E   |   සි   |  

2025-07-28

செய்தி வகைகள் : செய்திகள் 

பாராளுமன்ற நடைமுறைகளை வலுப்படுத்துவது தொடர்பில் புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற பணியாளர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட நிகழ்வு வெற்றிகரமாக அமைந்தது – பிரித்தானிய பாராளுமன்ற பிரதிநிதிகள் குழு சபாநாயகரிடம் தெரிவிப்பு

பாராளுமன்ற நடைமுறைகளைப் பலப்படுத்தும் நோக்கில் புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்றப் பணியாளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சித் திட்டம் வெற்றியளித்திருப்பதாக இதனை முன்னெடுத்த பிரித்தானிய பாராளுமன்ற பிரதிநிதிகள் குழு கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களிடம் தெரிவித்தது.

கடந்த 22ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை மூன்று நாட்கள் இடம்பெற்ற இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் பின்னர் இதன் முன்னேற்றம் தொடர்பில் சபாநாயகரைத் தெளிவுபடுத்தும் நோக்கில் இக்குழுவினர் அண்மையில் (ஜூலை 24) அவரைச் சந்தித்தபோதே இவ்வாறு கருத்துத் தெரிவித்தனர்.

இலங்கைப் பாராளுமன்றத்துடன் இணைந்து பாராளுமன்ற நடைமுறைகளைப் பலப்படுத்தும் நோக்கில், ஐக்கிய இராச்சியத்தின் மக்களவை, பொதுநலவாய பாராளுமன்ற ஒன்றியத்தின் ஐக்கிய இராச்சியக் கிளை (CPA UK) மற்றும் ஜனநாயகத்திற்கான வெஸ்மின்ஸ்டர் மன்றம் (WFD) ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இந்நிகழ்ச்சித் திட்டத்தை முன்னெடுத்தமைக்காக சபாநாயகர் தனது நன்றியைத் தெரிவித்தார்.

ஐக்கிய இராச்சியத்தின் மக்களை உறுப்பினரும், ஜனநாயகத்திற்கான வெஸ்மின்ஸ்டர் மன்றத்தின் தலைவருமான யஸ்மின் குரேஷி (Yasmin Qureshi) அவர்களின் தலைமையிலான இந்தத் தூதுக் குழுவில், ஐக்கிய இராச்சியத்தின் மக்களை உறுப்பினர்களான ஜெமி ஸ்டோன் (Jamie Stone), போலட் ஹமில்டன் (Paulette Hamilton), அன்ரூ ஸ்னோஃவ்டன் (Andrew Snowden) உள்ளிட்ட பிரதிநிதிகள் அங்கம் வகித்திருந்தனர். 

இந்த நிகழ்ச்சியின் போது, புதிய உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற அதிகாரிகள் தங்கள் அறிவு மற்றும் அனுபவங்களை பிரித்தானியப் பாராளுமன்றப் பிரதிநிதிகள் குழுவுடன் பகிர்ந்து கொண்டதன் ஊடாகப் பாராளுமன்ற நடைமுறைகள் பற்றிய புரிதலைப் பெற்றுக் கொள்ள வாய்ப்புக் கிடைத்தது.

புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்குப் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தக் கிடைத்த வாய்ப்பு மற்றும் உறுப்பினர்களின் வகிபாகத்தில் காணப்படும் சவால்கள், பாராளுமன்ற நடைமுறைகள் மற்றும் செயற்பாடுகள், பாராளுமன்ற பணியாளர்களின் வகிபாகம், குழுக்களின் விசாரணைச் செயற்பாடுகள், குழு அறிக்கைகளைத் தயாரித்தல், ஒழுக்கக் கோவை மற்றும் தரநிலைகள், வரவுசெலவுத்திட்டம் மற்றும் நிதிக் கட்டுப்பாடு, வளங்கள் மற்றும் டிஜிட்டல் கருவிகளின் ஊடான தொடர்பாடல், மக்களின் பங்கேற்பு மற்றும் நம்பிக்கையை மேம்படுத்துவதற்கான சமூக உறவுச் செயற்பாடுகளை எவ்வாறு பயன்படுத்தலாம் போன்றவை உள்ளிட்ட விடயங்களில் மூன்று நாட்களும் பல்வேறு மட்டத்திலான அனுபவப் பகிர்வுகளும், கருத்துப் பரிமாற்றங்களும் இடம்பெற்றன.

அத்துடன், இந்த நிகழ்ச்சியின் கீழ் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் தலைவர், கௌரவ அமைச்சர் சாவித்திரி போல்ராஜ் மற்றும் ஒன்றியத்தின் உறுப்பினர்களுடனும் பிரித்தானியக் குழுவினர் கருத்துப் பரிமாற்றங்களை மேற்கொண்டனர்.

அத்துடன், திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான ஒன்றியத்தின் இணைத் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராஜபுத்திரன் இராசமாணிக்கம் உள்ளிட்ட ஒன்றியத்தின் உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளுடனும் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதில், திறந்த பாராளுமன்ற செயற்பாடுகள் மற்றும் மக்களின் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கு இலங்கை திறந்த அரசாங்கப் பங்குடமையின் தீவிர உறுப்பினராக இருப்பதன் முக்கியத்துவத்தை இணைத் தலைவர் இங்கு நினைவுபடுத்தினார்.

இந்நிகழ்ச்சித் திட்டத்தில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, பதவியணித் தலைமையதிகாரியும் பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன, பிரதிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன மற்றும் பாராளுமன்ற திணைக்களங்களின் பிரதானிகள், அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.



தொடர்புடைய செய்திகள்

2025-07-28

கிழக்கு மாகாணத்தின் உயர்தரப் பரீட்சையில் திறமை செலுத்திய மாணவர்களை ஜனாதிபதி நிதியம் கௌரவித்தது

•    க.பொ.த உயர்தரப் பரீட்சையில் அனைத்துப் பாடப் பிரிவுகளிலும் திறமை  செலுத்திய   360 மாணவர்களுக்கு தலா ரூ. 100,000 வழங்கப்பட்டது ஜனாதிபதி நிதியத்தால் செயல்படுத்தப்படும் 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் கிழக்கு மாகாண நிகழ்வு  நேற்று (27) மட்டக்களப்பு சுவாமி விபுலானந்த நுண்கலை பீடத்தில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் உயர் பெறுபேறுகளைப் பெற்ற அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த 6 பாடப் பிரிவுகளின் கீழ் உயர் பெறுபேறுகளைப் பெற்ற  10 மாணவர்கள் வீதம் 360 மாணவர்களுக்கு தலா ரூ. 100,000 ஊக்குவிப்புக் கொடுப்பனவு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதற்காக ஜனாதிபதி நிதியம் 36 மில்லியன் ரூபா செலவிட்டுள்ளது. மாகாண மட்டத்தில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம் சமீபத்தில் வட மாகாணத்தில் தொடங்கப்பட்டது. அதன் இரண்டாவது திட்டம் தென் மாகாணத்திலும் மூன்றாவது திட்டம் கிழக்கு மாகாணத்திலும் செயல்படுத்தப்பட்டது. எதிர்காலத்தில் இந்தத் திட்டத்தை ஏனைய மாகாணங்களிலும் செயல்படுத்த ஜனாதிபதி நிதியம் நடவடிக்கை எடுத்து வருகிறது. நிகழ்வில் கருத்துத்தெரிவித்த சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, ஜனாதிபதி நிதியம் இதுவரை உதவி தேவையான யாரையும் கைவிடவில்லை என்றும், நாட்டின் பிள்ளைகளின்  கல்விக்கு விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றும் கூறினார். ஜனாதிபதி நிதியம் யாருடைய தனியார் நிதியமல்ல என்றும், அது நாட்டு மக்களின் பங்களிப்புகளுடன் இயக்கப்படும் நிதியம் என்றும் சுட்டிக்காட்டிய சபாநாயகர், அதன் நன்மைகள் நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காக மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்றும் கூறினார். கிழக்கு மாகாண ஆளுநர் ஜெயந்த லால் ரத்னசேகர மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் மற்றும் ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் ரோஷன் கமகே ஆகியோரும் இந்த நிகழ்வில் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர். இந்நிகழ்வில் வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபன், மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் ஜே.ஜே. முரளிதரன் மற்றும் ஜனாதிபதி நிதியத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், கிழக்கு மாகாண அரச அதிகாரிகள், பாதுகாப்புப் படைத் பிரதானிகள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.


2025-07-25

தேசபந்து தென்னகோன் அவர்களை பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து அகற்றுவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கான விவாதம் ஓகஸ்ட் 05ஆம் திகதி – பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானம்

இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலம் தொடர்பான இரண்டாவது மதிப்பீடு விவாதம் ஓகஸ்ட் 06ஆம் திகதி  பாராளுமன்றம் 05, 06  மற்றும் 07ஆம் திகதிகளில் கூடும்   பொலிஸ்மா அதிபர் டீ.எம்.டபிள்யூ.தேசபந்து தென்னக்கோன் அவர்களை 2002ஆம் ஆண்டின் 5ஆம் இலக்க அலுவலர்களை அகற்றுதல் (நடவடிக்கைமுறை) சட்டத்தின் 17ஆம் வாசகத்தின் பிரகாரம் அப்பதவியிலிருந்து அகற்றுவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றுவது தொடர்பான விவாதத்தை ஓகஸ்ட் மாதம் 05ஆம் திகதி நடத்துவதற்கு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.  கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நேற்று (ஜூலை 24) கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது. இதற்கமைய ஓகஸ்ட் மாதம் 05,06 மற்றும் 07ஆம் திகதிகளில் கூடவுள்ளது. ஓகஸ்ட் 08ஆம் திகதி வெள்ளிக்கிழமை போயா தினம் என்பதால் அன்று பாராளுமன்றம் கூடாது. அதற்கமைய, ஓகஸ்ட் 05ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணிவரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மு.ப 10.00 மணி முதல் மு.ப 11.00 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், மு.ப 11.00 மணி முதல் மு.ப 11.30 மணிவரையான நேரம் நிலையியற் கட்டளை 27(2)ன் கீழான கேள்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் மு.ப 11.30 மணி முதல் பி.ப 4.00 மணிவரை பொலிஸ்மா அதிபர் டீ.எம்.டபிள்யூ.தேசபந்து தென்னக்கோன் அவர்களை 2002ஆம் ஆண்டின் 5ஆம் இலக்க அலுவலர்களை அகற்றுதல் (நடவடிக்கைமுறை) சட்டத்தின் 17ஆம் வாசகத்தின் பிரகாரம் அப்பதவியிலிருந்து அகற்றுவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றுவது தொடர்பான விவாதத்திற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. பி.ப 4.00 மணிக்கு இதற்கான வாக்கெடுப்பை நடத்தவும் இங்கு தீர்மானிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மிகைப்பொருள் திணிப்பெதிர்ப்பு மற்றும் எதிரீட்டுத்தீர்வைகள் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள் மற்றும் நீதித்துறைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதி என்பவற்றை விவாதித்து நிறைவேற்றுவதற்கு பி.ப 4.15 மணி முதல் பி.ப 5.30 மணி வரையான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் பி.ப 5.30 மணி முதல் பி.ப 6.00 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பின் போதான பிரேரணை மீதான விவாதம் இடம்பெறவுள்ளது. அதற்கமைய, ஓகஸ்ட் 06ஆம் திகதி புதன்கிழமை மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணிவரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மு.ப 10.00 மணி முதல் மு.ப 10.30 மணிவரை பிரதமரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்காகவும், மு.ப 10.30 மணி முதல் மு.ப 11.00 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், மு.ப 11.00 மணி முதல் மு.ப 11.30 மணிவரையான நேரம் நிலையியற் கட்டளை 27(2)ன் கீழான கேள்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலம் (இரண்டாவது மதிப்பீடு), புகையிலை வரிச் சட்டத்தின் கீழான கட்டளை, தேயிலை (வரி மற்றும் ஏற்றுமதிக்கான கட்டுப்பாடு) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் குறித்த விவாதம் இடம்பெறவுள்ளது. இதன் பின்னர் பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரையான நேரம் ஒத்திவைப்பு நேரத்தின் போதான வினாக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. ஓகஸ்ட் 07ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணிவரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மு.ப 10.00 மணி முதல் மு.ப 11.00 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், மு.ப 11.00 மணி முதல் மு.ப 11.30 மணிவரையான நேரம் நிலையியற் கட்டளை 27(2)ன் கீழான கேள்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மு.ப 11.30 மணி முதல் நண்பகல் 12.00 மணிவரை நாணய மாற்றுண்டியல்கள் (திருத்தச்) சட்டமூலத்தை (இரண்டாவது மதிப்பீடு) விவாதம் இன்றி நிறைவேற்றவும் இங்கு தீர்மானிக்கப்பட்டது. இதன் பின்னர் நண்பகல் 12.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை அரசாங்கக் கட்சியினால் கொண்டுவரப்படும் நாட்டின் தற்போதைய பொருளாதாரம் மீதான ஒத்திவைப்பு விவாதத்திற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.


2025-07-25

பகிரங்க சேவை ஆணைக்குழுவிற்கான உறுப்பினர் ஒருவரை நியமிப்பதற்கு விண்ணப்பங்கள் கோரல்

பகிரங்க சேவை ஆணைக்குழுவில் உறுப்பினர் ஒருவரின் பதவி வெற்றிடத்தை நிரப்புவதற்கு தகைமைகளைக் கொண்டுள்ள தனிநபர்களிடமிருந்து  விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. இதற்கான விண்ணப்பங்களை இலங்கைப் பாராளுமன்ற இணையத்தளத்தில் ‘பகிரங்க சேவை ஆணைக்குழுவிற்கான உறுப்பினர் ஒருவரை நியமித்தல் (ப.சே.ஆ)’ என்ற துரித இணைப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்பத்திற்கேற்ப தயாரித்து 2025 ஆகஸ்ட் 01 ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்னர் அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை, அரசியலமைப்புப் பேரவைக்கான பதில் செயலாளர் நாயகம், அரசியலமைப்புப் பேரவை அலுவலகம், இலங்கைப் பாராளுமன்றம், ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டே, எனும் முகவரிக்கு பதிவுத் தபாலில் அல்லது constitutionalcouncil@parliament.lk எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் அல்லது மின்னஞ்சலின் விடயமாக ‘பகிரங்க சேவை ஆணைக்குழுவிற்கான உறுப்பினர் ஒருவரை நியமித்தல்’ எனக் குறிப்பிட வேண்டும்.இணைப்பு: https://www.parliament.lk/ta/secretariat/advertisements/view/334 


2025-07-24

ஜனநாயகத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பில் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் புதிய உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற பணியாளர்களுக்காக ஐக்கிய இராச்சிய தூதுக் குழுவின் பங்களிப்புடன் செயலமர்வு

ஜனநாயகத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில் ஐக்கிய இராச்சியத்தின் மக்களவை, பொதுநலவாய பாராளுமன்ற ஒன்றியத்தின் ஐக்கிய இராச்சியக் கிளை (CPA UK) மற்றும் ஜனநாயகத்திற்கான வெஸ்மின்ஸ்டர் மன்றம் (WFD) ஆகியவற்றின் ஒத்துழைப்புடன், புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற பணியாளர்களைத் தெளிவுபடுத்தும் நிகழ்ச்சித்திட்டம் கடந்த ஜூலை 22ஆம் திகதி கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. ஜனநாயகத்திற்கான வெஸ்மின்ஸ்டர் மன்றத்தின் தலைவரும், ஐக்கிய இராச்சியத்தின் பாராளுமன்ற உறுப்பினருமான யஸ்மின் குரேஷி (Yasmin Qureshi) உள்ளிட்ட தூதுக் குழுவினர்,  இலங்கை-ஐக்கிய இராச்சிய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவர் கௌரவ அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார, இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ரூ பற்ரிக் (Andrew Patrick), பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, பதவியணித் தலைமை அதிகாரியும் பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டனர்.  ஐக்கிய இராச்சியத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால உறவை நினைவு கூர்ந்த கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இரு நாடுகளுக்கும் இடையில் வலுவான ஜனநாயக உறவுகளை உருவாக்குவதில் இத்தகைய திட்டங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். பாராளுமன்ற நடைமுறைகள் மற்றும் சட்டமன்றத்தின் செயற்பாடுகள், வகிபாகம் மற்றும் தரநிலைகள், வரவுசெலவுத்திட்ட மேற்பார்வை, பொது மக்களின் ஈடுபாடு தொடர்பில் கவனம் செலுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சித்திட்டம் அமையும் என்றும் இரு நாடுகளைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவைப் பகிர்ந்து கொள்ளவும் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவும் ஒரு மதிப்புமிக்க வாய்ப்பாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இங்கு கருத்துத் தெரிவித்த ஜனநாயகத்திற்கான வெஸ்மின்ஸ்டர் மன்றத்தின் தலைவரும், ஐக்கிய இராச்சியத்தின் பாராளுமன்ற உறுப்பினருமான யஸ்மின் குரேஷி, பொதுநலவாய பாராளுமன்ற ஒன்றியத்தின் ஐக்கிய இராச்சியக் கிளை பல ஆண்டுகளாக இலங்கைப் பாராளுமன்றத்துடன் மிக நெருக்கமாக பணியாற்றி வருவதாகவும், இந்தத் திட்டம் ஜனநாயகத்தின் மதிப்புகளை நன்கு புரிந்துகொள்ள உதவும் என்றும் கூறினார். இந்தத் திட்டம் சட்டவாக்கங்களை வலுப்படுத்துவதற்கும், தொழில்முறை வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும், பரஸ்பர புரிந்துணர்வை விரிவுபடுத்துவதற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என இங்கு உரையாற்றிய பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். இந்த நிகழ்வுக்கு முன்னர் ஐக்கிய இராச்சியத்தின் தூதுக் குழுவினர் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர். இச்சந்திப்பில்  பாராளுமன்றத்தின் நடைமுறைகள் மற்றும் செயற்பாடுகள் குறித்து தூதுக் குழுவிற்கு சபாநாயகர் விளக்கமளித்தார்.புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற பணியாளர்களைத் தெளிவுபடுத்தும் இந்த நிகழ்ச்சித்திட்டம் 24ஆம் திகதி வரை தொடரும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks