பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2025-03-16
செய்தி வகைகள் : செய்திகள்
உண்ணாட்டரசிறை (திருத்த) சட்டமூலம் தொடர்பான இரண்டாவது மதிப்பீட்டு விவாதத்தை மார்ச் 20ஆம் திகதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலை விவாதத்தின் பின்னர் பி.ப 6 மணி முதல் 8 மணி வரை நடத்துவதற்கு கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நேற்று (மார்ச் 15) கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.
அத்துடன், பாராளுமன்றத்தை ஏப்ரல் 8, 9 மற்றும் 10ஆம் திகதிகளில் கூட்டுவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது. இதற்கமைய ஏப்ரல் 8ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 9.30 மணி முதல் 10.00 மணி வரையில் நிலையியற் கட்டளை 22இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மு.ப 10.00 மணி முதல் மு.ப 11.00 மணிவரையான நேரம் வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், மு.ப 11.00 மணி முதல் 11.30 மணிவரையான நேரம் நிலையியற் கட்டளை 27(2) கீழான கேள்விகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.30 மணிவரையான காலப்பகுதி குற்றச் செயல்களின் வரும்படிகள் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீட்டுக்கான விவாதத்திற்காக ஒதுக்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
ஏப்ரல் 09ஆம் திகதி புதன்கிழமை 10.00 மணி வரையில் நிலையியற் கட்டளை 22இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மு.ப 10.00 மணி முதல் மு.ப 10.30 மணிவரையான காலப்பகுதி பிரதமரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்காக ஒதுக்கப்பட்டிருப்பதுடன், மு.ப 10.30 மணி முதல் மு.ப 11.00 மணி வரையான காலப்பகுதி வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், மு.ப 11.00 மணி முதல் 11.30 மணிவரையான நேரம் நிலையியற் கட்டளை 27(2) கீழான கேள்விகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணிவரையான காலப்பகுதி பெறுமதி சேர் வரி (திருத்த) சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீட்டுக்கான விவாதத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
அன்றையதினம் பி.ப 5.00 பி.ப 5.30 மணி வரையில் எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணைக்கான விவாதத்திற்கும் நேரத்தை ஒதுக்குவதற்கு இங்கு தீர்மானிக்கப்பட்டது.
ஏப்ரல் 10ஆம் திகதி வியாழக்கிழமை, நிலையியற் கட்டளை 22இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மு.ப 10.00 மணி முதல் மு.ப 11.00 மணிவரையான நேரம் வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், மு.ப 11.00 மணி முதல் மு.ப 11.30 மணிவரையான நேரம் நிலையியற் கட்டறை 27(2) கீழான கேள்விகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.30 மணிவரையில், கடந்த 14ஆம் திகதி சபையில் சமர்ப்பிக்கப்பட்ட “பட்டலந்த வீட்டுத் தொகுதியில் சட்டவிரோத தடுப்பு முகாம் மற்றும் சித்திரவதை முகாம் அமைத்து அவற்றை நடத்திச் சென்றமை தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை” குறித்த விவாதத்தை நடத்துவதற்கும், இதற்கான இரண்டு நாள் விவாதத்தில் பிறிதொரு நாளை மே மாதத்தில் ஒதுக்குவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.
2025-11-15
சேவைக்காலத்தை முடித்துக்கொண்டு வெளியேறவுள்ள கியூபாவின் இலங்கைக்கான தூதுவர் கௌரவ அன்ட்ரேஸ் மார்செலோ கொன்ஸலெஸ் கரியிடோ (H.E. Andrés Marcelo González Garrido) இலங்கை பாராளுமன்றத்தின் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களைப் பிரியாவிடை நிமித்தம் நேற்று (நவ. 14) சந்தித்தார். பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர அவர்களும் இதன்போது கலந்துகொண்டார். இச்சந்திப்பின்போது, தூதுவர் கொன்ஸலெஸ் கரியிடோ அவர்கள் இலங்கையில் தனது நான்கரை வருட பதவிக் காலத்தில் அவருக்கும் அவரது தூதுக்குழுவினருக்கும் வழங்கப்பட்ட தொடர்ச்சியான ஆதரவு மற்றும் அன்பான விருந்தோம்பலுக்காக கௌரவ சபாநாயகருக்குத் தனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்தார். அத்துடன், இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவதன் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார். குறிப்பாக, அண்மையில் மீள ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை - கியூபா பாராளுமன்ற நட்புறவுச் சங்கம் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கிய தளமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். தூதுவர் கொன்ஸலெஸ் கரியிடோ அவர்கள் தனது பணியை வெற்றிகரமாக நிறைவு செய்தமைக்காக கௌரவ சபாநாயகர் தனது வாழ்த்தைத் தெரிவித்ததுடன், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க நட்பு மற்றும் ஒத்துழைப்புப் பிணைப்புகளை வலுப்படுத்த அவர் மேற்கொண்ட அர்ப்பணிப்புக்களையும் பாராட்டினார். இலங்கையையும் கியூபாவையும் இணைக்கும் நீண்டகால நட்பை அவர் நினைவு கூர்ந்ததுடன், இருதரப்பு ஒத்துழைப்பின் ஆழத்தையும் நேர்மையையும் பலப்படுத்தும் வகையில், தேவையான காலங்களில் கியூபா எப்பொழுதும் இலங்கையுடன் நின்றிருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டினார். இந்த நீண்ட இராஜதந்திர உறவுகளை மேலும் மேம்படுத்துவதில் இலங்கையின் அர்ப்பணிப்பை கௌரவ சபாநாயகர் மீண்டும் உறுதிப்படுத்தினார். அத்துடன், இலங்கையின் மருத்துவத் துறைக்கு கியூபா நீண்டகாலமாக வழங்கி வரும் ஆதரவிற்காகவும் அவர் தனது பாராட்டைத் தெரிவித்தார். தனது மருத்துவத் தொழில் அனுவபத்தை சுட்டிக்காட்டிய சபாநாயகர், இலங்கையில் பணியாற்றிய கியூபா மருத்துவர்களின் மனிதநேயம், அர்ப்பணிப்பு மற்றும் சேவை மனப்பான்மையைப் பாராட்டினார். இலங்கையில் கியூபாவின் முதலீடுகளை அதிகரிப்பதற்கான அழைப்பை கௌரவ சபாநாயகர் விடுத்ததுடன், விவசாயத் துறையில் விரிவாக்கப்பட்ட தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளையும் சுட்டிக்காட்டினார்.
2025-11-14
வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி கௌரவ அமைச்சர் வசந்த சமரசிங்க அவர்கள் பத்தாவது பாராளுமன்றத்துக்கான இலங்கை - ஓமான் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டார். கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில், இந்தச் சங்கத்தை மீள ஸ்தாபிப்பதற்கான கூட்டம் நேற்று (நவ. 13) பாராளுமன்றத்தில் நடைபெற்றது. ஓமான் நாட்டின் இலங்கைக்கான தூதுவர், கௌரவ அஹமது அலி சையிட் அல்ராஷிதி அவர்கள் இக் கூட்டத்தில் கௌரவ அதிதியாகக் கலந்துகொண்டார். பல அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர ஆகியோரும் இதன்போது கலந்துகொண்டனர். கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா அவர்கள் நட்புறவுச் சங்கத்தின் செயலாளராகவும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சத்துரி கங்கானி அவர்கள் சங்கத்தின் பொருளாளராகவும் தெரிவு செய்யப்பட்டனர். இந்தக் கூட்டத்தின் போது, 1981 ஆம் ஆண்டு முதல் பரஸ்பர மரியாதை மற்றும் பொதுவான நலன்களை அடிப்படையாகக் கொண்ட இலங்கைக்கும் ஓமானுக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவை இரு தரப்பினரும் வலியுறுத்தினர். ஓமானிலுள்ள இலங்கை சமூகத்தின் பங்களிப்பும் இதன்போது சுட்டிக்காட்டப்பதுடன், இரு நாடுகளின் பொருளாதாரங்களுக்கு ஆதரவளிப்பதிலும் உறவுகளை வலுப்படுத்துவதிலும் அவர்களின் நேர்மறையான பங்களிப்பு பாராட்டப்பட்டது. அத்துடன், சுற்றுலா, வர்த்தகம், தொழில் மற்றும் கல்வி உள்ளிட்ட பல முக்கிய துறைகளில் மேம்படுத்தப்பட்ட ஒத்துழைப்புக்கான சாத்தியக்கூறுகள் குறித்து இதன்போது கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. மீள ஸ்தாபிக்கப்பட்ட பாராளுமன்ற நட்புறவுச் சங்கம் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கும், பரஸ்பர நலன் சார்ந்த முயற்சிகளை முன்னேற்றவும் ஒரு பயனுள்ள தளமாகச் செயற்படும் என்று இரு தரப்பினரும் இதன்போது நம்பிக்கை வெளியிட்டனர். பாராளுமன்றத்திற்கான விஜயத்தின் போது ஓமான் நாட்டின் தூதுவர் அஹமது அலி சையிட் அல்ராஷிதி அவர்கள் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்ரமரத்ன அவர்களை மரியாதையின் நிமித்தம் சந்தித்தார். இந்தக் கலந்துரையாடலின் போது பாராளுமன்ற மட்டத்தில் விரிவாக்கப்பட்ட ஒத்துழைப்பை ஏற்படுத்துதல் உள்ளிட்ட இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்துக் கவனம் செலுத்தப்பட்டது.
2025-11-14
2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு 118 மேலதிக வாக்குகளால் இன்று (நவ. 14) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இன்று பி.ப 6.20 மணிக்குக்கு இடம்பெற்ற இரண்டாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பில் வரவுசெலவுத்திட்டத்துக்கு ஆதரவாக 160 வாக்குகளும், எதிராக 42 வாக்குகளும் அளிக்கப்பட்டதுடன், 8 பேர் வாக்களிப்பிலிருந்து விலகியிருந்தனர். 2026 ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு அல்லது 'வரவுசெலவுத்திட்ட உரை' நிதி அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களினால் கடந்த 07ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நவம்பர் 08ஆம் திகதி முதல் இன்று (14) வரை, 06 நாட்கள் ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் (வரவுசெலவுத்திட்டம்) இரண்டாவது மதிப்பீடு மீதான விவாதம் நடைபெற்றது. இதற்கமைய குழு நிலை விவாதம் நாளை (15) முதல் டிசம்பர் 05 ஆம் திகதி வரை 17 நாட்கள் இடம்பெறவுள்ளது. இதற்கு அமைய 2025 ஆம் நிதியாண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தின் மூன்றாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 05 ஆம் திகதி பி.ப 6.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.
2025-11-11
சட்டத்தரணி சாகரிகா அதாவுத மற்றும் (வைத்தியர்) செல்லத்தம்பி திலகநாதன் ஆகிய கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் போது சேவையாற்றுவதற்காகக் தவிசாளர் குழாத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக கௌரவ சபாநாயகர் அறிவிப்பு பாராளுமன்ற நிலையியற் கட்டளை 143 இன் பிரகாரம் பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் போது சேவையாற்றுவதற்காகப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள தவிசாளர் குழாத்தின் கௌரவ உறுப்பினர்களிடையே (கலாநிதி) கெளஷல்யா ஆரியரத்ன மற்றும் அரவிந்த செனரத் ஆகியோர் பிரதி அமைச்சர்களாக நியமிக்கப்பட்டதன் காரணமாக ஏற்பட்ட வெற்றிடத்திற்காக சட்டத்தரணி சாகரிகா அதாவுத மற்றும் (வைத்தியர்) செல்லத்தம்பி திலகநாதன் ஆகிய கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் தவிசாளர் குழாத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இன்று (நவ. 11) பாராளுமன்றத்தில் அறிவித்தார். அதற்கு மேலதிகமாக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான கவீந்திரன் கோடீஸ்வரன், கிங்ஸ் நெல்சன், எம்.கே. எம். அஸ்லம், உபுல் கித்சிறி, சட்டத்தரணி துஷாரி ஜயசிங்ஹ மற்றும் சுஜீவ திசாநாயக்க ஆகியோர் தவிசாளர் குழாத்தில் உள்ளடக்குவதற்கு பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாக கௌரவ சபாநாயகர் அறிவித்தார்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks