பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2025-02-17
செய்தி வகைகள் : செய்திகள்
உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் விசேட பெரும்பான்மையுடன் திருத்தங்கள் இன்றி பாராளுமன்றத்தில் இன்று (பெப். 17) நிறைவேற்றப்பட்டது.
இந்தச் சட்டமூலம் தொடர்பான இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் இன்று பி.ப 2.00 மணி முதல் பி.ப 7.00 மணிவரை இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது மதிப்பீட்டுக்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் சட்டமூலத்திற்கு ஆதரவாக 187 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன் எதிராக எந்த வாக்குகளும் அளிக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து குழுநிலையில் சட்டமூலம் கருத்திற்கொள்ளப்பட்டதுடன், அதன் பின்னர் சட்டமூலத்திற்கான மூன்றாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன்போது சட்டமூலத்திற்கு ஆதரவாக 158 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன் எதிராக எந்த வாக்குகளும் அளிக்கப்படவில்லை. அதற்கமைய, உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு மற்றும் மூன்றாம் மதிப்பீடு விசேட பெரும்பான்மையுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
2025-11-20
மொழியின் மூலம் சரியான தொடர்பாடல்களை மேற்கொள்ள முடியாமையாலேயே இனவாத, மதவாத ரீதியான பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன – செயலமர்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றி கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தெரிவிப்பு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சிங்களம் மற்றும் தமிழ் மொழி தொடர்பான பயிற்சிச் செயலமர்வொன்று கடந்த நவ. 18ஆம் திகதி பாராளுமன்றத்தில் ஆரம்பமானது. கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் இச்செயலமர்வு இடம்பெற்றது. பாராளுமன்ற உறுப்பினர் சேவைகள் அலுவலகம் ஏற்பாடு செய்த இந்த செயலமர்வில், அரச கரும மொழிகள் திணைக்களத்தின் அதிகாரிகள் வளவாளர்களாகக் கலந்துகொண்டனர். செயலமர்வை ஆரம்பித்துவைத்து உரையாற்றிய கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் குறிப்பிடுகையில், ஒரு மொழியில் சரியான முறையில் தொடர்பாடல்களை மேற்கொள்ள முடியாத சந்தர்ப்பத்திலேயே இனவாதம், மதவாதம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அனைத்து இனங்களையும் மதிக்கும் ஒரு சிறந்த இலங்கையர் என்ற சமூகத்தை உருவாக்குவதற்கு, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் பொதுமக்களுடன் சிறந்த தொடர்புகளை ஏற்படுத்தி சமூகங்களை வழிநடத்துவதற்கு மொழிகளின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். இங்கு கருத்துத் தெரிவித்த நீதி மற்றும் சமூக ஒருமைப்பாட்டு கௌரவ அமைச்சர் (சட்டத்தரணி) ஹர்ஷன நாணயக்கார, மொழி என்பது தொடர்பாடலை ஏற்படுத்தும் கருவி மாத்திரமன்றி அது குறித்த மொழியைப் பேசும் சமூகத்திற்குக் கொடுக்கும் கௌரவமாகும் என்றார். எந்தவொரு நபரும் அவர் பேசும் மொழியின் காரணமாக எந்த வகையிலும் வித்தியாசமாக நடத்தப்படக்கூடாது என்றும், நாட்டின் மிக உயர்ந்த நிறுவனம் இந்த வழியில் மூன்று மொழிகளில் பணியாற்றுவதனால் காண்பிக்கப்படும் முன்மாதிரி அரச கரும மொழிகளைக் கடைப்பிடிப்பதில் பொதுமக்களுக்கு ஊக்கத்தை அளிக்கிறது என்றார். இதற்கமைய, சிங்கள மொழி பாடநெறியைத் தொடர்வதற்கு 21 கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களும், தமிழ் மொழிப் பாடநெறியைத் தொடர்வதற்கு 63 கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களும் விண்ணப்பித்துள்ளனர். இந்நிகழ்வில் கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, நீதி மற்றும் சமூக ஒருமைப்பாட்டு கௌரவ அமைச்சர் (சட்டத்தரணி) ஹர்ஷன நாணயக்கார, கௌரவ அமைச்சர்கள், கௌரவ பிரதி அமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற பணியாட் தொகுதியின் பிரதானியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன, அரச கரும மொழிகள் ஆணையாளர் நாயகம் நந்தன ஹெட்டியாராச்சி மற்றும் திணைக்களத்தின் அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர் சேவைகள் அலுவலகத்தின் உதவிப் பணிப்பாளர் (நிர்வாகம்) கே.பி. சந்தன மற்றும் பாராளுமன்ற அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
2025-11-19
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் டி.வீ. சானக பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் பணியாற்றுவதற்காக தெரிவுக்குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்பட்டிருப்பதாக கௌரவ சபாநாயகர் சபையில் அறிவிப்பு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ அவர்கள் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் உறுப்பினர் பதவியிலிருந்து விலகியதால், பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் டி.வீ. சானக அவர்கள் அக்குழுவில் பணியாற்றுவதற்காக பாராளுமன்ற நிலையியற் கட்டளை 130(3) இன் ஏற்பாடுகளின் பிரகாரம் 2025 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் திகதி தெரிவுக்குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்பட்டுள்ளார் என கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இன்று (நவ. 19) பாராளுமன்றத்தில் அறிவித்தார். அத்துடன், பாராளுமன்ற நிலையியற் கட்டளை 116 இன் ஏற்பாடுகள் மற்றும் 2025 மார்ச் 19 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணை என்பவற்றின் பிரகாரம் நிலையியற் கட்டளைகள் பற்றிய குழுவில் பணியாற்றுவதற்காகவும், பாராளுமன்ற நிலையியற் கட்டளை 111 இன் ஏற்பாடுகள் மற்றும் 2025 மார்ச் 17 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணை என்பவற்றின் பிரகாரம் ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் பணியாற்றுவதற்காகவும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா அவர்கள் தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கௌரவ சபாநாயகர் அறிவித்தார். மேலும், பாராளுமன்ற நிலையியற் கட்டளை 111 இன் ஏற்பாடுகள் மற்றும் 2025 மார்ச் 17 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணை என்பவற்றின் பிரகாரம் சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் பணியாற்றுவதற்காக, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (சட்டத்தரணி) சித்ரால் பெர்னாந்து அவர்கள், மற்றும் பாராளுமன்ற நிலையியற் கட்டளை 111 இன் ஏற்பாடுகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் பணியாற்றுவதற்காக, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சதுர கலப்பத்தி ஆகியோர் தெரிவுக்குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் சபாநாயகர் அறிவித்தார்.
2025-11-19
இலங்கை பாராளுமன்றத்தின் தூதுக்குழு 2025 ஒக்டோபர் 23 ஆம் திகதி ஜெனிவாவில் நடந்த 151வது சர்வதேச பாராளுமன்ற ஒன்றியத்தின் (IPU) மாநாட்டில் நடைபெற்ற பாலின சமத்துவம் குறித்த கூட்டத்தில் பங்கேற்றது. IPU இன் பாலின கூட்டாண்மைத் திட்டத்தின் (Gender Partnership Programme) கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கூட்டத்தில், பாராளுமன்றங்களுக்கிடையே பாலின சமத்துவத்தை முன்னேற்றுவதில் உள்ள அனுபவங்கள், சிறந்த நடைமுறைகள் மற்றும் சவால்களைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் பெனின், பூட்டான், புர்கினா பாசோ, சாட், காம்பியா, நமீபியா, சியரா லியோன், இலங்கை, துருக்கி மற்றும் சாம்பியா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஒஷானி உமங்கா அவர்கள் இங்கு உரையாற்றியதுடன், 2024 இல் நாட்டில் ஏற்பட்ட வரலாற்று ரீதியான மாற்றத்தைத் தொடர்ந்து, பெண்களின் அரசியல் பங்கேற்பை அதிகரிப்பதில் இலங்கையின் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எடுத்துக்காட்டும் வகையிலான ஊக்கமளிக்கும் உரையை அவர் நிகழ்த்தினார். இலங்கையின் புதுப்பிக்கப்பட்ட அரசியல் பின்னணியை வடிவமைப்பதில் பெண்கள் ஆற்றிய முக்கியப் பங்கை அவர் வலியுறுத்தியதுடன், ஒரு தேர்தலில் பாராளுமன்றத்தில் பெண் பிரதிநிதித்துவத்தை சுமார் 5% இலிருந்து 10% ஆக குறிப்பிடத்தக்க அளவில் உயர்த்திய "பெண்கள் நாம் ஒன்றாக" என்ற நாடு தழுவிய இயக்கம் பற்றிய விடயங்களையும் பகிர்ந்து கொண்டார். "இலங்கையின் கதை ஒரு எளிய உண்மைக்குச் சான்றாகும்: பெண்கள் வலுவூட்டப்பட்டால், முழு நாடும் உயரும். எந்தக் கனவும் மிகப் பெரியதல்ல, எந்தப் பதவியும் எட்ட முடியாததல்ல என்ற ஒரு தெளிவான செய்தியை எங்கள் மகள்களுக்கும், உலகிற்கும் நாங்கள் அனுப்புகிறோம்." என்று பாராளுமன்ற உறுப்பினர் ஒஷானி உமங்கா அவர்கள் தனது உரையில் சுட்டிக்காட்டினார். பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர அவர்களும் இலங்கைத் தூதுக்குழுவில் கலந்துகொண்டதுடன், அவரது பங்கேற்பு இலங்கையின் மிக உயர்ந்த சட்டமியற்றும் நிறுவனத்துக்குள் பெண்களின் வளர்ந்து வரும் தலைமைத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டியது. இலங்கைத் தூதுக்குழுவின் பங்களிப்பை IPU பாராட்டியதுடன், பாராளுமன்றங்களில் பாலின சமத்துவம், பன்முகத்தன்மை மற்றும் அணுகல் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான உலகளாவிய முயற்சியில் இலங்கையின் செயற்பாட்டு ரீதியான பங்கை அங்கீகரித்து, ஒரு உத்தியோகபூர்வ பாராட்டு கடிதம் மூலம் தனது நன்றியைத் தெரிவித்தது. இந்த உயர்மட்ட உரையாடலில் இலங்கையின் பங்கேற்பு, பாலின சமத்துவத்தை வலுப்படுத்துவதற்கும், சட்டமியற்றும் செயன்முறைகளில் பெண்களின் குரலை அதிகரிப்பதற்கும் நாட்டின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துவதாக அமைந்தது. மிகவும் உள்ளடக்கிய மற்றும் பிரதிநிதித்துவ ஜனநாயகத்திற்கான பொதுவான அர்ப்பணிப்புக்களை உறுதியான செயலாக மாற்றுவதற்கு IPU மற்றும் ஏனைய உறுப்பு நாடுகளுடன் தொடர்ச்சியான ஒத்துழைப்பை பாராளுமன்றம் எதிர்பார்க்கிறது.
2025-11-19
2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலை விவாதத்தின் நான்காவது நாளான இன்று (நவ. 19) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கான செலவுத்தலைப்பு (130) 94 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. குழு நிலை விவாதத்தின் பின்னர் பி.ப 6.10 மணியளவில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் குறித்த செலவுத்தலைப்புக்கு வாக்கெடுப்பைக் கோரினார். இதற்கமைய நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் குறித்த செலவுத்தலைப்புக்கான ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக 103 வாக்குகளும், எதிராக 9 வாக்குகளும் அளிக்கப்பட்டன. குறித்த அமைச்சின் ஏனைய செலவுத் தலைப்புக்கள் வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டன. அத்துடன், இன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட தொழில் அமைச்சுக்கான செலவுத்தலைப்பு வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டது. இதேவேளை, கொழும்பு துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்களை கட்டாய பௌதீகப் பரிசோதனைக்கு உட்படுத்தாமல் விடுவித்தமை தொடர்பில் ஆராய்ந்து, அறிக்கையிடுவதற்காகவும், அது குறித்த முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்காகவுமான பாராளுமன்ற விசேட குழுவை அமைப்பது தொடர்பான பிரேரணையும் அங்கீகரிக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks