பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
பாலின சமத்துவம் மற்றும் பெண்களை வலப்படுத்துவது தொடர்பாகத் தயாரிக்கப்படும் சட்டமூலத்தை அடுத்த வருடத்தின் ஆறு மாதங்களுக்குள் பூர்த்தி செய்யுமாறு ஜனாதிபதி கௌரவ ரணில் விக்ரமசிங்க, பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்துக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
பாராளுமன்ற பெண் உறுப்பினர்கள் ஒன்றியத்தின் தற்போதைய செயலாற்றுகை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆராயும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அண்மையில் (15) பாராளுமன்றத்தில் நடைபெற்ற விசேட கூட்டத்திலேயே இவ்வாறு ஆலோசனை வழங்கப்பட்டது.
மகளிர், சிறுவர் விவகார மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு மற்றும் பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் என்பன இணைந்து பாலின சமத்துவும் மற்றும் பெண்களின் உரிமைக்காகத் தயாரித்துவரும் இந்தச் சட்டமூலத்தின் ஆரம்ப செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற பெண் உறுப்பினர்கள் ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியகலாநிதி) சுதர்ஷனி பெர்னாந்துபுள்ளே தெரிவித்தார்.
பெண்கள் மற்றும் சிறுவர்களுக்குக் காணப்படும் பிரச்சினைகள் மற்றும் அவை தொடர்பில் கொள்கைகள் மற்றும் சட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு சென்றனர்.
மகளிர், சிறுவர் விவகார மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சுடன் இணைந்து செயற்படுவதற்கு பெண்கள் மற்றும் பாலின சமத்துவம் குறித்த தனியான நிறுவனமொன்றை அமைப்பதற்கான ஆரம்பகட்ட திட்டங்களை பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் முன்னெடுக்குமாறு ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி, இதனை விரைவில் நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதிமொழியளித்தார். அத்துடன் சட்ட மற்றும் கொள்கைகளைத் தயாரிக்கும்போது சகல நிறுவனங்களையும் இணைத்துக் கொண்டு அதற்கான பணிகளை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரங்களுக்குத் தேவைப்படும் ஊழியர்களுக்கு வெளிநாட்டுப் பயிற்சி அவசியமாகவிருந்தால், தூதரகங்கள் மூலம் அதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறும் அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், சுதந்திரத்தின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, பெண்கள் மற்றும் சிறுவர்களின் உரிமைகள், பாலின சமத்துவம் குறித்த தொடர் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யுமாறும் பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்துக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கினார்.
பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் கூட்டத்துக்கு வருகை தந்தமை தொடர்பில் ஜனாதிபதிக்கு நன்றிகளைத் தெரிவித்த ஒன்றியத்தின் தலைவி பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியகலாநிதி) சுதர்ஷனி பெர்னாந்துபுள்ளே, தமது ஒன்றியத்தின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதிக்கு விளக்கமளித்தார்.
அத்துடன், சிறுவர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவி பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி விஜேரத்னவும் தமது ஒன்றியத்தின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதிக்குத் தெளிவுபடுத்தினார்.
பெண்களின் உரிமைகள் மற்றும் பாலின சமத்துவத்துக்கான தனியான ஆணைக்குழுவொன்றை நியமிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தனர். அத்துடன், அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் இங்கு விவாதிக்கப்பட்டது. பாராளுமன்றத் தேர்தல் உட்பட ஏனைய தேர்தல்களிலும் பெண் வேட்பாளர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். அத்துடன், மாகாணசபைத் தேர்தலில் தற்போதுள்ள பெண்களுக்கான 25% இட ஒதுக்கீட்டை குறைக்க வேண்டாம் என உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்ததுடன், அவ்வாறான எதிர்பார்ப்பு எதுவும் இல்லையென்றும் ஜனாதிபதி பதிலளித்தார்.
பெண் பொலிஸ் அதிகாரிகளுக்குக் காணப்படும் வெற்றிடங்களைத் தீர்ப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். அத்துடன், பொலிஸ் நிலையங்களில் பெண்களின் முறைப்பாடுகள் முன்வைக்கப்படும் போது அவர்களின் தனித்துவத்தைப் பாதுகாக்கும் வகையில் அவற்றைப் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்குமாறு பொலிஸ்மா அதிபருக்குத் தெரியப்படுத்துவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அத்துடன், ஐந்து வயதுக்குக் குறைவான குழந்தைகளைக் கொண்ட தாய்மார் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களுக்குச் செல்வதைத் தடுப்பது, சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பது உள்ளிட்ட பெண்கள் மற்றும் சிறுவர்கள் குறித்த விடயங்கள் பற்றியும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, பாராளுமன்ற உறுப்பினர்களான தலதா அதுகோரல, ரஜிகா விக்ரமசிங்ஹ, மஞ்சுளா திசாநாயக, முதிதா பிரசாந்தி, கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் மகளிர், சிறுவர் விவகார அமைச்சின் அதிகாரிகள் இணைந்திருந்தனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks