2025-03-26
செய்தி வகைகள் : குழு செய்திகள்
பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான நிதி, கொள்கை வகுத்தல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டம் அண்மையில் கௌரவ தொழில் அமைச்சரும், பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான (கலாநிதி) அனில் ஜயந்த மற்றும் நிதி, கொள்கை வகுத்தல் கௌரவ பிரதியமைச்சர் (கலாநிதி) ஹர்ஷன சூரியப்பெரும ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.
கடந்த காலத்தில் கொள்கலன்களை விடுவிப்பதில் ஏற்பட்ட தாமதங்களின் போது இலங்கை சுங்கத்தினால் 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை குறித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் இதில் கேள்வியெழுப்பினர். இது அரசாங்கத்தின் தேவைக்காக மேற்கொள்ளப்பட்டதாக சிலர் அரசியல் ரீதியாக விமர்சனங்களை முன்வைத்து வருவதாகவும், இனவே இது பற்றி சரியான விளக்கம் அதிகாரிகளிடமிருந்து வழங்கப்பட வேண்டியது அவசியம் என்றும் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். இதற்குப் பதிலளித்த இலங்கை சுங்கத்தின் பணிப்பாளர் நாயகம், கொள்கலன்களை விடுவிக்கையில் இதுபோன்று நெருக்கடிகள் ஏற்படும் சந்தர்ப்பத்தில் பின்பற்றப்பட வேண்டிய தொழில்நுட்ப நடவடிக்கையாக இதற்கு முன்னர் நான்கு சந்தர்ப்பங்களில் இதுபோன்று கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். இது தொடர்பில் ஆராய்வதற்காக திறைசேரியின் உதவிச் செயலாளரின் தலைமையில் குழுவொன்று அமைக்கப்பட்டிருப்பதாகவும், இந்த விடயத்தைக் குழுவிடம் தெரிவித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். அரசாங்கத்துக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதால், இதன் உண்மை என்ன என்பது தெளிவுபடுத்தப்படுவதன் அவசியத்தை உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
நலன்புரி நன்மைகள் சபையின் ஊடாக அஸ்வெசும பயனாளிகள் தொடர்பில் இதற்கு முன்னர் சேகரிக்கப்பட்ட தகவல்களில் பிரச்சினை இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர். இதற்கான தகவல்களைத் திரட்டும்போது அரசாங்க அதிகாரிகள் அதற்கு தயக்கம் காண்பித்தமையால், பல்வேறு தரப்பினர் தரவுச் சேகரிப்பில் ஈடுபட்டதாகவும், இதனால் தரவு சேகரிப்பில் குறைபாடுகள் ஏற்பட்டதாகவும் நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் தெரிவித்தார். ஏறத்தாழ 8 இலட்சம் விண்ணப்பப் பத்திரங்கள் கிடைத்ததாகவும், இதில் ஏறத்தாழ 7 இலட்சம் விண்ணப்பங்கள் தொடர்பான கணக்கெடுப்பு பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இதன் அடிப்படையில் முன்னர் காணப்பட்ட குறைபாடுகளைப் பூர்த்திசெய்து எதிர்வரும் யூலை மாதத்தில் இந்த நடவடிக்கையைப் பூரணப்படுத்த முடியும் என்றும் தெரிவித்தார். உண்மையிலேயே சலுகைகளைப் பெறத் தகுதியுள்ள நபர்கள் இந்தக் கணக்கெடுப்பிலிருந்து விலக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதில் அவதானமாக இருக்க வேண்டும் எனப் பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர். பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் மாற்றங்களைச் செய்வது போன்ற சிறிய புதுப்பிப்புகளை பிரதேச செயலகங்கள் மூலம் மேற்கொள்வதற்கான அனுமதியை வழங்குவதன் அவசியத்தையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
அஸ்வெசும பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்படும் சந்தர்ப்பத்தில் பயனாளிகளுக்கு அது கிடைக்காமல் குடும்ப உறுப்பினரின் வங்கிக் கணக்கொன்றுக்கு வழங்கப்படுவதன் ஊடாகப் பிரச்சினையான நிலைமை ஏற்படுவதாகவும், குறித்த தொகையை தபால் நிலையங்களின் ஊடாக மாத்திரம் பெற்றுக் கொள்வதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த விடயம் தொடர்பில் அமைச்சுடன் கலந்துரையாடி உரிய நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பதாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் தெரிவித்தார்.
உண்ணாட்டரசிறைச் சட்டத்தைத் திருத்துவதன் மூலம் 15% சேவை ஏற்றுமதி வரியை அறவிடுவது தொடர்பில் உறுப்பினர்கள் கேள்வியெழுப்பினர். நியாயத்தன்மை கொள்கையைப் பயன்படுத்தி, அதிகபட்சமாக 15% என்ற எல்லைக்கு உட்பட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகப் பிரதியமைச்சர்கள் சுட்டிக்காட்டினர். அத்துடன், 15% என்ற இந்தத் தொகை ஈட்டப்படும் வருமானத்தின் மீது விதிக்கப்படுகின்றது என்ற தவறான கருத்து சமூகமயப்படுத்தப்பட்டிருப்பதாகவும், இது வருமானத்தில் அன்றி பெறப்படும் இலாபத்திற்கு விதிக்கப்படும் வரியென்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர். அத்துடன், ஒரு நாட்டில் வரி செலுத்தப்படும்போது இரட்டை வரிவிதிப்பு அல்லது மீண்டும் வரி விதிப்பைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் விளக்கமளித்தனர்.
அத்துடன், 36% அதிகபட்ச எல்லையின் கீழ் ஏனைய தனி நபர்கள் வருமான வரி செலுத்தும் பின்புலத்தில் இந்த வரி அறவீட்டு அதிகபட்ச எல்லை 15% ஆக வரி அறவிடப்படுகின்றது. இதனை முன்னர் மேற்கொண்ட 30% மதிப்பை 15% ஆகக் குறைத்திருப்பதாகவும் பிரதியமைச்சர்கள் சுட்டிக்காட்டினர். இதற்கமைய அனைவரையும் வரிவிதிப்புக்கு உட்படுத்தும் சமூக நீதியின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இந்த முடிவு, யாருக்கும் பாதகமாக இருக்காது என்பதை அவர்கள் வலியுறுத்தினர்.
2024 ஆம் ஆண்டில் மக்கள் தொகை மற்றும் வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் தற்போதைய நிலைமைகள் குறித்தும் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது. 40,000 அதகாரிகள் பயிற்சியின் பின்னர் இதில் ஈடுபடுத்தப்பட்டதாகவும், இந்த நடவடிக்கை இறுதிக்கட்டத்தை அடைந்திருப்பதாகவும் தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர். அனைத்து முடிவுகளும் தரவுகளின் அடிப்படையில் எடுக்கப்படுவதால், துல்லியமான தரவுகளைச் சேகரிக்க வேண்டியதன் அவசியத்தை உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
பழைய சட்டங்களுக்குப் பதிலாக ஒரு புதிய மக்கள் தொகை கணக்கெடுப்புச் சட்டவரைபொன்று தயாரிக்கப்பட்டிருப்பதாகவும், அதற்கு அமைய எதிர்காலத்தில் மிகவும் நம்பகமான தரவு சேகரிப்புக்கான ஒரு வழிமுறையை அறிமுகப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் அதிகாரிகள் குழுவிடம் தெரிவித்தனர்.
இக்கூட்டத்தில் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், நிதி, கொள்கை வகுத்தல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அலுவல்கள் அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன உள்ளிட்ட அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் அதிகாரிகள், பாராளுமன்ற சட்டவாக்க சேவைகள் பணிப்பாளரும் தொடர்பாடல் திணைக்கள பதில் பணிப்பாளருமான எம். ஜயலத் பெரேரா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
2025-06-02
Glocal Fair வேலைத்திட்டம் அமைச்சரவை அனுமதிக்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்டுள்ளது, வேலைத்திட்டத்தின் இடைநடுவில் அமைச்சரவை அனுமதிக்காக அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது 2013 ஆம் ஆண்டு சமுர்த்தி அதிகாரசபையுடன் இணைந்து செயல்படுத்தப்பட்ட ரடவிரு வீட்டுக் கடன் திட்டத்திற்காக கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படாததால், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு கிடைக்கவேண்டிய 100 மில்லியன் ரூபா இன்னும் கிடைக்கவில்லை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் ஒழுங்குறுத்தும் பணியிலிருந்து விலகியுள்ளது - கோப் குழு 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த செயற்றிட்டத்தில் சேர்க்கப்படாத இரண்டு திட்டங்களை செயற்படுத்துவதற்கு எந்தத் திட்டமிடலும் இன்றி ஒரு பில்லியனுக்கும் அதிகமான நிதியை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் செலவிட்டுள்ளமை அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப்) புலப்பட்டது. தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் 2024 ஆம் ஆண்டில் குடியகல்வு சங்கங்களின் 5,000 அங்கத்தவர்கள் கலந்துகொண்ட மாகாண மட்டத்திலான 3 கூட்டங்களுக்கான 'விகமனிக ஹரசர' நிகழ்ச்சித்தட்டத்துக்கு 63 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுக்கு சொந்தமான அனைத்து நிறுவனங்களினாலும் வழங்கப்படும் சேவைகளை, அந்த சேவைகளைப் பெறுவோர் தமது வசிக்கும் பகுதிகளையே பெறும் வகையில் நாடு பூராகவும் நடத்தப்பட்ட Glocal Fair வேலைத்திட்டத்துக்கு 1,259 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி செலவிடப்பட்டுள்ளதாக கோப் குழுவில் புலப்பட்டன. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் 2022 மற்றும் 2023 ஆம் நிதி ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகையை பரிசீலிப்பதற்கு அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஷாந்த சமரவீர தலைமையில் அண்மையில் (மே 23) கூடிய போதே இந்த விடயங்கள் புலப்பட்டன. Glocal Fair வேலைத்திட்டம் அமைச்சரவை அனுமதிக்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும், சம்பந்தப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தை வேலைத்திட்டத்தின் இடைநடுவில் அமைச்சரவை அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றும் குழுவின் தலைவர் இதன்போது சுட்டிக்காட்டினார். அத்துடன், இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்த வருடாந்த வரவுசெலவுத்திட்டத்தில் 2 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், 1,259 மில்லியன் ரூபாய் போன்ற பாரிய நிதி செலவு செய்யப்பட்டுள்ளதுடன், அவ்வாறான நிதியை செலவிடுவதன் நோக்கங்களை அடைய முடிந்துள்ளதா என இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர் அதிகாரிகளிடம் வினவினார். அத்துடன், Glocal Fair வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில், வர்த்தகக் கூடம் ஒன்றை ஒரு இலட்சத்து எழுபதாயிரம் ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்பட்டிருந்தாலும், பின்னர் 5 இலட்சம் ரூபாவுக்கு வர்த்தகக் கூடம் கொள்வனவு செய்யப்பட்டமை தொடர்பில் குழுவில் வினவப்பட்டது. எனினும் வினைத்திறனான வேலைத்திட்டங்களுக்கு பயன்படுத்த இருந்த நிதி நோக்கம் அற்ற முறையாகத் திட்டமிடப்படாத வேலைத்திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுவதால் பாரிய நிதி வீண்விரயம் செய்யப்பட்டுள்ளதாக குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். அத்துடன், 2013 ஆம் ஆண்டு சமுர்த்தி அதிகாரசபையுடன் இணைந்து செயல்படுத்தப்பட்ட ரடவிரு வீட்டுக் கடன் திட்டத்தை 5 வருடங்களுக்கு கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு அமைய செயற்படுத்தியில்லை என்றும், அதனால் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு கிடைக்கவேண்டிய 100 மில்லியன் ரூபா இன்னும் கிடைக்கவில்லை என்றும் குழுவில் வெளிப்பட்டது. என்னினும், இலங்கை சமுர்த்தி அதிகாரசபை தற்போது அந்தத் தொகையை வழங்குவதற்கு இணங்கியுள்ளதாக அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர். இந்த வீட்டுக் கடன் திட்டத்தின் மூலம் எத்தனை பேருக்கு சம்பந்தப்பட்ட கடன் வசதி வழங்கப்பட்டுள்ளது என்று குழு அதிகாரிகளிடம் வினவியதுடன், அத்தகைய தரவு இல்லை என்று அவர்கள் குழுவில் தெரிவித்தனர். அதற்கமைய, இந்த வேலைத்திட்டம் தொடர்பில் மீள் பரிசீலனை இடம்பெற்றில்லை எனத் தெரிவித்த குழுவின் தலைவர் ரடவிரு வீட்டுக் கடன் திட்டம் தொடர்பில் ஆரம்பம் முதல் தற்பொழுது வரையான தகவல்கள் அடங்கிய முழுமையான அறிக்கையொன்றை வழங்குமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். எவ்வாறாயினும், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் ஒழுங்குறுத்தும் பணியிலிருந்து விலகி செயற்பட்டுள்ளதாக குழுவின் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். இதுவரை 18 பில்லியனாக உள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் நிலையான வைப்பை மிகவும் வினைத்திறனாக பயன்படுத்துவதற்கு திட்டமொன்று தயாரிக்கப்படுவதன் தேவை குழுவினால் சுட்டிக்காட்டப்பட்டது. அத்துடன், செயற்பாட்டில் இல்லாத 2023 டிசம்பர் 31 ஆம் திகதி வரை 5.1 பில்லியன் நிலுவை காணப்படும் குவைட் இழப்பீடு நிதியம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை தொடர்பிலும் அதிகாரிகளிடம் குழு வினவியது. அதற்கமைய, அந்த நிதியத்தை பயன்படுத்தி வீட்டுப் பணிகளுக்காக வெளிநாட்டு செல்லும் பணியாளர்களுக்கான பயிற்சியை வழங்குவதற்கும், பணியாளர்களுக்கான ஓய்வூதியம் வழங்குவதற்கும் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர். அத்துடன், வேலைவாய்ப்பு முகவர்கள் வேலைவாய்ப்பு தேடும் தொழிலாளர்கள் ஊடாக செய்த நிதி மோசடி குறித்தும் கலந்துரையாடப்பட்டது. வேலைவாய்ப்புக்காக முகவர்கள் மூலம் அல்லாமல் வெளிநாடு செல்லும் ஒவ்வொரு பணியாளர்களும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்ய வேண்டும் எனவும் அதற்கான பதிவுக்கட்டணத்தை பணியகத்துக்கு செலுத்த வேண்டும் எனவும் குழுவில் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், முகவர்கள் மூலம் வெளிநாடு செல்லும் போதும் அவர்களுக்கான பதிவுக்கட்டணம் பணியகத்துக்கு செலுத்தப்பட வேண்டும் எனவும் அதில் 70% மீண்டும் சம்பந்தப்பட்ட முகவர் நிறுவனத்துக்கு செலுத்தப்படுவதாக குழுவில் புலப்பட்டது. எனினும், சுயமாக செல்லும் பணியாளர்களை, முகவர்கள் மூலமாக செல்லும் பணியாளர்களாகக் காண்பித்து மோசடியான முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நிதி மோசடி தொடர்பில் கண்டறிய உப குழுவொன்றை நியமிப்பதற்கு குழுவின் தலைவர் தீர்மானித்தார். இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) அனுராத ஜயரத்ன, முஜிபுர் ரஹுமான், எம்.கே.எம். அஸ்லம், (சட்டத்தரணி) நிலந்தி கொட்டஹச்சி, சமன்மலி குணசிங்க, மயில்வாகனம் ஜெகதீஸ்வரன், (வைத்தியர்) எஸ். பவானந்தராஜா, சுஜீவ திசாநாயக்க, ஜகத் மனுவர்ண, ருவன் மாபலகம, சுனில் ராஜபக்ஷ, தர்மபிரிய விஜேசிங்க, அசித நிரோஷன எகொட விதான, (வைத்தியர்) பத்மநாதன் சத்தியலிங்கம், திலின சமரகோன், சந்திம ஹெட்டியாராச்சி, தினேஷ் ஹேமன்த மற்றும் லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் கலந்துகொண்டனர்.
2025-05-28
உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவுசெய்யப்பட்டார். பாராளுமன்றத்தில் நேற்று (மே 27) இடம்பெற்ற பத்தாவது பாராளுமன்றத்திற்கான குறித்த துறைசார் மேற்பார்வைக் குழுவின் கூட்டத்தின் முதலாவது அமர்விலேயே இத்தெரிவு இடம்பெற்றது. இந்தத் துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பதவியை எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவருக்கு வழங்க ஏற்கனவே ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் இணங்கியிருந்தன. இதற்கமைய உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பதவிக்கு கௌரவ அஜித் பி பெரேராவின் பெயரை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார முன்மொழிந்ததுடன், அதனை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான அவர்கள் வழிமொழிந்தார். இதனைத் தொடர்ந்து ஜூன் 5ஆம் திகதி பாராளுமன்றத்தில் இரண்டாவது மதிப்பீட்டுக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (திருத்தச்) சட்டமூலம் கலந்துரையாடலுக்கு உட்படுத்தப்பட்டதுடன், இதில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள் சிலவற்றின் அதிகாரிகள் கலந்துகொண்டனர். தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவில் நீண்டகாலமாகக் காணப்படும் நடைமுறைச் சிக்கல்களுக்கான தீர்வுகளை உள்ளடக்கியதாக இந்தத் திருத்ததச் சட்டமூலம் முன்வைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் இங்கு குறிப்பிட்டதுடன் இதற்குக் குழுவின் அனுமதி வழங்கப்பட்டது. போக்குவரத்துத் துறையில் மேற்கொள்ளப்படவேண்டியுள்ள பிரதான மாற்றங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இக்கூட்டத்தில் துறைசார் மேற்பார்வைக் குழுவின் கௌரவ உறுப்பினர்களான மஞ்ஜுள சுரவீர ஆரச்சி, தனுஷ்க ரங்கனாத், அசித நிரோஷண எகொட வித்தான, ஷாந்த பத்ம குமார சுபசிங்ஹ ஆகியோரும் கலந்துகொண்டனர்.
2025-05-27
விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பரிணாமம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராகத் தேசிய மக்கள் சக்தியின் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) ஜனக சேனாரத்ன அவர்கள் தெரிவுசெய்யப்பட்டார். பத்தாவது பாராளுமன்றத்தின் விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பரிணாமம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் முதலாவது கூட்டம் இன்று (மே 27) பாராளுமன்றத்தில் இடம்பெற்றபோதே இத்தெரிவு இடம்பெற்றது. பத்தாவது பாராளுமன்றத்தில் அமைக்கப்படும் 7 துறைசார் மேற்பார்வைக் குழுக்களில் நான்கு குழுக்களின் தலைமைப் பதவி ஆளும் கட்சிக்கு வழங்கத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதற்கமைய குறித்த துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) ஜனக சேனாரத்ன அவர்களின் பெயரை, கௌரவ பிரதியமைச்சர் சதுரங்க அபேசிங்க முன்மொழிந்ததுடன், இதனைக் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹசாரா லியனகே வழிமொழிந்தார். அத்துடன், இத்துறைசார் குழுக் கூட்டத்தில் 03.06.2025ஆம் திகதி பாராளுமன்றத்தில் இரண்டாவது மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்படவுள்ள தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு (திருத்தச்) சட்டமூலம் குறித்துக் கலந்துரையாடப்பட்டு அதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதற்கமைய, ஜூன் 3 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு (திருத்தச்) சட்டமூலம் பாராளுமன்றத்தில் இரண்டாவது மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்படவுள்ளது. விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பரிணாமம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் உறுப்பினர்களான கௌரவ கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்ஹ, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான லசித் பாசன கமகே, சட்டத்தரணி ஹசாரா லியனகே மற்றும் சந்திம ஹெட்டியாராச்சி உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
2025-05-26
சட்டமியற்றும் செயல்முறையை மிகவும் திறனாக மேற்கொள்ளவும், நல்லாட்சியின் கொள்கைகளை நிலைநிறுத்தவும், பாராளுமன்றக் குழுக்கள் தேவையான அறிவு மற்றும் கருவிகளைக் கொண்டிருப்பது அவசியம் என சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் சட்டமியற்றும் செயல்முறை தொடர்பான தேவையான அறிவைப் பெறுவதற்கான வழிவகைகள் குறித்து துறைசார் மேற்பார்வைக் குழுக்களின் உறுப்பினர்களுக்கு அறிவூட்டும் வகையில், மே 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற இரண்டு நாள் கருத்தரங்கின் முதல் நாள் நிகழ்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே கௌரவ சபாநாயகர் இக்கருத்துக்களை தெரிவித்தார். இக்ருத்தரங்கு, சர்வதேச அமைதி மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கான மேக்ஸ் பிளாங்க் மன்றத்தின் (Max Planck Foundation) ஆதரவுடன் இலங்கை பாராளுமன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இங்கு உரையாற்றிய கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன, இந்தக் கருத்தரங்கு மூலம் பெறப்பட்ட அனுபவத்தைப் பயன்படுத்தி, துறைசார் மேற்பார்வைக் குழுக்களின் செயற்பாடுகளை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மிகவும் வெற்றிகரமாகச் செய்ய முடியும் எனத் தெரிவித்தார். இலங்கையில் ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்துவதில் தொடர்ந்து ஆதரவளித்து வரும் சர்வதேச அமைதி மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கான மேக்ஸ் பிளாங்க் மன்றத்திற்கு தனது நன்றியைத் தெரிவித்தா சபாநாயகர் சட்டத்தின் ஆட்சி மற்றும் நல்லாட்சியை மேம்படுத்துவதில் அவர்களின் அர்ப்பணிப்பு இலங்கை பாராளுமன்றத்தின் திறனைக் கட்டியெழுப்புவதற்கு உதவியுள்ளதாக மேலும் தெரிவித்தார். இந்தக் கருத்தரங்கில் ஜெனோவா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் என்ரிகோ அல்பனேசி [(Professor) Enrico Albanesi], மேக்ஸ் பிளாங்க் மன்றத்தின் ஆராய்ச்சி உதவியாளர் பிரவீன் சாக்கோ நினன் (Praveen Chacko Ninan) மற்றும் மேக்ஸ் பிளாங்க் மன்றத்தின் சட்ட ஆலோசகர் மெத்மினி விஜேசிங்க ஆகியோர் வளவாளர்களாகக் கலந்துகொண்டனர். கருத்தரங்கின் ஆரம்ப உரையை நிகழ்த்திய மேக்ஸ் பிளாங்க் மன்றத்தின் ஆராய்ச்சி உதவியாளர் பிரவீன் சாக்கோ நினன், சட்டமன்றப் பணிகளுக்காகக் காணப்படும் நுட்பங்கள் மற்றும் சட்டமூலங்களை எவ்வாறு மதிப்பாய்வு செய்து பகுப்பாய்வு செய்வது என்பது குறித்து உறுப்பினர்களுக்கு விளக்கினார். சட்டமூலங்களை மதிப்பிடுவதற்கான நடைமுறை நுட்பங்கள் மற்றும் தரநிலைகள் குறித்தும் அவர் உறுப்பினர்களுக்கு விளக்கினார். அத்துடன், சட்டத்தின் ஆட்சியுடன் இணைந்ததாக எவ்வாறு சட்டமூலங்களைப் பரிசீலிப்பது என்பது குறித்து பேராசிரியர் என்ரிகோ அல்பனேசி உறுப்பினர்களுக்கு விளக்கினார். அதற்காகக் காணப்படும் சட்ட விதிகள், பல்வேறு வழிக்காட்டல்கள் மற்றும் கோட்பாடுகளைக் கோடிட்டுக் காட்டி அவர் விளக்கமளித்தார். இந்த நிகழ்வில் கௌரவ எதிர்க்கட்சி முதற்கோலாசான் கயந்த கருணாதிலக, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற பணியாட்தொகுதியின் பிரதானியும் பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன, சட்டவாக்க சேவைகள் பணிப்பாளரும் தொடர்பாடல் திணைக்கள பதில் பணிப்பாளர் எம். ஜயலத் பெரேரா உள்ளிட்ட அதிகாரிகளும், பாராளுமன்ற சபை முதல்வர் அலுவலகம், அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் அலுவலகம் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் ஆகியவற்றின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.