக, சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து எந்தளவு வரி அறவிடுவது என்பது தொடர்பில் விசாரித்த குழு, ஒரு வாரத்திற்குள் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துக்கு பணிப்புரை வழங்கியது. சீனி மோசடி சம்பந்தமான வரி அறவிடுவதன் தற்போதைய நிலையைத் தெளிவாகப் புரிந்துகொள்வதே இதன் நோக்கமாகும்.
இந்தச் சிக்கலை மேலும் ஆராயும் வகையில், சீனி மீதான விசேட வியாபாரப் பண்ட வரியை ஒரு கிலோவுக்கு 0.25 சதத்திலிருந்து ஒரு கிலோவுக்கு 50 ரூபாவாக மீண்டும் மாற்றும் முன்மொழிவு தொடர்பான குழுவின் கரிசனையை குழு எடுத்துக்காட்டியது. சம்பந்தப்பட்ட பாரிய நிறுவனங்கள் பொறுப்பை தட்டிக்கழிக்க அனுமதிக்கும் அதே வேளையில் சராசரி இலங்கையரிடம் இருந்து 30 பில்லியன் ரூபாவை வசூலிக்கும் நிதியமைச்சின் நோக்கம் இதன்போது கடுமையாக விமர்சிக்கப்பட்டது. பொது மக்கள் மீது கூடுதல் நிதிச்சுமைகளை சுமத்துவதற்கு முன்பு தவறு செய்பவர்களைப் பொறுப்புக்கூற வைக்க வேண்டியதன் அவசியத்தை குழு வலியுறுத்தியது.
மேலும், விநியோகஸ்தர்களால் கடைப்பிடிக்கப்படாத அதிகபட்ச சில்லறை விலை (MRP) பற்றிய சிக்கலை நிவர்த்தி செய்ய பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் (CAA) அதிகாரிகளுடன் குழு கலந்துரையாடியது. 342 சுற்றிவளைப்புகள் நடத்தி, MRPயை மீறும் சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு அபராதம் விதித்த போதிலும், வர்த்தமானியில் அதிகபட்ச மொத்த விற்பனை விலை இல்லாததால், மொத்த விநியோகஸ்தர்களுக்கு அபராதம் விதிப்பதில் சவால்கள் உள்ளதாகப் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை அதிகாரிகள் தெரிவித்தனர்.
விசேட வியாபாரப் பண்ட வரி மற்றும் இறக்குமதி விலைகள் போன்ற காரணிகளைக் கருத்தில் கொண்டு, MRPயை விதிப்பை குறித்து விரிவான ஆய்வு நடத்துமாறு பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைக்கு குழு பணிப்புரை வழங்கியது. மேலும், மொத்த விநியோகஸ்தர்கள் MRP க்கு மேல் விற்பனை செய்வது மற்றும் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடுவது தொடர்பான தற்போதைய பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஒரு பொறிமுறையை முன்மொழியுமாறு குழு பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையிடம் கோரிக்கை விடுத்தது.
அதற்கு மேலதிகமாக, 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் 22 ஆம் பிரிவின் கீழான கட்டளையின் விளைவு குறித்துக் குழு ஆராய்ந்தது. பொருளாதார ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்துதல் மற்றும் அந்நியச் செலாவணி இருப்புக்களை திறம்பட நிர்வகித்தல் ஆகியவற்றின் முக்கிய நோக்கத்துடன், இலங்கையில் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கான நிதிகளின் நகர்வு மற்றும் அந்நியச் செலாவணி பரிவர்த்தனைகளை ஒழுங்குபடுத்த வடிவமைக்கப்பட்ட ஏற்பாடுகள் இந்தக் கட்டளையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
கட்டளையில் குறிப்பிடப்பட்டுள்ளதற்கமைய இடம்பெயர்வு கொடுப்பனவு 50,000 அமெரிக்க டொலராகக் காணப்படுவதுடன், தற்காலிக வீசா அனுமதிப்பத்திரத்துக்கு 20,000 அமெரிக்க டொலராகக் குறைக்கப்பட்டுள்ளது. இலங்கை தனிநபர்கள் தமது சொந்த வெளிநாட்டு நிறுவனங்களில் பங்குத் தெரிவுகளை கொள்வனவு செய்ய அனுமதிக்கும் ஏற்பாடுகள் உள்ளடங்கப்பட்ட வகையில், முந்தைய வர்த்தமானியிலான திருத்தங்கள் குறித்து மத்திய வங்கியின் அதிகாரிகள் குழுவிடம் தெரிவித்தனர். அதற்கு மேலதிகமாக, பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கு 200,000 USD மற்றும் பட்டியலிடப்படாத நிறுவனங்களுக்கு 100,000 USD மீளப்பெறுவதற்கு தனிநபர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
இந்த மாற்றங்களை ஏற்றுக்கொண்ட அரசாங்க நிதி பற்றிய குழுவின் (COPF) தலைவர், இத்தகைய குறைந்த இடம்பெயர்வு கொடுப்பனவை பராமரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கரிசனையை வெளியிட்டார். இந்த வரையறை காரணமாக தனிநபர்கள் ஹவாலா மற்றும் கிரிப்டோகரன்சி போன்ற உத்தியோகபூர்வமற்ற வழிகளை நாடுவது குறித்து அவர் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார். அத்துடன், Binance போன்ற பல்வேறு தளங்களின் ஊடாக இலங்கையர்கள் தமது ரூபாயை USDTக்கு (கிரிப்டோகரன்சி) மாற்றுவதும், பின்னர் வெளிநாடுகளுக்கு நிதி பரிமாற்றம் செய்வதும் அல்லது கிரிப்டோ கரன்சிகளில் முதலீடு செய்வதுமான நிகழ்வுகள் குறித்து அதிகாரிகளுக்குத் தெரியுமா எனத் தலைவர் வினவினார். குறிப்பிடத்தக்க வகையில், கடந்த வாரம் அந்நியச்செலாவணி வர்த்தக நிதியங்களின் அனுமதியுடன் கிரிப்டோகரன்சி வகைகள் அண்மையில் அமெரிக்க பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவினால் ஒரு சொத்து வகுப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
குழுவின் தலைவரின் கேள்விகளுக்கு பதிலளித்த அதிகாரிகள், இதுபோன்ற நிகழ்வுகள் குறித்து அறிந்திருக்கவில்லை என்பதுடன், இது குறித்து முழுமையான ஆய்வு நடத்த உறுதியளித்தனர். முறையான வழிகளுக்கு வெளியே ரூபாயை டொலராக மாற்றுவதுற்கு அனுமதியில்லை என்றும், நாண மாற்று மற்றும் முதலீட்டிற்காக அதிகாரப்பூர்வமற்ற வழிகளை தவறாகப் பயன்படுத்துவது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ சந்திம வீரக்கொடி, கௌரவ மதுர விதானகே, கௌரவ துமிந்த திசாநாயக்க, கௌரவ சுமித் உடுகும்புற ஆகியோர் கலந்துகொண்டனர்.
2024-09-20
குவைத் இராச்சியத்திற்கான இலங்கைத் தூதுவரின் நியமனத்துக்கு அண்மையில் (செப். 18) பாராளுமன்றத்தில் கூடிய உயர் பதவிகள் பற்றிய குழுவின் பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, குவைத் இராச்சியத்திற்கான இலங்கை தூதுவராக திரு.எல்.பி.ரத்னாயக்க அவர்களின் பெயரை உயர் பதவிகள் பற்றிய குழு பரிந்துரைத்துள்ளது. சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய உயர் பதவிகள் பற்றிய குழுக் கூட்டத்தில், குழுவின் உறுப்பினர்களான கௌரவ விதுர விக்ரமநாயக்க, கௌரவ (வைத்தியகலாநிதி) சுதர்ஷினி பெர்னாந்துபுள்ளே, கௌரவ உதய கம்மன்பில ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
2024-09-09
இலங்கையில் சிறுவர்களின் போசாக்கின்மை அதிகரித்து வருகின்றதா என்பது தொடர்பில் ஆராய்வதற்கும், அவ்வாறாயின் அது சம்பந்தமாக மேற்கொள்ள வேண்டிய குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்கும், அடையாளங் காணப்பட்ட நடவடிக்கைகளை துரிதமாக செயற்படுத்துவது தொடர்பில் மேற்பார்வை செய்வதற்குமான பாராளுமன்ற விசேட குழுவின் அறிக்கை செப்டெம்பர் 04ஆம் திகதி அக்குழுவின் தலைவர் இராஜாங்க அமைச்சர் கௌரவ வடிவேல் சுரேஷ் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ரோஹினி குமாரி விஜயரத்ன அவர்களினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. உயரம் குறைதல், பலவீனமாதல், நிறை குறைவாக இருத்தல், நுண் போசனைக் குறைபாடுகள் – விற்றமின்கள் கனியுப்புக்கள் போதியளவு இல்லாமை போன்ற நான்கு விடயங்களின் ஊடாக சிறுவர் போசாக்குக் குறைபாட்டு நிலைமைகள் ஏற்படுவதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2500 கிராம் அல்லது அதற்குக் குறைவான பிறப்பு நிறையுடன் பிறக்கும் பிள்ளைகள் குறைந்த பிறப்பு நிறையைக் கொண்டிருப்பவர்களாகக் கருதப்படுவதுடன், 2022ல் நடத்தப்பட்ட தேசிய போசாக்கு மற்றும் நுண்போசணை கருத்தாய்வின் பிரகாரம் குறைந்த பிறப்பு நிறை 15.9% ஆகக் காணப்படுவதாக இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதுடன், 2023 ஜூன் போசாக்கு மதிப்பீட்டின் பிரகாரம் 2022ஆம் ஆண்டு தரவுகளோடு ஒப்பிடுகையில் கைக்குழந்தைகள் மற்றும் இரண்டு வயதுக்குக் குறைவான பிள்ளைகள் மத்தியில் நிறைக்குறைவு அதிகம் காணப்படுவுதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உயர்ந்தளவான நிறை குறைவானது நுவரெலியாவில் 24.6% ஆக அறிக்கையிடப்பட்டிருப்பதுடன், இதற்கமைய ஒவ்வொரு நான்காவது பிள்ளையும் ஒரளவு அல்லது கடுமையான நிறை குறைவுடன் இருப்பது கண்டறியப்பட்டிருப்பதாகவும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஜூன் மாதத்தில் இலங்கையில் தேய்வடைந்த குழந்தைகளின் விகிதாசாரம் 10% ஆக இருந்ததாக இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதுடன், ஐந்து வயதிற்குக் குறைவான குழந்தைகளில் ஏறத்தாழ 16,000 குழந்தைகள் அல்லது 1.2% கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஊட்டச்சத்து மாத அறிக்கைக்கு அமைய முந்தைய ஆண்டைவிட ஐந்து வயதுக்குக் குறைந்த குழந்தைகள் மத்தியில் குள்ளமாதல் 10.3% ஆகக் குறிப்பிடுவதுடன், இது 9.2% அதிகரிப்பாகும். நாள்பட்ட ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாக அதே வயதுடைய குழந்தைகளுடன் ஒப்பிடும்போது குள்ளமாதல் அல்லது உயரம் குறைதல் நீண்டகாலமாக ஏற்படுகின்றது என்றும் இந்த அறிக்கை கண்டறிந்துள்ளது. வீடுகளில் உணவுப் பாதுகாப்பு உரிய முறையில் பேணப்படாமை இதற்குப் பிரதான காரணம் என்றும் சுட்டிக்காட்டப்படுகின்றது. 2022ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக ஒட்டுமொத்த சனத்தொகையில் 98% மக்கள் உணவு விலை உயர்வால் பாதிக்கப்பட்டதுடன், ஆண்டின் கடைசி ஆறு மாதங்களில் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட 74% குடும்பங்களால் உணவு அல்லது அன்றாட அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்ய முடியாதிருந்தது. குடியிருப்புகள் உணவுப் பாதுகாப்பற்ற நிலை 2023 மாரச் மாதத்தில் இருந்த 17% உடன் ஒப்பிடும்போது மூன்றாவது காலாண்டில் 24% ஆக அதிகரித்துள்ளது. குடியிருப்புக்கள் வெளியே உணவுற்கொள்வதைக் குறைக்கும் அதேவேளை சமைக்கும் வீதத்தையும் குறைத்துக் கொண்டுள்ளனர். நான்கின் ஒரு பகுதியினர் உணவை அவர்களின் அயலர்வளிடமிருந்து இரவலுக்குப் பெற்றுக் கொள்வதாகவும் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குழந்தைகளின் ஊட்டச்சத்தை மேம்படுத்துவதற்கான முடிவுகள் மற்றும் பரிந்துரைகளையும் இந்த அறிக்கை உள்ளடக்கியுள்ளது. சிறுவர்கள் நாள்பட்ட போசாக்குக் குறைபாடுடையவர்களாக ஆவதற்கு முன்னர் அவர்களுக்கான உடனடிக் கவனம் தேவைப்படுகின்றது. மேலும், மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலம், (MCH), தரமான தாய் மற்றும் சேய் ஊட்டச்சத்து (MCN) சேவைகளை வழங்குவதற்குப் போதியளவு செயற்திறன் கொண்ட அதிக வெளிக்கள சுகாதாரப் பணியாட்தொகுதியினரின் தேவையையும் இந்த அறிக்கை வலியுறுத்தியுள்ளது. பாடசாலை சிறுவர்களுக்கா விட்டமின் ஏ இன் மேலதிக போசாக்கு முடிவடைந்திருப்பதன் காரணமாக இது நிறுத்தப்பட்டிருப்பதாகவும், இதனை மீண்டும் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் இதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களின் உணவுப் பாதுகாப்பு நிலையை மேம்படுத்துவதற்கான அவசர நடவடிக்கையின் தேவையும் வலியுறுத்தப்பட்டுள்ளது. குழந்தைகளில் ஊட்டச்சத்து குறைபாட்டின் மையப் பகுதிகளை அடையாளம் காணவும், மிகவும் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்கள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டை நிவர்த்தி செய்ய காரணமான காரணிகளை நிவர்த்தி செய்வதற்கான அபாயத்தை வரைபடமாக்குவதற்கும் தற்போதுள்ள சுகாதார முகாமைத்துவத் தகவல் அமைப்புகளைப் பயன்படுத்தவும் அறிக்கை பரிந்துரைக்கிறது. கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு தடையின்றி ஊட்டச்சத்து வழங்குதல், ஆரோக்கியமான மற்றும் குறைந்த விலை உணவுக்கான பொருட்கள் மலிவு விலையில் கிடைப்பதை உறுதி செய்வதற்கான பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்துதல், முன்பள்ளி உணவு மற்றும் பாடசாலை உணவு நிகழ்ச்சித்திட்டம் மற்றும் தரமான உணவு வழிங்கலிற்கான பாடசாலைச் சிற்றுண்டிச்சாலை வழிகாட்டல்கள் ஆகியவற்றின் அமுல்படுத்தலைக் கண்காணித்தல் உள்ளிட்ட குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால பரிந்துரைகள் இந்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளன.
2024-09-06
சுற்றுச்சூழலுக்கு நட்பான உரப் பாவனை மூலம் பெற்றுக்கொண்ட நெல் விளைச்சல் கணக்கெடுப்பு வேலைத்திட்டத்தை பார்வையிடுவதற்கு கடந்த ஆகஸ்ட் 28 ஆம் திகதி உணவுப் பாதுகாப்பு மற்றும் கமத்தொழில் பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழு கம்பஹா (மினுவாங்கொட) பகுதியில் கண்காணிப்பு சுற்றுப்பயணமொன்றை மேற்கொண்டது. சுற்றுச்சூழலுக்கு நட்பான உரங்களை இந்நாட்டின் விவசாயத்தில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவது குழுவின் நோக்கமாக இருந்ததுடன், அந்த உரங்களை பிரதான நெல் உற்பத்தி செய்யும் பகுதிகளில் பரிசோதிக்க வேண்டும் என குழுவில் தீர்மானிக்கப்பட்டது. 2023/2024 பெரும்போகத்தில் சுற்றுச்சூழலுக்கு நட்பான உரம் பயன்படுத்தி வெலிகந்த மற்றும் தெஹியத்தகண்டிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட முன்மாதிரி பயிர்ச்செய்கையின் வெற்றிகரமான விளைச்சலை கண்காணித்ததன் பின்னர் குழுவின் தலைவர் கௌரவ டீ. வீரசிங்கவின் வழிகாட்டலின் கீழ் 2024 சிறு போகத்தில் ஏழு மாகாணங்கள் மற்றும் பி. சி. மற்றும் எச் ஆகிய மகாவலி வலயங்களில் சுற்றுச்சூழலுக்கு நட்பான உரம் பயன்படுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அதற்கமைய இந்த கண்காணிப்பு சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட்டது. இலங்கை பாராளுமன்றத்தின் துறைசார் மேற்பார்வைக் குழு அலுவலக அதிகாரிகள் மற்றும் கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு, கமத்தொழில் திணைக்களம், கமநல அபிவிருத்தித் திணைக்களம், ஹெக்டர் கொப்பேகடுவ கமநல ஆராய்ச்சி பயிற்சி நிறுவகம், விவசாய ஆராய்ச்சிக் கொள்கைக்கான சபை, தேசிய உர செலயகம், தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் மற்றும் மேல்மாகாண கமத்தொழில் திணைக்களம் என்பவற்றின் அதிகாரிகள் இந்தக் கண்காணிப்பு சுற்றுப்பயணத்தில் கலந்துகொண்டனர். இந்த வேலைத்திட்டத்தின் கீழ் மேல்மாகாண சபையின் வேலைத்திட்டம் மேல்மாகாண கமத்தொழில் திணைக்களத்தின் கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்டதுடன், தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் விளைச்சல் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. வேலைத்திட்டத்தின் முழுமையான ஒருங்கிணைப்பை அடிப்படைக் கற்கைகளுக்கான தேசிய நிறுவகம் மேற்கொண்டிருந்தது.
2024-08-22
பாலின அடிப்படையிலான சம்பள வேறுபாடு குறித்த ஆய்வு அறிக்கை பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே அவர்களால் அண்மையில் (ஆக. 08) சபாநாயர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் எதிர்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச ஆகியோருக்கு வழங்கிவைக்கப்பட்டது. பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் முன்முயற்சியில் பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பு (Women and Media Collective) உள்ளிட்ட ஆய்வாளர்களினால் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கலாநிதி ஹர்ஷ டி சில்வா, பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் இணை உதவித் தலைவர் கௌரவ ரோஹிணி குமாரி விஜேரத்ன, பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ இரான் விக்கிரமரத்ன ஆகியோர் இதன்போது கலந்துகொண்டிருந்தனர். இங்கு கருத்துத் தெரிவித்த சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன குறிப்பிடுகையில், இந்த சம்பள வேறுபாட்டை மாற்றுவதற்கு சட்டம் இயற்றுதல் மற்றும் புதிய கொள்கைகள் உருவாக்கப்படுவது முக்கியமாகும் எனத் தெரிவித்தார். அத்துடன், இந்த உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையில் அரசியலமைப்பில் ஏற்பாடுகள் உள்வாங்கப்படவேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச தெரிவித்தார். பாலின அடிப்படையிலான சம்பள வேறுபாட்டை களைவதற்கு சமூகத்தில் உள்ள மக்களிடையே மனப்பாங்கு ரீதியான மாற்றம் ஏற்பட வேண்டும் என ஒன்றியத்தின் தலைவர் சுட்டிக்காட்டினார். அத்துடன், இந்தப் பணி வெற்றியடைய பங்களித்த அனைவருக்கும் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் செயலாளருமான குஷானி ரோஹணதீர நன்றி தெரிவித்தார். பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி சேபாலிக்கா கோட்டேகொட தலைமையிலான ஆய்வாளர்கள் குழு, இந்த ஆய்வறிக்கை தொடர்பில் குறிப்பிடுகையில், இலங்கையில் தொழிலாளர் சந்தையில் பாலின அடிப்படையிலான சம்பள வேறுபாடு, முதன்மையாக சம்பளம் பெறாத பராமரிப்பு சேவையுடன் நெருங்கிய தொடர்புடையது என குறிப்பிட்டனர். உயர்ந்த சம்பளம் பெரும் தொழில்களில் பெண்கள் பிரதிநிதித்துவம் குறைவாக உள்ளதுடன், குறைந்த சம்பளம் பெரும் சேவை சார்ந்த தொழில்களில் பெண்கள் செறிந்து காணப்படுவதாகவும், பெண்களில் குறிப்பிடத்தக்க அளவு விகிதாசாரம் பகுதி நேர வேலை மற்றும் சம்பளம் இல்லாத பராமரிப்பு சேவைகளில் ஈடுபடுவதாகவும் அந்த ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டினர். இந்த நிகழ்வில் மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சு, பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பு (Women and Media Collective), சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் நிறுவனம் (USAID), தேசிய ஜனநாயக நிறுவனம் (NDI) உள்ளிட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.