E   |   සි   |  

2021-08-04

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

நீதிமன்ற கட்டமைப்பை மேலும் வினைத்திறன் மிக்கதாக மாற்ற மூன்று வருட விசேட திட்டம் – நீதி அமைச்சர் அலி சப்ரி

நீதிமன்ற கட்டமைப்பில் தற்பொழுது காணப்படும் நெருக்கடிகளைக் குறைத்து விரைவில் வழக்குகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு மூன்று வருட விசேட திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாக நீதி அமைச்சர் அலி சப்ரி அவர்கள் நேற்று (03) நடைபெற்ற நீதி அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் தெரிவித்தார்.

மேல் மாகாணத்தில் புதிய நீதிமன்றத்தை அமைப்பதற்கும் தற்பொழுது காணப்படும் நீதிமன்றங்களின் அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்வது தொடர்பான மூன்று வருட விசேட திட்டம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான லொஹான் ரத்வத்த, சுசில் பிரேமஜயந்த, பியல் நிஷாந்த மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் திஸ்ஸ விதாரன, சாஹர காரியவசம், ஜனாதிபதி சட்டத்தரனி ஜயந்த வீரசிங்ஹ, மர்ஜான் பளீல், சந்திம வீரக்கொடி மற்றும் கோகிலா குணவர்த்தன ஆகியோர் கலந்துகொண்டனர்.

உலகில் அபிவிருத்தியடைந்த நாடுகளின் சனத்தொகையில் ஒரு மில்லியன் பேருக்கு 200ற்கும் அதிகமான நீதிபதிகள் காணப்படுவதாகவும், இலங்கையில் இந்த எண்ணிக்கை 15 ஆகக் காணப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். இதற்கமைய நீதிபதிகளின் எண்ணிக்கையை 218 ஆக உயர்த்துவதற்கும், நீதிமன்றங்களின் எண்ணிக்கையை 245ஆக அதிகரிப்பதற்கும் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன், நீதிபதிகளுக்கு அவசியமான அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கும், இதனை எதிர்வரும் இரண்டு வருடங்களில் ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டார்.

தொழில்நுட்ப வசதிகள் நிறைந்த நீதிமன்றக் கட்டமைப்பை உருவாக்கும் திட்டத்தின் கீழ் நீதிமன்றக் கட்டமைப்பு டிஜிட்டல் மயப்படுத்தும் வேலைத்திட்டம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும், E-Filing  முறைமை மற்றும் வீடியோ தொழில்நுட்பத்தின் ஊடாக நீதிமன்ற அமர்வுகளை நடத்துவதற்கு தொழில்நுட்ப வசதிகளை வழங்கும் நிறுவனத்துடன் ஏற்கனவே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருப்பதாகவும் இங்கு புலப்பட்டது.

மத்தியஸ்த சபையை பலப்படுத்தவும், இவற்றின் ஊடாக தீர்க்கப்படும் பிரச்சினைகளின் எண்ணிக்கையை அடுத்த வருடத்தில் இரண்டு மடங்காக அதிகரிப்பதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் காணிப் பிணக்குகளைத் தீர்ப்பதற்கான காணி மத்தியஸ்த சபையை யாழ்ப்பாணம், அநுராதபும், திருகோணமலை, மட்டக்களப்பு, கிளிநொச்சி உள்ளிட்ட பிரதேசங்களில் அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

நீதித்துறையை மறுசீரமைப்பதற்கு நிபுணர்கள் குழுக்கள் சில அமைக்கப்பட்டிருப்பதுடன், உயர் நீதிமன்ற நீதிபதி சமயவர்த்தன தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை இதுவரை கிடைக்கப்பட்டிருப்பதாகவும், இதற்கு அமைய புதிய நீதிமன்றங்களை அமைப்பது உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் இங்கு சுட்டிக்காட்டினார்.

இந்தக் குழுவின் பரிந்துரைக்கு அமைய மேல் மாகாணத்தில் மஹர மாவட்ட நீதிமன்றம், மீரிகம மாவட்ட நீதிமன்றம் மற்றும் மஜிஸ்திரேட் நீதிமன்றம், வெலிசர மாவட்ட நீதிமன்றம், பேருவளை மஜிஸ்திரேட் நீதிமன்றம், களுத்துறை மீஹகத்தென்ன மஜிஸ்திரேட் நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் இங்கு வெளிப்பட்டது.

நீதிமன்றங்களில் தற்பொழுது காணப்படும் பிரச்சினைகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் கருத்துக்களை முன்வைத்தனர். இவற்றை புனரமைப்பதற்கு இந்த மூன்று வருட விசேட திட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.

பாரிய நிதி மோசடி மற்றும் சிறிய நிதி மோசடி வழக்குகள் ஒரே நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுவதால் ஏற்படும் காலதாமதத்தைக் குறைப்பதற்கு நிதி மோசடிகள் தொடர்பில் வழக்குகளை முடிவுக்குக் கொண்டுவரும் போது 1.5 மில்லியன் ரூபா நிதி மோசடிகளுக்கான வழக்குகளுக்கு தனியான நீதிமன்றம் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தண்டனைக்கு பதிலாக செயல்படுத்தப்படும் சமூக சீர்திருத்த செயல்முறையின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அமைச்சர், சமூக சீர்திருத்தத்தை மேம்படுத்த அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றார்.

நீதிமன்றங்கள் பலவற்றை ஒரே கூரையின் கீழ் கொண்டுவந்து ஏற்கனவே கொழும்பு புதுக்கடை பிரதேசத்தில் கட்டப்பட்டுவரும் நீதிமன்ற வளாகத்தைப் பூர்த்தி செய்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இது 6.5 ஏக்கர் பரப்பளவில் ஒரே இடத்தில் அதிக எண்ணிக்கையிலான நீதிமன்றங்களைக் கொண்டதாக இந்த நீதிமன்ற வாளாகம் அமைக்கப்படுகிறது. இதில் நீதி அமைச்சும் நிறுவப்படும் மற்றும் நீதிபதிகளுக்காக 50 வீடுகளும் கட்டப்படும். நான்கு கட்டங்களாக செயல்படுத்தப்படும் திட்டத்தின் கட்டுமானப் பணிகளை தனிப்பட்ட முறையில் கண்காணித்து வருவதாகவும், பணிகள் விரைவில் முடிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன், புதுக்கடை நீதிமன்ற கட்டடத்தொகுதியை புனரமைக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். இந்த நோக்கத்திற்காக சீன அரசாங்கம் சுமார் 500 மில்லியன் யுவான் மானியம் வழங்கியிருந்தாலும், 2010 ஆம் ஆண்டு முதல் தாமதமாகி வரும் பணியை மேற்கொள்வது சாத்தியமாகியுள்ளது என்று அமைச்சர் கூறினார்.

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்கு நடவடிக்கைகளை விரைவில் முன்னெடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த இங்கு விளக்கமளித்தார். பிரதம நீதியரசர் அண்மையில் இது தொடர்பில் விசேட சுற்றுநிருபமொன்றை வெளியிட்டிருப்பதாகவும், இதற்கு அமைய சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பான வழக்குகளை விரைவில் முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

நீதி அமைச்சின் செயலாளர் எம்.பி.கே.மாயாதுண்ண உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

 

1 2

 



தொடர்புடைய செய்திகள்

2025-11-22

நிதி அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் மூன்றாவது காலாண்டுக்கான செயலாற்றுகை தொடர்பில் அரசாங்க நிதி பற்றிய குழுவில் ஆராயப்பட்டது

2024ஆம் ஆண்டு 44ஆம் இலக்க பகிரங்க நிதிசார் முகாமைத்துவச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய அரசாங்க நிதி பற்றிய குழுவினால் அங்கீகரிக்கப்பட வேண்டிய 8 அறிக்கைகளுக்கும் அனுமதி நிதி அமைச்சின் கீழ் முக்கிய வருமானம் ஈட்டும் நிறுவனங்களில் 2025 செப்டெம்பர் மாதம் வரையில் மொத்த நிதிச் செயற்பாடுகள் குறித்து அரசாங்க நிதி பற்றிய குழுவில் கவனம் செலுத்தப்பட்டது. கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்களின் தலைமையில் அண்மையில் (நவ. 20) கூடிய அரசாங்க நிதி பற்றிய குழுவில் இது பற்றி ஆராயப்பட்டது.  இதற்கமைய உள்நாட்டு இறைவரித் திணைக்களம், இலங்கை மதுவரித் திணைக்களம் மற்றும் இலங்கை சுங்கத் திணைக்களம் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாகரிகள் ஒவ்வொரு நிறுவனத்தின் முன்னேற்றம் குறித்த விளக்கத்தை முன்வைத்தனர். அத்துடன், அரசாங்க பொதுப்படுகடன் முகாமைத்துவ அலுவலகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி குழுவில் கலந்துகொண்ட அதிகாரிகள், 2026-2030 ஆண்டு காலப்பகுதிக்கான இடைக்கால படுகடன்முகாமைத்துத்துக்கான வழிகாட்டல் மற்றும் 2026-2030 ஆண்டு காலப்பகுதிக்கான படுகடன் திட்டங்கள் குறித்து விளக்கமளித்தனர். இலங்கை முதலீட்டுச் சபையைப் பிரதிநிதித்துவப்படுத்திய அதிகாரிகள் தமது நிறுவனத்தின் முன்னேற்றம் குறித்து குழுவுக்கு விளக்கமளித்தனர். நேரடியான வெளிநாட்டு முதலீடு குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், 2025 ஜனவரி முதல் செப்டம்பர் வரை 827 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நேரடி வெளிநாட்டு முதலீடுகளாகப் பெறப்பட்டுள்ளது என அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். அதன்படி, எதிர்வரும் ஆண்டுகளில் வெளிநாட்டு முதலீடு தொடர்ந்து மேம்படுவதை உறுதிசெய்ய இலங்கை முதலீட்டுச் சபையும் அதனுடன் சம்பந்தப்பட்ட  ஏனைய நிறுவனங்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குழு வலியுறுத்தியது. அத்துடன், 2024ஆம் ஆண்டு 44ஆம் இலக்க பகிரங்க நிதிசார் முகாமைத்துவச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய அரசாங்க நிதி பற்றிய குழுவினால் அங்கீகரிக்கப்பட வேண்டிய 8 அறிக்கைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டது.  இந்தக் கூட்டத்தில் கௌரவ பிரதி அமைச்சர்களான சதுரங்க அபேசிங்க, நிஷாந்த ஜயவீர கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க மற்றும் (சட்டத்தரணி) சித்ரால் பெர்னாந்து உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


2025-11-22

இலங்கை நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை பற்றிய உத்தேச சட்டமூல வரைபு ஆவணம் தொடர்பில் பாராளுமன்ற குழுக்களின் கவனத்திற்கு

எதிர்வரும் காலத்தில் அமைச்சரவையின் அனுமதியை அடுத்து பாராளுமன்றத்திற்கு சமர்பிக்கப்படவுள்ள நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை பற்றிய வரைபு ஆவணம் தொடர்பில் பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு, நுண்நிதிக் கடன் வழங்கல் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான எதிர் கால நடவடிக்கைகள் தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் உப குழு மற்றும் பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் இணைந்து விரிவாகக் கலந்துரையாடின.  அந்தக் குழுக்களின் தலைவர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) லக்மாலி ஹேமசந்திர மற்றும் சமன்மலீ குணசிங்க ஆகியோரின் தலைமையில் அண்மையில் (நவ. 20) பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த விடயம் கலந்துரையாடப்பட்டது. இக்கூட்டத்தில் இலங்கை மத்திய வங்கி மற்றும் திறைசேரியின் நீதி அலுவல்கள் திணைக்களத்தின் அதிகாரிகள் சிலரும் கலந்துகொண்டனர்.  இங்கு கருத்துத் தெரிவித்த அதிகாரிகள், இந்த உத்தேச சட்டமூலம் தொடர்பான முதலாவது சட்டமூலம் 2024 ஜனவரி மாதத்தில் வெளியிடப்பட்டதாகத் தெரிவித்தனர். அதன்போது, சட்டமூலம் மீது உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் முன்வைக்கப்பட்டதுடன், அதற்கமைய உயர் நீதிமன்றத்தினால் உள்வாங்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்ட திருத்தங்கள், சட்டமூலத்தின் குழு நிலையின் போது மேற்கொள்ளப்படுவதாக நிதி அமைச்சினால் உயர் நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்ட திருத்தங்கள் மற்றும் கொள்கை ரீதியாக உள்வாங்கப்படவேண்டிய ஏனைய திருத்தங்கள் சேர்க்கப்பட்டு புதிய சட்டமூலம் வரைபு செய்யப்பட்டு வர்த்தமானி தயாரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர். அதற்கமைய, இந்தச் சட்டமூலத்தை பத்தாவது பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாக அந்த அதிகாரிகள் குறிப்பிட்டனர்.  அதற்கமைய, இந்தச் சட்டமூலத்தின் ஊடாக இலங்கை நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையை நிறுவுதல், பணக் கடன் வழங்கும் தொழில் மற்றும் நுண்நிதித் தொழில் என்பவற்றை ஒழுங்குபடுத்தல், அவற்றின் வாடிக்கையாளர்களுக்குப் பாதுகாப்பை வழங்குதல் மற்றும் 2016 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க நுண்நிதியளிப்புச் சட்டத்தை நீக்குவதற்கும் எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.  இந்த ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையின் பணிப்பாளர்கள் சபையின் அமைப்பு தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், பணிப்பாளர்கள் சபையின் அமைப்பில் நுண்நிதித் தொழில் வாடிக்கையாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் உறுப்பினர் ஒருவர் உள்வாங்கப்படாமை பிரச்சினைக்குரியது என கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (சட்டத்தரணி) லக்மாலி ஹேமசந்திர சுட்டிக்காட்டினார். விசேடமாக நுண்நிதித் தொழிற்துறைக்கு ஒழுங்குபடுத்தல் இல்லாததால் பெண்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், அவர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் பணிப்பாளர் சபை உறுப்பினர் ஒருவர் இருப்பதன் முக்கியத்துவத்தை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். அதற்கமைய, பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழு அல்லது மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் பிரதிநிதி ஒருவர் அல்லது அந்த விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சின் செயலாளர் இந்தப் பணிப்பாளர் சபையில் அங்கத்தவராக இருப்பது பொருத்தமாகும் என கௌரவ உறுப்பினர்களின் கருத்தாக இருந்தது.  அத்துடன், இந்த வரைபு ஆவணத்தில் உள்ளடங்கப்பட்டுள்ள ஏனைய விடயங்கள் தொடர்பிலும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், எந்தவொரு ஒழுங்குபடுத்தலும் இன்றி நுண்நிதித் தொழிற்துறை கீழ் மட்டத்தில் செயற்படுவதால் பாரியதொரு சமூக நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய குழு, அந்த சமூக நெருக்கடியையும் பாதிப்பையும் தவிர்ப்பதே இதன் குறிக்கோளாக இருக்க வேண்டும் என வலியுறுத்தியது. அதற்கமைய, எதிர்வரும் காலத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ள சட்டமூலத்துக்குத் தேவையான திருத்தங்களை உள்வாங்குமாறு அதிகாரிகளுக்குக் குழு அறிவுறுத்தியதுடன், சம்பந்தப்பட்ட திருத்தங்களை சட்டமூலத்தின் குழு நிலையின் போது முன்வைக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.  இந்தக் கூட்டத்தில் பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் உறுப்பினர்கள், பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் அங்கத்தவர்கள், நுண்நிதிக் கடன் வழங்கல் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான எதிர் கால நடவடிக்கைகள் தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் உப குழு உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் சிலரும் கலந்துகொண்டனர்.


2025-11-21

மனிதர்கள் என்ற ரீதியில் மனிதர்களுக்குச் சேவை செய்யக் கூடிய சிறந்த மனம் கொண்ட சமூகத்தை உருவாக்குவது எமது அரசியலின் நோக்கமாகும் – மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்

மனிதர்கள் என்ற ரீதியில் மனிதர்களுக்குச் சேவை செய்யக் கூடிய சிறந்த மனம் கொண்ட சமூகத்தை உருவாக்குவது எமது அரசியலின் நோக்கமாகும்  என பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவரும், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் கௌரவ அமைச்சருமான சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார். பிரதேச அரசியலில் பிரதிநிதித்துவம் இல்லாத பெண்கள் குழுக்களை அரசியல் ரீதியாக உள்ளடக்கப்படுவதை அதிகரிப்பது குறித்து கடந்த நவ. 17ஆம் திகதி கூடிய பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தில் கலந்துரையாடியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நாட்டில் வாழும் சிறப்புக் குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் வேட்புமனு செயல்முறையை மேலும் விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் கவனம் செலுத்தியது. அத்துடன், நவம்பர் 25ஆம் திகதி முதல் டிசம்பர் 10ஆம் திகதி வரையான பதினாறு நாட்கள் பாலின அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிரான உலகளாவிய செயற்பாட்டுக்கான நாட்களாக அனுஷ்டிக்கப்படும் நிலையில், இதற்கு சமாந்தரமாக பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் தலைமையில் முன்னெடுக்கப்படவுள்ள செயற்பாடுகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் பிரதிநிதிகளுடன் இங்கு கலந்துரையாடப்பட்டது.  ஒன்றியத்தின் உறுப்பினர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, சமன்மலி குணசிங்ஹ, கிருஷ்ணன் கலைச்செல்வி, ஏம்.எம்.எம்.எம் ரத்வத்த, (சட்டத்தரணி) ஹிருணி விஜேசிங்க, (சட்டத்தரணி) ஹசாரா லியனகே, (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர, (சட்டத்தரணி) கீதா ஹேரத், (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்க உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.


2025-11-20

பாராளுமன்ற குழுக்களின் பரிந்துஐரகள் நடைமுறைப்படுத்தப்படாமை குறித்து மதிப்பாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சை அழைத்தது

பாராளுமன்றத்தின் பொதுமனுக்கள் பற்றிய குழுவினால் வழங்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் காணப்படும் காலதாமதங்கள் தொடர்பில் கலந்துரையாடும் நோக்கில் பாராளுமன்ற குழுக்களின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படாமை குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் அதிகாரிகளை அழைத்திருந்தது. கடந்த நவ. 13ஆம் திகதி இந்தக் குழு அதன் தலைவர் கௌரவ நீதி அமைச்சர் (சட்டத்தரணி) ஹர்ஷன நாணயக்கார அவர்களின் தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே அமைச்சின் அதிகாரிகள் அழைக்கப்பட்டிருந்தனர். இதற்கமைய, குழுக்களினால் வழங்கப்படும் சில பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் நடைமுறைச் சிக்கல்கள் காணப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதேபோன்று, சில பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குழுவில் எடுத்துக் கூறினர். இருப்பினும், சில பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் போது எழும் சிக்கல்கள் குறித்து மனுதாரரின் கருத்துகளையும் பெற வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது, அதன்படி, மனுதாரர்களை வேறொரு திகதியில் குழு முன்னிலையில் அழைப்பதற்கும் முடிவுசெய்யப்பட்டது. இக்கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர் (சட்டத்தரணி) சுனில் வட்டகல, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) அஜித் பி.பெரேரா, ரவி கருணாநாயக்க மற்றும் ஒஷானி உமங்கா ஆகியோர் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks