பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2025-10-31
செய்தி வகைகள் : செய்திகள்
பாராளுமன்றத்தின் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இலங்கை பாராளுமன்றத்தின் உயர்மட்டக் குழுவினர் 2025 ஒக்டோபர் 26 முதல் 29 வரை நான்கு நாட்கள் ஐக்கிய இராச்சியத்திற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டனர். இந்த விஜயமானது இரு பாராளுமன்றங்களுக்கும் இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், ஜனநாயக ஆட்சியமைப்பை முன்னேற்றுதல், நிறுவன வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டமைந்தது.
இந்தக் குழுவில் சுகாதார மற்றும் வெகுசன ஊடக கௌரவ அமைச்சரும் ஆளும் கட்சியின் முதற்கோலாசானுமாகிய (வைத்தியர்) நளிந்த ஜயதிஸ்ஸ, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு கௌரவ அமைச்சரும் இலங்கை - ஐக்கிய இராஜ்ஜிய பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவருமான (சட்டத்தரணி) ஹர்ஷன நாணயக்கார மற்றும் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் கௌரவ அமைச்சரும், பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவருமான சரோஜா சவித்ரி போல்ராஜ் மற்றும் பாராளுமன்றத்தின் உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன ஆகியோர் அடங்கியிருந்தனர்.
இந்த விஜயத்தை ஜனநாயகத்துக்கான வெஸ்ட்மின்ஸ்டர் மன்றம் (WFD) ஒழுங்கு செய்ததுடன், ஐக்கிய இராச்சியத்தின் சர்வதேச அபிவிருத்தி நிறுவனம் இதற்கு நிதியளித்திருந்தது. இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் கௌரவ அன்ரூ பற்றிக் அவர்களும் இந்தக் குழுவுடன் இணைந்துகொண்டார். இந்த விஜயத்தில் வினைத்திறனான சட்டம், மேற்பார்வை மற்றும் நல்லாட்சி ஆகியவற்றை ஊக்குவிக்கும் நிறுவனக் கட்டமைப்புகள் மற்றும் நடைமுறைகள் குறித்துக் கவனம் செலுத்தப்பட்டது.
சட்டம் இயற்றப்பட்டதன் பின்னரான பரிசீலனை (Post-Legislative Scrutiny - PLS) அதாவது சட்டமியற்றுபவர்கள் சட்டங்கள் இயற்றிய பின்னர் அவற்றின் அமுலாக்கம் மற்றும் தாக்கத்தை முறையாக மீளாய்வு செய்வதன் மூலம் அவற்றின் நோக்கம் அடையப்பெற்றுள்ளதா என்பதையும் பிரஜைகளின் நலன்களுக்கு ஏற்றதாக உள்ளதா என்பதையும் உறுதி செய்யும் செயல்முறை பற்றி பிரதானமாக கலந்துரையாடப்பட்டது. இத்தகைய வழிமுறைகள் எவ்வாறு பொறுப்புக்கூறல் மற்றும் ஊழலுக்கு எதிரான முயற்சிகளை மேம்படுத்துகின்றன என்பன பற்றி ஆராயும் வகையில் இலங்கை தூதுக்குழுவினர் இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்கள், குழு அதிகாரிகள் மற்றும் மேற்பார்வை அமைப்புகளுடன் விரிவாகக் கலந்துரையாடினர்.
இந்த விஜயத்தின் போது, தூதுக்குழுவினர் பொதுச் சபையின் சபாநாயகர் ஓய்வுபெற்ற கௌரவ சர் லிண்ட்ஸே ஹோய்ல், வெளிநாட்டு, பொதுநலவாயம் மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தில் (FCDO) இந்து-பசுபிக் பிராந்தியத்திற்கான அமைச்சர் சீமா மல்ஹோட்ரா மற்றும் பொதுச் சபையின் நடைமுறைக் குழுவின் தலைவர் கேட் ஸ்மித் ஆகியோருடன் உயர்மட்டச் சந்திப்புகளை நடத்தினர். மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் கௌரவ அமைச்சரும், பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவருமான சரோஜா சவித்ரி போல்ராஜ், பாராளுமன்ற நடவடிக்கை மூலம் பாலின சமத்துவம் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தலை மேம்படுத்துவது குறித்த ஒரு விசேட கலந்துரையாடலுக்காக இங்கிலாந்து பிரதமரின் பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளுக்கான விசேட தூதுவர், கௌரவ பரோனஸ் ஹேரியட் ஹார்மன் அவர்களையும் சந்தித்தார்.
இலங்கை பாராளுமன்றத்தின் சட்ட மீளாய்வு செயல்முறைகளை மேம்படுத்துவதற்கான தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை ஆராயும் வகையில் லண்டன் பல்கலைக்கழகத்தின் மேம்பட்ட சட்ட ஆய்வுகள் நிறுவனத்தின் (Institute of Advanced Legal Studies) கல்விசார் நிபுணர்களையும் தூதுக்குழுவினர் சந்தித்தனர். WFD இன் பிரதம நிறைவேற்று அதிகாரி அந்தோனி ஸ்மித் மற்றும் WFD குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் யாஸ்மின் குரேஷி உட்பட ஜனநாயகத்திற்கான வெஸ்ட்மின்ஸ்டர் மன்றத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் குழு உறுப்பினர்களுடனும், இரண்டு நிறுவனங்களுக்கிடையேயான தற்போதைய ஒத்துழைப்புக்களை வலுப்படுத்துவது குறித்தும் இதன்போது மேலும் ஆலோசனைகள் நடத்தப்பட்டன.
இந்த விஜயம் இரு பாராளுமன்றங்களும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும், ஜனநாயக நிர்வாகம், நிறுவன ஒருமைப்பாடு மற்றும் சட்டத்தின் ஆட்சியை மேம்படுத்துவதற்கான அவர்களின் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தவும் ஒரு பெறுமதிவாய்ந்த வாய்ப்பை வழங்கியது. அத்துடன், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லாட்சியை முன்னேற்றுவதில் பாராளுமன்றங்களின் பிரதான பங்கைப் பரஸ்பரம் அங்கீகரிப்பதன் அடிப்படையில் அமைந்த இலங்கைக்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையிலான வலுவான மற்றும் நீடித்த நட்புறவை இது மேலும் சுட்டிக்காட்டுவதாக அமைந்தது.
2025-11-03
ஜனாதிபதி நிதியத்தால் செயல்படுத்தப்படும் 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை கெளரவிக்கும் ஊவா மாகாண நிகழ்ச்சித் திட்டம் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் நேற்று (02) பதுளை நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் 6 பாடப் பிரிவுகளின் கீழ் 1-10 இடங்களைப் பெற்ற 240 மாணவர்களுக்கு தலா 100,000 ரூபா வீதம் ஊக்குவிப்புக் கொடுப்பனவு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதற்காக ஜனாதிபதி நிதியத்தால் 24 மில்லியன் ரூபா செலவிடப்பட்டது. ஜனாதிபதியின் சிரேஸ்ட மேலதிகச் செயலாளரும் ஜனாதிபதி நிதியத்தின் செயலாளருமான ரோஷன் கமகே வரவேற்புரை நிகழ்த்தியதோடு நோக்கத்தையும் தெளிவுபடுத்தினார். நிகழ்வில் உரையாற்றிய கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன, தற்போதைய அரசாங்கம் கல்வியில் மிகப்பெரிய முதலீட்டைச் செய்து வருவதாகவும், ஒரு நாட்டில் கல்வியில் முதலீடு செய்வது போன்ற முக்கியமான மற்றும் மதிப்புமிக்க முதலீடு எதுவும் இல்லை என்றும் கூறினார். குழந்தைகள் பெறும் கல்வி மூலம் நாட்டிற்கு சேவை செய்தால், அந்த முதலீட்டின் பலனை நாடு அடைய முடியும் என்று சபாநாயகர் தெரிவித்தார் . அவர் மேலும் குறிப்பிடுகையில், கல்வி மூலம் கல்வி ஞானமுள்ளவர்களாக மாற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.ஒரு புத்திசாலி ஒருபோதும் அணுகுண்டை உருவாக்க மாட்டார்.கல்வி கற்றவனாகி இருந்து ஏமாற்றினால், அந்தக் கல்வியில் எந்த மதிப்பும் இல்லை.அந்த இடத்தில் ஞானம் இல்லை,கல்வி மட்டுமே உள்ளது. எனவே, உங்கள் கல்வி நாட்டிற்கு ஏற்ற வகையில் பயன்படுத்தப்பட்டால், உங்கள் பெற்றோர் உங்களை வளர்க்க வழங்கிய போசாக்கான சாப்பாட்டிற்கு நியாயம் கிடைக்கும் என்றார். நிகழ்வில் உரையாற்றிய பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் கௌரவ அமைச்சர் சமந்த வித்யாரத்ன, புதிய அரசாங்க எண்ணக்கருவின் படி பிள்ளைகளின் வாழ்க்கையை வலுப்படுத்த இதுபோன்ற பங்களிப்பைச் செய்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்று கூறினார். இந்த வாய்ப்பை வழங்கிய ஜனாதிபதி நிதியத்திற்கு நன்றி தெரிவிப்பதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். வறுமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும், இந்த நாட்டில் கல்வி பெறும் குழந்தைகளின் எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கும் ஜனாதிபதி நிதியம் நிறுவப்பட்டது. தற்போதைய அரசாங்கம் ஜனாதிபதி நிதியத்தை நெறிப்படுத்தும் நோக்கில் பிராந்திய மட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது. எனவே, தகுதியான பயனாளிகள் தற்போது நிதியத்தின் நன்மைகளைப் பெற்று வருவதாகவும் அமைச்சர் கூறினார். இதேவேளை, ஜனாதிபதி நிதியத்தை பிராந்திய மட்டத்திற்கு பரவலாக்குவது குறித்த விசேட ஒரு நாள் செயலமர்வு கடந்த 01ஆம் திகதி பதுளையில் நடைபெற்றது. இதில் ஊவா மாகாணத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலகங்களின் விடயத்திற்குப் பொறுப்பான அலுவலர்கள் பங்கேற்றனர். சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவன் ரணசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான சுதத் பலகல்ல, சட்டத்தரணி சரத் குமார, பதுளை மேயர் பந்துல ஹபுகொட, ஊவா மாகாண பிரதம செயலாளர் அனுஷா கோகுல பெர்னாண்டோ, ஊவா மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் குணரத்ன, பதுளை மாவட்ட செயலாளர் பண்டுக ஸ்ரீ பிரபாத் அபேரத்ன, மொனராகலை மாவட்ட செயலாளர் ஏ.ஜி. நிஷாந்த, அரச அதிகாரிகள் மற்றும் புலமைப்பரிசில் பெற்ற மாணவர்களின் பெற்றோர்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
2025-10-31
எதிர்க்கட்சி கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புத் தொடர்பில் ஆராயும் கூட்டமொன்று கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில், பொலிஸ்மா அதிபர் (சட்டத்தரணி) பிரியந்த வீரசூரிய அவர்களின் பங்கேற்புடன் இன்று (ஒக். 31) பாராளுமன்றத்தில் நடைபெற்றது. இதில் கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டதுடன், எதிர்க்கட்சியிலுள்ள சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கௌரவ சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தனர். பாதுகாப்பு வழங்குமாறு ஏற்கனவே கோரிக்கை விடுத்த பாராளுமன்ற உறுப்பினர்களின் அனைத்துக் கோரிக்கைகளுக்கும் நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்திருப்பதாக கௌரவ சபாநாயகர் இங்கு குறிப்பிட்டார். குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினர்கள் குறித்து அரசாங்கம் கொள்கை ரீதியில் தீர்மானம் எடுத்திருந்தாலும், அதற்கும் அப்பால் சென்று பாராளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகள் தொடர்பில் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும், இதற்கு அமைய சில பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏற்கனவே பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். அத்துடன், இன்றையதினம் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கை தொடர்பில் தேவையான நடவடிக்கை எடுக்குமாறும் கௌரவ சபாநாயகர் பொலிஸ்மா அதிபருக்குத் தெரியப்படுத்தினார். இங்கு கருத்துத் தெரிவித்த பொலிஸ்மா அதிபர், பாராளுமன்ற உறுப்பினர்களின் இந்தக் கோரிக்கை குறித்து கௌரவ சபாநாயகர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோருக்குத் தெரியப்படுத்துவதாகக் குறிப்பிட்டார். தமது அரசியல் செயற்பாடுகளை எவ்வித அச்சமும் இன்றி பாதுகாப்பான சூழலில் முன்னெடுத்துச் செல்வதற்கு சகல எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் முதலில் பாதுகாப்பை வழங்குமாறும், அதன் பின்னர் அச்சுறுத்தல் குறித்த மதிப்பாய்வை மேற்கொண்டு அதன் அடிப்படையில் எதிர்கால நடவடிக்கைகளை எடுக்குமாறும் இன்றை கூட்டத்தில் கலந்துகொண்ட எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இக்கூட்டத்தில் பாராளுமன்ற பணியாட் தொகுதியின் பிரதானியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன, படைக்கல சேவிதர் குஷான் ஜயரத்ன மற்றும் இலங்கை பொலிஸின் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
2025-10-31
தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு (திருத்த) சட்டமூலத்தை கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன 2025.10.30 அன்று சான்றுரைப்படுத்தினார். தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு (திருத்த) சட்டமூலம் 2025.10.21 ஆம் திகதி பாராளுமன்றத்தில் மூன்றாவது மதிப்பீடு செய்யப்பட்டு திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டமூலம் 2022 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டத்தை திருத்துவதற்கான ஒரு சட்டமூலமாகும். 2025 மார்ச் 27 ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, 2025 மே 08 ஆம் திகதி டிஜிட்டல் பொருளாதார அமைச்சரினால் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்ட இந்த திருத்தச் சட்டமூலத்தின் ஊடாக முதன்மைச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான திருத்தங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, இந்த சட்டமூலத்தின் ஊடாக முதன்மைச் சட்டவாக்கத்தின் 1, 12, 17, 18, 19, 20, 24, 25, 52, 53, 56 ஆம் பிரிவுகள் மற்றும் VI ஆம் அட்டவணை திருத்தப்படுவதுடன், 26 ஆம் பிரிவு மாற்றீடு செய்யப்படுவதுடன், முதன்மைச் சட்டவாக்கத்துக்கு 51அ எனும் புதிய பிரிவு உட்புகுத்தப்படுகின்றது. எதிர்காலத்தில் தரவுகள் தொடர்பில் ஏற்படும் நிலைமைகளுக்கு தயாராவதுடன், அதிகாரத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நிறுவனமொன்று இருப்பதன் முக்கியத்துவத்தை இனங்கண்டு, அரச மற்றும் தனியார் ஆகிய இரு தரப்புக்கும் டிஜிட்டல் மூலோபாயத்தை பின்பற்றுவதற்கு சமமாக ஆதரவளிப்பதற்கும், தரவு விடயப்பரப்பின் உரிமைகள் தொடர்பில் அர்த்தமுள்ளவகையில் செயற்படுவதற்கும் இந்தச் சட்டம் உதவும். அதற்கமைய, தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு (திருத்த) சட்டமூலம், 2025 ஆம் ஆண்டும் 22 ஆம் இலக்க தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு (திருத்த) சட்டமாக நடைமுறைக்கு வரும்.
2025-10-30
உலகை சிறந்த இடமாக மாற்றுவதற்கு பங்களிக்கக்கூடிய பிரஜைகளை உருவாக்கும் வகையில் கல்வி முறை மாற்றப்படும் - பிரதமர் தெரிவிப்பு சட்டத்தை மதிக்காத ஒருவர் ஒருபோதும் சட்டமியற்றுபவராக இருக்க முடியாது – பிரதி சபாநாயகர் சுட்டிக்காட்டு கண்டி மகாமாயா மகளிர் கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்தின் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி செயகலகம் அமைந்துள்ள பழைய பாராளுமன்றத்தின் சபா மண்டபத்தில் கௌரவ பிரதமர் (கலாநிதி) ஹரிணி அமரசூரிய மற்றும் கௌரவ பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி ஆகியோரின் தலைமையில் அண்மையில் (ஒக். 28) நடைபெற்றது. கண்டி மகாமாயா மகளிர் கல்லூரியின் மாணவர்களுக்கு பாராளுமன்ற செயற்பாடுகள் குறித்த நடைமுறை அனுபவத்தை வழங்கும் நோக்கில், கல்லூரியும் இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களமும் இணைந்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தன. இங்கு கருத்துத் தெரிவித்த கௌரவ பிரதமர் (கலாநிதி) ஹரிணி அமரசூரிய, கல்வி என்பது வெறும் தேர்வில் தேர்ச்சி பெறுவது மட்டுமல்ல எனக் குறிப்பிட்டார். உலகை சிறந்த இடமாக மாற்றுவதற்கு பங்களிக்கக்கூடிய பிரஜைகளை உருவாக்குவதற்கு மாணவர்களுக்கு சுமையாக இல்லாமல் இருக்கும் வகையில் கல்வி முறையைப் படிப்படியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். கண்டி மகாமாயா மகளிர் கல்லூரி மாணவர்கள் தங்கள் பிரச்சினைகளை பிரதமரிடம் நேரடியாக முன்வைப்பதற்கும் இங்கு வாய்ப்புக் கிடைத்தது. மாணவர்கள் மத்தியில் உரையாற்றி கௌரவ பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி, சட்டத்தை மதிக்கும் ஒருவர் ஒருபோதும் சட்டமியற்றுபவர் ஆக முடியாது என்று தெரிவித்தார். சட்டத்தை மதிக்கும் சமூகத்தை உருவாக்க அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். பல தசாப்தங்களாக நாட்டின் பாராளுமன்றமாகப் பயன்படுத்தப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க சபாமண்டபத்தில் இருந்து இந்நிகழ்ச்சியை நடத்த முடிந்தது மாணவர்களுக்கு ஒரு சிறப்பு மரியாதை என்றும் பிரதி சபாநாயகர் சுட்டிக்காட்டினார். நிகழ்வில் கலந்து கொண்ட பாராளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன, பாராளுமன்றத்தில் பெண் பிரதிநிதித்துவத்தின் வரலாறு மற்றும் பாராளுமன்றத்தின் வகிபாகம் குறித்து மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கினார். கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ. சர்வேஸ்வரன், சட்டம் குறித்து சிறப்புரையாற்றினார். மேலும், நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி செயலகத்தின் மக்கள் தொடர்பு பணிப்பாளர் நாயகம் தர்மசிறி கமகே மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் சுபாஷ் ரோஷன் கமகே ஆகியோர், பிராந்திய மட்டத்தில் ஜனாதிபதி நிதியிலிருந்து சலுகைகளைப் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் க்ளீன் ஸ்ரீலங்கா திட்டம் குறித்து மாணவர்களுக்குத் தெரிவித்தனர். மாணவர் பாராளுமன்ற ஆரம்ப அமர்வையடுத்து சபாநாயகர் மற்றும் உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து மாணவர் பாராளுமன்றத்தின் ஒவ்வொரு அமைச்சரும் தங்கள் அமைச்சுக்கள் மூலம் பாடசாலையில் செயல்படுத்த விரும்பும் திட்டங்கள் உள்ளிட்ட முன்மொழிவுகளை முன்வைத்ததையடுத்து பாராளுமன்ற அமர்வு ஒத்திவைக்கப்பட்டது. அத்துடன், இந்நிகழ்வில் பங்குபற்றிய மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் ஜனாதிபதி செயலகத்தின் உதவிப் பணிப்பாளர் மேஜர் நதீக தங்கொல்ல, மகாமாயா மகளிர் வித்தியாலயத்தின் அதிபர் சசிகலா சேனாதீர, பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் விருந்தினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks