E   |   සි   |  

2021-11-29

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

பத்து வருடங்களாக காலதாமதமாகும் கல்பிட்டி தீவுகளை சுற்றுலாக் கைத்தொழிலுக்குப் பயன்படுத்துவதற்கான உடனடி வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவும் - கோப் குழு, சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபைக்குத் தெரிவிப்பு

கற்பிட்டியில் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் உள்ள 12 தீவுகளை சுற்றுலா கைத்தொழிலுக்குப் பயன்படுத்துவது தொடர்பான வேலைத்திட்டத்தை விரைவில் தயாரிக்குமாறு அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (கோப் குழுவின்) தலைவர் பேராசிரியர் சரித ஹேரத், சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் மற்றும் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபைக்குத் தெரிவித்தார்.

2055 ஏக்கரைக் கொண்ட 12 தீவுகளில் 5 தீவுகளுக்காக 2011ஆம் ஆண்டு முதலீடு செய்ய முன்வந்தபோதும் நீர் பங்களா திட்டத்துக்கு (Water Bungalows) அனுமதி பெற்றுக்கொள்ள உரிய நிறுவனத்தை அடையாளம் கண்டுகொள்ள முடியாததால் இது காலதாமதமடைந்துள்ளது என்பது இங்கு தெரியவந்தது. மாலைதீவில் இந்த வகையிலான ஹோட்டல்களைக் கொண்டுள்ள இந்த முதலீட்டாளருக்கு அனுமதியை வழங்காது 10 வருடங்கள் காலதாமதம் ஆகியிருப்பது சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கும், நாட்டின் அபிவிருத்திக்கும் தடையாக இருப்பதாக கோப் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

இந்த அழகிய தீவை சுற்றுலாத்துறைக்குப் பயன்படுத்துவதன் அவசியம் குறித்து கோப் குழுவின் தலைவர் வலியுறுத்தினார். இதற்காக ஏற்கனவே அமைச்சரவையின் அனுமதி கிடைத்திருப்பதாகவும், கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை, மத்திய சுற்றாடல் அதிகாரசபை, வடமேல் மாகாணசபை, கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வள முகாமைத்துவத் திணைக்களம் போன்ற சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய வழிநடத்தல் குழுவொன்றை அமைத்து பலமான சட்டக் கட்டமைப்பின் கீழ் விசேட செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்துமாறும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் எஸ்.ஹெட்டியாராச்சி மற்றும் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் கிமாலி பெர்னாந்து ஆகியோருக்கு கோப் குழுவின் தலைவர் தெரிவித்தார்.

சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை குறித்து ஆராயும் நோக்கில் பேராசிரியர் சரித ஹேரத் தலைமையில் அண்மையில் (26) நடைபெற்ற கோப் குழுக் கூட்டத்திலேயே இந்த விடயங்கள் புலப்பட்டன.

அத்துடன், சில வருடங்களுக்கு முன்னர் கதிர்காமம் சுற்றுலா விடுதியைப் புனரமைப்பதற்காக செலவு செய்யப்பட்ட 29 மில்லியன் ரூபாவில் 11 மில்லியன் ரூபா செய்யாத வேலைக்காக கொடுக்கப்பட்டமை குறித்த கணக்காய்வின் அவதானம் குறித்தும் குழு கவனம் செலுத்தியது. மீண்டும் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் ஊடாக இந்த 11 மில்லியன் ரூபாவின் பெறுமதி 4.8 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. இருந்தபோதும் இச்சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபர் விசாரணைகளை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குமாறு பொது நிர்வாக அமைச்சினால் நியமிக்கப்பட்ட குழு பரிந்துரைத்த போதிலும் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டது. மாறாக, சம்பவத்துடன் தொடர்புடைய அதிகாரிக்கு எச்சரிக்கைக் கடிதம் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் வெளிப்படுத்தியதோடு, இது தொடர்பில் குழு கடும் அதிருப்தியை வெளியிட்டது. இது தற்போதுள்ள நிர்வாகத்தின் மீதான விமர்சனம் அல்ல என்றும், நீண்டகாலமாக இருக்கும் இந்த முறையை மாற்றி, கணக்காய்வின் அவதானிப்புக்கள் மற்றும் பரிந்துரைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசாங்க நிறுவனங்களின் பொறுப்பு என்றும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், கல்பிட்டிய தோரையடி ஜெட்டி மற்றும் வன்னிமுந்தலம் களப்பு ஆகியவற்றை அண்மித்த பகுதியில் வீதியமைப்பதற்காக மேலதிகமாக 10 மில்லியன் ரூபா வழங்கப்பட்டமை குறித்தும் குழு கேள்வியெழுப்பியது. இது தொடர்பில் புத்தளம் மாவட்ட பொறியியலாளரிடம் வினவியபோது உரிய ஆவணங்கள் அவர்களிடம் இல்லாத காரணத்தினால் மேலதிக நடவடிக்கை எடுக்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகார சபை பதிலளித்தது. இது தொடர்பில் ஆராய்வதற்காக 2016 ஆம் ஆண்டு கோப் குழு பரிந்துரையொன்றை முன்வைத்திருந்தபோதும், 2018 ஆம் ஆண்டிலேயே விசாரணை ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக கணக்காய்வாளர் நாயகம் தெரிவித்தார். இது தொடர்பில் தனது அதிருப்தியை வெளிப்படுத்திய கோப் தலைவர், நாட்டின் நிதிக் கட்டுப்பாடு பாராளுமன்றத்திடமிருக்கும் நிலையில் அதனால் முன்வைக்கப்படும் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு அரச நிறுவனங்கள் கட்டுப்பட்டிருப்பதால், உடனடியாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றார்.

2018-2019 ஆம் ஆண்டில் சுற்றுலா அபிவிருத்திக்காக 1.2 பில்லியன் ரூபா செலவிடப்பட்ட போதிலும், 1.9 மில்லியன் சுற்றுலாப் பயணிகளே நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் கிமாலி பெர்னாந்து தெரிவித்தார். அதன்படி தற்போது சுற்றுலாத்துறையின் முன்னேற்றத்திற்காக தனித்தனியாக செயற்படும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை, இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் மற்றும் இலங்கை மாநாட்டு பணியகம் ஆகியவற்றை இணைத்து தனியான நிறுவனமொன்றை உருவாக்கவிருப்பதாகவும், ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனம் ஒன்றை தனியாக செயற்படுத்தத் திட்டமிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பான புதிய சட்டமூலத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ள நிலையில் மார்ச்-ஏப்ரல் மாதத்திற்குள்  இதனைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடியும் என அமைச்சின் செயலாளர் தெரிவித்தார். மேலும் வினைத்திறன் மிக்க பொறிமுறை தேவையென்றால், அமைச்சுக்கள் மற்றும் அவற்றின் நிறுவனங்களின் பணிகளை துரிதப்படுத்துமாறு கோப் தலைவர் அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்தார்.

மாலைதீவு தற்போது சுற்றுலாத்துறையில் விரைவான வளர்ச்சியை அனுபவித்து வரும் நிலையில் இந்நிலைக்கு இலங்கை செல்வதில் காணப்படும் தடைகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.  இங்கு கிமாலி பெர்னாந்து கருத்துத் தெரிவிக்கையில், மாலைதீவு சுற்றுலாத்துறையில் அதிக விலையுள்ள சொகுசு ஹோட்டல்கள் மட்டுமே செயலில் உள்ளமை, உளகளாவிய ரீதியில் காணப்படும் தொடர்புகள் மூலம் ஊக்குவிப்புக்களை மேற்கொள்ளல், சர்வதேச மட்டத்தில் 15 விசேட நிபுணர்களைக் கொண்ட சிறிய குழுவின் ஊடாக இதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றமை, முன்னணி சர்வதேச முதலீட்டாளர்களைக் கொண்டு வருதல் போன்ற விடயங்களின் ஊடாக இத்துறையில் அவர்களால் முன்னேற்றம் காண முடிந்துள்ளது என்றார். கொவிட் தொற்றுநோய்க்கு முகங்கொடுத்து நாட்டில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதில் இந்த நிறுவனம் பெரும் பங்காற்றியுள்ளது என்றும் தலைவர் தெரிவித்தார்.கொவிட் நிலையில் ஹோட்டல் உரிமையாளர்களுக்கு பயிற்சி அளிப்பதில் தமது நிறுவனம் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளதாகவும், தற்போது ஒன்லைனில் பதிவு செய்யும் செயல்முறையை முழுமையாகப் பூர்த்திசெய்ய முடிந்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

சுற்றுலாத்துறையின் முன்னேற்றத்திற்காக பல பிரதேசங்களில் காணிகள் உட்பட சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான சொத்துக்களை மிகவும் பயனுள்ள வகையில் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் கோப் குழு வலியுறுத்தியுள்ளது.

இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந், பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், ஜகத் புஷ்பகுமார, நளின் பண்டார, எஸ்.எம்.மரிக்கார், மதுர விதானகே, பிரேம்நாத் சி.தொலவத்த மற்றும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

 

1

2

4

 



தொடர்புடைய செய்திகள்

2025-02-16

உள்ளூர் அதிகாரசபைகளுக்கான தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலத்திற்கு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அங்கீகாரம்

உள்ளூர் அதிகாரசபைகளுக்கான தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலத்திற்கு பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அனுமதி வழங்கப்பட்டது. பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி கௌரவ அமைச்சர் (பேராசிரியர்) ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன அவர்கள் தலைமையில் இன்று (14) பாராளுமன்றத்தில் கூடிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே  இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது. அத்துடன், வரையறுக்கப்பட்ட தொலைக் கல்வி நிலையத்தின் 2021 மற்றம் 2022ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கையும் இங்கு ஆராயப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர் ருவன் செனரத் உள்ளிட்ட பிரதியமைச்சர்கள், கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் குழுவின் உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


2025-02-13

இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் - கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் தலைவர்

சதொச வலையமைப்பு மூலம் மீன்களை விற்பனை செய்வதற்காக கடற்றொழில் மற்றும் வர்த்தக அமைச்சுக்களுக்கிடையில் கூட்டுத் திட்டம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள துறைமுகங்களை புனரமைத்தல் தொடர்பில் கடற்றொழில் அமைச்சு கவனம் - குழுவின் தலைவர்   இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் கௌரவ அமைச்சர்  ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டம் அமைச்சரின் தலைமையில் அண்மையில் (பெப். 07) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது. இதன்போது கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் கௌரவ பிரதி அமைச்சர்   ரத்ன கமகேவும் கலந்துகொண்டார். அதற்கமைய, இந்திய மீனவர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தமிழகத்துடனும் இந்திய உயர்ஸ்தானிகருடனும் அவசியமான கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாக கௌரவ அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். இந்நாட்டு மீனவர்களைப் பாதித்துள்ள இந்தப் பிரச்சினைக்கு முரண்பாட்டு வழியிலல்லாமல் உடனடியாக தீர்வுகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். அத்துடன், சதொச வலையமைப்பு மூலம் மீன்களை விற்பனை செய்வதற்காக கடற்றொழில் மற்றும் வர்த்தக அமைச்சுக்களுக்கிடையில் கூட்டுத் திட்டமொன்றை ஆரம்பித்தல் தொடர்பில் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இங்கு உரையாற்றிய வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி கௌரவ அமைச்சர் வசந்த சமரசிங்க, எதிர்காலத்தில் சதொச வர்த்தக நிலையங்களை  விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கமைய, மீன்களை விற்பனை செய்யத் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய  முடியும் எனத் தெரிவித்தார். சதொச வர்த்தக நிலையங்கள் ஊடாக மீன்களை விற்பனை செய்வதற்குத் தேவையா நடவடிக்கையை விரைவாக எடுக்க எதிர்பார்ப்பதாக இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் இதன்போது தெரிவித்தனர். அதற்கமைய, நுகர்வோர் எளிதாக சமைக்கும் வகையில், மீன் வகைகளை பொதி செய்து வழங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர். இந்தக் கூட்டத்தில், நாடு முழுவதும் காணப்படும் கடற்றொழில் தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் குறித்து கௌரவ உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர். தடைசெய்யப்பட்ட வலைகள் மற்றும் டைனமைட்டைப் பயன்படுத்தி மீன்பிடித்தல், நன்னீர் மீன்பிடித் தொழில் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் நாட்டின் துறைமுகங்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், இந்தப் பிரச்சினைகள் தொடர்பாகத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். மேலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள துறைமுகங்களை புனரமைப்பதில் அமைச்சு  அதிக கவனம் செலுத்தி வருவதாகவும், பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குழுவின் தலைவர்  தெரிவித்தார். அத்துடன், 2021 ஆம் ஆண்டிற்கான இலங்கை கடற்றொழில் துறைமுகங்கள் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை மற்றும் 2023 ஆம் ஆண்டிற்கான கடற்றொழி மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் வருடாந்த செயல்திறன் அறிக்கை என்பனவும் குழுவில் பரிசீலிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டன. இந்தக் கூட்டத்தில் கௌரவ அமைச்சர்கள், கௌரவ பிரதி அமைச்சர்கள், குழுவின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


2025-02-13

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் கௌரவ பிரதமர் தலைமையில் எதிர்காலத் செயற்திட்டங்கள் குறித்துக் கலந்துரையாடியது

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் எதிர்காலச் செயற்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடும் கூட்டம் கௌரவ பிரதமர் (கலாநிதி) ஹரினி அமரசூரிய மற்றும் ஒன்றியத்தின் தலைவர் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் ஆகியோரின் தலைமையில் 2025.02.07ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்றது. மாகாண மட்டத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் 25%ஆக வரும் வகையில் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் ஒன்றியத்தில் கலந்துரையாடப்பட்டது. அதற்கமைய, எதிர்வரும் தேர்தலில் அந்த முன்மொழிவை செயற்படுத்தும் வகையில் தற்பொழுது காணப்படும் சட்டத்தில் தேவையான திருத்தங்களைக் கொண்டுவருவதற்கான அவசியம் தொடர்பில் ஒன்றியத்தில் கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களில் பெண்களை நியமிப்பது தொடர்பிலும் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது தொடர்பிலும் கோரிக்கை விடுப்பதற்காக அரசியல் கட்சிகள் மற்றும் கட்சிகளின் செயலாளர்களை சந்திப்பதற்கும் பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் தீர்மானித்தது. பணியிடங்களில் பாலியல் வன்முறையை ஒழித்தல் மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளை (SGBV) இல்லாமல் செய்வது போன்ற விடயங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. அத்துடன், மார்ச் 8ஆம் திகதி இடம்பெறும் சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் திட்டங்கள் தொடர்பிலும் ஒன்றியத்தில் கவனம் செலுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே மற்றும் சமன்மலீ குணசிங்ஹ, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி சாகரிகா அதாவுத, கலாநிதி கெளஷல்யா ஆரியரத்ன, ஒஷானி உமங்கா, கிருஷ்ணன் கலைச்செல்வி, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, எம்.ஏ.சீ.எஸ். சத்துரி கங்கானி, நிலூஷா லக்மாலி கமகே, சட்டத்தரணி துஷாரி ஜயசிங்ஹ, ஏ.எம்.எம்.எம். ரத்வத்தே, தீப்தி வாசலகே, சட்டத்தரணி ஹிருனி விஜேசிங்ஹ, அம்பிகா சாமிவெல் மற்றும் சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர ஆகியோர் கலந்துகொண்டனர்.


2025-02-07

வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சுசார் ஆலோசனைக் குழு மற்றும் அரசாங்க நிதி பற்றிய குழு இணைந்து கூடின

மஹாபொல புலமைப்பரிசிலை காலதாமதம் இன்றி முறையாக வழங்க நடவடிக்கை – புலமைப்பரிசில் தொகையை அதிகரிக்க முன்மொழிவு 1100 மில்லியன் ஒதுக்கீட்டில் மஹாபொல நிதியத்தில் SLIIT நிறுவனத்தின் கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டமை குறித்து தடயவியல் கணக்காய்வு மேற்கொள்ளப்படுவதாக கௌரவ அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவிப்பு வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி கௌரவ அமைச்சர் வசந்த சமரசிங்க அவர்களின் தலைமையில் நடைபெற்ற பத்தாவது பாராளுமன்றத்தின் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டம், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா தலைமையிலான அரசாங்க நிதி பற்றிய குழுவுடன் இணைந்து அண்மையில் (05) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இதில் 2023ஆம் ஆண்டு 36ஆம் இலக்க புலமைத் சொத்துச் சட்டத்தின் 160அ, 161ஆ, 161இ, 161ஈ, 161உ, 161ஊ, 161எ, 161ஐ, 161ஒ மற்றும் 161ஒள ஆகிய பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 204ஆம் பிரிவின் கீழ் அப்போதைய வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு, கூட்டுறவு அபிவிருத்தி, கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சரால் ஆக்கப்பட்டு 2024 ஒக்டோபர் 22ஆம் திகதிய 2407/04ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்கு விதிகள் இங்கு ஆராயப்பட்டு, இரண்டு குழுக்களினாலும் அங்கீகரிக்கப்பட்டன. மேலும், இங்கு 2023ஆம் ஆண்டுக்கான அளவீட்டு அலகு, நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தின் செயலாற்று அறிக்கை ஆராயப்பட்டதுடன், செயலாற்று அறிக்கைகளை காலதாமதமின்றி பாராளுமன்றத்திற்கு சமர்க்கப்படுவது அவசியம் என அமைச்சர் வலியுறுத்தியதுடன் குறித்த அறிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டது. மஹாபொல நம்பிக்கை நிதியம் தவறாகப் பயன்படுத்தப்பட்டு SLIIT நிதியத்தின் கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் கேள்வியெழுப்பியிருந்தனர். இதற்கு அமைய 1100 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டு மஹாபொல நம்பிக்கை நிதியத்திற்குச் சொந்தமான இடத்திலேயே SLIIT நிறுவனம்  கட்டப்பட்டிருப்பதாக கௌரவ அமைச்சர் வசந்த சமரசிங்க குறிப்பிட்டதுடன், கடந்த காலத்தில் தடயவியல் கணக்காய்வு நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டாலும், அது குறித்த அறிக்கைகளோ, தகவல்களோ எதுவும் இல்லையென்றும் தெரிவித்தார். எனவே, இது தொடர்பில் மீண்டும் தடயவியல் கணக்காய்வு முன்னெடுக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் இங்கு வலியுறுத்தினார். அரசியல் முடிவுகளின் அடிப்படையில் மஹாபொல நம்பிக்கை நிதியத்திலிருந்து  97 மில்லியன் ரூபா எடுக்கப்பட்டதாகவும், அதில் 37 மில்லியன் ரூபா மீள வழங்கப்படவில்லையென்றும், இந்த விவகாரம் குறித்து விசாரணைகளும் நடத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார். பல்கலைக்கழக மாணவர்களுக்கு புலமைப்பரிசில்களை வழங்கும்போது, மஹாபொல நம்பிக்கை நிதியத்திலிருந்து  2650 ரூபா தொகையும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் 2450 ரூபா தொகையும் வழங்கப்படும் என மஹாபொல நம்பிக்கை நிதியத்தின் தலைவர் இங்கு தெரிவித்தார்.    அத்துடன், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஊடாக வழங்கப்படும் இந்தத் தொகை திறைசேரியிடமிருந்தே கிடைப்பதாகவும், 563 மில்லியன் ரூபா தொகை இன்னமும் கிடைக்கப்பெறவேண்டியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். மஹாபொல நிதியம் அடுத்த 2-3 ஆண்டுகளுக்கு மஹாபொலவை வழங்குவதற்குத் திறைசேரியிடமிருந்து வர வேண்டிய நிதி ஏற்பாடுகளை முறையாகப் பெறுவது அவசியம் என்று மஹாபொல நம்பிக்கை நிதியத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார். வழங்கப்பட வேண்டியுள்ள மஹாபொல புலமைப்பரிசில் தொகையின் நிலுவையை எதிர்வரும் மாதத்திற்குள் வழங்குவதை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கௌரவ அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். அத்துடன், ஏப்ரல் மாதத்திலிருந்து மஹாபொல புலமைப்பரிசிலை உரிய முறையில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் குறிப்பிட்டார். மஹாபொல புலமைப்பரிசில் நிதியை அதிகரிப்பதற்கான முன்மொழிவுகளும் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் வரவுசெலவுத் திட்டத்தில் ஜனாதிபதி இதை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். சதொச மற்றும் கூட்டுறவுச் சங்கங்கள் குறித்த பிரச்சினைகள் பற்றியும் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், மக்களுக்கு மிகவும் வினைத்திறன்மிக்க வகையில் சேவையை வழங்க பொருத்தமான நிலைமையில் சதொச மற்றும் கூட்டுறவுச் சங்கங்களை மேம்படுத்துவதன் அவசியம் பற்றியும் இங்கு நீண்டநேரம் கலந்துரையாடப்பட்டது. இந்தக் கூட்டத்தில் கௌரவ கூட்டுறவு அபிவிருத்தி பிரதியமைச்சர் உபாலி சமரசிங்க உள்ளிட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு மற்றும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks