07

E   |   සි   |  


திரு. தம்மிக தஸநாயக்க

திரு. தம்மிக தஸநாயக்க

தம்மிக தசநாயக்க 1994 ஆம் ஆண்டில் உதவிச் செயலாளர் நாயகமாகத் தனது பாராளுமன்றத் தொழில் வாழ்வை ஆரம்பித்த திரு.தசநாயக்க, 2003 ஆம் ஆண்டில் பாராளுமன்றப் பிரதிச் செயலாளர் நாயகமாகப் பதவியுயர்வு பெற்று பின்னர் 2012 ஆம் ஆண்டில் பராளுமன்றச் செயலாளர் நாயகம் எனும் உயர் பதவியை தனதாக்கி கொண்டார்.

கொழும்பு டீ.எஸ். சேனாநாயக்க வித்தியாலயத்திலும் கொழும்பு ரோயல் கல்லூரியிலும் கல்வி கற்ற திரு.தசநாயக்க, கொழும்பு பல்கலைக்கழகத்தில் தனது சட்டமாணி மற்றும் சட்டமுதுமாணி பட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

1989 ஆம் ஆண்டில் சட்டத்துறைத் தலைமை அதிபதி திணைக்களத்தில் அரச வழக்குரைஞராக இணைந்து, பல மேல் நீதிமன்றங்களில் அரசின் சார்பில் வழக்கு நடவடிக்கைகளில் ஈடுபட்டு , அரசின் சார்பில் பல அடிப்படை உரிமை மனுக்களிலும் எழுத்தாணை விண்ணப்பங்கள் சார்பிலும் ஆஜராகியுள்ளார்.

திரு.தசநாயக்க அவர்கள் அனைத்துப் பாராளுமன்ற ஒன்றியம் (IPU), பொதுநலவாயப் பாராளுமன்றச் சங்கம் (CPA) மற்றும் சார்க் பாராளுமன்றச் சங்கம் ஆகியவற்றின் பல மாநாடுகளிலும் கலந்துகொண்டு, 2010-2012 காலப்பகுதியில் பொதுநலவாயப் பாராளுமன்றச் சங்க (CPA) ஆசியப் பிராந்தியத்தின் பிராந்தியச் செயலாளராகவும் கடமையாற்றினார். உயர் மட்டப் பாராளுமன்றப் பிரதிநிதிகளுடன் பல இரு தரப்புப் பாராளுமன்ற விஜயங்களிலும் திரு.தசநாயக்க பங்கேற்றுள்ளார். பொதுநலவாய மன்றத்தினால் பாராளுமன்ற ஆளுகைத் துறையில் வழங்கப்படும் பெருமைமிக்க பொதுநலவாய உறுப்பாண்மை 1999 ஆம் ஆண்டு திரு. தசநாயக்க அவர்களுக்கு வழங்கப்பட்டது. பாராளுமன்ற அபிவிருத்தித் துறையில் திரு.தசநாயக்க கொண்டுள்ள நீண்ட அனுபவத்தினையும் நிபுணத்துவத்தையும் அங்கீகரித்து, 2004 ஆம் ஆண்டு, ஆப்கானிஸ்தான் ஜனநாயகப் பாராளுமன்றத்தைத் தாபிப்பதற்கான 'தேவை மதிப்பீட்டுப் பணிநோக்கினை' நிறைவேற்றுவதற்காக அனைத்துப் பாராளுமன்ற ஒன்றியம் மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் நிகழ்ச்சித்திட்டம் (UNDP) ஆகியவற்றால் அமைக்கப்பட்ட பாராளுமன்ற நிபுணர் குழுவுக்குத் தலைமை தாங்குமாறு அழைக்கப்பட்டார். லாஓ மக்கள் சனநாயகக் குடியரசுப் பாராளுமன்றத்தின் பொது மனுக் குழுவை வலுப்படுத்துவதற்காகவும் பாராளுமன்ற ஒம்புட்சுமான் அலுவலகத்தைத் தாபிப்பதற்காகவும் தொழில்நுட்ப உதவியை வழங்குவதற்காக 2006 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் நிகழ்ச்சித்திட்டத்தினால் திரு.தசநாயக்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இலங்கையிலும் ஏனைய நாடுகளிலும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாராளுமன்ற பணியாட்டொகுதியினருக்கும் பயிற்சிகளை நடாத்துவதற்காக திரு.தசநாயக்க பல சந்தர்ப்பங்களிலும் அழைக்கப்பட்டார். பாராளுமன்ற அபிவிருத்தி மற்றும் உறுப்பினர்களதும் பாராளுமன்றப் பணியாட்டொகுதியினரதும் அறிவுத் திறன் மேம்பாடு ஆகியவை தொடர்பான பொதுநலவாயப் பாராளுமன்றச் சங்கத்தினதும் அனைத்துப் பாராளுமன்ற ஒன்றியத்தினதும் ஒரு சர்வதேச பாராளுமன்ற நிபுணராகத் திரு.தசநாயக்க திகழ்கின்றார்.

திரு.தசநாயக்க, பாராளுமன்றப் பிரதிச் செயலாளர் நாயகமாகவும் பாராளுமன்றச் செயலாளர் நாயகமாகவும் பதவி வகித்த காலப்பகுதியில் பாராளுமன்றத்தை நவீனமயப்படுத்துவதற்கும் பாராளுமன்றப் பணிகளின் அனைத்து அம்சங்களிலும் புதிய தொழில்நுட்பத்தைப் புகுத்துவதற்கும் பாராளுமன்ற அபிவிருத்திப் பங்காளர்களுடன் இணைந்து பல நடவடிக்கைகளை ஆரம்பித்தார். திறந்த பாராளுமன்றம் எனும் கருத்தியலின் உறுதியான ஆதரவாளராகத் திரு.திசநாயக்க மிளிர்ந்தார்.

திரு. தம்மிக தசநாயக்க அவர்கள் பாராளுமன்றத்தில் 29 வருடங்கள் உன்னத சேவையாற்றி, 2023 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்ற செயலாளர் நாயகம் பதவியில் இருந்து ஓய்வு பெற்றார்.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது TekGeeks