E   |   සි   |  

2024-08-15

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

மக்கள் சிரமத்திற்கு உள்ளாகாத வகையில் கடவுச்சீட்டுகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கவும் - குடிவரவு மற்றும் குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகத்துக்கு வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூறவேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அறிவிப்பு

  • புதிய 'குடிவரவு' சட்டமூலத்துக்கு குழுவின் அனுமதி
  • மனிதக் கடத்தல் (Human Smuggling) தொடர்பில் முதன்முறையாக இந்த சட்டமூலம் ஊடாக புதிய சட்டங்கள்
  • புதிய இலத்திரனியல் கடவுச்சீட்டுகள் வழங்குதல் ஒக்டோபர் இறுதியில்

 

மக்கள் சிரமத்திற்கு உள்ளாகாத வகையில் கடவுச்சீட்டுகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகத்துக்கு வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூறவேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஜகத் குமார சுமித்ராராச்சி அறிவுறுத்தல் வழங்கினார்.

புதிய 'குடிவரவு' சட்டமூலத்தை பரிசீலிப்பதற்கு வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூறவேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் முன்னிலையில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அழைக்கப்பட்டிருந்த போதே இந்த அறிவித்தல் வழங்கப்பட்டது.

இங்கு கருத்துத் தெரிவித்த குடிவரவு மற்றும் குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய குறிப்பிடுகையில், 2023 ஆம் ஆண்டில் ஏறத்தாழ பத்து லட்சம் கடவுச்சீட்டுக்கள் வழங்கப்பட்டபோதிலும்  அவர்களில் 23% பேர் மட்டுமே வெளிநாடு சென்றதாகவும், எஞ்சிய 77% பேர் கடவுச்சீட்டைப் பயன்படுத்தவில்லை எனத் தெரிவித்தார். அத்துடன், இலத்திரனியல் கடவுச்சீட்டுக்கள் (E-Passport) ஒக்டோபர் இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதால், சில நாடுகள் இலத்திரனியல் கடவுச்சீட்டுக்களை  கோருவதற்கு வாய்ப்புள்ளது என்றும், அதனால் அத்தியாவசியமற்றவர்கள் கடவுச்சீட்டுக்களை பெறுவதைத் தவிர்க்குமாறு கோரிக்கை விடுப்பதாக அவர் தெரிவித்தார்.
 
இது தொடர்பில் முடிந்தவரை மக்களை அறிவுறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என குழுவின் தலைவர் தெரிவித்தார். எனினும், பணம் செலுத்தி கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வது மக்களின் உரிமை என்பதனால், மக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகாத வகையில், கோரப்பட்ட கடவுச்சீட்டுகளை வழங்குவது குடிவரவுத் மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் பொறுப்பாகும் எனவும் குழுவின் தலைவர் இதன்போது வலியுறுத்தினார். அவ்வாறில்லை எனில் திணைக்களமும் அரசாங்கமும் மக்கள் மத்தியில் கடும் வெறுப்புக்கு ஆளாவதை தடுக்க முடியாது என குழுவின் தலைவர் கௌரவ ஜகத் குமார சுமித்ராராச்சி சுட்டிக்காட்டினார்.

அத்துடன், இந்தியா மற்றும் நேபாளம் செல்லும் யாத்ரீகர்களுக்கு கடவுச்சீட்டு பெறுவதில் உள்ள தடைகள் உடனடியாக நீக்கப்படும் எனவும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதிய 'குடிவரவு' சட்டமூலத்தை பரிசீலித்த குழு அது தொடர்பில் அதிகாரிகளிடம் விடயங்களை கேட்டறிந்தது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரினால் 2024 ஜூன் 20 ஆம் திகதி பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்ட இந்த சட்டமூலத்தை 2017 இல் வரைபு செய்ய ஆரம்பிக்கப்பட்டதாக குடிவரவு மற்றும் குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிடிய தெரிவித்தார். குடிவருவோர் மற்றும் குடியகல்வோர் சட்டம் மற்றும் 1971 இன் 53 ஆம் இலக்கமுடைய வெளிநாட்டுக் கடவுச்சீட்டு (ஒழுங்குபடுத்தல்) மற்றும் வெளியேறல் அனுமதிப் பத்திரச் சட்டம் என்பன தற்போதைய சமூக, தொழில்நுட்ப நிலைமைகளுக்குப் பொருந்தும் வகையில் திருத்தம் செய்யப்பட்டு இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்தச் சட்டமூலம் உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்டு, அது தொடர்பான தீர்மானம் பாராளுமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் உரிய திருத்தங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இந்நாட்டின் குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்களில் உள்ள குறைபாடுகளை சரிசெய்வதற்கான ஏற்பாடுகளை இந்த சட்டமூலம் கொண்டுள்ளதாகவும் இங்கு புலப்பட்டது. விசேடமாக இந்நாட்டில் மனிதக் கடத்தல் (Human Smuggling) தொடர்பில் முதன்முறையாக இந்தப் புதிய சட்டமூலம் ஊடாகத் தேவையான சட்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகம் தெரிவித்தார். அத்துடன், புதிய தொழில்நுட்பத்துடன் திணைக்களம் முன்னோக்கிச் செல்வதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகள் மற்றும் நாட்டில் சட்டவிரோதமாகத் தங்கியிருபோருக்குப் பொருந்தக்கூடிய ஏற்பாடுகள் உள்ளிட்ட புதிய சட்டங்களை இந்தப் புதிய சட்டமூலம் கொண்டுள்ளது. பலரது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் கருத்திற்கொண்டு இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டதாக  இலுக்பிட்டிய மேலும் குறிப்பிட்டார். நீண்ட நாட்களாக தாமதமான இந்த சட்டமூலம் காலத்துக்கேற்ற முக்கியமானது சட்டமூலம் என்றும் குழுவில் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், குடிவரவு மற்றும் குடியகழ்வுத் திணைக்கள ஊழியர்களின் வெற்றிடங்களை நிரப்புவது தொடர்பிலும் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது. இது தொடர்பான முன்மொழிவை குழுவிடம் சமர்ப்பிக்குமாறும் குழுவின் தலைவர் ஆலோசனை வழங்கினார். சட்டமூலத்துக்கு அனுமதி வழங்கிய குழுவின் தலைவர் குறிப்பிடுகையில்,  இச்சட்டத்தை மேலும் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு புதிய தொழில்நுட்பத்துடன் முன்னோக்கிச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார். தற்போதுள்ள தடைகளை நீக்குவதற்கு இது தொடர்பான முன்மொழிவுகளை 2 வாரங்களுக்குள் குழுவிடம் வழங்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திற்கு குழு அறிவித்தியது.

அத்துடன், இலத்திரனியல் கடவுச்சீட்டுகளை கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளதாகவும், ஒக்டோபர் மாத இறுதிக்குள் 50 இலட்சம் இலத்திரனியல் கடவுச்சீட்டுகள் பெற்றுக்கொள்ளப்படும் எனவும் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் தெரிவித்தார்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் சட்ட வரைஞர் திணைக்களம் என்பவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். அத்துடன், கௌரவ ஜோன் செனவிரத்ன, கௌரவ உதயன கிரிந்திகொட, கௌரவ குணதிலக ராஜபக்ஷ, கௌரவ ஜயந்த வீரசிங்க, கௌரவ இஷாக் ரஹுமான், கௌரவ சுதத் மஞ்சுள, கௌரவ குமாரசிறி ரத்நாயக்க மற்றும் கௌரவ மதுர விதானகே ஆகிய குழு உறுப்பினர்களும், குழுவின் உறுப்பினர்களல்லாத பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

 

1



தொடர்புடைய செய்திகள்

2025-11-18

அஸ்வெசும நலன்புரி சலுகைகள் திட்டம், அதன் நடைமுறைகள் மற்றும் நடைமுறைப்படுத்துவதில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து வழிவகைகள் பற்றிய குழு கவனம் செலுத்தியது

அஸ்வெசும நலன்புரி சலுகைத் திட்டம், அதன் நடைமுறைகள் மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்துவதில் காணப்படும் சிக்கல்கள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் விஜேசிறி பஸ்நாயக்க அவர்களின் தலைமையில் அண்மையில் (நவ. 12) பாராளுமன்றத்தில் கூடிய வழிவகைகள் பற்றிய குழுவில் கவனம் செலுத்தப்பட்டது. இங்கு அஸ்வெசும நலன்புரி சலுகைத் திட்டத்தின் தற்போதைய நிலைமைகள் மற்றும் நடைமுறைப்படுத்தப்படும் முறை தொடர்பில் நலன்புரி நன்மைகள் சபையின் அதிகாரிகள் குழுவுக்கு விளக்கமளித்தனர். அஸ்வெசும திட்டத்திற்குப் பயனாளிகளைத் தேர்ந்தெடுப்பதற்குப் பயன்படுத்தப்படும் அளவுகோல்கள் குறித்து குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. அந்த அளவுகோல்களின் அடிப்படையில் பொருத்தமான சலுகைகளை வழங்குவதற்குத் தகுதியான பயனாளிகளைத் தேர்ந்தெடுப்பதில் காணப்படும் சிக்கல்கள் குறித்து குழுவின் உறுப்பினர்கள் அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர். இத்திட்டத்தில், 22 அளவுகோல்களின் கீழ் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்படுவதால், அந்த அளவுகோல்களை செயல்படுத்தும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றும் குழு சுட்டிக்காட்டியது. அஸ்வெசும நன்மைகளைப் பெறுவதற்காக மாத்திரம் பயனாளிகளைப் பதிவுசெய்வதற்குத் தற்பொழுது அனுமதிக்கப்பட்டாலும், நாடு முழுவதிலுமுள்ள மக்கள் தமது தகவல்களைக் கட்டமைப்பொன்றில் (Social Registry) பதிவுசெய்வதே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என குழு சுட்டிக்காட்டியது. அத்துடன், பதிவுசெய்த பின்னர் தங்களுக்கு என்ன தேவை என்பதைத் துல்லியமாகக் கண்டறிந்து, அதன் மூலம், தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்று குழு சுட்டிக்காட்டியது. முதியோர் மற்றும் இயலாமையுடைய நபர்களுக்கு அஸ்வெசும திட்டத்தை அவர்களின் வீடுகளுக்கே சென்று பெற்றுக்கொடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் குழு  விரிவாகக் கலந்துரையாடியது. தேசிய அடையாள அட்டை இல்லாததால் நலன்புரித் திட்டத்தின் உதவிகளைப் பெற முடியாத தகுதியுள்ள நபர்கள் தற்போது இருந்தாலும், தேசிய அடையாள அட்டை இல்லாததால் அந்தச் சலுகைகளைப் பெற முடியாத சில குழுக்கள் உள்ளன என்றும் அதிகாரிகள் குழுவிடம் தெரிவித்தனர். அதன்படி, முடிந்தவரை அவர்களின் அடையாளங்களை உறுதி செய்வதன் மூலம் நலன்புரித்திட்ட உதவிகளை வழங்குவதன் நோக்கத்தை அடைவதன் முக்கியத்துவத்தையும் குழு வலியுறுத்தியது. இக்கூட்டத்தில் கௌரவ அமைச்சர் (கலாநிதி) அனில் ஜயந்த, கௌரவ பிரதியமைச்சர்களான  சதுரங்க அபேசிங்ஹ, (பேராசிரியர்) ருவன் ரணசிங்க, நிஷாந்த ஜயவீர, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான  (சட்டத்தரணி) சுஜீவ சேனசிங்க, கே.சுஜித் சஞ்சய பெரேரா, ரோஹன பண்டார, சத்துர கலபதி, திலின சமரகோன் மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


2025-11-17

தேசிய உயர்கல்வி கொள்கை வரைபு தயாரிப்பின் முன்னேற்றம் தொடர்பில் கல்வி அலுவல்ககள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் உபகுழுவில் ஆராய்ப்பட்டது

தேசிய உயர்கல்வி கொள்கைக்கான வரைபு தயாரிப்பின் முன்னேற்றம் தொடர்பில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவினால் நியமிக்கப்பட்ட உயர்கல்விப் பிரிவு தொடர்பான உபகுழுவில் கலந்துரையாடப்பட்டது. குறித்த உபகுழு அதன் தலைவர் கௌரவ பிரதியமைச்சர் (வைத்தியர்) மதுர செனவிரத்ன அவர்களின் தலைமையில் அண்மையில் (நவ. 11) பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது. தயாரிக்கப்பட்டுவரும் உயர்கல்விக் கொள்கை வரைபு மற்றும் அதற்கான நடவடிக்கைகளின் முன்னேற்றம் தொடர்பில் களனி பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் நிலந்தி.த சில்வா அவர்கள் குழு முன்னிலையில் கருத்துத் தெரிவித்தார். நவம்பர் மாத இறுதிக்குள் இந்த வரைபைத் தயாரிக்க முடியும் என அவர் குறிப்பிட்டார். மேலும், பல்கலைக்கழகங்களில் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்களை மதிப்பாய்வு செய்தல், இயலாமையுடைய மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்தல் மற்றும் வெளிப்புற பட்டப்படிப்பு திட்டங்களின் தரத்தை மேம்படுத்துதல் தொடர்பாக முந்தைய குழு கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட பிரச்சினைகள் குறித்தும் இங்கு ஆராயப்பட்டது. இந்தக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சின் செயலாளர் நாளக கலுவெவ உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


2025-11-15

பொலிஎதிலின் (சிலிசிலி) பைகளுக்குப் பதிலாகப் பயன்படுத்தக் கூடிய சுற்றுச்சூழலுக்கு உகந்த காகிதப் பைகளைத் தயாரிக்க சுற்றாடல் அமைச்சு தலைமைத்துவம் வகிக்கவும் – துறைசார் மேற்பார்வைக் குழு சுற்றாடல் அமைச்சுக்கு ஆலோசனை

2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தில் பல அமைச்சுக்களுக்கான முன்மொழிவுகளின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றத்தை ஆராய்வதற்காகத் துறைசார் மேற்பார்வைக் குழு இரு நாட்கள் கூடியது பொலிஎதிலின் (சிலிசிலி) பைகளுக்குப் பதிலாகப் பயன்படுத்தக் கூடிய சுற்றுச்சூழலுக்கு உகந்த காகிதப் பைகளைத் தயாரிக்க சுற்றாடல் அமைச்சு தலைமைத்துவம் வகிக்க வேண்டும் என சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அமைச்சுக்கு ஆலோசனை வழங்கியது. பொருட்களைக் கொள்வனவு செய்யும்போது சிலிசிலி பைகளுக்கு கட்டணம் அறவிடும் தீர்மானம் தொடர்பில் குழுவில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இந்த முன்மொழிவு முன்வைக்கப்பட்டது. இந்த நடவடிக்கையின் மூலம் பொலிஎதிலின் பயன்பாடு குறைக்கப்படுமா என்பதை பரிசீலிக்க வேண்டும் என்றும் குழுவின் தலைவர் அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். பொருட்களைக் கொள்வனவு செய்யும்போது இந்தப் பைகளுக்கு செலுத்த வேண்டிய தொகையை முடிவு செய்த அதிகாரிகள் யார் என்பதையும் குழுவின் தலைவர் வினவினார். சிலிசிலி பைகளுக்கு பணம் செலுத்த வேண்டும் என்று வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை என இங்கு ஆஜராகியிருந்த அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தலைமையில் நவம்பர் 10 மற்றும் 12 ஆகிய தினங்களில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. இங்கு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அலுவல்கள் அமைச்சு, சுற்றாடல் அமைச்சு ஆகியவற்றின் 2025ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகளின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. அத்துடன், குறித்த அமைச்சுக்களின் கீழ் உள்ள பல நிறுவனங்களின் ஆண்டு அறிக்கைகள் மற்றும் செயற்திறன் அறிக்கைகளும் பரிசீலிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டன. இக்கூட்டத்தில், கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ஞானமுத்து ஸ்ரீநேசன், ரொஷான் அக்மீமன, சதுரி கங்கானி, சுசந்த குமார நவரத்ன, கிட்னன் செல்வராஜ், (சட்டத்தரணி) பாக்ய ஸ்ரீ ஹேரத், (சட்டத்தரணி) சித்ரால் பெர்னாந்து, ஜே.சி.அலவத்துவல, (சட்டத்தரணி) சுஜீவ சேனசிங்க மற்றும் உபுல் கித்சிறி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


2025-11-15

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தின் கட்டுமானப் பணிகளில் ஏற்படும் தாமதம் குறித்து கோப் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது

முழுத் திட்டமும் 548 நாட்கள் தாமதமானதால் ஒப்பந்தக்காரர் ரூ.4227 மில்லியன் இழப்பீடு கோரியுள்ளமை தெரியவந்தது துறைமுக அதிகாரசபைக்குச் சொந்தமான அனைத்துக் காணிகளையும் ஏற்றுக்கொள்வது மற்றும் அகற்றுவது தொடர்பில் குழு கவனம் செலுத்தியது   கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தின் கட்டுமானப் பணிகளில் ஏற்பட்ட தாமதம் மற்றும் அதனால் ஒட்டுமொத்த திட்டத்திலும் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப்) விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இலங்கை துறைமுக அதிகாரசபை தொடர்பான 2022, 2023ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் அதன் தற்போதைய செயலாற்றுகை குறித்து ஆராய்வதற்காக, அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஷாந்த சமரவீர அவர்களின் தலைமையில் கடந்த நவ. 13ஆம் திகதி கூடியபோதே மேற்கண்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. இலங்கை துறைமுக அதிகாரசபை கடந்த செப்டெம்பர் மாதம் 10ஆம் திகதி அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) முன்னிலையில் அழைக்கப்பட்டு 2022, 2023ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் அதன் செயலாற்றுகை குறித்து ஆராயப்பட்டிருந்தது. அன்றையதினம் கலந்துரையாட முடியாத விடயங்கள் குறித்து மீண்டும் கோப் குழுவில் கலந்துரையாடப்பட்டது. கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கு 2021 நவம்பர் மாதம் நிறுவனமொன்றுக்கு ரூ.40,273 மில்லியன் பெறுமதியான ஒப்பந்தத்தைப் பெற்றுக்கொடுக்க ஆமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. 2021 டிசம்பர் மாதம் இது தொடர்பில் ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டிருப்பதுடன், 2025 ஜனவரி 03ஆம் திகதி இத்திட்டம் பூர்த்திசெய்யப்படவேண்டியிருந்தது. எனினும், சில காரணங்களுக்காக கட்டுமானப் பணிகள் தாமதமடைந்தமையால் காலம் நீடிக்கப்பட்டு 2026ஆம் ஆண்டு ஜூலை மாதம் இதனைப் பூர்த்திசெய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளது என்பதும் இங்கு தெரியவந்தது. இதனால் குறித்த அபிவிருத்தித் திட்டம் 548 நாட்கள் காலதாமதம் அடைந்திருப்பதால் ஒப்பந்தக்காரர் ரூ.4227 மில்லியன் இழப்பீடு கோரியதாகவும், இது தொடர்பான அனைத்து விடயங்களையும் உள்ளடக்கிய அறிக்கையொன்றை கோப் குழுவில் சமர்ப்பிக்குமாறும் அதன் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த அபிவிருத்தி நடவடிக்கைகள் மிக விரைவாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவை நிறைவடையும் என்றும் குழுவில் ஆஜராகியிருந்த அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். அதிகாரசபை ஊழியர்களின் உணவுச் செலவுகள் குறித்தும் குழு கவனம் செலுத்தியதுடன், 2023 ஆம் ஆண்டு கோப் குழுவால் இது தொடர்பாக வழங்கப்பட்ட பரிந்துரைகள் செயல்படுத்தப்படவில்லை என்பதையும் குழு சுட்டிக்காட்டியது. அதன்படி, செலவுகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், விலைகளைக் குறைக்க போட்டிமுறையிலான கேள்விப்பத்திரங்கள் கோரும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். துறைமுக அதிகாரசபைக்குச் சொந்தமான அனைத்துக் காணிகளையும் கையகப்படுத்தி அப்புறப்படுத்துவது குறித்து கவனம் செலுத்திய குழுவின் தலைவர், நீதிமன்றத்தால் அப்புறப்படுத்துவதற்கும் கையகப்படுத்துவதற்கும் பரிந்துரைக்கப்பட்ட காணிகள் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டினார். அதன்படி, இது தொடர்பாக தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன், சீதுவை ரந்தொலுவ விளையாட்டுக் கழகத்தின் பெயர் இலங்கை துறைமுக அதிகாரசபை விளையாட்டுக் கழகம் எனப் பெயர்மாற்றம் செய்வது, குறித்த கழகத்தில் இணைந்த வீர வீராங்கனைகளை இலங்கை துறைமுக அதிகாரசபையின் ஊழியர்களாக ஆட்சேர்ப்பு செய்வது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) தயாசிறி ஜயசேகர, எஸ்.எம்.மரிக்கார், (சட்டத்தரணி) சுஜீவ சேனசிங்க, எம்.கே.எம்.அஸ்லம், (வைத்தியர்) பத்மநாதன் சத்தியலிங்கம், (வைத்தியர்) எஸ். ஸ்ரீ பவானந்தராஜா, லெப்டினன்ட் கொமாண்டர் (ஓய்வு) பிரகீத் மதுரங்க, திலின சமரகோன், சமன்மலி குணசிங்க, சுனில் ராஜபக்ஷ, சந்திம ஹெட்டியாராச்சி, தினேஷ் ஹேமந்த ஆகியோர் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks