07

E   |   සි   |  

சட்டவாக்க சேவைகள் திணைக்களம்

அறிமுகம்
இலங்கை சனநாயக சோஷலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 18வது உறுப்புரை மற்றும், இலங்கை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 13 இல் குறித்துக்காட்டப்பட்ட ஏற்பாடுகளின் பிரகாரம், பாராளுமன்ற அலுவல்களை சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் நடாத்துவது இலங்கை சட்டமன்ற சபை ஆவண அலுவலகத்தின் பிரத்தியேக பொறுப்பாக உள்ளது.
 
சபை ஆவண அலுவலகத்தின் வேறுபட்ட அலகுகள்
பாராளுமன்ற சபைக் கூட்ட நடைமுறைகளின் சீரான தொழிற்பாட்டுக்காக சபை அலுவலகம் பின்வரும் நான்கு தனியான பிரிவுகள் உள்ளன:-

(அ) பாராளுமன்ற வினாக்கள் பிரிவு
(ஆ) ஒழுங்குப் புத்தகம் அனுபந்தம், ஒழுங்குப் பத்திரம் மற்றும் பாராளுமன்ற கூட்ட அறிக்கைகள் பிரிவு
(இ) அலுவல்களின் ஒழுங்கு, பாராளுமன்றத்தில் பத்திரங்களை சமர்ப்பித்தல், தனியார் உறுப்பினர் பிரேரணைகள், திகதியிடப்படாத பிரேரணைகள் போன்ற பிரிவுகள்
(ஈ) பாராளுமன்ற அலுவல்கள் குழு மற்றும் விசேட கடமைகள் பிரிவு
 
பாராளுமன்ற வெளியீடுகளைத் தயாரித்தல்
பாராளுமன்ற சபை கூட்ட நடைமுறைகளை நடாத்துவதற்கு முக்கிய தேவைப்பாடுகளாக உள்ள பின்வரும் பாராளுமன்ற வெளியீடுகளை தயாரிப்பது சபை ஆவண அலுவலகத்தின் பிரத்தியேக பொறுப்பாக உள்ளது.
  • பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகம்
  • பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தம்
  • பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரம்
  • பாராளுமன்றத்தில் பத்திரங்கள் சமர்ப்பித்தல்
  • பாராளுமன்ற அலுவல்களின் ஒழுங்கு
  • பாராளுமன்ற கூட்ட அறிக்கைகள்
 
பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகம்
வாய்மூல விடைக்காக மற்றும் எழுத்திலான விடைக்காக பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்து, பாராளுமன்ற செயலாளர் நாயகத்தால், பெற்றுக் கொள்ளப்படும் எல்லாக் கேள்விகளும், அறிவித்தல் கொடுக்கப்பட்ட தினத்தில் இருந்து, ஏழு நாட்களுக்கு மேற்படாத ஒரு தினத்தில், பதிலளிப்பதற்காக ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்கப்பட வேண்டும்.
 
திகதிகள் குறிக்கப்படாத பிரேரணைகளும் (நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் மற்றும் நம்பிக்கைப் பிரேரணைகள், குற்றப் பிரேரணைகள், பாராளுமன்றத் தெரிகுழுவின் நியமனங்கள், போன்றவை) தனியார் உறுப்பினர் ஒழுங்குப் புத்தகத்தில் வெளியிடப்படல் வேண்டும்.
 
ஒழுங்குப் புத்தகமானது மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒரு தடவை வெளியிடப்படுகின்றது. ஒழுங்குப் புத்தகத்தினை எப்போது வெளியிட வேண்டும் என்பதை சபை ஆவண அலுவலக தலைவர் தீர்மானிப்பார்.
 
பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தம்
எதிர்காலத்திகதிகளுக்கான பாராளுமன்ற வினாக்களின் ஏதாவது அறிவித்தல் மற்றும் எதிர்காலத் திகதிகள் குறிக்கப்படாத அல்லது இல்லாத பிரேரணை ஆகியவற்றைக் கொண்ட அனுபந்தம் ஒழுங்குப் புத்தகத்தின் குறைநிரப்பியாக ஒவ்வொரு அமர்வு வாரத்தினதும் முடிவின் போது வெளியிடப்படும்.
 
இதனைத் தொடர்ந்து பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகம் அச்சிடப்பட்ட உடனேயே விரைவுத தபால் மூலமாக அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், அமைச்சர்களின் செயலாளர்கள் மற்றும் உள்ளிட்ட ஏனைய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றது. 
 
மும்மொழிகளிலான பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தின் இறுதி மென்பிரதி அல்லது அனுபந்தம் அதனைத் தொடர்ந்து அச்சுக்கு அனுப்பப்புடும் அதேவேளை பாராளுமன்ற இணையத் தளத்தில் வெளியிடப்படுவதற்காக சபை ஆவண அலுவகத் தலைவரால் பணிப்பாளருக்கு (தகவல் முறைமை முகாமைத்துவம்) அனுப்பி வைக்கப்படுகின்றது.
 
பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரம்
பாராளுமன்றத்தின் ஒவ்வொரு அமர்விற்குமான உத்தியோகபூர்வ நிகழ்ச்சி நிரலான பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரமானது மும்மொழிகளிலும் அச்சிடப்படுகின்றது. 
ஒவ்வொரு அமர்வு வாரத்தினதும் முதல் நாள் அமர்வினுடைய பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரம் மாத்திரம் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளடங்கலாக சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஊடகம் உள்ளடங்கலாக ஏனைய சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்களுக்கும் விரைவுத் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றது.
 

மும்மொழிகளிலான பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தின் இறுதி மென்பிரதி அச்சுக்கு அனுப்பப்படும் அதேவேளை பாராளுமன்ற இணையத்தளத்தில் வெளியிடப்படுவதற்காக சபை ஆவண அலுவலகத் தலைவரால் பணிப்பாளருக்கு (தகவல் முறைமை முகாமைத்துவம்) அனுப்பி வைக்கப்படுகின்றது.

பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடங்குபவை:
  • பாராளுமன்ற செங்கோல்
  • பாராளுமன்றத்தினால் அதன் கூட்டத்தொடரினதும் கால வரிசை ஒழுங்கு
  • பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தின் தொடர் இலக்கம்
  • பாராளுமன்ற அமர்வு தொடங்கும் திகதியும் நேரமும்
  • வாய்மூல விடைக்கான பாராளுமன்ற வினாக்கள்
  • அனுதாபப் பிரேரணைகள், ஏதாவது இருப்பின்
  • அரசாங்க சட்டமூலங்களின் சமர்ப்பணம் பற்றிய அறிவித்தல்
  • அறிவித்தல் தேவைப்படும் மற்றும் தேவைப்படாத பிரேரணை அறிவித்தல்
  • பொது அலுவல்கள் –
    • இரண்டாம் மதிப்பீட்டிற்கான சட்டமூலங்கள், குழு, பரிசீலிப்புக்கள், போன்றவை
    • பிரேரணைகள் (தீர்மானங்கள், ஒழுங்குவிதிகள், கட்டளைகள், விதிகள், உடன்படிக்கைகள், குறைநிரப்பு மதிப்பீடுகள், வருடாந்த அறிக்கைகள் போன்றவை)
    • தனியார் உறுப்பினர் பிரேரணைகள் (ஒவ்வொரு மாத அமர்வினதும் முதல் வெள்ளிக்கிழமை)
  • அரசாங்க அலுவல்களை * நட்சத்திர குறியிட்டு காட்டுதல்
  • எழுத்து மூல விடைக்கான பாராளுமன்ற வினாக்கள்
 
பாராளுமன்றத்தில் பத்திரங்களைச் சமர்ப்பித்தல்
பத்திரங்களைச் சமர்ப்பித்தல் ஒரு நியதிச்சட்டத் தேவைப்பாடாகும். பாராளுமன்றத்தின் பல்வேறு சட்டவாக்கங்களின் கீழான தீர்மானங்கள், ஒழுங்கு விதிகள், விதிகள், கட்டளைகள், குறைநிரப்பு மதிப்பீடுகள் போன்றவை. கௌரவ சபாநாயரினால் அல்லது சந்தர்ப்பத்திற்கேற்றவாறு சம்பந்தப்பட்ட அமைச்சர்களினால், அமைச்சரவை அமைச்சர் அல்லாத அமைச்சர் ஒருவரினால் அல்லது பிரதி அமைச்சரினால் சபையில் சமர்ப்பிக்கப்படுகின்றன. 
 
வருடாந்த செயல்நிறைவேற்றுகை அறிக்கைகள், மத்திய வங்கி அறிக்கை போன்ற வருடாந்த அறிக்கைகள், மற்றும் பல்வேறு அமைச்சர்கள், அரச கூட்டுத்தாபனங்கள். மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் நிர்வாகத்திற்கான பாராளுமன்ற ஆணையாளர் (குறைகேள் அதிகாரி) போன்ற நியதிச் சட்ட அமைப்புக்களின் நிதிக் கூற்றுக்கள் ஆகியவை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் பத்திரங்களின் நோக்கெல்லையினுள் வருகின்றன.
 
சகல பத்திரங்களையும் சமர்ப்பித்தலானது பாராளுமன்ற அலுவல்கள் ஒழுங்கு முறையில் சேர்க்கப்பட்டு, பாராளுமன்ற கூட்ட அறிக்கையில் பதிவு செய்யப்படும்.
 
பத்திரங்கள் சமர்ப்பிக்கையில் அவற்றின் உள்ளடக்கம் பற்றிச் சிறிய விளக்கக்கூற்று சமர்ப்பிக்கப்படலாம். ஆனால், சமர்ப்பிக்கப்படும் போது விவாதம் நிகழாது.
 
சமர்ப்பிக்கப்பட்ட பத்திரங்கள் அனைத்தும் சபாபீடத்தில் இடுவதற்கு, அல்லது குழுக்களுக்கு ஆற்றுப்படுத்தப்படுவதற்கு அல்லது அச்சி அச்சிடுவதற்குக் கட்டளையிடப்பட்டவையாகக் கருதப்படுதல் வேண்டும்.
பாராளுமன்ற அலுவல்களின் ஒழுங்கு முறை
அலுவல்களின் ஒழுங்கு என்பது பாராளுமன்ற நிலையியல் கட்டளை 22 இன் பிரகாரம், ஒவ்வொரு பாராளுமன்ற அமர்வு தினங்களிலும் சபையில் நடவடிக்கைகளை சுமுகமாக நடத்துவதற்கு, சந்தர்ப்பத்திற்கேற்றவாறு, கெளரவ சபாநாயகரின் அல்லது தலைமை தாங்கும் உறுப்பினரின் பயன்பாட்டுக்காகத் தயாரிக்கப்பட்ட ஆதரவான எல்லா சட்டமூலங்கள், அறிக்கைகள், வர்த்தமானிகள், சட்டமூலங்களின் திருத்தங்கள் போன்றவற்றை உள்ளடக்கிய மும்மொழியிலான முதன்மைவாய்ந்த ஆவணத் தொகுப்பாகும். 
பாராளுமன்ற செயலாளர் நாயகம், பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகம் மற்றும் உதவிச் செயலாளர் நாயகம் ஆகியோரின் தகவல் குறிப்பிற்காகப் பாராளுமன்ற அலுவல்கள் ஒழுங்கு முறையின் ஒரு விளக்கமான நகல் வழங்கப்படுகிறது.
 
அலுவல்கள் ஒழுங்கு முறையின் ஒரு விளக்கமான நகலை பின்வருவோருக்கு வழங்குதல் சபை ஆவண அலுவலகத்தின் பொறுப்பாகும்.
  • பாராளுமன்ற சபை முதல்வர்
  • அரசாங்கக் கட்சியின் முதற் கோலாசான்
  • எதிர்க் கட்சித் தலைவர்
  • பணிப்பாளர் (சட்டவாக்க சேவைகள்)
  • ஹன்சாட் பதிப்பாசிரியர் (3 பிரதிகள்)
  • பிரதான பாராளுமன்ற உரைபெயர்ப்பாளர் (3 பிரதிகள்)
  • சபை ஆவண அலுவலகத் தலைவர்
  • நூலகர்
  • ஆராய்ச்சிப் பிரிவு
  • பாராளுமன்ற சபை (3 பிரதிகள்)
    * இன்று சமர்ப்பிக்கப்படுகின்ற பத்திரங்கள்
    * பாராளுமன்ற செயலாளர் நாயகம்
    * பிரதி
    என குறிப்பிட்டு 3 பிரதிகளில் பிரத்தியேகமாக பத்திரங்கள் சமர்ப்பித்தல்
  • பிரதான உத்தியோகத்தர்கள் (சபை ஆவண அலுவலகம்)
  • சபை ஆவண அலுவலகத்தின் மொழிப் பிரிவுகள்
கெளரவ சபாநாயகர் அல்லது சம்பந்தப்பட்ட தலைமைதாங்கும் உறுப்பினர், பாராளுமன்றச் செயலாளர் நாயகம், பிரதிச் செயலாளர் நாயகம் மற்றும் உதவிச் செயலாளர் நாயகம் ஆகியோருக்கு அலுவல்கள் ஒழுங்கு முறையின் எல்லா உள்ளடக்கங்களையும் பற்றி பாராளுமன்ற அமர்வு தொடங்குவதற்கு முன்னர் சபை ஆவண அலுவலகத் தலைவரான உதவிப்பணிப்பாளர் (நிர்வாகம்) சுருக்கமாகக் கூற வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து ஏற்புடைய ஆவணங்களும் ஒரு ஆவணத் தொகுப்புக் கோவையில் இருக்க வேண்டுமென்பதை அவர் உறுதி செய்துகொள்ள வேண்டும். 
 
ஒவ்வொரு பாராளுமன்ற அமர்வினதும் முக்கியமான நிகழ்வுகளைப் பற்றி குறிப்பெடுப்பதற்காக சபை ஆவண அலுவலகத்தைச் சேர்ந்த அலுவலர் ஒருவர் சபை ஒத்திவைக்கப்படும் வரை அலுவலர்களுக்கான கூடத்தில் இருப்பார்.
 
பாராளுமன்றத்தின் அலுவல் பின்வரும் ஒழுங்கு முறையில் நடாத்தப்படும்:-
  • சத்தியப்பிரமாணம் அல்லது உறுதிப்பிரமாணம் செய்தல்
  • சனாதிபதியின் செய்திகள்
  • சபாநாயகரின் அறிவித்தல்கள்
  • பத்திரங்கள் சமர்ப்பித்தல்
  • குழுக்களின் அறிக்கைகள் சமர்ப்பித்தல்
  • மனுக்கள்
  • கேள்விகள்
  • நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் கேள்விகள்
  • சமுகமளிக்காதிருப்பதற்கு அனுமதிகோரும் பிரேரணைகள்
  • அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
  • தனிப்பட்ட விளக்கங்கள்
  • சிறப்புரிமைக் கேள்விகள்
  • பிரேரணைகள்
  • அனுதாபம் தெரிவிக்கும் தீர்மானங்கள்
  • பொது அலுவல்கள்
  • ஒத்திவைப்பு
  • ஒத்திவைப்பு நேரப் பிரேரணைகள்
 
பாராளுமன்றக் கூட்ட அறிக்கைகள்
ஒவ்வொரு அமர்வு நாளின் போதும் பாராளுமன்றத்தில் நடைபெறுவனவற்றின் உத்தியோகபூர்வ பதிவே கூட்டறிக்கை ஆகும். இது சபையினுள் நடைபெறும் அனைத்து நடவடிக்கைகளினதும் சாராம்சமாக இருப்பதோடு சபை ஆவண அலுவலகத்தினால் மும்மொழிகளிலும் தயாரிக்கப்பட்டு பாராளுமன்றச் செயலாளர் நாயகத்தினால் அங்கீகரிக்கப்படுகிறது.
 
பாராளுமன்றக் கேள்விகள்
பாராளுமன்றத்தில், தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காக அல்லது நடவடிக்கைகளை மேற்கொள்ள அழுத்தம் கொடுப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரினால் அமைச்சரொருவரிடம், கேள்வி கேட்கப்படுகின்றது; இது நாட்டின் முழு நிருவாகத்தையும் உள்ளடக்குவதோடு அதன் வீச்சு வெளிநாட்டு உறவுகள் தொடக்கம் பணித்துறை ஆட்சியின் தனிநபா் வரை காணப்படும்.
பாராளுமன்ற கேள்வியொன்று பெறப்படும் போது –
  • திகதி முத்திரை இடப்பட்டு சபை ஆவண அலுவலகத்தின் தலைவரினால் புறக்குறிப்பிப்படுதல் வேண்டும்
  • ஒவ்வொரு கேள்வியும் நடப்பு ஆண்டைக் குறிக்கும் இலக்கத்துடன் பதிவுசெய்யப்படும்
  • பதிவுசெய்யப்பட்ட கேள்வி கணனி இயக்குநரினால் கணனி தட்டச்சில் பொறிக்கப்படும்
  • பின்னர், 36ஆம் இலக்க நிலையியற் கட்டளையிலுள்ள விதிகளின் பிரகாரம் கேள்வி திருத்தியமைக்கப்படும்
  • திருத்தியமைக்கப்பட்ட கேள்வி அங்கீகாரத்துக்காக உதவிச் செயலாளர் நாயகத்திடம் சமர்ப்பிக்கப்படும்
  • அங்கீகரிக்கப்பட்ட கேள்விகள் பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்படுவதற்காக பாராளுமன்ற பிரதம உரைபெயர்ப்பாளருக்கு அனுப்பப்படும்
  • மொழிபெயர்க்கப்பட்ட கேள்விகள் கணனி இயக்குநரினால் கணனி தட்டச்சில் பொறிக்கப்படும்
  • பூரணப்படுத்தப்பட்ட மும்மொழிகளிலுமான கேள்விகள் ஏற்புடையவாறு ஒழுங்குப் பத்திரத்துக்காக அல்லது அனுபந்தத்துக்காக அட்டவணைப்படுத்தப்படும்
  • மும்மொழிகளிலுமான ஒழுங்குப் பத்திரத்தின் அல்லது அனுபந்தத்தத்தின் வரைவு தேர்ந்தாய்வுக்காக சம்பந்தப்பட்ட மொழிப் பிரிவுக்கு கையளிக்கப்படும்
  • இது ஒப்புநோக்கப்பட்டதன் பின்னர் அச்சிடுவதற்குத் தீர்மானிக்கப்படுகின்றது
  • அங்கீகரிக்கப்படாத அல்லது அனுமதிக்கப்படாத கேள்விகள் சம்பந்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களிடம் திருப்பியளிக்கப்படும்
 
பாராளுமன்றக் கேள்விகள் தொடர்பான நடைமுறைகள்
(31 முதல் 37 வரையான நிலையியற் கட்டளைகள்)
இரு வகையான கேள்விகள் உள்ளன.
  • வாய்மூல விடைக்கான வினாக்கள்
  • எழுத்து மூல விடைக்கான வினாக்கள்
பொதுவிடயங்களை தொடர்பான கேள்விகள் அல்லது சனாதிபதிக்கு ஒதுக்கப்பட்டுள்ள விடயங்கள் (பிரதி அமைச்சர் இல்லாதவிடத்து) பிரதம அமைச்சரிடம் கேட்கப்படுவதோடு பிற கேள்விகள் அமைச்சு ரீதியில் பொறுப்பாயுள்ள அமைச்சரிடம் கேட்கப்படும்.
 
பாராளுமன்றக் கேள்விகளுக்கான அறிவித்தல்
(27(2)ஆம் நிலையியற் கட்டளைகள்)
வாய்மூல விடைக்கான அல்லது எழுத்து மூல விடைக்கான அனைத்து பாராளுமன்ற கேள்விகளும் பாராளுமன்றத்தில் கேட்கப்படுவதற்கு குறிக்கப்பட்டுள்ள தினத்துக்கு ஏழு முழு நாட்களுக்கு முன்னதாக ஒழுங்குப் பத்திரத்தில் அல்லது அனுபந்தத்தில் சேர்க்கப்படும்.
 
ஒழுங்குப் பத்திரத்தில் பாராளுமன்றக் கேள்விகள்
ஒரு அமர்வு தினத்துக்கான பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் காலவரிசைப்படி பத்து (10) வாய்மூல விடைக்கான பாராளுமன்ற கேள்விகள் மட்டுமே முதலில் பட்டியலிடப்படும்.
 
ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் வினாக்களை கையளித்ததன் முன்னுரிமைக்கேற்ப ஒரு கேள்வி பட்டியலிடப்படும்.
 
அளிக்கப்பட்ட விடையுடன் தொடர்புடைய எவ்விடயத்தினதும் பொருளை மேலும் விளங்கிக் கொள்ளும் பொருட்டு இரு உபகேள்விகளைக் கேட்கலாம்.
 
விவாதிக்க அனுமதிக்கப்படமாட்டாது.
 
பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் பட்டியலிடப்படுவதற்கான எழுத்து மூல விடைக்கான வினாக்களின் எண்ணிக்கைக்கு வரையறையில்லை.
 
சபையில் விடையளிக்கப்பட்ட மொழியில் விடைகள் ஹன்சாட்டில் பிரசுரிக்கப்படும்.
 
பாராளுமன்றக் கேள்விகள் தொடர்பான விதிமுறைகள்
(36ஆம் நிலையியற் கட்டளை)
  • கேள்வியானது குறித்த விடயத்திற்கு மட்டுப்படுத்த வேண்டும்.
  • 150 சொற்களுக்கு மேற்படக்கூடாது.
  • கேள்வியை கேட்கும் உறுப்பினர் அதில் உள்ளடக்கப்பட்டுள்ள எந்தவொரு கூற்றுக்கும் பொறுப்பாளியாவார்.
  • பின்வருவன காணப்படக்கூடாது.
    கண்டிப்பாகத் தேவைப்படாத ஒரு பெயர் அல்லது கூற்று
    வாதம் அல்லது ஊகம்
    காரணம்கற்பித்தல்
    வஞ்சப் புகழ்ச்சியான சொற்றொடர்
    அடைமொழி
    குழு முன்னிலையில் உள்ள ஏதாவது விடயங்கள்
    நீதிமன்றத்தின் தீர்ப்பு வழங்கப்படாதுள்ள அல்லது விசாரணை நிலையில் உள்ள விடயங்கள்
    கருத்துத் தெரிவித்தல் அல்லது யதார்த்தமற்ற ஒரு பிரச்சினை அல்லது அனுமான நிலைக்கு பரிகாரம் கோரல்
    யாராவது நபரின் நடத்தை அல்லது பண்புகள் விடயங்கள்
    தனிப்பட்ட நடத்தையை பாதிக்கக்கூடிய விடயங்களை தெரிவித்தல் அல்லது குறிப்பால் உணரத்தல்
    முழுமையாக விடையளிக்கப்பட்ட வினாக்கள்/ தற்போதைய கூட்டத் தொடரின் போது
 
தனியார் உறுப்பினர் சட்டமூலங்கள்
ஒவ்வொரு மாதமும் பாராளுமன்ற முதல் வெள்ளிக்கிழமை அமர்வில் உறுப்பினர்களின் அலுவல்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுதல் வேண்டும். 
 
பாராளுமன்றத்தில் எவ்வித பதவியையும் வகிக்காத உறுப்பினரை தனியார் உறுப்பினர் என அழைக்கிறோம்.
சபை ஆவண அலுவலகத்திற்கு கிடைக்கப்பெற்ற சகல விதமின தனியார் உறுப்பினர்களின் பிரேரணைகளும் பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளின் ஏற்பாடுகளுக்கு அமைவாக முறைப்படுத்தப்பட்டு, பின்னர் ஒழுங்கில் உள்ள அவ்வித பிரேரணைகள் ஒழுங்குப்புத்தகத்தில் அல்லது அனுபந்தத்தில் வெளியிடப்படுகின்றன.
 
தனியார் உறுப்பினரின் பிரேரணைகளுக்கான நேர ஒதுக்கீடு
ஒவ்வொரு பிரேரணை தொடர்பிலும் சபையில் கலந்துரையாடுவதற்கு ஒரு மணித்தியாலம் வழங்கப்படும் பிரேரணையை முன்வைப்பவருக்கு 10 நிமிடங்களும் ஒவ்வொரு பேச்சாளருக்கும் 05 நிமிடங்களும், சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு 10 நிமிடங்குளும், இறுதியாக மீண்டும் பிரேரணையை முன்வைத்தவருக்கு 05 நிமிடங்கள் வழங்கப்படும்.
 
சபையில் விவாதிக்கப்பட்ட தனியார் உறுப்பினரின் பிரேரணை அங்கீகரிக்கப்பட்டால் அல்லது அங்கீகரிக்கப்படாவிட்டால் அவை பாராளுமன்றக் கூட்ட அறிக்கையில் அவ்வாறு பதியப்படல் வேண்டும். அவ்வித பிரேரணைகள் பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்திலிருந்து தவிர்க்கப்படல் வேண்டும்.
 
பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு / கட்சித் தலைவர்கள் கூட்டம்
பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு பாராளுமன்றத்தின் அத்தகைய அலுவல் பற்றிக் கலந்துரையாடுவதற்கு ஒதுக்கப்பட வேண்டிய நேரம் பற்றியும் கௌரவ சபாநாயகர் பாராளுமன்ற சபை முதல்வருடன் கலந்தாராய்ந்து குழுவுக்கு ஆற்றுப்படுத்தக்கூடிய அத்தகைய வேறு விடயங்கள் பற்றியும் பரிசீலித்துத் தீர்மானிக்கும் நிலையியற் கட்டளை 115 இன் கீழான முறைசார் அமைப்பாகும்.
 
பாராளுமன்ற அலுவல் பற்றிய குழு கௌரவ சபாநாயகர், கௌரவ பிரதிச் சபாநாயகர், கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர், கௌரவ பாராளுமன்றச் சபை முதல்வர், கௌரவ பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர், கௌரவ அரசாங்கக் கட்சியின் முதற்கோலாசான், தெரிவுக் குழுவால் பெயர் நியமனம் செய்யப்படும் வேறு 08 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரை உள்ளடக்கியதாகும். 
கட்சித் தலைவர்களின் கூட்டம் பாராளுமன்ற அலுவல் பற்றிய குழு முறையாக அமைக்கப்படும் வரை பாராளுமன்ற அலுவல்கள் மற்றும் அத்தகைய வேறு விடயங்கள் பற்றி கலந்துரையாடுவதற்கு ஒதுக்கப்பட வேண்டிய நேரம் தொடர்பில் பரிசீலனை செய்து தீர்மானிக்கும் முறைசாராக் குழுவாகும்.
கூட்டம் நடத்துவதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்ட பின்னர் சபை ஆவண அலுவலக தலைமை அதிகாரி பின்வரும் கடமைகளுக்கும் பொறுப்பாக இருப்பதுடன் அது பூர்த்தி செய்யப்படுவதையும் உறுதி செய்வார்.
(அ) பாராளுமன்றச் செயலாளர் நாயகத்தினால் கையொப்பமிடப்பட்ட மும்மொழியிலான அழைப்புக் கடிதத்தை, குழுவின் சகல உறுப்பினர்களுக்கும் விநியோகித்தல்
 
(ஆ) உள்ளக ரீதியில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அழைப்புக் கடிதத்தை விநியோகித்தல்
 
(இ) குழு உறுப்பினர்களுக்கு அழைப்புக் கடிதத்தை தொலைநகல் மூலம் அனுப்பி வைத்தல் மற்றும் தொலைபேசி மூலமாக அவர்களுக்கு அறிவித்தல்
 
(ஈ) சபையில் அறிவித்தலொன்றை மேற்கொள்ளல்
 
(உ) கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரலை தயார் செய்தல் மற்றும் உறுதிப்படுத்துவதற்காக கடந்த கூட்ட அறிக்கையை மும்மொழிகளிலும் தயார் செயதல்
 
(ஊ) கூட்ட நடவடிக்கைகளை உரைபெயர்ப்பு செய்வதற்கும், சொல்லுக்குச் சொல் அறிக்கையை தயாரித்தல் தொடர்பான சேவைகளைப் பெற்றுக் கொள்ளும் நோக்கிலும் பாராளுமன்ற பிரதம உரைபெயர்ப்பாளர் மற்றும் ஹன்சாட் பதிப்பாசிரியர் ஆகியோருக்கு அறிவித்தல்
 
(எ) கூட்ட அறிக்கையை உடனடியாகத் தயாரித்து, பாராளுமன்றச் செயலாளர் நாயகத்தின் ஒப்பத்தை பெற்றுக் கொள்வதற்காக அதனை அனுப்பி வைத்தல்
 
(ஏ) குழுவின் உறுப்பினர்களுக்கும் ஏனைய சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கும் என அறிக்கைகளை அனுப்பிவைத்தல்
 
(ஐ) சிங்கள மற்றும் தமிழ் மொழிபெயர்ப்புச் செய்வதற்காக ஆங்கில அறிக்கைகளை பிரதம பாராளுமன்ற உரைபெயர்ப்பாளருக்கு அனுப்பிவைத்தல்
 
(ஒ) மும்மொழியிலான அறிக்கைகளைப் பூரணப்படுத்துதலும் அவற்றைப் பதிவுத் தபால் மூலமாக குழுவின் உறுப்பினர்களுக்கு அனுப்பி வைத்தல் மற்றும் உறுதிப்படுத்தலுக்காக அடுத்த கூட்டத்தின் போது சமர்ப்பிக்கப்படல்
 
சபை ஆவண அலுவலகத்திற்கு ஒப்படைக்கப்பட்ட விசேட கடமைகள்

அனுதாபப் பிரேரணைகள்

காலஞ்சென்ற கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதான அனுதாபப் பிரேரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
  1. கௌரவ சபாநாயகரினால் வாசிக்கப்படும் முடிவுக் குறிப்பைத் தயாரித்தல்
  2. சம்பந்தப்பட்ட அனுதாபப் பிரேரணையின் அதிகார அறிக்கையின் (ஹன்சாட்) ஒன்று சேர்க்கப்பட்ட சுருக்கப்பகுதி காலஞ்சென்ற கௌரவ பாராளுமன்ற உறுப்பினரின் உற்றார், உறவினர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது.
 
பாராளுமன்றத்தை வைபவரீதியாக ஆரம்பித்து வைத்தல்
பொதுத் தேர்தல் ஒன்றை உடனடுத்து, பாராளுமன்றச் செயலாளர் நாயகத்தின் சார்பாக சபை ஆவண அலுவலகத்தின் தலைவரால் பின்வரும் தொடக்க ஒழுங்குகள் மேற்கொள்ளப்படவேண்டியுள்ளது:-
 
(அ) பாராளுமன்ற உறுப்பினர்களின் தேர்தல் மாவட்டங்களின் பிரகாரம் சகல தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களதும் தேசியப்பட்டியலில் இருந்து நியமிக்கப்பட்ட சகல உறுப்பினர்களதும் முகவரிகளுடனான பட்டியலொன்றைப் பெற்றுக் கொள்ளுதல்
 
(ஆ) மேற்படி விடயம் தொடர்பாக வர்த்தமானிப் பத்திரிகை அறிவித்தல்களின் 300 பிரதிகளைப் பெற்றுக்கொள்ளுதல்
 
(இ) சகல தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மும்மொழியிலான கடிதமொன்றை அதிவேகத் தபால் மூலமாக அனுப்பி வைத்தல்
 
கடிதம் பின்வருவனவற்றைக் கொண்டிருத்தல் வேண்டும்:-

* பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டம் பற்றிய திகதி மற்றும் நேரத்தைத் தெரியப்படுத்துதல்

* பாராளுமன்ற உறுப்பினர்கள் விசுவாச சத்தியப்பிரமாணத்தைச் செய்வதற்காக அல்லது உறுதிப்பிரமாணத்தை மேற்கொள்வதற்கு விரும்புகின்றனர் என்பதையும் அதற்காக அவர்கள் எம்மொழியை அதிகமாக விரும்புகின்றனர் என்பதையும் கேட்டு அறிந்து கொள்ளல்

* பின்வரும் ஆவணங்கள் இணைத்தல்
  1. பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டம் பற்றிய திகதியைத் தீர்மானிக்கும் பிரகடனம் தொடர்பான வர்த்தமானிப் பத்திரிகையின் பிரதி ஒன்று
  2. பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான பணி மற்றும் பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தை வைபவரீதியாக ஆரம்பித்து வைத்தல் பற்றிய மும்மொழியிலான நிருபத்தின் பிரதி ஒன்று
  3. பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்திற்கான பாராளுமன்ற அலுவல்களின் மும்மொழியிலான பணி பற்றி பிரதி ஒன்று
  4. பாராளுமன்றத்திற்கு எவ்வித சிரமமுமின்றி வருகை தருவதற்கு, சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் உதவியளிக்கும் வகையில் படைக்கல சேவிதரினால் வழங்கப்படும் மோட்டார் வண்டி அடையாளச் சீட்டு
(ஈ) பாராளுமன்றத்தின் சகல பத்திரங்களும் அனுப்பிவைக்கப்பட வேண்டிய முகவரியைத் தெரிவிக்கும்படி சகல தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களிடம் வேண்டுகோள் விடுத்தல்
 
(உ) புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் விநியோகிப்பதற்கு அச்சிடப்பட்ட மும்மொழியிலான நிலையியற் கட்டளைகள் கிடைக்கப் பெறுவதை உறுதி செய்தல்
 
(ஊ) பின்வரும் ஆவணங்களைச் சரிபார்த்தல் 
  1. மும்மொழியிலான சத்தியப்பிரமாண பத்திரங்கள்
  2. கௌரவ சபாநாயகர், கௌரவ பிரதிச் சபாநாயகர், கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஆகியோரின் தெரிவுக்காகன குடவோலைகள் (ஒவ்வொரு குடவோலையினதும் மறுபுறத்தில் பாராளுமன்றச் செயலாளர் நாயகத்தின் கையெழுத்துக் கொண்ட கடிதஉறை இணைக்கப்படல் வேண்டும்)
  3. சம்பந்தப்பட்ட அடையாளச் சீட்டுகளுடன் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான கோப்புகள்
  4. கௌரவ சபாநாயகர், பாராளுமன்றச் செயலாளர் நாயகம். பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகம், உதவிச் செயலாளர் நாயகம் ஆகியோரினதும், சபை ஆவண அலுவலகத்தினதும் பாவனைக்கென கோப்புகள்
  5. குடவோலைக்கான பெட்டிகள் இரண்டு உபயோகிக்கப்படலாம்.
  6. சபா மண்பத்தின் குடவோலைக்கான பெட்டியை முத்திரையிடும் நோக்கத்திற்காக காகிதாதிகளைப் பெற்றுக் கொள்ளுதல்
  7. முத்திரையிடும் மெழுகு
    மெழுகுவர்த்திகள்
    தீப்பெட்டி
    சிவப்பு நிற நாடா
  8. கௌரவ பாராளுன்ற உறுப்பினர்களுக்கான வினாக்கொத்து
 
(எ) மும்மொழியிலான வரவுத்தாள்கள்
 
(ஏ) நிலையியற் கட்டளை 47(2)இன் படி,
 
(ஐ) வாக்கெடுப்புப் பட்டியல் பாராளுமன்ற அமர்வு இடம்பெறும் நாட்களிலும் அமர்வு இடம்பெறா நாட்களிலும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மற்றும் அமைச்சர்களுக்கு பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரம் ஏனைய பாராளுமன்ற வெளியீடுகள் போன்றவை தபால் செய்யப்பட வேண்டிய முகவரிகளைக் கொண்ட பட்டியல்
 
(ஒ) பின்வருவனவற்றை உள்ளடக்கும் பாராளுமன்ற அலுவல்களின் மும்மொழிகளிலான நிகழ்ச்சி நிரல்:-
  1. பாராளுமன்றச் செயலாளர் நாயகம் பாராளுமன்றத்தைக் கூட்டுதல் பற்றிய சனாதிபத்தியின் பிரகடனத்தை வாசித்தல்
  2. சபாநாயகர் தெரிவு (4ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளை)
  3. புதிதாக தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் அல்லது உறுதிப்பிரமாணம் செய்தல் (5ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளை)
  4. பிரதிச் சபாநாயகர் தெரிவு (6(2)ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளை)
  5. குழுக்களின் பிரதித் தவிசாளர் தெரிவு (6(2)ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளை)

(ஓ) அதே தினத்தில், சனாதிபதி பாராளுன்றத்தில் உரையாற்றுவதாயின் பின்வருபவையும் உள்ளடக்கப்படல் வேண்டும்

  1. சனாதிபதியின் செய்தியை சபாநாயகர் வாசித்தல்
  2. சனாதிபதியின் உரை

(ஔ) பிரேரணை முன்னறிவித்தல் (அடுத்த அமர்வு தொடர்பான பிரேரணை பாராளுமன்றச் சபை முதல்வரால் பிரேரிக்கப்படும்)

(க) பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய நிகழ்ச்சி நிரலின் விளக்கமான விபரத்துடன் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய நிகழ்ச்சிநிரலின் மும்மொழிகளிலான பத்திரத்தை அச்சிடலும் வைபவரீதியாக ஆரம்பமும்

(ங) கௌரவ சபாநாயகரின் உபயோகத்திற்காக பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய நிகழ்ச்சி நிரலின் பிரதியும், தினப் பணிகள் விபரமாக பட்டியலிடப்பட்ட குறிப்பும்

(ச) புதிதாக தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் வசதிக்காக பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இரண்டு நாட்களுக்கு “தகவல் கருமபீடத்தை” நடத்துதல்

(ஞ) பின்வருவனவற்றை தீர்மானிக்கும் முகமாக அனைத்து திணைக்களத் தலைவர்கள், பிரதித் தலைவர்கள் மற்றும் பிரிவுத் தலைவர்கள் உள்ளடக்கிய கூட்டமொன்று கூட்டப்படல் வேண்டும்

  1. தகவல் பீடத்தை இயக்குவதற்கான குழுவொன்றை நியமித்தல்
  2. தகவல் பீடத்தில் பின்வரும் சிறுநூல்கள் / ஆவணங்கள் ஆகியவற்றை வழங்குதல்
    • அரசியலமைப்பு மற்றும் நிலையியற் கட்டளைகளின் மும்மொழிகளிலுமான பிரதிகள்
    • பாராளுமன்ற உறுப்பினர்களின் வசதிகள் தொடர்பான தகவல்களும் சம்பந்தப்பட்ட ஏனைய தகவல்களும்
    • பாராளுமன்ற கட்டிடத் தொகுதியின் தொலைபேசி விபரக்கொத்து
    • தத்துவங்களும் சிறப்புரிமைகளும் சட்டம்
    • “பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சேவைகள் மற்றும் வசதிகள்” என்ற தலைப்பிலான இற்றைப்படுத்தப்பட்ட தகவல் புத்தகம்
    • பொ.பா.ச. (CPA), அ.பா.ஒ. (IPU) மற்றும் சார்க் ஆகிய அமைப்புகளில் உறுப்பினராவதற்கான படிவங்கள்

(ட) புதிதாக தெரிவு செய்யப்ப்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சத்தியப் பிரமாணம் அல்லது உறுதிப் பிரமாணம் செய்தவுடன் உரிய புத்தகத்தில் கையொப்பமிடல்

பாராளுமன்ற கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டால், புதிய கூட்டத்தொடரின் முதற் கூட்டம் தொடர்பான சபை நடவடிக்கைகளுடன் தொடர்புபட்ட விசேட வகையான கடமைகளில் ஈடுபடுகின்றது.



சபை ஆவண அலுவலகம்

தொலைபேசி

0112770477

மின்னஞ்சல்

jayalath_p@parliament.lk





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது TekGeeks