E   |   සි   |  

2025-02-17

செய்தி வகைகள் : செய்திகள் 

நிதி அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள் 2025ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்

2025 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டத்தின் இரண்டாவது மதிப்பீடு (வரவுசெலவுத்திட்ட உரை) நிதி அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களினால் இன்று (பெப். 17) பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

இன்று மு.ப 10.30 மணிக்கு வரவுசெலவுத்திட்டத்துடன் கௌரவ ஜனாதிபதி அவர்கள் பாராளுமன்றத்தில் உள்ள ஜனாதிபதியின் அலுவலகத்திலிருந்து பாரம்பரியத்திற்கு அமைய படைக்கல சேவிதர் அழைத்துவர சபா மண்டபத்திற்குள் வருகைதந்தார். இதனைத் தொடர்ந்து பி.ப 1.15 மணிவரை ஜனாதிபதி வரவுசெலவுத்திட்ட உரையை நிகழ்த்தினார்.
 
இதற்கு அமைய 2025ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பான இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் பெப்ரவரி நாளை 18ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை 22ஆம் திகதி சனிக்கிழமை உள்ளடங்கலாக ஏழு நாட்கள் இடம்பெறவுள்ளது. அத்துடன் பெப்ரவரி 25ஆம் திகதி பி.ப 6.00 மணிக்கு நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.

இதனைத் தொடர்ந்து நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் குறித்த குழுநிலை விவாதம் பெப்ரவரி 27ஆம் திகதி முதல் மார்ச் 21ஆம் திகதி வரை 4 சனிக்கிழமை நாட்கள் உள்ளடங்கலாக 19 நாட்கள் இடம்பெறவுள்ளன. இதற்கான வாக்கெடுப்பு மார்ச் 21ஆம் திகதி பி.ப 6.00 மணிக்கு நடத்தப்படவுள்ளது.

இதற்கமைய நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பான விவாதம் பெப்ரவரி 18ஆம் திகதி முதல் மார்ச் 21ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.



தொடர்புடைய செய்திகள்

2025-03-18

"பாராளுமன்றக் குழுக்களின் விதப்புரைகளை நடைமுறைப்படுத்துவது சம்பந்தமான சட்டரீதியான அடிப்படையைக் கண்டறிந்து அந்தப் விதப்புரைகளை நடைமுறைப்படுத்தாமை தொடர்பில் அரசியலமைப்புக் கட்டமைப்பினுள் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் வழிகாட்டும் நோக்கில்" நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய குழு தொடர்பில் கௌரவ சபாநாயகர் பாராளுமன்றத்துக்கு அறிவிப்பு

"பாராளுமன்றக் குழுக்களின் விதப்புரைகளை நடைமுறைப்படுத்துவது சம்பந்தமான சட்டரீதியான அடிப்படையைக் கண்டறிந்து அந்தப் விதப்புரைகளை நடைமுறைப்படுத்தாமை தொடர்பில் அரசியலமைப்புக் கட்டமைப்பினுள் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் வழிகாட்டும் நோக்கில்" நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய குழு தொடர்பில் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இன்று (மார்ச் 18) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.   2025 ஜனவரி 23 ஆம் திகதி இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, "பாராளுமன்றக் குழுக்களின் விதப்புரைகளை நடைமுறைப்படுத்துவது சம்பந்தமான சட்டரீதியான அடிப்படையைக் கண்டறிந்து அந்தப் விதப்புரைகளை நடைமுறைப்படுத்தாமை தொடர்பில் அரசியலமைப்புக் கட்டமைப்பினுள் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் வழிகாட்டும் நோக்கில்" கௌரவ அமைச்சர் (சட்டத்தரணி) ஹர்ஷண நாணயக்காரவின் தலைமையில் நான்கு பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டதாகவும், 2025.03.15 ஆம் திகதி இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஒஷானி உமங்கா குறித்த குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டதாகவும் கௌரவ சபாநாயகர் பாராளுமன்றத்தில் அறிவித்தார். அதற்கமைய, கௌரவ அமைச்சர் (சட்டத்தரணி) ஹர்ஷண நாணயக்காரவின் தலைமையிலான அந்தக் குழுவின் ஏனைய உறுப்பினர்களாக கௌரவ பிரதி அமைச்சர் (சட்டத்தரணி) சுனில் வடகல, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவீ கருணாநாயக்க, அஜித் பி. பெரேரா மற்றும் ஒஷானி உமங்கா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக கௌரவ சபாநாயகர் பாராளுமன்றத்தில் அறிவித்தார்.


2025-03-18

பத்தாவது பாராளுமன்றத்தில் 07 துறைசார் மேற்பார்வைக் குழுக்களை அமைப்பதற்குப் பாராளுமன்றத்தில் அங்கீகாரம்

நான்கு துறைசார் மேற்பார்வைக் குழுக்களின் தலைமைப் பதவி ஆளும் கட்சிக்கு, மூன்று குழுக்கள் எதிர்க்கட்சிக்கு   பத்தாவது பாராளுமன்றத்தில் 07 துறைசார் மேற்பார்வைக் குழுக்களை அமைப்பது தொடர்பான பிரேரணை சபையில் அங்கீகரிக்கப்பட்டது. பாராளுமன்றத் தெரிவுக் குழுவினால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, சபைமுதல்வர், கௌரவ அமைச்சர் பிமல் ரத்னாயக்கவினால் குறித்த பிரேரணை நேற்று (மார்ச் 17) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதுடன், இதற்கு சபை அங்கீகாரம் வழங்கியது. இதற்கு அமைய குறித்த துறைசார் மேற்பார்வைக் குழுக்களுக்கான தலைமைத்துவங்கள் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி மத்தியில் பகிர்ந்தளிக்கப்படும் முறைக்கும் இணக்கம் காணப்பட்டது. இதற்கமைய, பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு, சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு, விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பரிணாமம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு மற்றும் ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு ஆகிய நான்கு குழுக்களின் தலைமைப் பொறுப்புக்களை ஆளும் கட்சிக்கு வழங்கவும் இணங்கப்பட்டது. அதேபோல, உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு, கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு, சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுக்களின் தலைமைப் பதவிகளை எதிர்க்கட்சிக்கு வழங்கவும் அனுமதி வழங்கப்பட்டது.


2025-03-16

உண்ணாட்டரசிறை (திருத்த) சட்டமூலம் இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் மார்ச் 20ஆம் திகதி பி.ப 6 மணி முதல் 8 மணிவரை – பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானம்

பாராளுமன்றத்தை ஏப்ரல் 8ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை கூட்டுவதற்கும் தீர்மானம் பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை குறித்த இரண்டு நாள் விவாதம் ஏப்ரல் 10ஆம் திகதி ஆரம்பம்   உண்ணாட்டரசிறை (திருத்த) சட்டமூலம் தொடர்பான இரண்டாவது மதிப்பீட்டு விவாதத்தை மார்ச் 20ஆம் திகதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலை விவாதத்தின் பின்னர் பி.ப 6 மணி முதல் 8 மணி வரை நடத்துவதற்கு கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நேற்று (மார்ச் 15) கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். அத்துடன், பாராளுமன்றத்தை ஏப்ரல் 8, 9 மற்றும் 10ஆம் திகதிகளில் கூட்டுவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது. இதற்கமைய ஏப்ரல் 8ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 9.30 மணி முதல் 10.00 மணி வரையில் நிலையியற் கட்டளை 22இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மு.ப 10.00 மணி முதல் மு.ப 11.00 மணிவரையான நேரம் வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், மு.ப 11.00 மணி முதல் 11.30 மணிவரையான நேரம் நிலையியற் கட்டளை 27(2) கீழான கேள்விகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.30 மணிவரையான காலப்பகுதி குற்றச் செயல்களின் வரும்படிகள் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீட்டுக்கான விவாதத்திற்காக ஒதுக்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டது. ஏப்ரல் 09ஆம் திகதி புதன்கிழமை 10.00 மணி வரையில் நிலையியற் கட்டளை 22இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மு.ப 10.00 மணி முதல் மு.ப 10.30 மணிவரையான காலப்பகுதி பிரதமரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்காக ஒதுக்கப்பட்டிருப்பதுடன், மு.ப 10.30 மணி முதல் மு.ப 11.00 மணி வரையான காலப்பகுதி வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், மு.ப 11.00 மணி முதல் 11.30 மணிவரையான நேரம் நிலையியற் கட்டளை 27(2) கீழான கேள்விகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணிவரையான காலப்பகுதி பெறுமதி சேர் வரி (திருத்த) சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீட்டுக்கான விவாதத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அன்றையதினம் பி.ப 5.00 பி.ப 5.30 மணி வரையில் எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணைக்கான விவாதத்திற்கும் நேரத்தை ஒதுக்குவதற்கு இங்கு தீர்மானிக்கப்பட்டது. ஏப்ரல் 10ஆம் திகதி வியாழக்கிழமை, நிலையியற் கட்டளை 22இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மு.ப 10.00 மணி முதல் மு.ப 11.00 மணிவரையான நேரம் வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், மு.ப 11.00 மணி முதல் மு.ப 11.30 மணிவரையான நேரம் நிலையியற் கட்டறை 27(2) கீழான கேள்விகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.30 மணிவரையில், கடந்த 14ஆம் திகதி சபையில் சமர்ப்பிக்கப்பட்ட “பட்டலந்த வீட்டுத் தொகுதியில் சட்டவிரோத தடுப்பு முகாம் மற்றும் சித்திரவதை முகாம் அமைத்து அவற்றை நடத்திச் சென்றமை தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை” குறித்த விவாதத்தை நடத்துவதற்கும், இதற்கான இரண்டு நாள் விவாதத்தில் பிறிதொரு நாளை மே மாதத்தில் ஒதுக்குவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.


2025-03-15

மொஹமட் சாலி நழீம் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ததன் காரணமாக பத்தாவது பாராளுமன்றத்தின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமொன்று ஏற்பட்டுள்ளதாக கௌரவ சபாநாயகர் அறிவிப்பு

கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் சாலி நழீம் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யும் கடிதத்தை பாராளுமன்றச் செயலாளர் நாயகத்திற்குக் கையளித்துள்ளார் எனவும், அதனால் பத்தாவது பாராளுமன்றத்தின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமொன்று ஏற்பட்டுள்ளதாகவும் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இன்று (மார்ச் 15) பாராளுமன்றத்தில் அறிவித்தார். அதற்கமைய, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் சாலி நழீம் வழங்கிய இராஜினாமா கடிதத்தை பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர சபையில் வாசித்ததுடன், எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக தான் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் சாலி நழீம் அவர்கள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தி தேசியப்பட்டியல் ஊடாக பத்தாவது பாராளுமன்றத்துக்குத் தெரிவானார்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks