E   |   සි   |  

2022 இன் சர்வதேச இளைஞர் தினத்தை நினைவுகூரும்

இன்று ஆகஸ்ட் 12, 2022, கல்வி, சமூக மேம்பாடு, சுற்றுச்சூழல் குழுக்கள், பல்வேறு சமூகத் திட்டங்களுக்கு தன்னார்வத் தொண்டு செய்தல் மற்றும் உலகளாவிய பிரச்சனைகளை சமாளித்தல் ஆகியவற்றில் இளைஞர்களின் வகிபங்கை அங்கீகரிக்கும் சர்வதேச இளைஞர் தினத்தை நினைவுகூருகின்றோம். 1998 ஆம் ஆண்டு லிஸ்பனில் நடைபெற்ற “இளைஞர்களுக்குப் பொறுப்பான அமைச்சர்களின் உலகளாவிய மாநாட்டின்” பரிந்துரையை அங்கீகரித்த தீர்மானத்தின் மூலம் 1999 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் இந்த நாள் முதன்முதலில் நிறுவப்பட்டது. இது முதலில் ஆகஸ்ட் 12, 2000 அன்று கொண்டாடப்பட்டது. அத்துடன் அன்றிலிருந்து இளைஞர்கள் சந்திக்கும் சவால்கள் மற்றும் பிரச்சனைகள் குறித்து சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த இது பயன்படுகிறது. மேலும், இது இளைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கவும், அரசியலில் அவர்களின் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்தவும், உலகளாவிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண வளங்களை நிர்வகிக்கும் அவர்களின் திறனை மேம்படுத்தவும் பயன்படுகின்றது.

தற்போதைய உலகளாவிய சமூக-கலாச்சாரப் பாதையில், உலகளாவிய பிரச்சாரங்கள் அதிகளவில் நீடித்து நிற்கும் நிலையான வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டுள்ளன. அதேவேளை ‘தலைமுறைகளுக்கு இடையேயான சமத்துவம்’ போன்ற எண்ணக்கருக்களிலும் கவனம் செலுத்துகின்றன. இத்தகைய இலக்குகளை அடைவதில் இளைஞர்களின் பங்கு குறிப்பாக முக்கியமானதாகத் திகழ்கின்றது. எனவே உலகளாவியப் பிரச்சினைகளுக்கான முன்மொழியப்பட்ட தீர்மானங்களின் வெற்றியானது இளைஞர்களின் பங்களிப்பில் தங்கியிருப்பதனால், அவர்ளுக்கு அவையில் அங்கீகாரம் தேவைப்படுகின்றது.

அதற்கேற்ப, நீடித்து நிலைத்திருக்கும் வளர்ச்சியை அடைவதற்கு அனைத்துத் தலைமுறையினரதும் பங்களிப்புக்களின் முக்கியத்துவத்தை ஐ.நா அங்கீகரிப்பதனால், 2022 ஆம் ஆண்டின் சர்வதேச இளைஞர் தினமானது “தலைமுறைகளுக்கு இடையேயான ஒற்றுமை” என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டது. இது தலைமுறைகளுக்கு இடையேயான வெற்றிகரமான மற்றும் நியாயமான உறவுகள் மற்றும் கூட்டாண்மைகளை வளர்ப்பதற்காக “யாரும் பின்தங்கியிருக்கவில்லை” என்பதை உறுதிப்படுத்துகின்றது.

ஐ.நா.வின் கூற்றுப்படி, 2016 இல், இலங்கையின் சனத்தொகையில் கிட்டத்தட்ட கால் பகுதியினர் இளைஞர்கள் ஆவர்: 4.64 மில்லியன் அல்லது 23.2 சதவீதம். இலங்கையின் தேசிய இளைஞர் கொள்கை (2014) ஆனது 15-29 வயதுக்குட்பட்ட எவரையும் இளைஞர்கள் என வரையறுக்கின்றது. இது 15-24 வயதுக்கு இடைப்பட்டவர்களை இளைஞர்கள் என்ற பிரிவிற்குள் உள்ளடக்கும் ஐ.நா.வின் வரையறையிலிருந்து முற்றிலும் மாறுபாட்டைக் குறிக்கின்றது. எவ்வாறாயினும், இலங்கையில் முதியோரின் விகிதாசாரம் அதிகமாக உள்ளதனாலும், நமது சனத்தொகையில் திருமண வயது அதிகரித்து வருவதனாலும், இளைஞர்கள் என்ற வரையறைக்குள் 29 வயது வரையிலான நபர்களை இணைக்கும் வகையில் நீட்டிக்கப்படுவது சூழ்நிலை ரீதியாக நியாயமானது எனலாம்.

2021 ஆம் ஆண்டு உலக வங்கியால் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, இலங்கையின் சனத்தொகையில் 12.3% ஆனோர் 60 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள், மேலும் 15 ஆண்டுகளில், 25% ஆன இலங்கையர்கள் 60 வயதுக்கும் மேற்பட்டவர்களாக இருப்பார்கள். இந்த மக்கள்தொகை மாற்றமானது பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் நாட்டில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் பல சவால்களையும் உருவாக்கும்.

“முக்கியமாக இளைஞர்களால் வழிநடத்தப்பட்ட அரகலயவின் போது நாட்டில் நடந்த சமீபத்திய நிகழ்வுகளை அவதானிப்பதன் மூலம், இளைஞர்கள் மிகத் தெளிவாகவும், ஆணித்தரமாகவும் இங்கு நிரூபித்திருப்பதைப் பற்றி – அதாவது அவர்கள் தங்கள் எதிர்காலத்திலும், நாட்டின் அரசியல் செயல்பாட்டில் ஈடுபடவும், அவற்றைத் தீவிரமாக எடுத்துக்கொள்ளவும் விரும்புகிறார்கள் என வயது வித்தியாசமின்றி நாம் அனைவரும் ஒருமித்த கருத்தை உருவாக்க முடியும் என்று நான் நினைக்கின்றேன். தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி அவர்களின் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என்ற உண்மையைக் கருத்திற் கொண்டு, அவர்களின் முறையீடுகளை நாம் நிராகரித்தால், ஒட்டுமொத்த நாட்டிற்கும் அது நல்லதல்ல” என பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் உறுப்பினர், கௌரவ. கலாநிதி. ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

“இந்த ஆண்டுக்கான சர்வதேச இளைஞர் தினத்தை நினைவுகூரும் கருப்பொருளைப் பயன்படுத்தி, வெவ்வேறு தலைமுறையினருக்கு எதிராக வெவ்வேறு வழிகளில் செயற்படும் வயதின் அடிப்படையிலான பாரபட்சத்துடன் தொடர்புடைய முற்கற்பிதங்களை அடையாளங்காணுவதன் மூலம் அவ்வாறான முற்கற்பிதங்களை எதிர்கொள்தவற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான தலைமுறைகளுக்கு இடையிலான சிறந்த ஒத்துழைப்பை வளர்ப்பதற்கான உரையாடலைத் தொடங்குவதற்கான வாய்ப்பாக இதை உருவாக்க வேண்டும்.” என பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் உறுப்பினர் கௌரவ. திருமதி கோகிலா குணவர்தன தெரிவித்தார்.

“ஒருபுறம், முதிர்ச்சி மற்றும் அனுபவமின்மை காரணமாக இளைஞர்களின் கருத்துக்களை நாம் விரைவாக நிராகரிக்கின்றோம், மறுபுறம், இளைஞர்கள் பழைய தலைமுறையினரின் பங்களிப்பை நிராகரிக்கக்கூடும். ஏனெனில் பழைய தலைமுறையினர் தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்துடன் இணங்கவில்லை அல்லது வரையறுக்கப்பட்ட குறிக்கோளைக் கொண்டிருக்கவில்லை என இளைஞர்கள் கருதுகின்றார்கள். தலைமுறைகள் ஒருவருக்கொருவர் உள்ளீடு மற்றும் பங்களிப்புகளை ஏற்று மதிக்கும் சமநிலையை நோக்கி நாம் பாடுபட வேண்டும்” என்றார் பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் உறுப்பினர் திருமதி. ரோஹினி குமாரி விஜேரத்ன.

“ஒரு நாட்டின் எதிர்கால ஸ்திரத்தன்மையைக் கட்டமைப்பதில் இளைஞர்கள் ஆற்றக்கூடிய முக்கிய பங்கை நினைவுகூருவதற்கு இந்த நாளை நாம் ஒரு சந்தர்ப்பமாக மாற்ற வேண்டும் என்று நான் நம்புகின்றேன். அரசியலில், குறிப்பாக முடிவெடுக்கும் கட்டமைப்புக்களில் அதிகளவு இளைஞர்களின் குரல்கள் செவிமடுக்கப்பட்டு பிரதிநிதித்துவப்படுத்தப்படும் ஒரு செயன்முறையை உணர்ந்து கொண்டு அதனை நனவாக்குவதில் ஒரு பங்கு தனக்கு இருக்கின்றது என்பதை பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியமானது அங்கீகரிக்கின்றது. அரசியலிலும் மற்றும் தேர்தல்களிலும் பெண்களுக்கான ஒரு சமமான களத்தை உருவாக்குவதற்கான அதன் போராட்டத்தில், பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியமானது எப்போதும் நாட்டின் இளைஞர்கள் சார்பாக பிரதிநிதித்துவம் செய்து வருகின்றது. ஒரு குழுவாக, நாங்கள் பாராளுமன்றம் மற்றும் பிற முடிவெடுக்கும் கட்டமைப்புக்கள் மக்களின் குரல்களை மிகவும் பிரதிபலிப்பதாகவும், பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் இருப்பது எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்து கொள்கின்றோம்”, என பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவி கலாநிதி சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே குறிப்பிட்டார்.

இவ்வாறான சூழ்நிலைகளில், 2022 ஆம் ஆண்டுக்கான சர்வதேச இளைஞர் தினத்திற்கான கருப்பொருள், தலைமுறைகளுக்கு இடையிலான ஒற்றுமை, இலங்கையின் தற்போதைய சமூக-கலாச்சார நிலைமை மற்றும் உரையாடலுக்கு மிகவும் பொருத்தமானது. எனவே, சர்வதேச இளைஞர் தினத்தை நினைவுகூருவது வெறுமனே சிந்தனைக்கான நாளாக மட்டும் இல்லாமல், முற்போக்கான செயலுக்காகவும் மாற்றப்பட வேண்டும்.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks