E   |   සි   |  

2025-02-19

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

‘ஸ்மார்ட் யூத்’ கண்காட்சி மற்றும் இசைநிகழ்ச்சிக்காக செலவிடப்பட்ட 188 மில்லியன் ரூபாவுக்கான காசோலை சரியான நடைமுறைகள் இன்றி ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்தினம் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் தலைவரினால் கையொப்பமிடப்பட்டிருப்பதாக கோப் குழுவில் தெரியவந்தது

  • தலைவர் அழுத்தம் கொடுத்தமையால் செலவுகளுக்கு ஒப்பதல் அளிக்கப்பட்டது. அப்படிச் செய்யாவிட்டால் எம்மை மாற்றிவிடுவார்கள் – அதிகாரிகள்
  • ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்தினமே 100 மில்லியன் ரூபா திறைசேரியிலிருந்து பெறப்பட்டது
  • முன்னாள் ஜனாதிபதியின் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்களுக்கு இந்தப் பணம் செலவிடப்பட்டமை தெளிவாகின்றது – குழுவின் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டு
  • முன்னைய நிதிப் பணிப்பாளர் வருகை தந்திருந்தபோதும் கீழ்மட்டத்தில் உள்ள அதிகாரிகள் கருத்துக்களை முன்வைக்கும்போது அவர் அமைதியாக இருப்பதற்கு முயற்சித்தமை குழுவை பிழையாக வழிநடத்துகின்றமை – கோப் குழு
  • தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் தலைவரை கோப் குழுவுக்கு அழைக்கத் தீர்மானம்

‘ஸ்மார்ட் யூத்’ கண்காட்சி மற்றும் இசை நிகழ்ச்சிக்காக செலவிடப்பட்ட 188 மில்லியன் ரூபாவுக்கான காசோலைக்கான கையொப்பத்தை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் தலைவர் கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னையதினமே இட்டுள்ளமை அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப் குழு) தெரியவந்தது.

செலவீனங்களுக்கான கொடுப்பனவுகளை வழங்குவதற்காக பணிப்பாளர் சபை அனுமதியை வழங்கியிராத சந்தர்ப்பத்திலேயே இந்தக் காசோலையில் முன்னாள் தலைவர் கையொப்பமிட்டிருந்ததாகவும், அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து 2024 ஜனாதிபதித் தேர்தலுக்கு முதல்நாளே இவ்வாறு கைச்சாத்திட்டிருப்பதாகவும் இங்கு தெரியவந்தது. ஜனாதிபதித் தேர்தலுக்கு முதல்நாள் திறைசேரியிலிருந்து 100 மில்லியன் ரூபா வழங்கப்பட்டு, முன்னாள் தலைவரின் அழுத்தத்திற்கு அமைய செலவுகளுக்கான ஒப்புதலை வழங்கி கைசோலையைக் கையளிக்க வேண்டி ஏற்பட்டதாக அதிகாரிகள் குழுவில் சுட்டிக்காட்டினர். தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கணக்கு அதிகாரி என்ற ரீதியில் முன்னாள் தலைவர் வழங்கிய பணிப்புரைக்கு அமைய அவ்வாறு செயற்பட்டதாகவும், தாம் அவ்வாறு செயற்படாவிட்டிருந்தால் இடமாற்றங்களுக்கு உள்ளாகியிருக்க வேண்டி ஏற்பட்டிருக்கும் என்றும் அதிகாரிகள் இங்கு தெரிவித்தனர். இதற்கு அமைய ஜனாதிபதித் தேர்தலுக்கு முதல்நாள் 188 மில்லியன் ரூபாவுக்கான காசோாலையை வெளியிடவேண்டி ஏற்பட்டதாக அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.

இது மிகவும் உணர்திறன் மிக்க விடயம் என அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் கௌரவ தலைவர் (வைத்தியர்) நிசாந்த சமரவீர தெரிவித்தார். அரசாங்க அதிகாரிகளைப் பலிக்கடாவாக்கி தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் தலைவர் நிதியை தவறாகப் பயன்படுத்தியுள்ளார். அத்துடன், இதுபோன்ற சம்பவங்களின் போது அவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்கான ஆளுமை அதிகாரிகளுக்கு இருக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டிய தலைவர், தமக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பை அதிகாரிகள் சரியான முறையில் மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

இந்த விடயம் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடல்கள் நடந்துகொண்டிருக்கும்போது தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் நிதிப் பணிப்பாளர் குழுவிற்கு வருகை தந்திருந்தபோதும், குழுக் கூட்டம் முடிவடையும் வரை அவர் எந்தக் கருத்தையும் முன்வைக்காமல் இருப்பதற்கு முயற்சித்தமை தொடர்பிலும் கோப் குழுவின் உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளியிட்டனர். கீழ் மட்டத்தில் உள்ள அதிகாரிகள் கருத்துக்களை முன்வைக்கும்போது அமைதியாக இருக்க முயற்சிப்பது குழுவைப் பிழையாக வழிநடத்துவதாக அமைவதுடன், இதற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் குழு சுட்டிக்காட்டியது.

அத்துடன், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் தலைவரைக் கோப் குழு முன்னிலையில் அழைப்பதற்கு இங்கு தீர்மானிக்கப்பட்டதுடன், இது பற்றி மேலும் கலந்துரையாடுவதற்கு நாளையதினம் (20) கோப் குழுவைக் கூட்டுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் இலங்கை யூத் சேர்விஸ் (தனியார்) நிறுவனத்தின் 2022ஆம் ஆண்டு மற்றும் 2023ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை, தற்போதைய செயலாற்றுகை மற்றும் 2021 நவம்பர் 16ஆம் திகதி நடத்தப்பட்ட கோப் குழுவில் வழங்கப்பட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் பற்றி ஆராயும் நோக்கில் கோப் குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஷாந்த சமரவீர தலைமையில் நேற்றையதினம் (பெப். 18) கூடியபோதே இந்தத் தகவல்கள் யாவும் வெளிப்பட்டன.

2024 ஜனவரி முதல் ஓகஸ்ட் வரையிலான எட்டுமாத காலப்பகுதியில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடத்தப்பட்ட ஸ்மார்ட் யூத் புத்தாண்டுக் கொண்டாட்டம், தேசிய இளைஞர் வெசாக் விழா, தேசிய இளைஞர் பொசன் வலயம், யாழ்ப்பாண இளைஞர் சந்திப்பு நிகழ்ச்சி, 31 Night Youth Celebration மற்றும் ஸ்மார்ட் யூத்  கண்காட்சி போன்ற நிகழ்வுகளுக்காக ஒதுக்கப்பட்ட 538,080,000 ரூபா தொகை  ஒதுக்கீடு மற்றும் அதன் செலவினம் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. அதன்படி, ஜனாதிபதி செயலகத்தின் இளைஞர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இதற்காக ஏறத்தாழ  398 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்தாலும், பற்றுச்சீட்டுக்களில் குறைபாடுகள் காணப்பட்டமையால் அந்தத் தொகை விடுவிக்கப்படவில்லையென்றும் தெரியவந்தது.

மேலும், வருட ஆரம்பத்தில் விநியோகஸ்தர்கள் பதிவுசெய்யப்பட்டதாகவும், கடந்த காலங்களில் அவ்வாறு இல்லாமல் இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் தலைவரின் விருப்பத்திற்கு அமைய அவர் குறிப்பிடும் நபர்களிடமிருந்து ஏலங்கள் பெறப்பட்டு விநியோகங்கள் பெறப்பட்டதாகவும் தெரியவந்தது. காசோலைகள் வழங்கப்பட்டபோது சம்பந்தப்பட்ட நபர் அங்கு இல்லை என்பதும், மற்றவர்களுக்கு அவற்றைப் பெற வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

மேலும், ஸ்ரீலங்கா யூத் சேர்விஸ் (தனியார்) நிறுவனத்தில் நிதி ஒழுக்கத்தைப் பேணத் தவறியது மற்றும் உள்ளகக் கணக்காய்வு நடத்தத் தவறியமை குறித்தும் குழு கவனம் செலுத்தியது. தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் நிரந்தரப் பதவிகளை வகிக்கும் 25 அதிகாரிகளை தேசிய இளைஞர் சேவைகள் கூட்டுறவு சங்கத்தில் நிரந்தர மற்றும் தற்காலிக அடிப்படையில் நியமிப்பது, முன்னைய கோப் குழுவால் எடுக்கப்பட்ட முடிவுகளை செயல்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், பல சிக்கல் நிறைந்த சூழ்நிலைகள் தெளிவாகத் தெரிவதால், தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், ஸ்ரீலங்கா யூத் சேர்விஸ் (தனியார்) நிறுவனத்தில் மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் கூட்டுறவு சங்கம் ஆகியவை குறித்துக் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் குறித்து ஒரு மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் குழு பரிந்துரைத்தது.

இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.கே.எம். அஸ்லம், சமன்மாலி குணசிங்க, கோசல நுவன் ஜெயவீர, சுஜீவ திசாநாயக்க, (வைத்தியர்) எஸ். ஸ்ரீ பவானந்தராஜா, ஜகத் மனுவர்ன, ருவன் மாபலகம, சுனில் ராஜபக்ஷ, தர்மபிரிய விஜேசிங்க, அசித நிரோஷ எகொட விதான, திலின சமரக்கோன், சந்திமா ஹெட்டியாராச்சி மற்றும் சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் பங்கேற்றனர்.



தொடர்புடைய செய்திகள்

2025-03-24

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கீழ் உள்ள நிறுவனமான இலங்கை யுத் சேர்விஸ் (தனியார்) நிறுவனம் விநியோகஸ்தராகப் பதிவுசெய்து இளைஞர் சேவைகள் மன்றத்திற்கு அதிக விலைக்கான கேள்விப்பத்திரத்தை முன்வைத்துள்ளது – கோப் உப குழுவில் தெரியவந்தது

ஸ்மார்ட் யூத் கண்காட்சி உள்ளிட்ட தொடர் திட்டங்கள், மதிப்பாய்வு அறிக்கையின் பின்னர் முன்னெடுக்கப்பட்டதாக முன்னாள் தலைவர் கூறியபோதும் அவ்வாறான மதிப்பாய்வு அறிக்கைகள் எதுவும் மன்றத்தில் இல்லை – தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அதிகாரிகள் தெரிவிப்பு அமைச்சரவைத் தீர்மானத்தைக் கவனத்தில் எடுக்காது, அரசியல் காரணங்களின் அடிப்படையில் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்த அதிகாரிகளுக்கு நஷ்ட ஈட்டைப் பெற்றுக் கொடுத்த 3 குழுக்கள் குறித்து முழுமையான அறிக்கையை வழங்கவும் – கோப் உப குழு   தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கீழ் உள்ள இலங்கை யுத் சேர்விஸ் (தனியார்) நிறுவனம் விநியோகஸ்தராகப் பதிவுசெய்து, இளைஞர் சேவைகள் மன்றத்திற்கே கேள்விப்பத்திரங்களை முன்வைக்கும்போது அதிக விலையை வழங்கியுள்ளமை அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (கோப் குழு) உபகுழுவில் தெரியவந்தது. தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் இலங்கை யூத் சேர்விஸ் (தனியார்) நிறுவனத்தின் 2022ஆம் ஆண்டு மற்றும் 2023ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் 2025 பெப்ரவரி 18 மற்றும் 20ஆம் திகதிகளில் கோப் குழுவில் வழங்கப்பட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் பற்றி ஆராயும் நோக்கில் நியமிக்கப்பட்ட உபகுழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சந்திம ஹெட்டியாராச்சி தலைமையில் கடந்த மார்ச் 19ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த விடயம் தெரியவந்தது. ஸ்மார்ட் யூத் தொடர் நிகழ்ச்சித்திட்டத்தில் குதிரைப் பந்தயத் திடலில் இடம்பெற்ற இசைநிகழ்ச்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் தொடர்பில் காணப்படும் சகல வீடியோ பதிவுகளையும் குழுவிடம் சமர்ப்பிக்குமாறு முன்னாள் தலைவர் பசிந்து குணவர்த்தனவுக்கு வழங்கிய அறிவுறுத்தல் குறித்தும் உபகுழு அதிகாரிகளிடம் கேள்வியெழுப்பியது. இது தொடர்பான வீடியோ பதிவுகள் தமக்குக் கிடைத்திருப்பதாக அதிகாரிகள் பதிலளித்தனர். இதற்காக 120 இலட்சம் ரூபா குறித்த வீடியோ தயாரிப்பு நிறுவனத்துக்கு வழங்கியமை குறித்தும் குழு நீண்ட நேரம் கவனம் செலுத்தியது. தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கீழ் உள்ள நிறுவனமான இலங்கை யூத் (தனியார்) நிறுவனம் விநியோகஸ்தர் என்ற ரீதியில் அதிக விலையில் குறித்த கேள்விப்பத்திரத்தைப் பெற்றுக்கொண்டு, பிறிதொரு நிறுவனத்திற்கு அதனை வழங்கியிருப்பதாக இங்கு தெரிவிக்கப்பட்டது. மேலும், ஸ்மார்ட் யூத் கண்காட்சி உள்ளிட்ட தொடர் நிகழ்ச்சித் திட்டங்கள் மதிப்பாய்வு அறிக்கைகளைப் பெற்றுக் கொண்ட பின்னரே முன்னெடுக்கப்பட்டதாக முன்னாள் தலைவர் தெரிவித்திருந்த போதும், அவ்வாறான மதிப்பாய்வு அறிக்கையொன்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்திடம் இல்லையென அதிகாரிகள் தெரிவித்தனர். இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், ஸ்மார்ட் யூத் தொடர் நிகழ்ச்சித்திட்டத்தில் பாரிய நிதி மோசடி இடம்பெற்றிருப்பதாகவும், இது தொடர்பில் அமைச்சு மட்டத்தில் சுயாதீன விசாரணையொன்று மேற்கொண்டு மூன்று மாதத்திற்குள் அறிக்கையை குழுவிடம் சமர்ப்பிக்குமாறும், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் விசாரணையொன்றை மேற்கொண்டு சட்டரீதியான நடவடிக்கை எடுக்குமாறும் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தல் வழங்கினார். அத்துடன், அரசியல் காரணங்களுக்காகப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்த 40 அதிகாரிகளுக்கான நஷ்டஈட்டைப் பெற்றுக் கொடுப்பதற்காக ஓய்வுபெற்ற அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று அமைக்குமாறு வழங்கிய அமைச்சரவைத் தீர்மானத்தைக் கவனத்தில் எடுக்காது, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் வேறு மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டு நஷ்டஈடு வழங்கப்பட்டமை குறித்தும் குழுவில் கலந்துரையாடப்பட்டது. இதற்கு அமைய, இவ்வாறு நஷ்டஈடு வழங்கப்பட்ட அதிகாரிகள், வழங்கப்பட்ட நஷ்டஈட்டுத் தொகை, பதவி உயர்வு வழங்கப்பட்ட திகதி, நஷ்டஈடு வழங்கப்பட்ட திகதி, அனுமதி வழங்கப்பட்ட திகதி, தீர்ப்பு வழங்கிய அதிகாரிகள் உள்ளிட்ட முழுமையான விபரங்கள் அடங்கிய அறிக்கையை இரண்டு வாரங்களுக்குள் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அதிகாரிகளுக்கு, கோப் உப குழு அறிவுறுத்தல் வழங்கியது. மேலும், வரையறுக்கப்பட்ட இலங்கை தேசிய இளைஞர் சேவை கூட்டுறவு சம்மேளனத்தினால் (NYSCO) வழங்கப்பட்ட டிப்ளோமா தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் குறித்தும் குழுவில் நீண்டநேரம் கலந்துரையாடப்பட்டது. NYSCO ஊடாக முன்னெடுக்கப்பட்ட இந்த டிப்ளோமாவுக்கும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லையென்பது இங்கு தெரியவந்தது. இது பற்றிக் கருத்துத் தெரிவித்த தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர், NYSCO நிறுவனம் தற்பொழுது இளைஞர் சேவைகள் மன்றத்தின் கட்டுப்பாட்டை இழந்திருப்பதாகக் குறிப்பிட்டார். மேலும், NYSCO இற்கான பொது முகாமையாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான வயதுக் கட்டுப்பாடு 35 ஆக இருந்தபோதிலும் அந்த வயது எல்லை தற்பொழுது 50 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்ற அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பெயரை இவ்வாறு தவறாகப் பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்று சுட்டிக்காட்டிய குழுத் தலைவர், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி தேவையான முடிவுகளை எடுக்குமாறு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் சபைக்கு அறிவுறுத்தல் வழங்கினார். NYSCO இன் முக்கிய அதிகாரிகளை அழைத்து இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்துமாறும் தலைவர் அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தினார். இது தொடர்பான குழுவின் பரிந்துரைகளை கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளருக்கு அனுப்ப தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தலைவர் மேலும் தெரிவித்தார். அத்துடன், தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் இலங்கை யூத் சேர்விஸ் (தனியார்) நிறுவனம் ஆகியவற்றின் வருடாந்த அறிக்கைகள் மற்றும் நிதி நிலை அறிக்கைகள் குறிப்பிட்ட கால எல்லைக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பது குறித்தும், கணக்காய்வு மற்றும் நிர்வாகக் குழுவை உரிய முறையில் நடத்துவது குறித்தும் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சமன்மலி குணசிங்க, ஜகத் மனுவர்ண, அசித நிரோஷன எகொட விதான, (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோரும் கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.சி. விக்ரமரத்ன உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


2025-03-24

இரண்டு புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர் ஒருவரின் நியமனத்துக்கு உயர் பதவிகள் பற்றிய குழுவில் பரிந்துரை

இரண்டு புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர் ஒருவரின் நியமனத்திற்கு அண்மையில் (மார்ச் 21) கூடிய உயர் பதவிகள் பற்றிய குழுவின் பரிந்துரை வழங்கப்பட்டது. அத்துடன், ஐக்கிய அமெரிக்காவின் நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதியின் நியமனம் பற்றிய பரிந்துரைக்கும் குழு அனுமதி வழங்கியது. அதற்கமைய, கியூபா குடியரசுக்கான இலங்கைத் தூதுவராக திரு.ரத்னாயக்க முதியன்சலாகே மஹிந்த தாச ரத்னாயக்க அவர்களின் பெயரையும், ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவராக பேராசிரியர் பிவித்துரு ஜனக் குமரசிங்க அவர்களின் பெயரையும் உயர் பதவிகள் பற்றிய குழு பரிந்துரைத்துள்ளது. அத்துடன், ஐக்கிய இராச்சியம் மற்றும் வடஅயர்லாந்து ஆகிய நாடுகளுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக திரு.சேனாதீர துமுன்னகே நிமல் உபாலி சேனாதீர அவர்களின் பெயரை உயர் பதவிகள் பற்றிய குழு பரிந்துரைத்துள்ளது. மேலும், ஐக்கிய அமெரிக்காவின் நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக முன்னாள் பிரதம நீதியரசர் ஜயந்த சந்திரசிறி ஜயசூரிய அவர்களின் பெயரையும் குழு பரிந்துரைத்துள்ளது. கௌரவ பிரதமர் (கலாநிதி) ஹரினி அமரசூரிய அவர்களின் தலைமையில் கூடிய உயர் பதவிகள் பற்றிய குழுக் கூட்டத்தில், கௌரவ அமைச்சர்களான பிமல் ரத்னாயக்க, குமார ஜயக்கொடி, (கலாநிதி) அனில் ஜயந்த, (கலாநிதி) ஹினிதும சுனில் செனவி, கௌரவ பிரதியமைச்சர் (வைத்தியர்) ஹன்சக விஜேமுனி, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) தயாசிறி ஜயசேகர, (சட்டத்தரணி) சமிந்திரானி கிரிஎல்லே ஆகியோர் கலந்துகொண்டனர்.


2025-03-24

பாராளுமன்றக் குழுக்களினால் வழங்கப்பட்ட விதப்புரைகள் நடைமுறைப்படுத்தப்படாமை குறித்து மதிப்பாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு முதற் தடவையாகக் கூடியது

கோப், கோபா உள்ளிட்ட நான்கு குழுக்களால் வழங்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படாத விதப்புரைகளை ஆராய்வதற்கு முன்னுரிமை பாராளுமன்றக் குழுக்களின் விதப்புரைகள், பொறுப்பு வாய்ந்த நிறுவனங்களினால் அவை நடைமுறைப்படுத்தாமை தொடர்பில் மதிப்பாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு அதன் தலைவர் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு கௌரவ அமைச்சர் (சட்டத்தரணி) ஹர்ஷன நாயணக்கார தலைமையில் அண்மையில் (மார்ச் 21) முதற் தடவையாகப் பாராளுமன்றத்தில் கூடியது. இதில் பாராளுமன்றக் குழுக்களினால் வழங்கப்பட்ட விதப்புரைகளில் நடைமுறைப்படுத்தப்படாதவற்றில் முன்னுரிமை அளிக்க வேண்டிய விதப்புரைகள் எவை என்பது குறித்துக் கலந்துரையாடப்பட்டது. இதற்கு அமைய ஒன்பதாவது பாராளுமன்றத்தில் குழுக்களால் வழங்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படாத விதப்புரைகளை ஆராய்வது தொடர்பில் குழு கவனம் செலுத்தியது. இந்தக் கலந்துரையாடலில், அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (COPE) அரசாங்க கணக்குகள் பற்றிய குழு (COPA), அரசாங்க நிதி பற்றிய குழு (CoPF) மற்றும் பொது மனுக்கள் பற்றிய குழு ஆகிய நான்கு குழுக்களினால் வழங்கப்பட்ட விதப்புரைகளில் நடைமுறைப்படுத்தப்படாத விதப்புரைகளுக்கு முன்னுரிமை அளித்து மதிப்பாய்வை மேற்கொள்ள குழு தீர்மானித்தது. இதற்கமைய, குறித்த விதப்புரைகளை நடைமுறைப்படுத்துவதுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளைத் தொடர்புகொண்டு, குழுவினால் வழங்கப்பட்ட விதப்புரைகளை விரைவில் அமுல்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாக குழுவின் தலைவர் தெரிவித்தார். இக்குழுவின் கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர் (சட்டத்தரணி) சுனில் வடகல, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, அஜித்.பி பெரேரா, ஓஷானி உமங்கா ஆகியோரும், அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.


2025-03-24

201 முதல் 450 வரையான இயந்திர வலுப் பிரிவின் கீழ் 296 மோட்டார் சைக்கிள்கள் உரிய தொகை அறிவிடப்படாமல் பதிவு செய்யப்பட்டமையால் அரசாங்கத்திற்கு 78.15 மில்லியன் இழப்பு – கோபா குழுவில் தெரியவந்தது

முன்னைய கோபா குழுவினால் வழங்கப்பட்ட பரிந்துரைகளுக்கு அமைய மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் பற்றிய 25 கணக்காய்வு அவதானிப்புக்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஏற்க முடியாதவை. சுயாதீனக் குழுவொன்றை அமைத்து மீண்டும் உரிய விசாரணைகளை நடத்தவும் – கோபா குழு அறிவுறுத்தல் பயன்படுத்தப்படாத வெற்று இலக்கங்களை உபயோகித்து வாகனப் பதிவுச் சான்றிதழ்களை மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் மோசடியான முறையில் வழங்கியமையால் அரசாங்கத்திற்கு 6.2 மில்லியன் ரூபா இழப்பு – கோபா குழுவில் புலப்பட்டது இரத்துச் செய்யப்பட்ட இராஜதந்திர வாகன இலக்கங்களில் வேறு வாகனங்களைப் பதிவு செய்தமையால் 122 மில்லியன் ரூபா நஷ்டம் – கணக்காய்வாளர் நாயகம்   201 முதல் 450 வரையான இயந்திர வலுப் பிரிவின் கீழ் அறவிடப்பட வேண்டிய உரிய தொகையை அறவிடாது 296 மோட்டார் சைக்கிள்களைப் பதிவுசெய்தமையின் காரணமாக அரசாங்கத்திற்கு 78.15 இழப்பு ஏற்பட்டிருப்பதுடன், அமைச்சரவை அனுமதி இன்றியும், பதிவு செய்வதற்குத் தேவையான சட்டரீதியான ஆவணங்கள் இன்றியும் 3088 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் (கோபா குழு) தெரியவந்தது. மோட்டார் வாகனத் திணைக்களத்தின் 2020, 2021, 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை குறித்து கலந்துரையாடுவதற்காக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு) அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் தலைமையில் அண்மையில் (மார்ச் 21) கூடிய போதே இந்த விபரம் தெரியவந்தது. இது பற்றி விசாரிப்பதற்காக கடந்த 10ஆம் திகதி மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் கோபா குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தபோதும், அதிகாரிகள் உரிய தயார்ப்படுத்தலில் வராமையினால் அவர்கள் திருப்பியனுப்பப்பட்டிருந்தனர். அத்துடன், அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் 2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கோபா உபகுழுக் கூட்டத்தில் வழங்கப்பட்ட பரிந்துரைகள் குறித்தும் இங்கு ஆராயப்பட்டது. சுங்கத்தின் கணினிக் கட்டமைப்பில் இணைவதற்கு முன்னர், இடம்பெறும் ஏனைய அனைத்து வாகனப் பதிவுகள் குறித்தும் கணக்காய்வாளர் நாயகத்தினால் முன்வைக்கப்பட்ட 25 விடயங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மற்றும் அந்த நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான அதிகாரிகளுக்கு எதிராக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் எடுத்துள்ள ஒழுக்காற்று நடவடிக்கைகள் உள்ளிட்ட தற்போதைய செயலாற்றுகை குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக திணைக்களம் எவ்வித ஒழுக்காற்று நடவடிக்கையையும் எடுக்காமை தொடர்பில் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்திய குழு, திணைக்களத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கை தொடர்பில் திருப்தியடைய முடியாது என்றும் வலியுறுத்தியது. இதற்கு அமைய குறித்த விடயம் தொடர்பில் காலதாமதம் இன்றி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், இதற்கான விசாரணைகளை சுயாதீனமான அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் கோபா குழுவின் தலைவர் அறிவுறுத்தல் வழங்கினார். முன்னர் பதிவுசெய்யப்பட்ட வாகனங்களின் இலக்கங்களின் கீழ் பதிவுசெய்யப்பட்ட அடிச்சட்ட இலக்கங்கள் மற்றும் இயந்திர இலக்கங்களை பதிவுக் கட்டமைப்பிலிருந்து மாற்றி மோசடியான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களுக்கு அவற்றை வழங்கி, சட்டவிரோதமான முறையில் மோட்டார் வாகனப் பதிவுச் சான்றிதழ்  வெளியிட்டமை குறித்தும் கோபா குழு கவனம் செலுத்தியது. இதனால் அரசாங்கத்திற்கு 1.2 பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டிருப்பதாகவும் இங்கு தெரியவந்தது. மேலும், பயன்பாட்டிற்கு எடுக்கப்படாத வெற்று இலக்கங்களை மோசடியாகப் பயன்படுத்தி மோட்டார் வாகனப் பதிவுச் சான்றிதழ்கள் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தினால் வழங்கப்பட்டமையால் அரசாங்கத்திற்கு 6.2 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும், வெளிநாட்டு இராஜதந்திர வாகன இலக்கங்கள் வேறு வாகனங்களின் பதிவுகளுக்காகப் பயன்படுத்தியமையால் அரசாங்கத்திற்கு 122 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் இது விடயத்தில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் கணக்காய்வாளர் நாயகம்  வலியுறுத்தினார். மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் மற்றும் முறைகேடுகள் தொடர்பில் விசாரணைகளை நடத்தி அவற்றுடன் தொடர்புபட்ட சகல அதிகாரிகளுக்கும் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், இதில் ஏற்படும் முன்னேற்றம் தொடர்பில் விசாரிக்க திணைக்களத்தை மாதம் தோறும் குழு முன்நிலையில் அழைப்பதற்கும் இங்கு பரிந்துரைக்கப்பட்டது. மேலும், இங்கு இடம்பெற்றுள்ள மோசடியான செயற்பாடுகள் தொடர்பில் சட்டத்தை நிலைநாட்டும் நிறுவனங்கள் ஊடாக நடவடிக்கை எடுக்குமாறும் குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியது. இந்தக் கூட்டத்தில் குழு உறுப்பினர்கள், கௌரவ பிரதி அமைச்சர்கள், மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருண ஜெயசேகர, சுகத் திலகரத்ன, சுந்தரலிங்கம் பிரதீப், நலின் ஹேவகே கௌரவ பாராளுமன்ற பாராளுமன்ற உறுப்பினர்களான ஜே.சி. அலவதுவல, ரோஹித அபேகுணவர்தன, ஹெக்டர் அப்புஹாமி, கவீந்திரன் கோடிஸ்வரன, மஞ்ஜுள சுரவீர ஆரச்சி, (சட்டத்தரணி) சாகரிகா அதாவுத, ஒஷானி உமங்கா, ருவன்திலக்க ஜயகொடி, சுசந்த குமார நவரத்ன, சந்தன சூரியஆரச்சி, (வைத்தியர்) ஜனக சேனாரத்ன, சானக மாதுகொட, ரீ.கே. ஜயசுந்தர, தினிந்து சமன் ஹென்னாயக்க மற்றும் லால் பிரேமநாத் ஆகியோருடன் அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks