E   |   සි   |  

பத்தாவது பாராளுமன்றத்திற்கான பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் செயற்திட்டத்தை தயாரிப்பது குறித்து ஒன்றியம் கலந்துரையாடல்

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் அதன் தலைவர் கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் தலைமையில் நேற்று (21) பாராளுமன்றத்தில் கூடியது. இக்கூட்டத்தில் ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சமிந்திரானி கிரிஎல்லே மற்றும் சமன்மலி குணசிங்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இதன்போது பத்தாவது பாராளுமன்றத்திற்கான பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் செயற்திட்டத்தை தயாரிப்பது குறித்து ஒன்றியத்தின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. அதற்கமைய, ஒன்பதாவது பாராளுமன்றத்தின் செயற்திட்டம் மற்றும் பத்தாவது பாராளுமன்றத்துக்காக முன்வைக்கப்பட்டுள்ள 7 விடயங்களை அடிப்படையாகக் கொண்டு செயற்திட்டத்தை தயாரிப்பதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

பெண்களின் மேம்பாடு மற்றும் வலுப்படுத்தல் தொடர்பில் ஒன்பதாவது பாராளுமன்றத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரோஹிணி விஜேரத்ன முன்வைத்த திருத்தப்பட வேண்டிய விடயங்கள் அடங்கிய சட்டமூலத்தை மீண்டும் முன்வைக்கவும் இங்கு முன்மொழியப்பட்டது. அத்துடன், பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் கௌரவ சுதர்ஷினி பர்னாந்துரபுள்ளே முன்வைத்த தனிநபர் சட்டமூலத்துக்கான திருத்தங்களை மேலும் ஆராய்ந்து, அதற்குப் புதிய முன்மொழிவுகளை உள்வாங்கி மீண்டும் பாராளுமன்றத்துக்கு முன்வைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. அந்தத் திருத்தங்களுக்கு ஒன்றியத்தின் உறுப்பினர்களினதும் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளை முன்வைக்குமாறும் ஒன்றியத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன், பெண்களை வலுப்படுத்தும் நோக்கில் பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் மேற்கொள்ளக்கூடிய அனைத்து செயற்பாடுகளையும் மேற்கொள்ள பத்தாவது பாராளுமன்றத்தில் நடவடிக்கை எடுப்பதாக ஒன்றியத்தின் தலைவர் இதன்போது தெரிவித்தார்.

அத்துடன், 2025 ஆம் ஆண்டு மகளிர் தினத்தை கொண்டாடுவதற்கான வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (24) கூடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான தீப்தி வாசலகே, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்ஹ, ஒஷானி உமங்கா, (கலாநிதி) கெளஷல்யா ஆரியரத்ன, கிருஷ்ணன் கலைச்செல்வி, (சட்டத்தரணி) கீதா ஹேரத், (சட்டத்தரணி) ஹிருனி விஜேசிங்ஹ, (சட்டத்தரணி) அனுஸ்கா திலகரத்ன, (சட்டத்தரணி) சாகரிகா அதாவுத, எம்.ஏ.சீ.எஸ். சத்துரி கங்கானி, நிலூஷா லக்மாலி கமகே, ஏ.எம்.எம்.எம். ரத்வத்தே, (சட்டத்தரணி) நிலந்தி கொட்டஹச்சி, (சட்டத்தரணி) ஹசாரா லியனகே, அம்பிகா சாமிவெல், (சட்டத்தரணி) லக்மாலி ஹேமசந்திர ஆகியோர் கலந்துகொண்டனர்.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks