பார்க்க

E   |   සි   |  


திரு. தம்மிக்க கித்துல்கொட  (செயலாளர் நாயகம்)

திரு. தம்மிக்க கித்துல்கொட (செயலாளர் நாயகம்)

இலங்கையின் நீதித் துறையிலும் பாராளுமன்றத் துறையிலும் கீர்த்திவாய்ந்த ஆளுமையாகத் திகழ்ந்த திரு.தம்மிக கிதுல்கொட, பல தசாப்தங்கள் விரிந்த அவரின் மேதகு தொழில்வாழ்வின் மூலம் அழியாத தடத்தினை விட்டுச் சென்றுள்ளார். மாத்தறை ராகுல கல்லூரியிலும் கொழும்பு றோயல் கல்லூரியிலும் தனது பாடசாலைக் கல்வியினைப் பூர்த்திசெய்த திரு.கிதுல்கொட, இலங்கை சட்டக் கல்லூரியில் அவரின் சட்டக் கற்கையினைத் தொடர்ந்தார்.

தனது கல்வியினைப் பூர்த்திசெய்த திரு.கிதுல்கொட, 1975 ஆம் ஆண்டு நீதவானாக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து நீதித் துறையில் கீர்த்திவாய்ந்த தொழில்வாழ்வில் கால்பதித்தார். இதனைத் தொடர்ந்து, 1985 ஆம் ஆண்டு மிகவும் மதிப்புவாய்ந்த மாவட்ட நீதிபதி எனும் பதவிக்கு உயர்ந்து, நாட்டின் பல பகுதிகளிலும் சேவையாற்றினார். தனது 28 வயதில் நீதவானாகியதன் மூலம் மிகவும் இளம் வயதில் அப்பதவியை அலங்கரித்த வரலாற்றினையும் இவர் தனதாக்கிக் கொண்டார். இது சட்டத் தொழில்வாண்மையில் இவரின் ஒப்புவமையற்ற திறனுக்கும் அர்ப்பணிப்புக்கும் அத்தாட்சியாக அமைந்தது. 1998 ஆம் ஆண்டு திரு.கிதுல்கொட நீதிச் சேவை ஆணைக்குழவின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

1999 ஆம் ஆண்டு, பாராளுமன்றச் செயலாளர் நாயகம் எனும் முக்கிய பொறுப்பினை ஏற்றதன் மூலம் திரு.கிதுல்கொடவின் பயணப் பாதை ஒரு முக்கியமான மாற்றத்தினைக் கண்டது. பாராளுமன்றச் செயலாளர் எனும் இந்தப் பெருமைமிக்க பதவியினை திரு.கிதுல்கொட 2002 ஆம் ஆண்டு வரை ஒரு தசாப்த காலமாக அலங்கரித்தார். பாராளுமன்ற அலுவல்களின் உயர் தலைமைப் பதவியினை இவர் வகித்த காலப்பகுதியில் தளரா வாய்மையினதும் மதிநுட்பமிக்க தலைமைத்துவத்தினதும் பண்புருவாகத் திகழ்ந்து சனநாயக விழுமியங்களைப் பற்றிப்பிடிப்பதில் வலுவான கடப்பாட்டினை வெளிப்படுத்தினார்.

பாராளுமன்றச் செயலாளர் நாயகம் எனும் பதவியில் இருந்து விலகிய போதிலும், திரு.கிதுல்கொட அரசியலமைப்புப் பேரவையின் செயலாளராகவும் பாரளுமன்றப் பேரவையின் செயலாளராகவும் சேவையாற்றினார். 2008 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை பதில் செயலாளர் நாயகமாக மீண்டும் சேவையாற்றத் தொடங்கிய திரு.கிதுல்கொட, 2012 ஆம் ஆண்டு பாராளுமன்றச் செயலாளர் நாயகமாக மீண்டும் பதவியேற்றார்.

திரு.கிதுல்கொட அவர்களின் பங்களிப்புக்கள் பாராளுமன்றத்தில் அவர் வகித்த வகிபாத்திரத்தினைத் தாண்டிச் சென்றன. பாராளுமன்றச் செயலாளர் நாயகமாகப் பதவி வகித்த முதல் நீதித்துறை அதிகாரி எனும் பெருமையினைப் பெற்ற திரு.கிதுல்கொட, சட்டத் துறையினையும் ஆளுகைத் துறையினையும் நயநுணுக்கத்துடன் இணைத்தார். அரசியலமைப்புப் பேரவையின் செயலாளராகவும் பாராளுமன்றப் பேரவையின் செயலாளராகவும் இவர் வகித்த பதவிக்காலம் இலங்கையின் சட்டவாக்கத் துறையைக் கட்டமைப்பதில் இவர் வகித்த மகோன்னதப் பணிகளைக் கோடிட்டுக் காட்டுகின்றன.

நீதி, சனநாயகம் மற்றும் பொதுமக்கள் நலனோம்புகை ஆகியவற்றின் கோட்பாடுகளுக்கான பாரிய அர்ப்பணிப்பினைக் குறித்து நிற்கும் உன்னத சேவையாகவே திரு.தம்மிக கிதுல்கொடவின் பாரம்பரியம் காணப்படுகின்றது. இவரின் அயரா முயற்சிகள் இலங்கையின் சட்டத்துறைசார் நிறுவனங்களிலும் பாராளுமன்ற நிறுவனங்களிலும் அழியாத் தடத்தினைப் பதித்து, வாய்மை, தளரா ஊக்கம் மற்றும் தலைமைத்துவம் எனும் விழுமியங்களின் பண்புருவாகத் திகழ்கின்றன.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks