பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2025-03-25
செய்தி வகைகள் : செய்திகள்
பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை – சீன நட்புறுவு சங்கத்தின் தலைவர் பதவிக்கு சபை முதல்வரும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானசேவைகள் கௌரவ அமைச்சருமான பிமல் ரத்னாயக்க தெரிவுசெய்யப்பட்டார். இலங்கை – சீன பாராளுமன்ற நட்புறவு சங்கத்தை மீள ஸ்தாபிப்பதற்கான கூட்டம் கடந்த மார்ச் 21ஆம் திகதி கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே இத்தெரிவு இடம்பெற்றது. இலங்கைக்கான சீனத் தூதுவர் கௌரவ கீ சென்ஹொங் (Qi Zhenhong) அவர்களும் இதில் கௌரவ விருந்தினராகக் கலந்துகொண்டார்.
அத்துடன், இலங்கை-சீன பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் செயலாளராக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர தெரிவுசெய்யப்பட்டார்.
இங்கு உரையாற்றிய கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன, இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் நீண்டகாலமாகக் காணப்படும் இரு தரப்பு கலாசார மற்றும் அரசியல் உறவுகளை நினைவுகூர்ந்தார். இந்த உறவுகளை மேம்படுத்துவதற்குப் பாராளுமன்ற நட்புறவு சங்கம் முக்கியமான தளமாக அமையும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இரு தரப்பினருக்கும் அதிகபட்ச நன்மைகளைப் பெறுவதற்காக பொருளாதாரம், வர்த்தகம், கல்வி மற்றும் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த நெருக்கமாக பணியாற்றுவதன் முக்கியத்தை வலியுறுத்திய சபாநாயகர், நட்புறவு சங்கத்தில் புதிய பொறுப்புக்களைப் பெற்றுக்கொண்டவர்கள் இதற்காகப் பணியாற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இங்கு கருத்துத் தெரிவித்த இலங்கைக்கான சீனத் தூதுவர் கௌரவ கீ சென்ஹொங் (Qi Zhenhong), நட்புறவு சங்கத்தின் ஊடாக இரண்டு நாடுகளும் பரஸ்பரம் அக்கறை செலுத்தும் துறைகளை வலுப்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தினார். மேலும், இலங்கையும் சீனாவும் தங்கள் கடினமான காலங்களில் மிகவும் நட்புடன் இணைந்து பணியாற்றியுள்ளன என்பதை நினைவு கூர்ந்த அவர், சீன-இலங்கை நட்புறவு சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
இலங்கை – சீன நட்புறவு சங்கத்தின் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்ட சபை முதல்வரும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானசேவைகள் கௌரவ அமைச்சருமான பிமல் ரத்னாயக்க கருத்துத் தெரிவிக்கையில், நீண்ட காலமாக இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் நட்புறவைப் பாராட்டினார். குறிப்பாக கல்வி மற்றும் வணிகக் கைத்தொழில் போன்ற துறைகளில் சீனாவிடம் காணப்படும் திறன் மற்றும் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவை பலப்படுத்துவதற்கு ஒன்றிணைந்து செயற்படுமாறு சகல உறுப்பினர்களிடமும் கோரிக்கை விடுத்தார். கடந்த இலங்கை-சீன பாராளுமன்ற நட்புறவு சங்கத்தினால் இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட செயலமர்வுகள் மற்றும் திட்டங்களை இளம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தொடர்ந்தும் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் முன்வைத்தார்.
இரு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் நீண்டகால உறவை மேலும் பலப்படுத்தும் வகையில் இந்தப் பாராளுமன்ற நட்புறவு சங்கம் செயற்படும் என அதன் செயலாளராகத் தெரிவுசெய்யப்பட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் கௌரவ எதிர்க்கட்சித் தலைவர், கௌரவ அமைச்சர்கள், கௌரவ பிரதியமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
2025-09-12
வரவுசெலவுத்திட்டத்தின் முதலாவது வாசிப்பு செப்டெம்பர் 26 வரவுசெலவுத்திட்ட உரை நவம்பர் 7 2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீட்டை (வரவுசெலவுத்திட்ட உரை) 2025 நவம்பர் 07ஆம் திகதி நடத்துவதற்கும், அதனைத் தொடர்ந்து நவம்பர் 08ஆம் திகதி முதல் டிசம்பர் 05ஆம் திகதி வரை விவாதத்தை நடத்துவதற்கும் இன்று (செப். 11) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டம் இன்று (11) கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதற்கமைய ஒதுக்கீட்டுச் சட்டமூலம் முதலாவது மதிப்பீட்டுக்காக செப்டெம்பர் 26ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ ஜனாதிபதி அவர்களினால் 2025 நவம்பர் 7ஆம் திகதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இரண்டாவது மதிப்பீட்டுக்காக (வரவுசெலவுத்திட்ட உரை) பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும். அதனைத் தொடர்ந்து நவம்பர் 8ஆம் திகதி முதல் நவம்பர் 14ஆம் திகதி வரை 6 நாட்கள் இரண்டாவது மதிப்பீடு விவாதத்தை நடத்துவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது. இதற்கு அமைய நவம்பர் 14ஆம் திகதி பி.ப 6.00 மணிக்கு இரண்டாவது மதிப்பீடுக்கான வாக்கெடுப்பு நடத்தப்படும். இதன் பின்னர் நவம்பர் 15ஆம் திகதி முதல் டிசம்பர் 5ஆம் திகதி வரை 17 நாட்கள் குழுநிலை விவாதத்தை நடத்துவதற்கும், டிசம்பர் 5ஆம் திகதி பி.ப 6.00 மணிக்கு மூன்றாவது மதிப்பீடுக்கான வாக்கெடுப்பை நடத்துவதற்கும் இணக்கம் காணப்பட்டது. இந்தக் காலப்பகுதியில் அரசாங்க விடுமுறைகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் தவிர சனிக்கிழமை உள்ளிட்ட ஏனைய அனைத்து நாட்களிலும் வரவுசெலவுத்திட்ட விவாதம் இடம்பெறும். குழுநிலை விவாதம் நடைபெறும் காலப்பகுதியில் திங்கட்கிழமைகளில் மு.ப 9.30 மணிக்கும், ஏனைய நாட்களில் மு.ப 9.00 மணிக்கும் பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்குத் தீர்மானிக்கப்பட்டது. இதற்கு அமைய இக்காலப் பகுதியில் நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு மேலதிகமாக வாய்மூல விடைக்கான ஐந்து கேள்விகள் மற்றும் நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான கேள்வி ஒன்றுக்காகவும் நேரத்தை ஒதுக்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இக்காலப் பகுதியில் பி.ப 6.00 மணிவரையும் வரவுசெலவுத்திட்ட விவாதத்தை நடத்துவதற்கும், வாக்கெடுப்பு நடத்தப்படும் தினங்கள் தவிர்ந்த ஏனைய தினங்களில் பி.ப 6.00 மணி முதல் 6.30 மணிவரையான காலப்பகுதியை ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிக்கு 50:50 என்ற அடிப்படையில் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணைகளுக்காக ஒதுக்குவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
2025-09-12
பிலியந்தலை மத்திய கல்லூரி மாணவர் பாராளுமன்ற கன்னி அமர்வு பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர அவர்களின் தலைமையில் கடந்த 04ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தின் பழைய பாராளுமன்ற சபா மண்டபத்தில் இடம்பெற்றது. பிலியந்தலை மத்திய கல்லூரி மாணவர்களுக்கு பாராளுமன்ற செயற்பாடுகள் குறித்த நடைமுறை அனுபவத்தை வழங்கும் நோக்கில், கல்லூரியும் இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களமும் இணைந்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தன. இதில் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் சுபாஷ் ரொஷான் கமகே, ஜனாதிபதியின் பொதுமக்கள் தொடர்பாடல் பணிப்பாளர் நாயகம் தர்மசிறி கமகே, பாராளுமன்ற சட்டவாக்க சேவைகள் பணிப்பாளரும், தொடர்பாடல் பதில் பணிப்பாளருமான எம்.ஜயலத் பெரேரா உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில், பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர, பாராளுமன்ற செயல்முறை மற்றும் அதன் பங்கை விளக்கியதுடன், பாராளுமன்றம் எவ்வாறு செயற்படுகின்றது என்பது பற்றிய விபரங்களையும் மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார். மேலும், பாராளுமன்ற சட்டவாக்க சேவைகள் பணிப்பாளரும், தொடர்பாடல் பதில் பணிப்பாளருமான எம். ஜயலத் பெரேரா தனது கருத்துக்களை முன்வைத்ததுடன், பாராளுமன்றத்தின் வகிபாகம் மற்றும் அமைப்புக் குறித்து மாணவர்களைத் தெளிவுபடுத்தினார். மாணவர் பாராளுமன்ற ஆரம்ப அமர்வையடுத்து சபாநாயகர் மற்றும் உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து மாணவர் பாராளுமன்றத்தின் ஒவ்வொரு அமைச்சரும் தங்கள் அமைச்சுக்கள் மூலம் பாடசாலையில் செயல்படுத்த விரும்பும் திட்டங்கள் உள்ளிட்ட முன்மொழிவுகளை முன்வைத்தனர். அத்துடன், இந்நிகழ்வில் பங்குபற்றிய மாணவர்களுக்கு பாராளுமன்ற செயலாளர் நாயகம் உள்ளிட்ட அதிதிகளால் சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் ஜனாதிபதி செயலகத்தின் உதவிப் பணிப்பாளர் மேஜர் நதீக தங்கொல்ல, பிலியந்தலை மத்திய கல்லூரியின் அதிபர் எச்.மகேஷிகா விஜேவர்தன, பாடசாலையின் ஆசிரியர்கள், பெற்றோர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
2025-09-12
பொலன்னறுவை சிறுநீரக மருத்துவமனை சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவின் காரணமாக இலங்கைக்குக் கிடைத்த மதிப்பு மிக்க பரிசு என கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தெரிவித்தார். சபாநாயகர் மற்றும் இலங்கைக்கான சீனத் தூதுவர் ஆகியோரின் தலைமையில் சீன அரசாங்கத்தின் உதவியுடன் பொலன்னறுவை மாவட்டத்தில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வாழ்வாதார மேம்பாட்டு உபகரணங்களை வழங்கும் நிகழ்வு பொலன்னறுவை நகரசபை வளாகத்தில் அண்மையில் (செப். 5) நடைபெற்றது. இதில் உரையாற்றும்போதே சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்வில், பயனாளிகளுக்கு சுமார் பதினைந்து மில்லியன் ரூபாய் பெறுமதியான தையல் இயந்திரங்கள் மற்றும் தண்ணீர் மோட்டார்கள் வழங்கப்பட்டன. இதன்போது, சீன அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நிர்மானிக்கப்பட்ட பொலன்னறுவை சிறப்பு தேசிய சிறுநீரக மருத்துவமனையின் சுகாதார நடவடிக்கைகள் மற்றும் எதிர்கால வளர்ச்சி நடவடிக்கைகள் குறித்து விசாரிக்க சீனத் தூதர் நடவடிக்கை எடுத்தார். சீன அரசாங்கம் இலங்கைக்கு அளித்த ஆதரவையும் சீன-இலங்கை நட்பு மருத்துவமனைக்கு அளித்த பங்களிப்பையும் பாராட்டி சீனத் தூதுவருக்குச் சிறப்பு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சகா விஜேமுனி, வீடமைப்பு பிரதி அமைச்சர் டி.பி. சரத், பொலன்னறுவை மாவட்ட செயலாளர் சுஜந்த ஏக்கநாயக்க, பொலன்னறுவை சீன-இலங்கை நட்புறவு தேசிய சிறுநீரக மருத்துவமனையின் பணிப்பாளர் வைத்தியர் தில்கா சமரசிங்க மற்றும் சீன பிரதிநிதிகள் உட்பட சுகாதார அதிகாரிகள் குழுவும் கலந்து கொண்டனர்.
2025-09-10
அனைத்துப் பல்கலைக்கழகங்களினதும் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்குபற்றும் பல்கலைக்கழங்களின் 15ஆவது விளையாட்டு விழா கடந்த செப்டம்பர் 04 ஆம் திகதி கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் ஆரம்பமானது. இந்நிகழ்வில் கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன மற்றும் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், பல்கலைக்கழக உப வேந்தர்கள், விரிவுரையாளர்கள், பிரதேச அரச அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks