E   |   සි   |  

கொவிட் 19 எதிர்மறை தாக்கத்திலிருந்து மீள்வதற்

“ஒக்டோபர் மாதம் கிராமப்புற பெண்களுக்கு உரிய தினத்தை குறிக்கும் மாதமாகும். கொவிட் 19 எதிர்மறை தாக்கத்திலிருந்து மீள்வதற்கு கிராமப்புற பெண்களை ஈடுபடுத்துவதற்கு ஒரு உள்ளடக்கிய அணுகுமுறையை எவ்வாறு சிறந்த முறையில் பின்பற்றுவது என்பதை கருத்தில் கொள்வது பொருத்தமானது”, என ஒன்பதாவது பாராளுமன்றத்தின் பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவர் இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே தெரிவித்தார்.

2021 சர்வதேச கிராமப்புற பெண்களுக்கான தினத்தையொட்டி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“அவர்கள் அதிலிருந்து மீள்வதற்கும் புதிய இயல்புநிலையில் அவர்களை மீளக் கட்டியெழுப்புவதற்கும் எமது நிகழ்ச்சி நிரலை முன்னுரிமைப்படுத்த நாம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்”, என பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவர் உறுதியளித்தார்.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

“கிராமப்புற பெண்கள் விவசாய துறையில் பணியாற்றுகின்றனர். இலங்கைச் சனத்தொகையில் சுமார் 25 வீதமானவர்கள் விவசாயத்தில் ஈடுபடுகின்றனர். இலங்கை சனத்தொகையில் 81 வீதத்துக்கும் அதிகமானவர்கள் கிராமப்புறங்களிலேயே வசிக்கின்றனர், நாட்டிலுள்ள வறியவர்களின் 4/5 பங்கினர் கிராமப்புற துறைகளிலேயே தங்கி நிற்கின்றனர். இவர்களில் குறைந்தளவு 50 வீதமானவர்கள் பெண்களாவர். விநியோகச் சங்கிலியில் ஏற்படும் தடை, காலநிலை மாற்றம் போன்றன பணியிடங்களிலும் வீட்டிலும் அவர்களுக்கு பல சிரமங்களை ஏற்படுத்தியுள்ளன”.

“இந்தக் கிராமப்புற பெண்கள் எப்போதுமே நிதி ரீதியான வீழ்ச்சியின் தாக்கத்தை எதிர்கொள்கின்றனர். இது வீட்டுத்துறை வருமானம் மீது சுழற்சியடிப்படையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. பெண்கள் தமது குழந்தைகளுக்கு உணவளிப்பதற்கும் அடிப்படைத் தேவைகளை வழங்குவதற்கும் வீட்டு வரவுசெலவுத் திட்டத்தை சமநிலைப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறவர்களாகவே சமூகமயமாக்கப்பட்டுள்ளனர். பராமரிப்பாளர்கள் என்றவகையில் குடும்ப சுகாதாரமும் அவர்களின் கைகளிலேயே வழங்கப்பட்டுள்ளது. கொவிட் தொற்றுக்கு முன்பிருந்த டிஜிட்டல் பிளவு நிலையிலான சந்தைக்கான அணுகல் தற்போது தகவல்களை பெற்றுக்கொள்வதில் மேலும் தாக்கத்தை செலுத்தியுள்ளது. இது வீட்டுத்தோட்டம் போன்ற சிறிய அளவிலான வர்த்தகங்களை தொடர்வதற்கும், இதுவரை குடும்ப வருமானத்திற்கு துணையாக இருந்த வீட்டுத்துறை வருமானத்துக்கும் தடையாக உள்ளது. இனப்பெருக்க சுகாதார சேவைகள் உள்ளிட்ட சுகாதார சேவைகள் மீதான அணுகலை கொவிட் முடக்கம் பாதித்துள்ளமை பற்றியும் அவர்கள் உணர்ந்துள்ளனர்”.

“சிறிய, நடுத்தர மற்றும் பாரியளவிலான வர்த்தகங்களின் பங்காளர்களாக பெண்கள் காணப்படும் அதேவேளை, வீட்டுத்துறையின் உணவுப் பாதுகாப்பு, பொருளாதார அபிவிருத்தி மற்றும் தேசிய உணவுப் பாதுகாப்பு என்பவற்றுக்கும் அவர்கள் பங்களிப்பு செய்கின்றனர். இந்த அனைத்துக்கும் மேலதிகமாக, கொவிட் சூழலில் அவர்கள் முங்கொடுக்கும் வீட்டு வன்முறையிலிருந்தும் தப்பித்துக்கொள்ள வேண்டும். எனவே, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையிலான வலுவான சிறந்த சமூக ஆதரவுத் திட்டங்களை நாம் வடிவமைக்க வேண்டும்”.

“தற்பொழுது கிராமப்புற பெண்கள் அரசியலிலும் நுழைந்துள்ளனர். சட்டரீதியாக வழங்கப்பட்ட 25% கோட்டா முறை காரணமாக இது ஏற்பட்டுள்ளது. இது உண்மையில் பாராட்டத்தக்கது. பெண்களை சிறப்பாக நிலைநிறுத்த அவ்வாறான உறுதியான நடவடிக்கைகள் தேவை. இவ்வாறான கிராமப்புறப் பெண்களில் பெரும்பான்மையானவர்கள் சாதாரண கல்வி மற்றும் பொது வாழ்க்கையில் தீர்மானமெடுப்பதில் குறைத்த பங்களிப்பு கொண்டவர்களாகவே கருதப்படுகின்றனர். எனினும் அவர்கள் உள்ளூராட்சி அரசியலில் திருப்தியான பங்களிப்பை மேற்கொள்கின்றனர். எவ்வாறாயினும், அனுபவமின்மை, தமது ஆண் சக அங்கத்தவர்களால் இழைக்கப்படும் கொடுமை மற்றும் வன்முறை அல்லது அவர்கள் கவனம் செலுத்தும் துறைகள் மீது ஒதுக்கப்படும் வளங்களின் பற்றாக்குறை காரணாமாக ஏற்படும் சேவை வழங்காமையை அடிப்படையாகக் கொண்டு பெண்களை விமர்சிக்கின்றனர். இது பணியின் மீதான அவர்களின் முழு திறனையும் உணர்ந்துகொள்ள உதவவில்லை. அரசியலில் பெண்கள் தமது இருப்பை தக்கவைத்துக்கொள்ள அவர்களின் தீர்மானமெடுக்கும் திறனை பாதிக்கும் இவ்வாறான சிக்கல்கள் தீர்க்கப்படவேண்டும். அவர்களின் நிலையை மேம்படுத்தவும், அரசியல்வாதியாக அவர்களின் பங்கை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லவும் நாம் அவர்களுக்கு கைகொடுக்க வேண்டும். வேட்புமனுக்களைப் பெறுவதற்கும், அரசியல் அரங்கில் சமமான பங்கேற்பாளர்களாக தங்கள் உரிமைகளைப் பெறுவதற்கும், தேர்தல்களின் போதும் அதற்கு அப்பாலும் மூலோபாய தீர்மானம் எடுப்பவர்களாக இருப்பதற்கும், இந்த நாட்டின் வளர்ச்சிக்கும் நிர்வாகத்திற்கும் பங்களிப்பதற்கும் அவர்களை ஊக்குவிக்க இது சிறந்த வழியாகும்”.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks