E   |   සි   |  

2022-06-15

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

விலங்கின நலம்பேணல் சட்டமூலம் தொடர்பில் கமத்தொழில் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் விசேட கவனம்

நீண்ட ஆலோசனை செயல்முறையின் கீழ் அரசு, அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் விலங்குகள் நலக் குழுக்களின் உதவியுடன் தயாரிக்கப்பட்ட உத்தேச விலங்கின நலம்பேணல் சட்டமூலம் தொடர்பில் கமத்தொழில், வனசீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீர தலைமையில் அண்மையில் (10) கூடிய கமத்தொழில் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

விலங்குகள் மீது அன்பு, கருணை மற்றும் உரிய கரிசனை காட்டுதல் மற்றும் விலங்குகளின் பாதுகாப்பு, நலன் மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்துதல் மற்றும் விலங்குகளுக்கு எதிரான கொடுமைகளிலிருந்து அவற்றைப் பாதுகாத்தல் என்பன இந்த சட்டமூலத்தின் பிரதான நோக்கமாகும் எனவும் இந்த சட்டமூலத்தின் ஊடாக முன்வைக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் மேலும் கவனம் செலுத்தி அது தொடர்பான திருத்தங்கள் காணப்படின் அவற்றையும் முன்வைக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர குழுவில் கோரிக்கை விடுத்தார்.

மேலும், தற்போதைய உணவு நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் வகையில் மக்கள் வீட்டுத்தோட்டம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுவதால், மக்களை வீட்டுத்தோட்டம் செய்வதற்கு ஊக்குவிப்பதன் முக்கியத்துவம் மற்றும் அனைத்து அரசாங்க அலுவலகங்களிலும் நிலத்தை பயிர்ச்செய்கைக்கு பயன்படுத்துதல் என்பன தொடர்பிலும் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது. இந்த நடவடிக்கையை வெற்றிகரமாக்கிக்கொள்ள இராணுவம், சிவில் பாதுகாப்பு பிரிவு மற்றும் சுமார் 3000 சிறைக்கைதிகளை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், இது தொடர்பில் மேலதிக கலந்துரையாடல் மேற்கொள்வதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

கொழும்பு மாவட்டம் உட்பட சகல பிரதேசங்களிலும் உள்ள பயன்படுத்தப்படாத வயல் காணிகள், வயல் காணிகளை நிரப்பி கட்டடங்களை நிர்மாணித்தல் மற்றும் நீர்ப்பாசனப் பிரச்சினைகள் தொடர்பிலும் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது. அதற்கமைவாக மாவட்ட மட்டத்தில் குழுவொன்றை அமைத்து பயிரிடக்கூடிய வயல் காணிகள் மற்றும் பயிரிட முடியாத நிலங்கள் தொடர்பில் உரிய ஆவணமொன்றை  தயாரிப்பது முக்கியமானது எனவும் அது தொடர்பில் கவனம் செலுத்துமாறும் அமைச்சர் அதிகாரிகளுக்கு தெரிவித்தார்.

தரிசு நிலங்களில் விவசாயம் செய்வதற்கு கிராமப்புற மற்றும் நகர்ப்புற இளைஞர்களை ஊக்குவிப்பதன் முக்கியத்துவம் குறித்தும் குழுவில் கவனம் செலுத்தப்பட்டதுடன், அதற்கான முறையான திட்டத்தை தயாரித்து செயல்படுத்துவது குறித்து அதிகாரிகளுக்கு அறிவிருறுத்தியதுடன், தற்பொழுது பயிரிடப்படாத நிலங்களில் பயிற்செய்கையை மேற்கொள்ள விவசாய ஆராய்ச்சி அதிகாரிகளின் உதவியை தொடர்ந்தும் வழங்குமாறும் அமைச்சர் மஹிந்த அமரவீர வலியுறுத்தினார்.

எதிர்காலத்தில் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உரத்தை, நெல் மற்றும் சோளம் உற்பத்திக்கு ஜூலை மாதத்தில் வழங்குவது தொடர்பில் குழுவில் கவனம் செலுத்தப்பட்டதுடன், அந்த உரத்தை விநியோகிக்கும் போது திட்டமிட்ட அடிப்படையிலும் முக்கியத்துவ அடிப்படையிலும் விநியோக நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் அமைசச்சர் குழுவில் தெரிவித்தார்.

அறுவடை சேதம் தொடர்பில் குழுவில் கவனம் செலுத்தப்பட்டதுடன் இது தொடர்பில் சாதகமான அறிக்கையொன்று தயாரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. விசேடமாக வீட்டுத்தோட்ட பயிற்செய்கையின் போது பொதுமக்களுக்கு பல்வேறு சிக்கல்கள் ஏற்படுவதால் நாடுதழுவிய ரீதியில் அவர்களுக்கு தேவையான அறிவுரைகளை வழங்குவதன் முக்கியத்துவம் மற்றும் அதற்காக அதிகாரிகளை வினைத்திறனான முறையில் ஈடுபடுத்துவது தொடர்பிலும் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.

தற்பொழுது பயிரிடப்படாத நிலங்களில் பயிற்செய்கையை ஊக்குவிப்பதற்கு 'சேர்ந்து பயிரிடுவோம் - நாட்டை வெல்வோம்' எனும் வேலைத்திட்டம் தொடர்பில் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களினதும் கவனத்துக்கு கொண்டுவருவதாகவும், இது தொடர்பில் யோசனைகளை முன்வைப்பதற்கு சந்தர்ப்பம் காணப்படுவதாகவும் அமைச்சின் செயலாளர் குழுவில் தெளிவுபடுத்தினார்.

கமத்தொழில், வனசீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீர தலைமையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ கே. காதர் மஸ்தான்,  கௌரவ தாரக பாலசூரிய, கௌரவ சிவஞானம் சிறிதரன், கௌரவ மொஹமட் முஸம்மில், கௌரவ வீரசுமன வீரசிங்க, கௌரவ மதுர விதானகே, கௌரவ உபுல் மகேந்திர ராஜபக்ஷ மற்றும் அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

 

12

3

 



தொடர்புடைய செய்திகள்

2025-11-21

மனிதர்கள் என்ற ரீதியில் மனிதர்களுக்குச் சேவை செய்யக் கூடிய சிறந்த மனம் கொண்ட சமூகத்தை உருவாக்குவது எமது அரசியலின் நோக்கமாகும் – மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்

மனிதர்கள் என்ற ரீதியில் மனிதர்களுக்குச் சேவை செய்யக் கூடிய சிறந்த மனம் கொண்ட சமூகத்தை உருவாக்குவது எமது அரசியலின் நோக்கமாகும்  என பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவரும், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் கௌரவ அமைச்சருமான சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார். பிரதேச அரசியலில் பிரதிநிதித்துவம் இல்லாத பெண்கள் குழுக்களை அரசியல் ரீதியாக உள்ளடக்கப்படுவதை அதிகரிப்பது குறித்து கடந்த நவ. 17ஆம் திகதி கூடிய பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தில் கலந்துரையாடியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நாட்டில் வாழும் சிறப்புக் குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் வேட்புமனு செயல்முறையை மேலும் விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் கவனம் செலுத்தியது. அத்துடன், நவம்பர் 25ஆம் திகதி முதல் டிசம்பர் 10ஆம் திகதி வரையான பதினாறு நாட்கள் பாலின அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிரான உலகளாவிய செயற்பாட்டுக்கான நாட்களாக அனுஷ்டிக்கப்படும் நிலையில், இதற்கு சமாந்தரமாக பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் தலைமையில் முன்னெடுக்கப்படவுள்ள செயற்பாடுகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் பிரதிநிதிகளுடன் இங்கு கலந்துரையாடப்பட்டது.  ஒன்றியத்தின் உறுப்பினர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, சமன்மலி குணசிங்ஹ, கிருஷ்ணன் கலைச்செல்வி, ஏம்.எம்.எம்.எம் ரத்வத்த, (சட்டத்தரணி) ஹிருணி விஜேசிங்க, (சட்டத்தரணி) ஹசாரா லியனகே, (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர, (சட்டத்தரணி) கீதா ஹேரத், (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்க உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.


2025-11-20

பாராளுமன்ற குழுக்களின் பரிந்துஐரகள் நடைமுறைப்படுத்தப்படாமை குறித்து மதிப்பாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சை அழைத்தது

பாராளுமன்றத்தின் பொதுமனுக்கள் பற்றிய குழுவினால் வழங்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் காணப்படும் காலதாமதங்கள் தொடர்பில் கலந்துரையாடும் நோக்கில் பாராளுமன்ற குழுக்களின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படாமை குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் அதிகாரிகளை அழைத்திருந்தது. கடந்த நவ. 13ஆம் திகதி இந்தக் குழு அதன் தலைவர் கௌரவ நீதி அமைச்சர் (சட்டத்தரணி) ஹர்ஷன நாணயக்கார அவர்களின் தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே அமைச்சின் அதிகாரிகள் அழைக்கப்பட்டிருந்தனர். இதற்கமைய, குழுக்களினால் வழங்கப்படும் சில பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் நடைமுறைச் சிக்கல்கள் காணப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதேபோன்று, சில பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குழுவில் எடுத்துக் கூறினர். இருப்பினும், சில பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் போது எழும் சிக்கல்கள் குறித்து மனுதாரரின் கருத்துகளையும் பெற வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது, அதன்படி, மனுதாரர்களை வேறொரு திகதியில் குழு முன்னிலையில் அழைப்பதற்கும் முடிவுசெய்யப்பட்டது. இக்கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர் (சட்டத்தரணி) சுனில் வட்டகல, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) அஜித் பி.பெரேரா, ரவி கருணாநாயக்க மற்றும் ஒஷானி உமங்கா ஆகியோர் கலந்துகொண்டனர்.


2025-11-20

இலங்கையிலுள்ள அனைத்துக் காணிகளையும் துல்லியமாக அளந்து, விரைவாக வரைபடமாக்குவது தொடர்பில் சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் கவனத்திற்கு

இலங்கையிலுள்ள அனைத்துக் காணிகளையும் துல்லியமாக அளந்து, விரைவாக வரைபடமாக்குவது தொடர்பில் சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.  2021, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான அரசாங்க நிறுவனங்கள், திணைக்களங்கள், ஆணைக்குழுக்கள் மற்றும் சபைகள் ஆகியவற்றின் வருடாந்த அறிக்கைகள் மற்றும் வருடாந்த செயற்திறன் அறிக்கைகள் தொடர்பில் பரிசீலிப்பதற்காக, சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி அவர்களின் தலைமையில் கடந்த நவ. 17 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே இது குறித்துக் கலந்துரையாடப்பட்டது. இங்கு கருத்துத் தெரிவித்த நில அளவைத் திணைக்களத்தின் அதிகாரிகள், தற்போதுள்ள கணிப்புகளின்படி இலங்கையில் 16.5 மில்லியன் நிலப் பிரிவுகள் (land plots) இருக்குமென்றும், அவற்றில் 2.5 மில்லியன் நிலப் பிரிவுகள் அளக்கப்பட்டு, வரைபடமாக்கப்பட்டுள்ளன என்றும் குழுவில் தெரிவித்தனர். அதற்கமைய, எஞ்சியுள்ள நிலப் பிரிவுகளை கூடிய விரைவில் அளந்து, வரைபடமாக்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய குழுவின் தலைவர், இதற்காக சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரையும் குழுவுக்கு அழைத்து, எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து கலந்துரையாட எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். அத்துடன், 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கைகளும் குழுவில் பரிசீலிக்கப்பட்டன. மேலும், காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவினால் சட்டபூர்வமான ஒப்பந்தங்கள் இன்றி நிலங்களை குத்தகைக்கு விடுவதால் ஏற்பட்டுள்ள குத்தகைவரி நிலுவைகள் குறித்தும் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. அதற்கமைய, எதிர்காலத்தில் முறையான குத்தகை ஒப்பந்தங்களுக்கு உட்பட்டு நிலங்களை வழங்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய குழுவின் தலைவர் குத்தகைவரி நிலுவைகளை அறவிடுவதற்கான செயன்முறையைத் தயாரித்து, நிலுவைகள் தொடர்பான அனைத்து விபரங்களையும் உள்ளடக்கிய ஓர் அறிக்கையை குழுவில் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ஞானமுத்து ஸ்ரீநேசன், சுசந்த குமார நவரத்ன, சுதத் பலகல்ல மற்றும் (சட்டத்தரணி) பாக்ய ஸ்ரீ ஹேரத் உள்ளிட்ட குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.


2025-11-19

சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீடு (திருத்தம்) மற்றும் பந்தய, சூதாட்ட விதிப்பனவு (திருத்தம்) ஆகிய சட்டமூலங்களுக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அனுமதி

சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீடு (திருத்தம்) மற்றும் பந்தய, சூதாட்ட விதிப்பனவு (திருத்தம்) ஆகிய சட்டமூலங்களுக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது.  கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்களின் தலைமையில் அரசாங்க நிதி பற்றிய குழு (COPF) கடந்த நவ. 17 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த அனுமதி வழங்கப்பட்டது. சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீடு (திருத்தச்) சட்டமூலம் ஊடாக 2022 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீட்டுச் சட்டத்துக்கு 4 திருத்தங்கள் சேர்க்கப்படுவதாக குழுவில் கலந்துகொண்ட அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். அதனையடுத்து, இது தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடியதன் பின்னர் இதற்கான அனுமதி வழங்கப்பட்டது.  அத்துடன், பந்தய, சூதாட்ட விதிப்பனவு (திருத்தச்) சட்டமூலம் ஊடாக 1988 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க பந்தய, சூதாட்ட விதிப்பனவுச் சட்டம் திருத்தப்படுவதுடன், அதன் மூலம் மொத்தச் சேகரிப்பு அறவீடு 15% இலிருந்து 18% ஆக அதிகரிக்கப்படும். அத்துடன், இலங்கை பிரஜைகளுக்காக விதிக்கப்பட்டிருந்த கசினோ நுழைவு அறவீடு, அமெரிக்க டொலர் 50 இலிருந்து 100 ஆக அதிகரிக்கப்படும். அதற்கமைய, இது தொடர்பில் பரிசீலிக்கப்பட்ட பின்னர் குழுவின் அனுமதி வழங்கப்பட்டது. மேலும், 2004 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் கீழ் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிக்கும் குழுவின் அனுமதி வழங்கப்பட்டது. இதன் மூலம் சர்வதேச தொலைத்தொடர்பு இயக்குனர் வரி செலுத்துவதற்கான செல்லுபடியாகும் கால எல்லை நீடிக்கப்படுகிறது. அத்துடன், மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் (அத்தியாயம் 52) 25 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 32 ஆம் பிரிவின் கீழ் மதுவரி உரிமக் கட்டணங்கள் தொடர்பாக விதிக்கப்பட்டிருந்த விதிகள் தொடர்பாக குழுவில் கவனம் செலுத்தப்பட்டது. எனினும், அதற்கு குழுவின் அனுமதி வழங்கப்படவில்லை. இது குறித்து தகுந்த பகுப்பாய்வு அறிக்கை ஒன்றை குழுவிடம் சமர்ப்பிக்குமாறும், அதன் பின்னர் இது எதிர்காலத்தில் பரிசீலனை செய்யப்படும் என்றும் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். இந்தக் கூட்டத்தில் கௌரவ பிரதி அமைச்சர்களான (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்ன, நிஷாந்த ஜயவீர, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, (சட்டத்தரணி) சித்ரால் பெர்னாண்டோ மற்றும் (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks