பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
இன்றைய சிறுமி நாளைய பெண் ஆவாள். எனவே நமது எதிர்காலம் இன்று எமது கைகளில் உள்ளது. 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் 11 ஆம் திகதி சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தின் 10 ஆவது ஆண்டு நிறைவை நாம் கொண்டாடும் இவ்வேளையில், இலங்கையர்களாகிய நாம், கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், பெண் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக அவர்களின் உண்மை நிலைகள் குறித்து அவதானமாக இருக்க வேண்டும்.
ஒட்டுமொத்த இலங்கையும் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும், மற்றும் அரசியல் ரீதியாகவும் சவாலுக்கு உள்ளாகியுள்ளது. நாட்டில் நிலவும் தாங்க முடியாத பணவீக்க விகிதங்கள் காரணமாக சராசரி இலங்கைக் குடும்பங்களின் ஊட்டச்சத்து உட்கொள்ளல் குறைக்கப்பட்டுள்ளது. எரிபொருள் பற்றாக்குறை மற்றும் மின்வெட்டு, பல இக்கட்டான சூழ்நிலைகளுக்கு மத்தியில், இந்த எதிர்மறைத் தாக்கங்களை அதிகப்படுத்தியது.
இலங்கையில் ஒட்டுமொத்தமாக குழந்தைகளின் உள, கல்வி மற்றும் மருத்துவ நலன்களில் பொருளாதார நெருக்கடியின் பாரதூரமான விளைவுகளை சமீபத்திய ஆய்வுகள் மற்றும் கணக்கெடுப்புக்கள் உறுதிப்படுத்துகின்றன. பெண் குழந்தைகளின் விரும்பத்தகாத ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து நிலை அவர்களது சொந்த நல்வாழ்வு மற்றும் உற்பத்தித்திறனை மட்டுமல்லாது, எதிர்கால சந்ததியினரையும் பாதிக்கின்றது. பெண் குழந்தைகளும் அதிகளவில் துன்புறுத்தல் மற்றும் பாலியல் வன்முறைக்கு ஆளாகின்றனர். பாலியல் துன்புறுத்தல் அறிக்கைகள் பல ஆண்டுகளாக அதிகரித்துள்ளன, குறிப்பாக இந்த பொருளாதார நெருக்கடியின் போது. இத்தகைய கடுமையான பொருளாதார நெருக்கடியின் விளைவான சமூக அமைதியின்மையானது வன்முறை மற்றும் பாலியல் துன்புறுத்தல் நிகழ்வுகளை மட்டுமே அதிகரிக்கும், மேலும் பெண் குழந்தை எளிதாகப் பாதிக்கப்படக்கூடிய ஒரு இலக்காக இருக்கலாம். கல்வி, சுகாதாரம் ஆகிய துறைகளில் பல ஆண்டுகளாக இலங்கை அடைந்துள்ள மனித அபிவிருத்திக் குறிகாட்டிகள் இந்தப் பொருளாதார நெருக்கடியின் போது தலைகீழாக மாறும் அபாயம் உள்ளது. குறிப்பாக, நாட்டின் நிலைமையை மேம்படுத்தாத வரை, கல்வி என்பது பெற்றோர்கள் தங்கள் பெண் மற்றும் ஆண் குழந்தைக்கு இடையே மேற்கொள்ள வேண்டிய ஒரு தேர்வாக மாறும்.
எவ்வாறாயினும், சரியான வகையான ஆதரவை வழங்கினால், இந்த சவால்கள் சிறந்த வாய்ப்புக்களாக மாறும் என்று பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் நம்புகின்றனர். அதிஷ்டவசமாக, இலங்கைக்கு ஆதரவாளர்கள் மற்றும் நலன் விரும்பிகள் நிறைய உள்ளனர். எங்களிடம் வலுவான ஆதரவளிக்கும் சர்வதேச நிறுவனங்கள், வளர்ச்சிப் பங்காளர்கள் மற்றும் பெருநிறுவனத் துறையினர் எங்களுடைய வளர்ச்சி முயற்சிகளுக்குப் பின்னால் எப்போதும் இருக்கின்றார்கள். எனவே, பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் என்ற வகையில், இந்த ஆதரவாளர்கள் எங்கள் பெண்களுக்கு சரியான வாய்ப்புக்களை வழங்க முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம். இவ்வாறான தகுதியான முயற்சிகளுக்கு தலைமைத்துவத்தை வழங்குவதற்கு, குறிப்பாக இலங்கையிலுள்ள பெண்கள் மற்றும் சிறுமிகளின் பிரதிநிதிகள் என்ற வகையில் நாங்கள் தயாராக உள்ளோம்.
2020 தேசிய வரவு செலவுத் திட்ட விவாதத்தில் இருந்து இலங்கையில் மாதவிடாய் வறுமைக்கு எதிராக பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் வாதிட்டது. நாங்கள் அத்துடன் நிற்கவில்லை. நாங்கள் எமது வாதத்தைத் தொடர்ந்தோம். இறுதியாக, இன்று, இறக்குமதி செய்யப்படும் சுகாதாரத் துவாய்கள் மற்றும் உள்நாட்டில் அவற்றை உற்பத்தி செய்வதற்கான மூலப்பொருட்களுக்கான வரியை நீக்குவதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளது. தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முன்பிருந்தும் பாடசாலைகளுக்குப் பெண் குழந்தைகள் சமூகமளிக்காததற்கு மாதவிடாய் வறுமை ஒரு காரணமாக இருந்ததனால், பெண்கள் மற்றும் குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு இது ஒரு மகத்தான சாதனையாக நாங்கள் கருதுகின்றோம். 2021 ஆம் ஆண்டில், நாங்கள் பரிந்துரைத்த மற்றுமொரு முக்கிய பரிந்துரை என்னவென்றால், அனைத்துப் பாடசாலை மாணவர்களுக்கும் சுகாதாரத் துவாய்கள் இலவசமாக விநியோகிக்கப்பட வேண்டும் என்பதாகும். இந்தப் பொருளாதார நெருக்கடியின் மத்தியில், அது சாத்தியமில்லை என்றாலும் கூட, இலங்கையில் உள்ள ஏழைப் பெண் குழந்தைகளுக்காவது இலவசமாகத் துவாய்களை வழங்குவது தொடர்பான எங்கள் வாதத்தைத் தொடர விரும்புகின்றோம்.
படைப்பாற்றலுடன் இணைந்த நெகிழ்திறன் வெற்றியை உருவாக்கும். எனவே, பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாம் பார்க்கின்ற வகையில், இலங்கை எதிர்கொள்ளும் இன்னல்கள் எமது கையில் உள்ள ஒரு சந்தர்ப்பம் ஆகும். பெண் குழந்தைகளுக்கான சர்வதேச தினத்தில், பெண் குழந்தைகளைப் பாதுகாக்கவும், அவர்களுக்கு வலுவூட்டவும் ஒட்டுமொத்த சமுதாயமும் ஒன்றுபட வேண்டும் என்று நாம் வலியுறுத்துகின்றோம். இந்தப் பேரழிவிற்கு எதிராக நாட்டில் மெதுவாக வளர்ந்து வரும் நெகிழ்தன்மையை, பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை முன்பை விட பிரகாசமாக்கும் படிக்கல்லாகப் பயன்படுத்த, எங்களுடன் கைகோர்க்க முன்வர விருப்பமும் திறமையும் உள்ள நிறுவனங்களை நாம் அழைக்கின்றோம்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks