E   |   සි   |  

பாராளுமன்றத்தில் சைகை மொழியைப் பயன்படுத்துவதற

நாட்டில் வாழும் கேட்டல் குறைபாடு உள்ள சமூகத்தினருக்கு பாராளுமன்ற அமர்வுகள் சைகை மொழியில் ஒளிபரப்பப்பட வேண்டும் என பாராளுமன்றத்தின் பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் முன்வைத்த பரிந்துரைக்கு சாதகமான பதிலை வழங்கியமை தொடர்பில் கௌரவ சாபாநாயகருக்குத் தமது நன்றியைத் தெரிவிப்பதாக குறித்த ஒன்றியத்தின் தலைவி வைத்திய கலாநிதி சுதர்ஷினி பெர்னாந்துபுள்ளே குறிப்பிட்டார்.

அண்மையில் (09) பாராளுமன்றத்தில் நடைபெற்ற பாராளுமன்றத்தின் பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் கூட்டத்திலேயே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு நன்றி தெரிவித்தார்.

இதற்கமைய இவ்வருட வரவுசெலவுத்திட்ட விவாதத்தை சைகை மொழியிலும் ஒளிபரப்புவதற்கு கௌவர சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்கள் முன்வைத்த யோசனைக்கு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு இணக்கம் தெரிவித்திருந்தது. இதன்படி எதிர்வரும் 12ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள வரவுசெலவுத்திட்டம் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்படும் போதும், வரவுசெலவுத்திட்ட விவாத காலப்பகுதியில் இடம்பெறும் நேரடிய ஒளிபரப்பிற்கு சமாந்தரமாக சைகை மொழிக்குத் தனியான கட்டமொன்று வழங்கப்படவுள்ளது.

நாட்டில் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும்போது நாட்டிலுள்ள அனைத்துத் தரப்பினருக்கும் பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் குறித்துத் தெரியப்படுத்துவதுடன், குறைபாடுகளுடன் கூடிய நபர்கள் பாராளுமன்றத்துக்கு வருவதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பில் பாராளுமன்றத்தின் பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை எதிர்வரும் காலத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்ப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

அரசாங்க சேவையில் உள்ள இளம் பெற்றோரின் வசதிகளுக்காக சகல அரசாங்க நிறுவனங்களுக்கும் இணைந்ததாக பகல்நேர பராமரிப்பு நிலையங்களை அமைப்பதன் அவசியமும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. இதன் ஊடாக அரசாங்க நிறுவனங்களை வினைத்திறன் மிக்கதாகவும் தரம் மிக்கதாகவும் அபிவிருத்தி செய்ய முடியும் என பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

துஷ்பிரயோகம் தொடர்பில் நாட்டில் சட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது பெண்கள் மற்றும் சிறுவர்கள் பாதிக்காத வகையில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான முறைமையொன்று தயாரிக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் உறுப்பினர்கள் வலியுறுத்தினர். விசேடமாக வீடியோ தொழில்நுட்பத்தின் ஊடாக சாட்சியங்களைப் பதிவுசெய்யும் நடவடிக்கைகள் மேலும் சீர் செய்யப்பட வேண்டும் எனவும் இங்கு குறிப்பிடப்பட்டது.

அதேநேரம், சுகாதார அமைச்சின் புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் தேசிய திட்டத்தின் ஊடாக இலங்கையில் புற்றுநோய் ஆபத்தைக் குறைத்தல் மற்றும் முற்கூட்டியே அதனைக் கண்டுபிடிப்பது தொடர்பில் தெளிவுபடுத்தும் நிகழ்ச்சிகளை முன்னெடுப்பதற்கும், இதற்காக அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கவும் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்தனர்.

இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான தலதா அத்துகோரல, ரோஹினி விஜேரத்ன, கீதா குமாரசிங்ஹ, டயானா கமகே, ஒன்றியத்தின் செயலாளரும், பாராளுமன்ற பணியாட் தொகுதியின் பிரதானியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான குஷானி ரோஹனதீர ஆகியோரும் கலந்துகொண்டனர்.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks