E   |   සි   |  

பாலின சமத்துவம் மற்றும் பெண்களை வலுப்படுத்தல்

இலங்கைப் பெண்களின் உரிமைகள், பாதுகாப்பு மற்றும் பாலினத் தரத்தை உறுதிப்படுத்தும் நோக்கத்துடன் பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்திற்கு முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் ஒன்றியத்தின் தலைவர் கௌரவ (கலாநிதி) சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய போது கருத்தில் கொள்ளப்பட்டன.

அதன்படி, சட்ட மற்றும் கொள்கை சீர்திருத்தங்கள், சட்டங்கள் மற்றும் பெண்களின் உரிமைகள் மற்றும் பாலின சமத்துவத்தை செயல்படுத்துவதைக் கண்காணித்தல் மற்றும் பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவம் தொடர்பில் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் பாராளுமன்றத்துக்கு பரிந்துரைப்பதற்குமான சட்டத்தின் மூலம் அதிகாரத்தைக் கொண்ட “தேசிய மகளிர் ஆணைக்குழு” என்ற பெயரில் ஒரு சுயாதீன ஆணைக்குழுவை நிறுவுவது தொடர்பிலும் இந்த முன்மொழிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அரச துறையில் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளை விசாரித்து தீர்வு வழங்கவும், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை வழக்குகளை விரைவுபடுத்தும் நோக்கத்திற்காக சட்டமியற்றவும், பாலினப் பிரச்சினைகளில் குறைதீர்ப்பாளர் அலுவலகத்தின் கீழ் (Office of the Ombudsperson) ஒரு சுயாதீனமான பெண் குறைதீர்ப்பாளரை (Ombudswoman) நிறுவுவது குறித்தும் இந்த முன்மொழிவுகளில் ஆராயப்படுகின்றன. மேலும், சித்திரவதை, கற்பழிப்பு மற்றும் பிற மனித உரிமை மீறல்கள் போன்றவற்றின் தடைகளை பாதுகாப்புப் படைகளும் பொலிஸாரும் கடைப்பிடிப்பதை உறுதி செய்வதற்காக சம்பந்தப்பட்ட அமைச்சுக்களுக்குள் உள்ளக கண்காணிப்பு வழிமுறைகளை இணைத்தல் தொடர்பிலும் இந்த முன்மொழிவுகள் ஆராய்கின்றன.

அவ்வாறான சட்டமூலத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவர் உட்பட ஏனைய உறுப்பினர்கள் சட்டமூலத்துக்கான முன்மொழிவுகள் விரிவான புரிதலுடன் பார்க்கப்படவேண்டும் எனக் கருதினர். அதற்கமைய, சட்டமூலத்தின் விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடி பரிந்துரை வழங்குவதற்கு செப்டம்பர் 09 ஆம் திகதி கூடுவதற்கு ஒன்றியம் தீர்மானம் எடுத்தது.

பாராளுமன்ற உறுப்பினர்களானகௌரவ தலதா அத்துகோரல, கௌரவ (வைத்திய கலாநிதி) சீதா அரம்பேபொல, கௌரவ ரோஹிணி விஜேரத்ன, கௌரவ கீதா குமாரசிங்க, கௌரவ (கலாநிதி) ஹரிணி அமரசூரிய, கௌரவ டயனா கமகே மற்றும் பாராளுமன்ற பணியாட்டொகுதியின் தலைவரும் பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகமுமான குஷானி ரோஹணதீர ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks