பார்க்க

E   |   සි   |  


திரு. (B)பேர்ட்றம் தித்தவெல்ல

திரு. (B)பேர்ட்றம் தித்தவெல்ல

திரு.பீ.எஸ்.பீ.தித்தவெல, தனது வாழ்நாளில் கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களைப் பாராளுமன்றச் சேவைக்காக அர்ப்பணித்து, ஒப்பாரும் மிக்காருமற்ற ஓர் அரசாங்க ஊழியர் எனும் அழியாத் தடத்தினை விட்டுச் சென்றுள்ளார். சட்டம் மற்றும் பேச்சாற்றலிலும் இயற்கையிலேயே தீவிர ஆர்வம் கொண்டிருந்த திரு.தித்தவெலவின் பயணம் கண்டி திரித்துவக் கல்லூரியில் இருந்து ஆரம்பமானது. இங்கிருந்தே அவர் தனது எதிர்காலக் கல்விசார் வெற்றிக்கும் தொழில்முறை வெற்றிக்குமான அத்திவாரத்தினை இட்டார்.

1963 ஆம் ஆண்டு இலங்கை சட்டக் கல்லூரியிலிருந்து பட்டதாரியாக வெளியான திரு. தித்தவெல, அதன் பின்னர், சட்டத் தொழில்வாண்மையாளர் மற்றும் சொற்பொழிவாளர் எனும் இரு துறைகளிலும் ஒப்பற்ற திறமைகளை வெளிக்காட்டியதன் மூலம் வெகுவிரைவிலேயே அதியுன்னத தரங்களைத் தனதாக்கிக் கொண்டார். சொற்பொழிவாற்றலுக்கான கீர்த்திமிகு ஹெக்டர் ஜயவர்தன தங்கப் பதக்கம் உள்ளடங்கலாக இவருக்குக் கிடைத்த பெருமைகள், எதிர்காலத்தில் இலங்கைச் சட்டவாக்கத்துக்கு இவர் ஆற்றப்போகும் பங்களிப்புகளுக்குக் கட்டியம் கூறி நின்றன.

இலங்கை காப்புறுதி கூட்டுதாபனம் மற்றும் அரசியலமைப்பு விவகாரங்களுக்கான அமைச்சு ஆகியவற்றில் பணியாற்றியதன் பின்னர், சர்வதேச அனுபவம் மற்றும் கல்விச் செழுமைக்கான பயணத்தில் திரு. தித்தவெல கால் பதித்தார். ஐக்கிய அமெரிக்காவில் காங்கிரஸ் பதவியணி உறுப்பினர் , ஐக்கிய இராச்சியத்தில் பாராளுமன்றப் பயிலுனர், மற்றும் ஹாவார்ட் சட்டக் கல்லூரியின் பட்டதாரி எனும் இவரின் அனுபவங்கள் உலகம் முழுவதும் சட்டவாக்க நடைமுறை பற்றிய அளப்பரிய அறிவையும் ஞானத்தையும் இவருக்கு வழங்கின.

இலங்கைப் பாராளுமன்றத்தில் இரண்டாவது உதவிச் செயலாளர் நாயகமாகத் திரு. தித்தவெல 1971 ஆம் ஆண்டு தன் சேவையை ஆரம்பித்தார். தொடர்ந்து வந்த வருடங்களில் பல உயர் தரங்களைக் கடந்து, 1994 ஆம் ஆண்டில் பாராளுமன்றச் செயலாளர் நாயகம் எனும் முக்கிய வகிபாத்திரத்தினை ஈற்றில் அடைந்துகொண்டார். இவர் தனது பதவிக் காலம் முழுவதினூடும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பிற்கும் தொழில்வாண்மைக்கும் பாராளுமன்ற நடைமுறைகள் பற்றிய மட்டற்ற புரிதலுக்கும் முன்னுதாரணமாகத் திகழ்ந்தார்.

திரு.தித்தவெலவின் அர்ப்பணிப்புக்கள் அவரது நிருவாகக் கடமைகளின் எல்லைகளைத் தாண்டி நீட்சியடைந்தன. 1972 ஆம் ஆண்டு இலங்கைக் குடியரசின் முதலாவது அரசியலமைப்பை வரையும்போதும் 1978 ஆம் ஆண்டு அதே செயன்முறையின் போதும் அரசியலமைப்புப் பேரவையின் உதவிச் செயலாளர் என்ற ரீதியில் அவற்றுக்குப் பங்களிப்பு வழங்கி, அரசியலமைப்பின் குறிப்பிடும்படியான மைல்கற்களில் இவர் முக்கிய வகிபாகத்தை வகித்தார். 1995 ஆம் ஆண்டு 41வது பொதுநலவாயப் பாராளுமன்றச் சங்க (CPA) மாநாட்டினை வெற்றிகரமாக நடத்தியமையானது, திரு. தித்தவெலவின் நிர்வாக ஆளுமைக்கும் இராஜதந்திர நுண்ணயத்திற்கும் சான்று பகன்று அவரின் பதவிக் காலத்தின் நட்சத்திர அடைவுகளில் ஒன்றாகத் திகழ்கின்றது.

துரதிஷ்டவசமாக, 2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட திரு.தித்தவெலவின் அகால மரணம், இலங்கைச் சட்டவாக்கத்தில் ஒரு வெற்றிடத்தை விட்டுச் சென்றுள்ளது. திரு. தித்தவெலவின் ஒப்பாரும் மிக்காருமற்ற அறிவிலும் அர்ப்பணிப்பிலும் சக ஊழியர்களதும் ஏனையோரதும் மனங்களைக் கட்டிப்போட்ட இவரின் நகைச்சுவையுணர்விலும் இவரின் மரபு இன்னும் உயிர்ப்புடன் இருக்கின்றது.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks