E   |   සි   |  

வெறுக்க வேண்டாம் | வெறுப்புப் பேச்சை எதிர்க்க

“பெண்கள் பல தொழிற் துறைகளில் தீவிரமாகப் பங்கேற்று பொருளாதாரத்திற்குப் பங்களிக்கும் ஒரு நாட்டில்; பெண்கள் இல்லாதது வெளிப்படையாகத் தெரியும் ஒரே துறை அரசியல் அரங்கம் ஆகும். பெண்களின் விருப்பமின்மையும், பெண்களுக்கு அரசியலில் ஈடுபட வாய்ப்புக்கள் இல்லாததும் இதற்குக் காரணங்களாகும். ஏனைய சமூக-பொருளாதாரக் காரணிகள் காணப்பட்டாலும், பெண்கள் அரசியலில் ஈடுபட விரும்பாமல் இருப்பதற்கு முக்கிய காரணம், சமூகம் முழுவதும் அல்லது தேசிய அளவில் பெண் வெறுப்பால் உருவாகும் வாய்மொழி வன்முறை மற்றும் துன்புறுத்தலுக்கு ஆளாக நேரிடும் என்ற அச்சம் தான் என்று நான் நம்புகின்றேன். அதன் காரணமாக, தகுதியுள்ள மற்றும் திறமையான பெண்கள் கூட அரசியற் துறையிலும் மற்றும் தீர்மானங்களை மேற்கொள்வதில் பங்குபற்றுவதற்கும் தனக்கான ஒரு தொழிலைத் தொடர்வதற்குக் கிடைக்கும் குறைந்த வாய்ப்புகளையும் பயன்படுத்தத் தயங்குகின்றார்கள். உண்மையில், எனது கூற்றை ஆதரிப்பதற்காக குறிப்பிட்ட உதாரணம் அல்லது புள்ளிவிவரங்களைக் குறிப்பிடாமல், வெறும் வாய்மொழி வன்முறை மற்றும் துன்புறுத்தலைக் குறிப்பிடுவது, நான் எதனைக் குறிப்பிடுகின்றேன் என்பது எந்த ஒரு இலங்கையருக்கும் சரியாகத் தெரியும். அதுவே, பெண் அரசியல்வாதிகளுக்கு எதிரான வாய்மொழி வன்முறை மற்றும் துன்புறுத்தல்கள் நம் சமூகத்தில் எவ்வளவு பாரதூரமான, ஆழமான, பொறிக்கப்பட்ட மற்றும் விவாதத்திற்குரிய வகையில், எனக்கு மிகுந்த திகைப்பை ஏற்படுத்துகின்றது என்பதைக் காட்டுகிறது. எவ்வளவு காலத்திற்கு வெற்று வாக்குறுதிகளை வழங்கப் போகின்றோம்? அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற இலட்சியம் கொண்ட இளம்பெண்களுக்கு, “எதையும் தாங்கும் இதயம் வேண்டும்” என்று எவ்வளவு காலம் அறிவுரை கூறப் போகின்றோம்? ஜனநாயக சமூகத்தில் வாழும் நாகரீக மக்களாக, சட்டத்தை உருவாக்குபவர்கள் என்ற வகையில், வெறுப்புப் பேச்சுக்களை எதிர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய கடப்பாடு எமக்கு இல்லையா?”


கௌரவ. டாக்டர் சுர்தர்ஷினி பெர்னாண்டோபுள்ளே
தலைவி, பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம்


“பெண்கள் மற்றும் பிற பாதிக்கப்படக்கூடிய சமூகங்களுக்கு எதிரான வாய்மொழி வன்முறை மற்றும் துன்புறுத்தல்கள் இலங்கையில் எப்பொழுதும் கண்டிக்கப்பட்ட, ஆனால் புறக்கணிக்கப்பட்ட, பிரச்சினையாக உள்ளது. இருப்பினும், கோவிட்-19 தொற்றுநோயைத் தொடர்ந்து, பெண்களுக்கு எதிரான இத்தகைய வாய்மொழி வன்முறை மற்றும் துன்புறுத்தல்கள் கணக்கிட முடியாத எண்ணிக்கையில் பெருகிவிட்டன என்று நான் நம்புகின்றேன். தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட சமூகத்தில், வேலை, பாடசாலை மற்றும் பொழுதுபோக்கு தொடர்பான ஆன்லைன் பயன்பாடானது புதிய இயல்புநிலையாக மாறியது, ஏனெனில் மக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியேற வாய்ப்பில்லை, மாறாக தங்கள் வீடுகளில் தங்குவதற்கும் வரையறுக்கட்ட நபர்களுடன் தொடர்புகொள்வதற்கும் மட்டுப்படுத்தப்பட்டனர். இதனால், இணையம் நாம் வாழ்வதற்கு அவசியமானதாக உருவெடுத்தது. அதிகமான மக்கள் ஆன்லைன் தளங்களைப் பயன்படுத்தத் தொடங்கியதனால், வாய்மொழி வன்முறை மற்றும் துன்புறுத்தல்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. அதுமட்டுமின்றி, ஆன்லைன் தளங்கள் உலகளாவிய பார்வையாளர்களை அடையும் வாய்ப்பையும் வழங்குகின்றது. அதாவது, இப்போது உலகளாவிய அளவில் வெறுப்பூட்டும் பேச்சு நடாத்தப்படலாம், இது இலக்கு வைக்கப்பட்ட தனிநபர்கள் மற்றும் சமூகங்களின் நல்வாழ்வையும் பாதுகாப்பையும் மேலும் அச்சுறுத்துகின்றது. பல ஆன்லைன் தளங்கள், குறிப்பாக சமூக வலைத்தளங்கள், ஒழுங்குபடுத்தப்படாதவை அல்லது போதுமான அளவில் கட்டுப்படுத்தப்படாதவை என்பதனால், எந்த விளைவும் இல்லாமல் வெறுப்புப் பேச்சைப் பரப்புவதற்கான வாய்ப்பானது ஆன்லைன் வெறுப்புப் பேச்சுக்களைத் தூண்டுவதற்கான ஒரு உந்து சக்தியாக செயல்படுகின்றது. இப்போது அதிகமான குழந்தைகள் ஆன்லைன் தளங்களைப் பயன்படுத்துவதனால், சமூக வலைத்தளங்கள் மற்றும் பிற ஆன்லைன் தளங்களில் வெறுப்பூட்டும் பேச்சுக்கள் பெருகுவதைத் தடுக்க தீவிரமான மற்றும் பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியம் உள்ளது.”


கௌரவ. கோகில குணவர்தன
பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் உறுப்பினர்


“வெறுப்பூட்டும் பேச்சு என்பது நமது ஜனநாயக சமூகத்தில் எப்போதும் ஒரு பின்னடைவாக இருந்து வருகின்றது. இருப்பினும், ஒரு காட்டு வாத்து போல் கோழைத்தனமாக, இலக்கு வைக்கப்பட்ட தனிநபர்கள் அல்லது குறிப்பிட்ட சமூகங்களை துஷ்பிரயோகம் செய்து அச்சுறுத்தும் வெறுப்பூட்டும் பேச்சுகளின் பெருக்கமானது, எந்தவொரு ஜனநாயகத்திலும் ஒரு அடிப்படையாகக் காணப்படும் “பேச்சு சுதந்திரம்” என்ற கருத்தாக்கத்தின் பின்னணியில் அடிக்கடி நடாத்தப்படுவது முரண்பாடாக இருக்கின்றது. ஆனால் “பேச்சு சுதந்திரம்” என்பது மற்றொரு நபருக்கு எதிராக வெறுப்பு, துஷ்பிரயோகம் மற்றும் வன்முறையைப் பரப்புவதற்கான உரிமையை உங்களுக்கு வழங்காது என்பதை புரிந்துகொள்வது அவசியமானதாகும். இலங்கையின் 1978 அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள பேசுவதற்கான அடிப்படை உரிமையானது ஒருபோதும் மீறப்பட முடியாத முழுமையான உரிமையல்ல. சுதந்திரமான பேச்சுரிமைக்கு உத்தரவாதமளிக்கப்படாத சில விதிவிலக்கான சூழ்நிலைகளும் உள்ளன. ஒரு சமூகத்தில் வாழும் போது, எமக்கான உரிமைகள் இருக்கின்றன ஆனால் அதே நேரம் எமக்கான கடமைகளும் காணப்படுகின்றன. உங்கள் உரிமைகளை அனுபவிப்பது என்பது மற்றொரு நபரின் வாழ்க்கை மற்றும் நல்வாழ்வின் விலையாக இருக்க முடியாது என்பதை நாம் அனைவரும் புரிந்துகொள்வது முக்கியமாகும். வெறுக்கத்தக்க பேச்சை எதிர்த்துப் போராடுவதற்கும் எதிர்ப்பதற்கும் மிகவும் சுறுசுறுப்பான மற்றும் பயனுள்ள வழியில் கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று நான் முழு மனதுடன் நம்புகிறேன். தற்போதைய நிலைமையை மதிப்பிடுவதற்கான ஆராய்ச்சியை நாம் வரவேற்க வேண்டும் மற்றும் வெறுப்புப் பேச்சுக்களை எதிர்ப்பதற்கும் அவற்றுக்கு எதிராகப் போராடுவதற்கும் எமது பங்குதாரர்கள் ஒத்துழைக்கவும் ஒருங்கிணைக்கவும் அனுமதிக்கும் தேசியக் கொள்கை ஒன்றை நாம் உருவாக்க வேண்டும்.”


கௌரவ. தலத அதுகொரல
பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் உறுப்பினர்


“பாதிக்கப்படக்கூடிய சமூகங்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சு, குறிப்பாக பெண்களுக்கு, துரதிஷ்டவசமாக சமூகத்தில் ஆழமான வேர்களைக் கொண்டுள்ளது. இருப்பினும், இணையத்தின் பயன்பாடு அதிகரித்துள்ளதனால், குறிப்பாக உலகளாவிய நோய்ப்பரவலின் போது, மேலும் அதிகளவிலான மக்கள் பொழுதுபோக்கு நோக்கங்கள் உட்பட, தங்கள் விவகாரங்களை மேற்கொள்வதற்காக இணையத்தைத் தொடர்ச்சியாக அணுகுவதனால் இப் பிரச்சினையானது முன்னெப்போதும் இல்லாத வகையிலும் மற்றும் அதிக அளவிலும் பெரிதாகியுள்ளது. இந்தக் காலகட்டத்தில், ஆன்லைன் துன்புறுத்தலுக்கு எதிரான புகார்கள் வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்திருப்பதைக் கண்டறிந்தோம், மேலும் அதிகமான மக்கள், குறிப்பாக பெற்றோர்கள், முற்றிலும் உதவியற்றவர்களாக உணர்கின்றார்கள். வெறுப்புப் பேச்சானது பெரும்பாலும் நியாயப்படுத்தப்பட்டு ‘சிந்தனை மற்றும் கருத்து சுதந்திரம்’ என்ற சாக்குப்போக்கின் கீழ் முன்வைக்கப்படுகின்றது. சுதந்திரமான பேச்சுரிமை என்பது 1978 இலங்கையின் அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட ஒரு அடிப்படை உரிமையாகும். சுதந்திரமான பேச்சுரிமை என்பது மற்ற பல உரிமைகள் உருவாகுவதற்கான அடித்தளம் என்பதனால், எந்த ஜனநாயகத்திலும் அது ஒரு அடிப்படையாகும், இருப்பினும், அது எந்த வகையிலும் ஒரு முழுமையான உரிமை அல்ல. உண்மையில், சுதந்திரமான பேச்சுரிமை நியாயமான முறையில் இழிவுபடுத்தப்படக்கூடிய விதிவிலக்கான சூழ்நிலைகள் இருக்கக்கூடும் என்பதை அரசியலமைப்பே அங்கீகரிக்கின்றது. குறிப்பாக, பேச்சுச் சுதந்திரம் மற்றொரு நபரின்(களின்) பாதுகாப்பு, நல்வாழ்வு மற்றும் கண்ணியம் ஆகியன தொடர்பில் வரும் சந்தர்ப்பங்களில். நீங்கள் ஒரு சமூகத்தில் வாழும்போது, நீங்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டிய கடமை உங்களுக்கு உள்ளது. துஷ்பிரயோகத்தை உந்துதல், வெறுப்பைப் பரப்புதல் மற்றும் இலக்கு வைக்கப்பட்ட தனிநபர்கள் அல்லது சமூகங்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டுதல் ஆகியவை “உலகின் வழிகள்” என்று பொறுத்துக் கொள்ளக் கூடாது, மேலும் விளைவுகள் இல்லாமல் கடந்து செல்லக்கூடாது. வெறுக்கத்தக்க பேச்சுக்களை எதிர்த்துப் போராடுவதற்கும் எதிர்ப்பதற்கும் பொருந்தக்கூடிய சட்டக் கட்டமைப்பை இலங்கை ஆராய்ந்து அதற்கேற்ப அத்தகைய கட்டமைப்பை திருத்த வேண்டும் என்று நான் நம்புகிறேன். குறிப்பாக இணையத்தள ஊடகங்கள் காரணமாக வெறுப்பூட்டும் பேச்சுக்களின் பெருக்கத்தின் சமீபத்திய அதிகரிப்பைக் கருத்திற் கொண்டு திருத்தியமைக்க வேண்டும்.”


கௌரவ. திருமதி. டயானா கமகே
பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் உறுப்பினர்


“நாகரீகமான சமூகத்தில் வாழ்கின்றோம் என்று நாம் பெருமையாகக் கூறிக் கொண்டாலும் “வெறுக்கத்தக்க பேச்சு” இன்னும் இந்தச் சமூகத்தில் நிலவுவது துரதிர்ஷ்டவசமானது. ஆகவே வெறுப்பூட்டும் பேச்சானது இல்லாதொழிக்கப்பட வேண்டிய விடயமாகும். மேலும் பல பெண்கள் தங்கள் அன்றாட வாழ்வில் இத்தகைய வெறுப்புப் பேச்சுக்களை எதிர்கொள்கின்றார்கள் என்பதை அறிவது கூட மனவருத்தமளிக்கின்றது. ஒரு பெண்ணாக இருப்பது என்பது இத்தகைய வெறுப்புப் பேச்சுக்களை எதிர்கொள்ள அல்லது இத்தகைய வெறுப்புப் பேச்சுக்களை சகித்துக்கொள்ள ஒரு காரணம் என்று ஒருவர் நினைத்தால், அது தவறான கருத்து ஆகும். இருந்தபோதிலும், சமீபகாலமாக நமது நாட்டின் பாராளுமன்றத்தில் இதுபோன்ற கேவலமான, முட்டாள்தனமான, மற்றும் வெறுக்கத்தக்க அறிக்கைகளுக்கு நான் ஆளாகியுள்ளேன் என்பதை உங்களுக்கு நினைவுபடுத்துவது விசித்திரமானதல்ல என்பதை நான் அறிவேன். வெறுக்கத்தக்க பேச்சுக்களை சந்தித்த ஒரே மற்றும் முதல் பாராளுமன்ற உறுப்பினர் நான் அல்ல நான் உட்பட பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தில் உள்ள ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களும் தொடர்ச்சியாக இத்தகைய வெறுப்புப் பேச்சுக்கு ஆளாகி வருகின்றனர். ஆனால் இன்றும் நமது பாராளுமன்றம் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து விழித்துக் கொள்ளாமல் இவ்விடயத்தில் மிகவும் செயலற்ற கொள்கையைப் பேணி வருகின்றது. வெறுப்புப் பேச்சுக்கு எதிரான இந்த சர்வதேச தினத்தில், வெறுப்பூட்டும் பேச்சுக்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பான சட்டத்தை புதுப்பிக்கும் பொறுப்பு பாராளுமன்றத்தில் நமக்கு உள்ளது என்பதை இந்தச் சந்தர்ப்பத்தில் நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.”


கௌரவ. திருமதி. ரோஹினி விஜேரத்ன
பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் உப தலைவர்


“குறிப்பாக சமூக வலைத்தளங்கள் வாயிலாக தனிநபர்கள் மற்றும் சமூகங்களைக் கொடுமைப்படுத்தவும், துன்புறுத்தவும் மற்றும் அச்சுறுத்தவும் வெறுப்புப் பேச்சானது ஒரு ஆயுதமாக மாறியுள்ளது. குறிப்பாக ஆபத்தானது என்னவென்றால், குறிப்பிட்ட தனிநபர்கள் அல்லது சமூகங்களை, குறிப்பாகப் பெண்கள், பால்நிலை சிறுபான்மையினர், இன மற்றும் மத சிறுபான்மையினர் போன்றோரைக் குறிவைப்பதானது உடல் ரீதியான வன்முறைச் செயல்களுக்கு வித்திட்டுள்ளது. மறுபுறம், வெறுப்பூட்டும் பேச்சைக் கட்டுப்படுத்த அல்லது தடுக்க முற்படும் சட்டங்கள், அதிகாரத்தில் இருப்பவர்களினால் அரசியல் எதிரிகளை மிரட்டி மௌனப்படுத்தவும் தேர்ந்தெடுக்கப்பட முறையில் பயன்படுத்தப்படுகின்றன. எமக்கு சட்டங்கள் தேவைப்பட்டாலும், சட்டமும் பிரச்சனையின் ஒரு பகுதியாக உருவெடுக்காமல் இருப்பதற்கு, நீதித் துறையின் சுதந்திரத்தையும் உறுதி செய்ய வேண்டும். மேலும், சமூக உரையாடல் மற்றும் வெறுப்புப் பேச்சுக்களை எவ்வாறு தடுப்பது மற்றும் அவற்றுக்கு எவ்வாறு பதிலளிப்பது என்பது குறித்த விழிப்புணர்வும் அவசரமாகத் தேவைப்படுகின்றது.”


கௌரவ. கலாநிதி ஹரிணி அமரசூரிய
பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் உறுப்பினர்






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks