பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2025-09-10
செய்தி வகைகள் : செய்திகள்
“சனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்)” சட்டமூலம் 150 மேலதிக வாக்குகளால் இன்று (செப். 10) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இன்று மு.ப 11.30 மணி முதல் குறித்த சட்டமூலம் தொடர்பான இரண்டாவது மதிப்பீடு விவாதம் இடம்பெற்றதுடன், பி.ப 3.30 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. வாக்கெடுப்பில் சட்டமூலத்திற்கு ஆதரவாக 151 வாக்குகளும், எதிராக ஒரு வாக்கும் பதிவாகின.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரினால் 2025 ஓகஸ்ட் 07ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்தச் சட்டமூலம் 1986ஆம் ஆண்டின் 4ஆம் இலக்க சனாதிபதிகளின் உரித்துரிமைகள் சட்டத்தை நீக்குவதற்கான சட்டமூலமாகும்.
நீக்கப்பட்ட சட்டத்தின் 2 ஆம் பிரிவின் ஏற்பாடுகளின் நியதிகளின்படி முன்னாள் சனாதிபதிக்கு அல்லது முன்னாள் சனாதிபதியின் கைம்பெண்ணுக்கு வழங்கப்பட்ட ஏதேனும் வதிவிடம் அல்லது செலுத்தப்பட்ட மாதாந்த படி, நீக்கப்பட்ட சட்டத்தின் 3 ஆம் பிரிவின் ஏற்பாடுகளின் நியதிகளின்படி முன்னாள் சனாதிபதிக்கு அல்லது முன்னாள் சனாதிபதியின் கைம்பெண்ணுக்கு செலுத்தப்பட்ட மாதாந்த செயலகப் படித்தொகை, வழங்கப்பட்ட அலுவலக போக்குவரத்து மற்றும் அத்தகைய வேறு வசதிகள், நீக்கப்பட்ட சட்டத்தின் 4 ஆம் பிரிவின் ஏற்பாடுகளின் நியதிகளின்படி முன்னாள் சனாதிபதியின் கைம்பெண்ணுக்கு செலுத்தப்பட்ட மாதாந்த ஓய்வூதியம் என்பன இரத்துச் செய்யப்படும்.
அத்துடன், “சனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்)” சட்டமூலத்தில் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இன்று பிற்பகல் தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார். இதற்கு அமைய குறித்த சட்டமூலம் 2025ஆம் ஆண்டின் 18ஆம் இலக்க சனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்) சட்டமாக நடைமுறைக்குவரும்.
2025-09-12
பிலியந்தலை மத்திய கல்லூரி மாணவர் பாராளுமன்ற கன்னி அமர்வு பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர அவர்களின் தலைமையில் கடந்த 04ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தின் பழைய பாராளுமன்ற சபா மண்டபத்தில் இடம்பெற்றது. பிலியந்தலை மத்திய கல்லூரி மாணவர்களுக்கு பாராளுமன்ற செயற்பாடுகள் குறித்த நடைமுறை அனுபவத்தை வழங்கும் நோக்கில், கல்லூரியும் இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களமும் இணைந்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தன. இதில் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் சுபாஷ் ரொஷான் கமகே, ஜனாதிபதியின் பொதுமக்கள் தொடர்பாடல் பணிப்பாளர் நாயகம் தர்மசிறி கமகே, பாராளுமன்ற சட்டவாக்க சேவைகள் பணிப்பாளரும், தொடர்பாடல் பதில் பணிப்பாளருமான எம்.ஜயலத் பெரேரா உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில், பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர, பாராளுமன்ற செயல்முறை மற்றும் அதன் பங்கை விளக்கியதுடன், பாராளுமன்றம் எவ்வாறு செயற்படுகின்றது என்பது பற்றிய விபரங்களையும் மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார். மேலும், பாராளுமன்ற சட்டவாக்க சேவைகள் பணிப்பாளரும், தொடர்பாடல் பதில் பணிப்பாளருமான எம். ஜயலத் பெரேரா தனது கருத்துக்களை முன்வைத்ததுடன், பாராளுமன்றத்தின் வகிபாகம் மற்றும் அமைப்புக் குறித்து மாணவர்களைத் தெளிவுபடுத்தினார். மாணவர் பாராளுமன்ற ஆரம்ப அமர்வையடுத்து சபாநாயகர் மற்றும் உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து மாணவர் பாராளுமன்றத்தின் ஒவ்வொரு அமைச்சரும் தங்கள் அமைச்சுக்கள் மூலம் பாடசாலையில் செயல்படுத்த விரும்பும் திட்டங்கள் உள்ளிட்ட முன்மொழிவுகளை முன்வைத்தனர். அத்துடன், இந்நிகழ்வில் பங்குபற்றிய மாணவர்களுக்கு பாராளுமன்ற செயலாளர் நாயகம் உள்ளிட்ட அதிதிகளால் சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் ஜனாதிபதி செயலகத்தின் உதவிப் பணிப்பாளர் மேஜர் நதீக தங்கொல்ல, பிலியந்தலை மத்திய கல்லூரியின் அதிபர் எச்.மகேஷிகா விஜேவர்தன, பாடசாலையின் ஆசிரியர்கள், பெற்றோர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
2025-09-12
வரவுசெலவுத்திட்டத்தின் முதலாவது வாசிப்பு செப்டெம்பர் 26 வரவுசெலவுத்திட்ட உரை நவம்பர் 7 2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீட்டை (வரவுசெலவுத்திட்ட உரை) 2025 நவம்பர் 07ஆம் திகதி நடத்துவதற்கும், அதனைத் தொடர்ந்து நவம்பர் 08ஆம் திகதி முதல் டிசம்பர் 05ஆம் திகதி வரை விவாதத்தை நடத்துவதற்கும் இன்று (செப். 11) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டம் இன்று (11) கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதற்கமைய ஒதுக்கீட்டுச் சட்டமூலம் முதலாவது மதிப்பீட்டுக்காக செப்டெம்பர் 26ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ ஜனாதிபதி அவர்களினால் 2025 நவம்பர் 7ஆம் திகதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இரண்டாவது மதிப்பீட்டுக்காக (வரவுசெலவுத்திட்ட உரை) பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும். அதனைத் தொடர்ந்து நவம்பர் 8ஆம் திகதி முதல் நவம்பர் 14ஆம் திகதி வரை 6 நாட்கள் இரண்டாவது மதிப்பீடு விவாதத்தை நடத்துவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது. இதற்கு அமைய நவம்பர் 14ஆம் திகதி பி.ப 6.00 மணிக்கு இரண்டாவது மதிப்பீடுக்கான வாக்கெடுப்பு நடத்தப்படும். இதன் பின்னர் நவம்பர் 15ஆம் திகதி முதல் டிசம்பர் 5ஆம் திகதி வரை 17 நாட்கள் குழுநிலை விவாதத்தை நடத்துவதற்கும், டிசம்பர் 5ஆம் திகதி பி.ப 6.00 மணிக்கு மூன்றாவது மதிப்பீடுக்கான வாக்கெடுப்பை நடத்துவதற்கும் இணக்கம் காணப்பட்டது. இந்தக் காலப்பகுதியில் அரசாங்க விடுமுறைகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் தவிர சனிக்கிழமை உள்ளிட்ட ஏனைய அனைத்து நாட்களிலும் வரவுசெலவுத்திட்ட விவாதம் இடம்பெறும். குழுநிலை விவாதம் நடைபெறும் காலப்பகுதியில் திங்கட்கிழமைகளில் மு.ப 9.30 மணிக்கும், ஏனைய நாட்களில் மு.ப 9.00 மணிக்கும் பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்குத் தீர்மானிக்கப்பட்டது. இதற்கு அமைய இக்காலப் பகுதியில் நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு மேலதிகமாக வாய்மூல விடைக்கான ஐந்து கேள்விகள் மற்றும் நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான கேள்வி ஒன்றுக்காகவும் நேரத்தை ஒதுக்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இக்காலப் பகுதியில் பி.ப 6.00 மணிவரையும் வரவுசெலவுத்திட்ட விவாதத்தை நடத்துவதற்கும், வாக்கெடுப்பு நடத்தப்படும் தினங்கள் தவிர்ந்த ஏனைய தினங்களில் பி.ப 6.00 மணி முதல் 6.30 மணிவரையான காலப்பகுதியை ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிக்கு 50:50 என்ற அடிப்படையில் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணைகளுக்காக ஒதுக்குவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
2025-09-12
பொலன்னறுவை சிறுநீரக மருத்துவமனை சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவின் காரணமாக இலங்கைக்குக் கிடைத்த மதிப்பு மிக்க பரிசு என கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தெரிவித்தார். சபாநாயகர் மற்றும் இலங்கைக்கான சீனத் தூதுவர் ஆகியோரின் தலைமையில் சீன அரசாங்கத்தின் உதவியுடன் பொலன்னறுவை மாவட்டத்தில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வாழ்வாதார மேம்பாட்டு உபகரணங்களை வழங்கும் நிகழ்வு பொலன்னறுவை நகரசபை வளாகத்தில் அண்மையில் (செப். 5) நடைபெற்றது. இதில் உரையாற்றும்போதே சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்வில், பயனாளிகளுக்கு சுமார் பதினைந்து மில்லியன் ரூபாய் பெறுமதியான தையல் இயந்திரங்கள் மற்றும் தண்ணீர் மோட்டார்கள் வழங்கப்பட்டன. இதன்போது, சீன அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நிர்மானிக்கப்பட்ட பொலன்னறுவை சிறப்பு தேசிய சிறுநீரக மருத்துவமனையின் சுகாதார நடவடிக்கைகள் மற்றும் எதிர்கால வளர்ச்சி நடவடிக்கைகள் குறித்து விசாரிக்க சீனத் தூதர் நடவடிக்கை எடுத்தார். சீன அரசாங்கம் இலங்கைக்கு அளித்த ஆதரவையும் சீன-இலங்கை நட்பு மருத்துவமனைக்கு அளித்த பங்களிப்பையும் பாராட்டி சீனத் தூதுவருக்குச் சிறப்பு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சகா விஜேமுனி, வீடமைப்பு பிரதி அமைச்சர் டி.பி. சரத், பொலன்னறுவை மாவட்ட செயலாளர் சுஜந்த ஏக்கநாயக்க, பொலன்னறுவை சீன-இலங்கை நட்புறவு தேசிய சிறுநீரக மருத்துவமனையின் பணிப்பாளர் வைத்தியர் தில்கா சமரசிங்க மற்றும் சீன பிரதிநிதிகள் உட்பட சுகாதார அதிகாரிகள் குழுவும் கலந்து கொண்டனர்.
2025-09-10
பாராளுமன்ற உறுப்பினர்கள் நாட்டின் உரிமையாளர்கள் அல்ல, மாறாக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தற்காலிகப் பொறுப்பாளர்கள் என்பதால் அவர்களும் நாட்டின் சட்டத்திற்குக் கட்டுப்பட்டவர்கள் என கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தெரிவித்தார். கொழும்பு ஆனந்தா கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் அண்மையில் (செப். 03) பாராளுமன்றத்தின் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் கொழும்பு ஆனந்தா கல்லூரி ஓல்கட் மண்டபத்தில் நடைபெற்ற போதே அவர் இக்கருத்துக்களை தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த சபாநாயகர், அரசியல் பாதகமான விடயம் அல்ல என்றும், அரசியல் மூலம் மக்களின் இறைமையை பிரதிநிதித்துவப்படுத்தி, மக்களுக்காகவும், சமூகத்தின் முன்னேற்றத்திற்காகவும் தலைமைத்துவம் வழங்குவதாகவும் குறிப்பிட்டார். எனவே, எதிர்கால இலங்கைக்கு அறிவு, புத்திசாலித்தனம் மற்றும் நல்ல மனப்பான்மைகளை வளர்த்துக் கொண்ட தலைவர்கள் மேலும் தேவைப்படுவதால், மாணவர் பாராளுமன்றத்தை தமது அறிவு, திறன்கள் மற்றும் மனப்பான்மைகளை வளர்த்துக் கொள்வதற்கான சிறந்த வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்ட சபாநாயகர், அனைவரும் நேர்மையான மற்றும் சட்டத்திற்குக் கட்டுப்பட்ட பிரஜைகளாக மாறுவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார். மேலும், இந்நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்றத்தின் சட்டவாக்க சேவைகள் பணிப்பாளரும் தொடர்பாடல் திணைக்கள பதில் பணிப்பாளருமான எம். ஜயலத் பெரேரா, மாணவர்களின் ஆளுமை வளர்ச்சிக்கும், திறன்களை மேம்படுத்துவதற்கும் மாணவர் பாராளுமன்றங்கள் ஒரு சிறந்த பிரதிபலிப்பு என்று சுட்டிக்காட்டினார். அத்துடன், சட்டவாக்க செயன்முறை மற்றும் பணிகள் தொடர்பில் மாணவர்களுக்கு அவர் விளக்கமளித்தார். மாணவர்களின் தலைமைத்துவத் திறன்களை வளர்ப்பதில் இந்த வேலைத்திட்டம் மிகவும் முக்கியமான பங்கை வகிக்கிறது என்றும், மாணவர்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்பிற்காக தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் கொழும்பு ஆனந்தா கல்லூரியின் அதிபர் டி.எம்.சி.பி. திசாநாயக்க திலகரத்ன அவர்கள் கருத்துத் தெரிவித்தார் அதன் பின்னர், மாணவர் பாராளுமன்றத்தின் முதல் அமர்வு ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து சபாநாயகர் நியமிக்கப்பட்டு பதவியேற்றார், அத்துடன் மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களும் பதவியேற்றனர். அதனைத் தொடர்ந்து, மாணவர் பாராளுமன்ற பிரதமர் மற்றும் ஏனைய அமைச்சர்கள் கருத்துத் தெரிவித்ததன் பின்னர், மாணவர் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks