E   |   සි   |  

2024-05-31

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

இயலாமையுடைய நபர்களுக்குத் தனியான சுயாதீன ஆணைக்குழுவை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்

  • மாற்றுத்திறனாளிகள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ டலஸ் அழகப்பெரும

 

இயலாமையுடைய நபர்களுக்குத் தனியான சுயாதீன ஆணைக்குழுவை இந்நாட்டில் நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மாற்றுத்திறனாளிகள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். இயலாமையுடைய நபர்களின் சட்டரீதியான சூழலை மேம்படுத்தும் நோக்கில் மாற்றுத்திறனாளிகள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் தலையீட்டில் இயலாமையுடைய நபர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பான 1996 ஆம் ஆண்டு 28 ஆம் இலக்க சட்டத்தில் கொண்டுவரப்படவுள்ள திருத்தங்களுக்கு அமைவாக இந்த சுயாதீன ஆணைக்குழுவை ஸ்தாபிக்க முடியும் எனவும் கௌரவ அழகப்பெரும குறிப்பிட்டார். அத்துடன், இயலாமையுடைய நபர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஐக்கிய நாடுகளின் சாசனத்திற்கு இணையாக இந்தத் திருத்தங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தலைவர் சுட்டிக்காட்டினார்.

2012 இல் நாட்டில் மேற்கொண்ட சனத்தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள்தொகையில் 8.7% பேர், அதாவது கிட்டத்தட்ட 17 லட்சம் பேர் இயலாமையுடைய நபர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 74% பேர் எந்தவொரு பொருளாதாரச் செயல்பாட்டிலும் ஈடுபடவில்லை என்றும், மேலும் 34% பிள்ளைகள் எந்த ஒரு அடிப்படைக் கல்வியையும் பெறவில்லை எனவும் தலைவர் தெரிவித்தார். இருப்பினும், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பிரதேசத்துக்கும் ஏற்ப இந்தத் தரவுகளைப் பார்க்கும்போது, வேறுபாடுகள் இருப்பதாக தலைவர் விளக்கினார். கிடைக்கப்பெறும் தரவுகளின்படி, இலங்கையில் அதிகளவான இயலாமையுடைய நபர்கள் நுவரெலியா மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்த தலைவர், நாடளாவிய ரீதியில் உள்ள இயலாமையுடைய நபர்கள் பற்றிய தகவல்களை உள்ளடக்கிய சரியான தகவல் கட்டமைப்பு இல்லாததன் பிரச்சினையை வலியுறுத்தினார்.

இயலாமையுடைய நபர்கள் முகங்கொடுக்கும் சவால்கள், சிக்கல்கள், தற்பொழுது காணப்படும் வாய்ப்புக்கள் மற்றும் அவற்றை உரிய முறையில் நிவர்த்தி செய்வதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் முன்மொழிவுகள் பற்றிய தகவல்களைக் கலந்துரையாடுவதற்கான மூன்றாவது விசேட செயலமர்வு மாற்றுத்திறனாளிகள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைமையில் அண்மையில் (மே 27) நுவரெலியாவில் நடைபெற்ற போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மாற்றுத்திறனாளிகள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ டலஸ் அழகப்பெரும தலைமையில் நடைபெற்ற இந்த விசேட செயலமர்வில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சி.பி. ரத்நாயக்க, கௌரவ நிமல் பியதிஸ்ஸ, கௌரவ கே.பி.எஸ். குமாரசிறி, நுவரெலிய மாவட்ட அரசாங்க அதிபர் நந்தன கலபட உள்ளிட்ட நுவரெலியா மாவட்ட கல்வி, சுகாதார மற்றும் சமூக சேவைத் துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள், தேசிய ஜனநாயக நிறுவனத்தின் (NDI) ஆலோசகர் ஷியாமா சல்காது, இயலாமையுடைய நபர்களுக்கான சங்கங்களின் ஒன்றிணைந்த முன்னணியின் தலைவர் ரசாஞ்சலி பதிரகே உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

நுவரெலியா மாவட்டத்தில் வாழும் இயலாமையுடைய நபர்கள், நுவரெலியா மாவட்ட இயலாமையுடைய நபர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புக்களின் பிரதிநிதிகள், நுவரெலியா மாவட்ட இயலாமையுடைய சிறுவர்களுக்கான கல்வி நிறுவங்கள் சிலவற்றின் அதிகாரிகள், பிரதேச மக்கள் பிரதிநிதிகளின் இணைப்பு அதிகாரிகள் உள்ளிட்டோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இயலாமையுடைய சிறுவர்களுக்கான கல்வி முறையை நெறிப்படுத்துதல், நுவரெலியா மாவட்டத்தில் இயலாமையுடைய நபர்களுக்கான பிரவேச வசதிகளை மேம்படுத்தல் மற்றும் நாட்டின் ஆட்சிக் கட்டமைப்பில் மற்றும் சமூகத்தில் உள்வாங்குவதை மேம்படுத்தும் இணைப்புப் பொறிமுறையொன்றை ஸ்தாபிப்பதற்கான தகவல்கள் மற்றும் முன்மொழிவுகள் தொடர்பில் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

கலந்துகொண்ட இயலாமையுடைய நபர்கள் மற்றும் அமைப்புக்கள் தமது கருத்துக்கள், முன்மொழிவுகள் மற்றும் பிரச்சினைகளை இதன்போது முன்வைத்தனர். சிறிய தொழில் முயற்சியாளர்களான இயலாமையுடைய நபர்களுக்கு தேவையான வசதிகளை வழங்குதல், நுவரெலியா மாவட்டத்தின் அமைவிடத்துக்கு ஏற்ற வகையில் இயலாமையுடைய சிறுவர்களுக்கு பாடசாலைகள் மற்றும் பராமரிப்பு நிலையங்களுக்கு பிரவேசிக்கும் போது ஏற்படும் அசௌகரியங்கள், இயலாமையுடைய சிறுவர்கள் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகுவதைத் தடுத்தல் போன்ற விடயங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இலங்கையில் விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கு அரசாங்கத்தின் உதவிகளை பெரும் பாடசாலைகளின் செயற்திறனை மேலும் நெறிப்படுத்துவது தொடர்பில் 1961 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்க துணை பாடசாலைகள் மற்றும் பயிற்சிக் கல்லூரி (மேலதிக ஏற்பாடுகள்) சட்டம் திருத்தப்பட வேண்டும் எனவும் இங்கு கருத்துத் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், பொதுப் போக்குவரத்து வசதிகளில் இயலாமையுடைய நபர்களுக்குக் காணப்படும் குறைபாடுகள் தொடர்பில் கலந்துகொண்டவர்கள் முன்வைத்தனர். அதற்கமைய, இந்நாட்டின் போக்குவரத்துக் கட்டமைப்பில் இணைத்துக்கொள்வதற்கு பஸ் வண்டிகளை கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த பஸ் வண்டிகளில் சிலவற்றை இயலாமையுடைய நபர்களின் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு வசதியளிக்கும் வகையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் ஒன்றியத்தின் தலைவர் குறிப்பிட்டார்.

1 2

13 18

20 21

25 29

32 5



தொடர்புடைய செய்திகள்

2025-10-29

வடமேல் மாகாணசபை கோபா குழுவிற்கு அழைப்பு

ஆறு மாடிக் கட்டடத்தின் நிர்மாணத்தில் மாகாணசபை அதிக சுமையை ஏற்கும் வகையில் ஒப்பந்தக்காரரினால் தயாரிக்கப்பட்ட நிர்மாணக் கொள்முதல் நடைமுறையைத் தெரிவுசெய்து – சாத்தியக்கூற்று அறிக்கையும் பெற்றுக்கொள்ளப்படவில்லை – கோபா குழு கேள்வி   வடமேல் மாகாணசபை மற்றும் குருநாகல் மாநகரசபை ஆகியன இணைந்து ஆறுமாடிக் கட்டடத்தை நிர்மாணிப்பதற்காக கேள்விப் பத்திரங்களைக் கோரி ஒப்பந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டிருந்ததுடன், இது தொடர்பில் காணப்படும் மேற்பார்வை நடவடிக்கைகள் காரணமாக இந்தக் கட்டடத்தின் நிர்மாணப் பணிகள் நிறுத்தப்பட்டிருப்பது அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவில் (கோபா) தெரியவந்தது. இதுபோன்ற கட்டடங்களை அமைப்பதற்கு முன்னர் சாத்தியக்கூற்று ஆய்வு அறிக்கை பெறவேண்டியிருக்கின்றபோதும் அவ்வாறான அறிக்கை பெற்றுக் கொள்ளப்படவில்லையென்பதும் இங்கு தெரியவந்தது. அத்துடன், விசேடமான வடிவமைப்பைக் கொண்ட கட்டுமானம் இன்றி, சாதாரண வகையிலான அலுவலகக் கட்டடத்தை அமைப்பதற்கு மேல்மாகாண சபை அதிக சுமையை ஏற்றுக்கொள்ளும் வகையில் ஒப்பந்தகாரரினால் நிர்மாண கொள்முதல் நடைமுறை தெரிவுசெய்யப்பட்டிருப்பது பிரச்சினைக்குரியது என்பதும் கோபா குழுவினால் வலியுறுத்தப்பட்டது. வடமேல் மாகாணசபை தொடர்பான 2023, 2024ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் அதன் செயலாற்றுகை குறித்து ஆராய்வதற்காக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் அவர்களின் தலைமையில் அண்மையில் (ஒக். 23) கூடியபோதே இந்த விடயங்கள் தெரியவந்தன. இதற்கமைய குறித்த கட்டுமானம் தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்கு மீண்டும் ஒருமுறை அதிகாரிகளை அழைப்பதற்கும், ஒரு மாத காலத்திற்குள் குறித்த கட்டடம் தொடர்பான பரிந்துரைகள், கொள்முதல் மற்றும் தொழில்நுட்பக் குழுக்களின் அறிக்கைகள் உள்ளிட்ட ஆவணங்கள் சகலவற்றையும் கணக்காய்வாளர் நாயகத்திற்கு அனுப்பிவைக்குமாறு அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது. மேலும், உணவு ஆணையாளர் திணைக்களத்தினால் வடமேல் கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தின் ஊடாக அரசி உற்பத்தியாளர்களின் கூட்டுறவுச் சங்கத்திற்குப் பெற்றுக் கொடுக்கப்பட்ட கடன் மற்றும் தாமதக் கட்டணத்தை வசூலிப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இங்கு கேட்கப்பட்டதுடன், இது தொடர்பான அறிக்கையொன்றை திகதிகள் குறிப்பிட்டு இரண்டு மாதங்களுக்குள் கோபா குழுவுக்கு அனுப்பிவைக்குமாறும் பரிந்துரைக்கப்பட்டது. மாகாண காணி ஆணையாளர் திணைக்களத்திற்கு அரச காணிகள் குறித்து முறையான பதிவேட்டைப் பேணுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ள போதும், குறித்த பதிவேடு அரசாங்க காணிகள் யாவற்றையும் அடையாளம் காண்பது, நீண்டகால குத்தகைக்குக் கொடுப்பதற்கு அனுமதியளிக்கப்பட்ட மற்றும் அனுமதியளிக்கப்படாத காணிகள், நிலுவையில் உள்ள குத்தகைத் தவணைகள் போன்ற விடயங்களை இலகுவில் கண்டறியக் கூடிய வகையில் இல்லாமை குறித்தும் குழு கேள்வியெழுப்பியது. அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டிய பணத்தை வசூலிக்க அதிகாரிகள் தயக்கம் காட்டக்கூடாது என்றும், கோபா குழு இதற்குத் தேவையான அனைத்து ஆதரவையும் வழங்கும் என்றும் இங்கு வலியுறுத்தப்பட்டது. இதற்கு அமைய, இந்த ஆண்டு இறுதிக்குள் வசூலிக்கப்பட வேண்டிய மொத்த தொகை குறித்து அறிக்கை வழங்குமாறும் அறிவுறுத்தப்பட்டது. மேலும், கண்காணிப்பு நடவடிக்கைகள் காரணமாக, சுமார் 85 மில்லியன் ரூபாய் வசூலிக்கப்படாத வரித் தொகை இருப்பதாகவும், இது தொடர்பில் அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறும் கோபா குழு அறிவுறுத்தியது. இக்கூட்டத்தில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் உறுப்பினர்களான கௌரவ பிரதியமைச்சர்களான அரவிந்த செனரத்,  மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருன ஜயசேகர, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (வைத்தியர்) ஜனக சேனாரத்ன, டி.கே. ஜயசுந்தர, ருவன்திலக ஜயக்கொடி, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்க, (சட்டத்தரணி) சாகரிக்கா அதாவுத, சுனில் ரத்னசிறி ஆகியோர் கலந்துகொண்டனர்.


2025-10-29

இலங்கையின் தேயிலை, கோப்பி மற்றும் புகையிலை பயிர்ச்செய்கையை அபிவிருத்தி செய்வது தொடர்பில் சீன தூதுக்குழுவுடன் கலந்துரையாடல்

கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு மற்றும் சீனாவின் யுனான் பிராந்தியத்தின் மக்கள் காங்கிரஸ் நிலைக் குழுவின் உப தலைவரான யான் யாலின் அவர்களின் தலைமையிலான சீன பிரதிநிதிகள் குழுவுக்கும் இடையில் விவசாய அபிவிருத்தி அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வது மற்றும் எதிர்கால ஒத்துழைப்பு வாய்ப்புகளை விரிவுபடுத்துவது தொடர்பான கலந்துரையாடல் அண்மையில் (ஒக். 24) பாராளுமன்றத்தில் நடைபெற்றது. கமத்தொழில் மற்றும் கால்நடை வளங்கள் கௌரவ பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில், தேயிலை, கோப்பி மற்றும் புகையிலை பயிர்ச்செய்கை துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்துக் கலந்துரையாடப்பட்டது. இங்கு கருத்து தெரிவித்த கௌரவ பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன, அமைச்சு மட்டத்தில் ஆரம்பகட்ட கலந்துரையாடல் ஏற்கனவே நடத்தப்பட்டதாகவும், இந்தச் சந்திப்பானது சீனத் தூதுக்குழுவிற்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் சம்பந்தப்பட்ட துறைகள் தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடுவதை நோக்கமாகக் கொண்டது என்றும் தெரிவித்தார். அத்துடன், இலங்கையின் அபிவிருத்திச் செயன்முறையில் பல்வேறு கட்டங்களில் சீனாவால் வழங்கப்பட்ட தொடர்ச்சியான ஆதரவை பாராட்டிய கௌரவ பிரதி அமைச்சர் இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான நீண்டகால நட்புறவு தொடர்பிலும் விசேடமாகச் சுட்டிக்காட்டினார். இவ்வாறான உறவுகள் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும், இலங்கையின் விவசாயத் துறையை நவீனமயமாக்குவதற்கும், விரிவுபடுத்துவதற்கும் பங்களிக்கும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார். தேயிலை, கோப்பி மற்றும் புகையிலைத் தொழில்களின் அபிவிருத்தி குறித்து இரு தரப்பினரும் தமது கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டதுடன், நவீன தொழில்நுட்பப் பயன்பாடுகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது. குறைந்து வரும் தொழிற்படை காரணமாக எழும் சவால்களைக் வெற்றிகொள்வதற்கும், தேயிலைப் பயிர்ச்செய்கையின் உற்பத்தியை மேம்படுத்துவதற்கும் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் அவசியம் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது. அத்துடன், மண்ணின் வளத்தை மேம்படுத்தவும், பயிர் விளைச்சலை அதிகரிக்கவும் நான்காம் தலைமுறை உரங்களைப் (fourth-generation fertilizers) பயன்படுத்துவது பொருத்தமானது என்று சீன தூதுக்குழுவினர் பரிந்துரைத்தனர். கோப்பி பயிர்ச்செய்கை குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. கடந்த தசாப்தத்தில் இலங்கையின் கோப்பித் தொழில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காண்பித்துள்ளது என்று இங்கு தெரிவிக்கப்பட்டதுடன், கோப்பி பயிர்ச்செய்கைக்காக நில ஒதுக்கீட்டை விரிவுபடுத்துவதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. தற்போது 5,000 ஹெக்டெயாருக்கும் அதிகமான பரப்பளவில் கோப்பி பயிரிடப்படுவதாகவும், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் அதனை 10,000 ஹெக்டெயாராக விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாககவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன், இலங்கையின் புகையிலைத் தொழில் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், புகையிலை மூலப்பொருட்களுக்குப் பதிலாக பதப்படுத்தப்பட்ட, பெறுமதி சேர்க்கப்பட்ட தயாரிப்புக்களை சந்தைப்படுத்துவதன் மூலம் சர்வதேச சந்தைக்கு நுழைய முடியும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இங்கு தெரிவித்தனர். இலங்கையின் புகையிலைத் தொழில் இன்னும் சிறிய அளவிலான தொழிலாகவே காணப்படுவதாகவும், தொழிற்சாலைகளை மையமாகக் கொண்ட பாரிய அளவிலான தொழில்துறையாக அதனை அபிவிருத்தி செய்வதன் முக்கியத்துவத்தையும் சீனப் பிரதிநிதிகள் குழுவினர் சுட்டிக்காட்டினர். இந்தக் கூட்டத்தில் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்கள் உள்ளடங்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள், சீனப் பிரதிநிதிகள் குழுவினர், பாராளுமன்றத்தின் மற்றும் அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.


2025-10-27

அஸ்வெசும சமூகப் பாதுகாப்புத் திட்டத்திற்கு தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்க புதுப்பிக்கப்பட்ட தரவுக் கட்டமைப்பு அவசியம் – உலக வங்கி பிரதிநிதிகள் தெரிவிப்பு

"அஸ்வெசும" சமூகப் பாதுகாப்புத் திட்டத்திற்குத் தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுக்கும்போது புதுப்பிக்கப்பட்ட மற்றும் துல்லியமான தரவுக் கட்டமைப்பு அவசியம் என உலக வங்கியின் பிரதிநிதிகள் வலியுறுத்தினர். இதற்குத் தேவையான தொழில்நுட்ப மற்றும் சர்வதேச அனுபவத்தை வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்கள், பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள், உலக வங்கியின் பிரதிநிதிகள், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் ஆகியோருக்கிடையில் கடந்த ஒக். 22ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்ற கூட்டத்திலேயே ‘அஸ்வெசும திட்டம்’ குறித்து இவ்வாறு கருத்துத் தெரிவிக்கப்பட்டது. கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் கௌரவ அமைச்சர் (கலாநிதி) உபாலி பன்னிலகே, பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோரின் பங்குபற்றலுடன் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில், உலக வங்கியின் சமூகப் பாதுகாப்புத் தொடர்பான சிரேஷ்ட பொருளாதார நிபுணர் பிரான்செஸ்கா லமன்னா (Francesca Lamanna)  மற்றும் சிரேஷ்ட பாதுகாப்பு நிபுணர் ஸ்ரீனிவாஸ் வரதன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.  சமூகப் பாதுகாப்புக்கான தரவுத்தளத்தை உருவாக்குவதன் மூலம், உண்மையிலேயே வறுமைக் கோட்டின் கீழ் உள்ளவர்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய தனிநபர்கள், குடும்பங்களை அடையாளம் காண முடியும் என உலக வங்கியின் பிரதிநிதிகள் குறிப்பிட்டனர். பிரஜைகளின் தகவல்களை சமூகப் பாதுகாப்பு தரவுத்தளத்தில் உள்ளிடுவது அவர்களை அஸ்வெசும அல்லது பிற தொடர்புடைய சலுகைகளுக்கு தகுதியுடையவர்களாக மாற்றாது என்றும், உள்ளிடப்பட்ட தரவைச் சரிபார்க்க முடியும் என்றும், தொடர்புடைய சலுகைகளை துல்லியமாக அடையாளம் காண முடியும் என்றும் இந்தக் குழு வலியுறுத்தியது. இந்தச் சமூகப் பாதுகாப்பு அமைப்பு ஒரு நாட்டிற்கு ஒரு உற்பத்தி முதலீடாகும், எனவே தரவுத்தளத்தைப் புதுப்பிக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர்கள் வலியுறுத்தினர். "அஸ்வெசும" சலுகைகளை வழங்குவதில் நடைமுறைச் சிக்கல்கள் குறித்து கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர். அதன்படி, கிராம ரீதியாக அமைக்கப்படும் குழுக்களின் மூலம் அஸ்வெசும பயனாளிகளைத் தேர்ந்தெடுத்து, சம்பந்தப்பட்ட கிராமத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளின் பெயர்களைக் காண்பிப்பதன் மூலம் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய முடியும் என உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். இங்கு கருத்துத் தெரிவித்த, "அஸ்வெசும" திட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம அலுவலர்களுக்கு இந்தத் திட்டம் குறித்து போதுமான தகவல்கள் இல்லாததால் சில தடைகள் ஏற்பட்டுள்ளதாகவும், அவர்களின் வகிபாகம் குறித்து முறையான தெளிவுபடுத்தல்களை வழங்குவதன் ஊடாக இத்திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தத் தாம் ஒத்துழைப்பு வழங்கிவருவதாகவும் தெரிவித்தனர். கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, கௌரவ அமைச்சர்கள், கௌரவ பிரதி அமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், உலக வங்கி ஆலோசகர் ஷாலிகா சுபசிங்க மற்றும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் பலரும் இதில் கலந்துகொண்டனர்.


2025-10-24

2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கிட்டுச் சட்டமூலத்திற்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அனுமதி

2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கிட்டுச் சட்டமூலத்திற்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது. அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ த சில்வா தலைமையில் நேற்று (ஒக். 23) கூடியபோதே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட நிதி அமைச்சின் அதிகாரிகள், 2026ஆம் ஆண்டு ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் ஒவ்வொரு துறைக்கும் மேற்கொள்ளப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகள் மற்றும் எதிர்கால இலக்குகள் குறித்த விபரங்களை முன்வைத்தனர். இவ்விடயங்கள் தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டு இதற்கான அனுமதி வழங்கப்பட்டது. 2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு (வரவுசெலவுத்திட்ட உரை) நிதி அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ ஜனாதிபதி அவர்களினால் எதிர்வரும் நவம்பர் 07ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks