E   |   සි   |  

பெண்களுக்கான தேசிய ஆணைக்குழுவை நியமிப்பது தொட

எதிர்வரும் தினங்களில் அமைச்சரவைக்கும் அதனையடுத்து பாராளுமன்றத்துக்கு முன்வைக்கப்படவுள்ள பெண்களுக்கான தேசிய ஆணைக்குழுவை நியமிப்பதற்கான சட்டமூலம் மற்றும் பாலின சமத்துவம் தொடர்பான சட்டமூலம் தொடர்பில் பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்துக்கும் ஜனாதிபதி கௌரவ ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் அண்மையில் (06) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.

பெண்களுக்கான தேசிய ஆணைக்குழுவின் அதிகாரங்கள், பணிகள் மற்றும் அங்கத்தவர்களை நியமிப்பது தொடர்பிலும், பாலின சமத்துவம் தொடர்பான சட்டமூலத்தின் உள்ளடக்கம் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. இந்தச் சட்டமூலங்களை விரைவில் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதற்காக தனது பூரண ஒத்துழைப்பை வழங்குவதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

இந்நாட்டில் அரசியல் செயன்முறையில் பெண்கள் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதன் தேவை தொடர்பில் பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் சுட்டிக்காட்டியது. விசேடமாக, பாராளுமன்றத் தேர்தலுக்காக அந்தந்த கட்சிகள் தயாரிக்கும் தேசியப் பட்டியல்களில் 50% பெண் பிரதிநிதித்துவத்தை உள்ளடக்குவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இது தொடர்பில் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாட வேண்டும் என ஜனாதிபதி பரிந்துரைத்தார்.

இதற்கு மேலதிகமாக இந்நாட்டில் செயற்படும் ஆணைக்குழுக்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை கட்டாயமாக்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. அரச நிறுவனங்களுடன் இணைந்த பகல்நேர பராமரிப்பு நிலையங்கள் மற்றும் தாய்ப்பால் ஊட்டும் நிலையங்கள் ஆரம்பிப்பதன் மூலம் அரச சேவையில் ஈடுபடும் இளம் பெற்றோரை ஊக்குவிக்க முடியும் என பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதுடன் ஜனாதிபதியும் அதற்கான தனது பிரேரணையை முன்வைத்தார்.

வெளிநாடு செல்லும் பணியாளர்களுக்கு முறையான தொழிற்பயிற்சி பாடநெறி தேசிய தொழிற்பயிற்சி தகைமை (NVQ) சான்றிதழ் வழங்குவதை கட்டாயமாக்குவதன் முக்கியத்துவம் குறித்தும் பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் கருத்துக்களை முன்வைத்தது. இந்நாட்டில் இயங்கி வரும் அனைத்து தொழிற்பயிற்சி நிலையங்களையும் ஒன்றிணைத்துப் பொதுவான நிர்வாக கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இங்கு குறிப்பிட்டார்.

பெண்களுக்கான தேசிய ஆணைக்குழுவை நியமிப்பதற்கான சட்டமூலம் மற்றும் பாலின சமத்துவம் தொடர்பான சட்டமூலம் என்பவற்றுக்கு மேலதிகமாக பெண்களை வலுவூட்டுவது தொடர்பான சட்டமூலம் தொடர்பிலும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவர் கௌரவ சுதர்ஷினி பெர்னாந்துபுள்ளே, அமைச்சர் கௌரவ (சட்டத்தரணி) பவித்ராதேவி வன்னியாரச்சி, இராஜாங்க அமைச்சர்களான கௌரவ சீதா அரம்பேபொல மற்றும் கௌரவ கீதா சமன்மலி குமாரசிங்க, பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் உறுப்பினர்களான கௌரவ ரோஹிணி குமாரி விஜேரத்ன, கௌரவ (சட்டத்தரணி) தலதா அத்துகோரல, கௌரவ ராஜிகா விக்ரமசிங்க, கௌரவ மஞ்சுளா திசாநாயக்க மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks