பார்க்க

E   |   සි   |  

KAS (Konrad Adenauer Stiftung) மன்றத்தின் தலைமையில் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய இளம் அரசியல் தலைவர்கள், பெண் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒன்றியத்துடன் சந்திப்பு

தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த இளம் அரசியல் தலைவர்கள், அவர்களின் பணியாள் உறுப்பினர்கள் மற்றும் KAS (Konrad Adenauer Stiftung) மன்றத்தின் பிரதிநிதிகள் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒன்றியத்தின் பிரதிநிதிகளைச் சந்தித்ததுடன், பாராளுமன்றத்தையும் பார்வையிட்டனர்.

கௌரவ மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒன்றியத்தின் பிரதிநிதிகளுக்கும், தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியவைச் சேர்ந்த இளம் அரசியல் தலைவர்களுக்கும் இடையில் கடந்த 07ஆம் திகதி சந்திப்பு இடம்பெற்றது.

பல்வேறு அரசியல், இன, மதப் பின்னணியிலிருந்து வந்த பெண்களால் பத்தாவது பாராளுமன்றத்தில் அதிகளவான பெண் பிரதிநிதித்துவம் ஏற்படுத்தப்பட்டிருப்பதாக இங்கு கருத்துத் தெரிவித்த ஒன்றியத்தின் தலைவர் சுட்டிக்காட்டினார். மேலும், பெண்களை வலுப்படுத்தல், அவர்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் தொந்தரவுகளை ஒழித்தல், பாலின சமத்துவத்தை முன்னிறுத்துதல், சட்டமியற்றல் மற்றும் கொள்கைத் தயாரிப்புக்கள் குறித்து ஒன்றியம் அதிக கவனம் செலுத்துவதாக அவர் எடுத்துக் கூறினார்.

அரசியலில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பது, அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது, சுகாதாரம் மற்றும் கல்வி தொடர்பான விடயங்களில் அவர்களுக்கான ஒத்துழைப்புக்களை வழங்குவது, பின்தங்கிய பெண்களுக்கு ஆதரவு அளிப்பது மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி தொழிற் பயிற்சிகளை வழங்குவதில் ஒன்றியத்தின் முக்கியத்துவத்தையும் தலைவர் மேலும் விளக்கினார்.

ஒன்றியத்தின் ஏனைய உறுப்பினர்களும் தமது கருத்துக்களைப் பரிமாறினர். நட்புரீதியில் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து இளம் அரசியல் தலைவர்கள் பாராளுமன்றத்தைப் பார்வையிட்டதுடன், சபை அமர்வுகளையும் அவதானித்தனர்.

இச்சந்திப்பில் ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர் கௌரவ சமன்மலி குணசிங்க கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்ன, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, சதுரி கங்கானி, சட்டத்தரணி நிலூஷா லக்மாலி கமகே, சட்டத்தரணி துஷாரி ஜயசிங்க, சட்டத்தரணி அனுஷ்கா திலகரத்ன, சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர, கிருஷ்ணன் கலைச்செல்வி, தீப்தி வாசலகே, ஒஷானி உமங்கா, அம்பிகா சாமிவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks